கேரளத்து பெண்கள் எல்லா விஷயத்திலும் படு சுறு சுறுப்பாக இருப்பார்கள்... அரசியல், விளையாட்டு மற்றும் இசையிலும் அசத்தி வருகிறார்கள்.
ஆலப்புழா மாவட்டம், துறவுரை சேர்ந்த சந்தியா ஒரு மிருதங்க சக்கரவர்த்தினி என்றால் ஆச்சிரியமாக இருக்கும்.
கேரளாவிலுள்ள பள்ளி, கல்லூரி மற்றும் திருமண விழாக்களில் சந்தியாவின் மிருதங்க கச்சேரிக்கு மிகுந்த வர்வேற்பு உண்டு... அவர் கல்ந்து கொள்ளும் திருமண வரவேற்பு விழாக்களை, களை கட்ட செய்வது சந்தியாவின் மிருதங்க இசை தான் என்கிறார்கள். திருமண விழாக்களுக்கு வருபவர்கள், மணமக்களை வாழ்த்திவிட்டு, உணவை மறந்து இவரின் இசையில் மெய் மறந்து அமர்ந்து விடுகிறார்கள் என்கிறார் நம் நண்பர் ஒருவர்.
மகளிர் தினத்தை முன்னிட்டு மிருதங்க இசை கலைஞர் சந்தியாவை தொடர்பு கொண்டு பேசினோம்...
மலையாளம் கலந்த தமிழில் பேசினார்...
“எனக்கு மிருதங்கத்தின் மேல் காதல் வரக் காரணமானவர் என் அப்பா சதானந்த பிரதா. அவருக்கு இசையில் அதிக ஆர்வம் இருந்தது. எப்படியாவது எனக்கு ஒரு இசை கருவியை கற்று கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அவர் செலக்ட் செய்தது மிருதங்கத்தை.... நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது, பாஸ்கரக் குறுப்பு என்ற மிருதங்க வித்வானிடம் என்னை சேர்த்து விட்டார். ஆண்கள் வசிக்கும் இசை கருவியான மிருதங்கத்தை எப்படி ஒரு பெண்ணால் வாசிக்க முடியும் என்ற கேள்வி எழுந்தபோது...
“ஏன் ஒரு பெண்ணாலும் வாசிக்க முடியும், நான் சொல்லி தருகிறேன்” என்று என் குரு, அன்று எனக்கு கற்று கொடுத்த மிருதங்க இசையை நான் இன்றும் தொடர்கிறேன்....
என் குரு பாஸ்கரக் குறுப்பு, அம்பலத்தில் வைத்து தான் மிருதங்க வகுப்புகளை எனக்கு சொல்லி கொடுத்தார். மிருதங்கம் வாசிக்கும் பல நுணுக்கங்களை அவரிடம் இருந்து மிக நுணுக்கமாக அணு அணுவாக கற்றுக்கொண்டேன்.
அதனால் தான் இன்று வரை மிருதங்கம் வாசிக்கும் போது, என்னை அறியாமல் ஒரு பக்தி பரவசத்தில் மூழ்கி விடுகிறேன்” என்று தன் இசை பக்தியை வெளிப்படுத்தினார்.
எனக்கு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மிருதங்கம் கற்று கொள்ள மத்திய அரசின் உதவி தொகை (Central For cultural Resources and training scholarship) கிடைத்தது. அதில் தான் நான் பயின்றேன். அது ஒரு வரப்பிரசாதம்...
எங்க அப்பா ஒரு டாக்ஸி டிரைவர், இந்த இசையை நான் கற்று கொள்ள அவர் மிகவும் கஷ்டப்பட்டு, அதில் எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். ஆரம்பத்தில் அம்மா ராஜாமணி, “ஒரு பெண் பிள்ளை இவ்ளோ பெரிய மிருதங்கத்தை எப்படி வாசிப்பாள்.. அதுவும் ஆண்கள் வாசிக்கும் ஒரு இசை கருவியை, எப்படி பெண் வாசிப்பது என்று தடை போட்டார். பின் எனக்கிருக்கும் ஆர்வத்தையும், நான் வாசிப்பதையும் பார்த்து, ஓகே சொல்லிவிட்டார்”.
கல்லூரி படிப்பில் பி.ஏ. பொருளாதாரம், அரசு கல்லூரியில் பயின்ற போது, நிறைய கல்ச்சுரல் நிகழ்வுகளில் என் மிருதங்க கச்சேரி தவறாமல் இடம் பெரும். ஏராளமான மாணவர்கள் என் இசைக்கு ரசிகர்கள். 2002 ஆம் வருடம் எனக்கு திருமணம் நடந்தது. என் கணவர் ஸ்ரீ குமாருக்கு, நான் ஒரு மிருதங்க இசை கலைஞர் என்று தெரியும். அவர், என்னை இசையை விடாமல் தொடரச் சொன்னார். புதிய சூழ்நிலையில் என்னை ஐக்கியப்படுத்திக் கொள்வதற்காக, நான் எனது இசை பயணத்திற்கு ஒரு சிறிய இடைவெளி கொடுத்தேன்... புதிய குடும்பம்.. மனைவி.. மருமகள்.. தாய் என்ற பொறுப்புகள்..... மீண்டும் மிருதங்கத்தை தொட பத்து வருடம் ஆனது. என் மாமியார் ராதா பாய், என்னை மீண்டும் கச்சேரி பண்ண ஊக்குவித்து, அவரும் கச்சேரிக்கு வந்து, ரசிப்பார் பாருங்களேன்... ஷி இஸ் ரியலி கிரேட் மாமியார்... இப்பொழுது அவர் இல்லை என்று கண்கலங்கினார்.
இவரது ஒரே மகள் ஐஸ்வர்யா ஒரு சிறந்த பாடகி. மகள் பாட, அம்மா மிருதங்கம் வாசிக்க.... அப்பா ஸ்ரீ குமார் அமர்ந்து ரசிப்பாராம்.
பல பரிசுகளை குவித்துள்ள சந்தியா, ஐந்து முறை கல்லூரி இசை போட்டிகளில் முதல் இடத்தை தட்டியுள்ளார். கேரளா பல்கலை கழகம் மூன்று முறை இவருக்கு முதல் அந்தஸ்தை இசையில் வழங்கியுள்ளது.
தேசிய அளவில், ஹரியானாவில் நடந்த இசை போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது பரிசை பெற்றார் சந்தியா. அவர் கூறுகையில்... வடநாட்டில், மிருதங்க கலைஞர்கள் அதிகம்.
இது வரை 10 ஆயிரத்திற்கு மேல் சிறந்த கச்சேரிகளை நடத்தியுள்ள சந்தியாவை, கேரள அரசுக்கு தெரியவில்லை என்ற வருத்தமாக உள்ளது.
இவரின் மிருதங்க இசையை பற்றி, பல அமைச்சர்களுக்கு தெரியுமாம்... ஆனால், இதுவரை எந்த விருதும் இவருக்கு தரவில்லை என்ற வருத்தம் இருந்தாலும்.... தன் இசையை ரசிக்கும் ரசிகர்களின் பாராட்டுகள் தான் எனக்கு எல்லா விருதுகளையும்விட பெரிய பரிசு.
சென்னை, லீலா பேலஸில் நடந்த சரவணா ஸ்டோர்ஸ் குடும்ப கல்யாணம் ஒன்றில், இவரின் மிருதங்க இசையை கேட்டு பிரமித்து போனார்களாம் நம் சென்னை பிரமுகர்கள் பலர் என்கிறார் சந்தியா.
இரவில் நிறைய நிகழ்வுகள் நடப்பதால் இவருக்கு சில சங்கடங்கள் உண்டு. அதனால், இரவு நிகழ்வுகளை பெரும்பாலும் ஒப்புக்கொள்வது இல்லையாம்....
கச்சேரியில் இவருடன் சேர்ந்து எட்டு பேர் கலந்து கொள்கிறார்கள். அதில் சாக்ஸோப்ஹான், வயலின், புல்லாங்குழல், தபேலா, சித்தார், இவற்றுடன் இவரின் மிருதங்கம் கலக்கும் போது.... ஒரே இசை மயக்கம் தான்...
இவருடைய இரண்டாவது குரு - எஸ் .தினேஷ். மிருதங்கம் வாசிக்க என்னை உயர்த்திய மகான். இன்று பாலக்காடு இசை கல்லூரியின் முதல்வர்.
எஸ் .தினேஷ்
முழுமையாக மிருதங்கத்தை கற்று கொண்ட சந்தியா, இதுவரை அரங்கேற்றம் எதுவும் செய்யவில்லையாம். காரணம், அரங்கேற்றம் செய்ய ரெடியான சமயத்தில், முதல் குரு பாஸ்கரக் குறுப்பு இறந்து விட்டார். அவர் இல்லாமல் எப்படி அரங்கேற்றம் செய்வது” என்கிறார் இந்த உண்மையுள்ள சீடர்.
“மிருந்தங்க சக்ரவர்த்தி படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை... இதுவரை பார்க்கவில்லை. அந்தப் படத்தின் ஒரு பாடலை டிவியில் பார்த்தபோது, சிவாஜிகணேஷன் மிருதங்கம் வாசிப்பதை பார்த்து அசந்து விட்டேன்.. மிருதங்கம் வாசிக்கும் எங்களால் கூட, அப்படி ஒரு பாவனையை கொடுக்க முடியாது என்கிறார்.
சந்தியா ஒரு மிருதங்க ஆசிரியராகவும் திகழ்ந்தவர். “மியூசிக் டியூஷன் எடுத்துள்ளேன்... அது ஒரு பெரிய சந்தோஷமான நினைவுகளாக இல்லாமல் போனது சற்று வருத்தம்தான். தற்போது இசை கற்க வருபவர்கள் இசையை முழுவதுமாக கற்க வேண்டும் என்று எவரும் வருவது இல்லை. கொஞ்ச நாள் கற்றவுடன்.. பிரபலமடைய வேண்டும்.. டிவியில் வரவேண்டும், ரியாலிட்டி ஷோவில் இடம் பெறவேண்டும் என்ற கனவு மட்டும் தான். இப்படி மாணவர்கள் வருவதால், உள்ளார்ந்த இசையை கற்று கொடுக்க முடிவதில்லை என்ற வருத்தத்தினால், மியூசிக் வகுப்பு எடுப்பதையே கைவிட்டுவிட்டேன்” என்றார்.
கொரோனா தொற்றுக்கு பின், “கடந்த ஒரு வருடமாக எந்த நிகழ்ச்சியும் நடத்த வில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் முதல் இசை நிகழ்வை பள்ளூர்த்தி உட்சவத்தை முன்னிட்டு, என் மிருந்தங்க இசை கச்சேரி நடந்தது. ஒரு வருடத்திற்கு பின் எங்களின் ரசிகர்கள் எங்கள் இசை மழையில் நனைந்தனர்” என்று சந்தோஷத்தில் பூரித்துப் போனார்.
நாற்பத்தெட்டு வயதை தொட்ட சந்தியா, மிருதங்கத்தை கையில் எடுத்தால் ஒரு புதிய இளமை மிடுக்குடன் இசையில் மூழ்கி விடுகிறார்.
இன்னும் அதிகமான மகளிர் மிருதங்கம் வாசிக்க முன்னுக்கு வரவேண்டும் என்று கூறுகிறார் இந்த கேரளத்து மிருதங்க சக்கரவர்த்தினி.
Leave a comment
Upload