தொடர்கள்
கவர் ஸ்டோரி
சிகரம் தொட்ட பெண்கள்..! - மரியா சிவானந்தம்

20210205132013464.jpg

இது பெண்களின் நூற்றாண்டு...

ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரை ஆசிரியை அல்லது செவிலியர் தொழிலே, பெண்களுக்கு உரிய பிரதான துறைகளாக இருந்தன. இன்று பெண்கள் சாதிக்காத துறை என்று எதுவும் இல்லை.

‘யாதுமாகி நின்றாய்’ என்ற பாரதியின் வாக்குக்கு ஒப்ப, எத்துறையிலும் புகுந்து வெற்றிக்கொடி நாட்டும் சூப்பர் பெண்மணிகள் பத்துப் பேரை இந்த மகளிர் தினத்தில் “விகடகவி” வந்தனம் செய்கிறது.

அறிவியல், பொறியியல், மருத்துவர், இயற்கை ஆர்வலர், மலையேறுபவர், விமானி, அரசியலில் சாதித்தவர்கள் என பலதரப்பட்ட துறையில் சாதிக்கும் பெண்களின் பற்றிய சிறு தொகுப்பு. 15 வயது முதல் 105 வயது வரை உள்ள.

இப்பெண் திலகங்கள், தடைக்கற்களை உடைத்து சிகரம் தொட்டவர்கள். இவர்களைப் பற்றிய சிறு தொகுப்பு உங்கள் பார்வைக்கு....

தமிழகத்தில் பிறந்து இம்மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர் பள்ளி மாணவி ஜெயலட்சுமி, புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். Go4Guru என்னும் தனியார் நிறுவனம் நடத்திய அறிவியல் போட்டியில் பங்கு கொண்டு, பரிசாக அமெரிக்காவின் நாசாவுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்ற 4000 பேரில் ஒருவர். ஆனால், அந்த நான்காயிரம் மாணவரிடையே இவரை உயர்த்திக் காட்டுகிறது இவர் செய்த செயல். அமெரிக்கா செல்ல இவருக்கு அரசும், தொண்டு நிறுவனங்களும் உதவி செய்ய முன் வந்தன. அப்போது ஜெயலட்சுமி, தன் கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் கழிப்பறை கட்டித் தருமாறு கோரிக்கை வைத்து, அதை நடத்தியும் காட்டியுள்ளார். இந்த அழகிய தமிழ் மகளின் சமூக அக்கறை, மக்களை புருவங்களை உயர்த்தச் செய்தது.

20210205132054411.jpg

சக்தி நிவேதா, தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண். மென்பொருள் துறையில் பணியாற்றும் பொறியாளர். பொள்ளாச்சியைச் சேர்ந்த இவர், மலையேற்றத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஐரோப்பாவின் உயர்ந்த சிகரமான, 18000 அடி உயரமுள்ள எல்ப்ரெஸ் சிகரத்தையும், தென் அமெரிக்காவின் 23000 அடி உயரமுள்ள சிகரத்திலும் ஏறியவர். எல்ப்ரெஸ் சிகரத்தில் இந்தியக்கொடியை நாட்டிய இந்த வீரமங்கை, எவெரெஸ்ட்டின் உச்சியில் கால் பதிப்பதே இலக்கு...

20210205132128326.jpg

இளவேனில் வாலறிவன், தமிழகத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால் வசிப்பது அகமதாபாத் நகரில். துப்பாக்கி சுடும் போட்டியில், சர்வதேச அளவில் 2018, 2019 ஆண்டுகளில் தங்கம் வென்ற மங்கை. FICCI (Federation of Indian Chambers of Commerce & Industry) நிறுவனத்தால் 2020 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் என்னும் விருதைப் பெற்றிருக்கிறார். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வது இவரது இலக்கு.

20210205132210483.jpg

பத்மஸ்ரீ பாப்பம்மாள், கோயம்புத்தூர் தெக்கம்பட்டிக்காரர். 105 வயதான இம்மூதாட்டி, இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு தன் நிலத்தை ‘மாதிரி விளைபூமியாக’ மாற்றிக் காட்டியவர். இவரது நிலம் மனையியல் மற்றும் வேளாண்மை பயிலும் மாணவர்களுக்கு களப்பயிற்சி தரும் தளமாக இருக்கிறது. ஆர்வமும், அர்ப்பணிப்பும் கொண்டவருக்கு வயது ஒரு தடை இல்லை என்று நிரூபித்த இந்த இளைஞிக்கு, அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. பெப்ரவரி 25 ஆம் தேதி கோயம்புத்தூர் வந்த பிரதமர் மோடி, இவரை நேரில் சென்று வாழ்த்தினார்.

20210205132244998.jpg

கீதாஞ்சலி ராவ், இந்த ஆண்டு டைம் இதழின் அட்டையை அலங்கரிக்கும் பெருமையைப் பெற்றவர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த பதினைந்து வயது இளம் விஞ்ஞானி, இவர் கண்டுபிடித்த Tethys என்னும் கருவியின் வழியாக தண்ணீரில் கலந்திருக்கும் காரீயத்தின் அளவை கண்டுபிடிக்க முடியும். கார்பன் நானோ டியூப் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி, நீரின் தன்மையை ஆராயும் இவரது ஆராய்ச்சிக்கு, 25000 டாலர்கள் பரிசும், அறிவியல் அறிஞர்களின் பாராட்டும் கிடைத்துள்ளது.

20210205132619587.jpg

ஆர்யா ராஜேந்திரன், கேரளத்தைச் சேர்ந்த பெண் மேயர். 21 வயதில் திருவனந்தபுரத்தின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியாவின் இளைய மேயர் என்னும் பெருமையைப் பெற்று இருக்கிறார். இவரது தந்தை எலெக்ட்ரிசியன், தாய் எல்.ஐ.சி ஏஜென்ட். எளிய குடும்பத்தை சேர்ந்தவர். இரண்டாம் ஆண்டு கணிதம் படிக்கும் இம்மாணவி, மார்க்சிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளுடன் தன்னை இளம் வயதிலேயே பிணைத்துக் கொண்டவர். மாணவராக போராட்டக்களத்தில் நின்றவர். திருவனந்தபுரத்தில் உள்ள முடவன்முகள் வார்டின் கவுன்சிலராக அவர் உள்ளாட்சித் தேர்தலில் வென்றார். அவரது ஆளுமைக்கும், தலைமைப் பண்புக்கும் தகுதியான பதவியை அக்கட்சி அவருக்கு வழங்கி உள்ளது.

20210205132320274.jpg

வி.எஸ். பிரியா, அதே கேரளத்தைச் சார்ந்த மருத்துவர். சிறப்பாக சொல்ல வேண்டுமானால், கேரளத்தின் முதல் திருநங்கை மருத்துவர். திரிச்சூரில் பிறந்தவருக்கு ஜினு சசிதரன் என்று பெயர் சூட்டினர் பெற்றோர்... பள்ளியில் படிக்கும் போதே... தன் உடலில், மனநிலையில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்து, கல்வி ஒன்றே தன்னை காக்கும் வழி என்று உணர்ந்து படித்து, ஆயுர்வேத மருத்துவத்தில் பட்டம், முதுகலைப் பட்டம் பெற்று மருத்துவராக பதிவு செய்துக் கொண்டார். பெற்றோரும், குடும்பத்தவரும் துணை நின்றால் திருநங்கைகள் வழியின்றி தவிக்க வேண்டியதில்லை என்பதற்கு பிரியா எடுத்துக்காட்டு.

20210205132353310.jpg

கேப்டன் சோயா அகர்வால், ஏர் இந்தியாவின் பெருமைக்குரிய பெண் விமானி. பஞ்சாபின் பெண் சிங்கம். இவ்வாண்டு ஜனவரி 9ஆம் தேதி அன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து, பெங்களூருவுக்கு ‘இடை நிறுத்தா’ விமானப் பயணத்தை தலைமை ஏற்று நடத்தியவர். 16000. கி.மீ தூரம் கொண்ட இந்தப் பயணத்தில், விமானிகள், பணிப்பெண்கள் எல்லோருமே பெண்கள்தாம். வடதுருவத்தின் மேல் பறக்கும் சாகச பயணத்தை எவ்வித இடையூறும் இன்றி முடித்து, உலகின் கைத்தட்டலைப் பெற்றுக் கொண்டார் இந்த வீர மங்கை.

20210205132429318.jpeg

பத்மஸ்ரீ சாலுமருத திம்மக்கா, கர்நாடக மாநிலத்தின் சுற்றுச்சூழல் ஆர்வலர், சதமடித்தவர். பள்ளி சென்று கல்வி கற்காத திம்மக்கா, கல்குவாரியில் வேலை செய்யும் தொழிலாளி. இவர் குடூர் - ஹுலிகல் நெடுஞ்சாலையில் 385 ஆலமரங்களையும், 8000 வேறுவகை மரங்களையும் நட்டு பராமரிப்பவர். இவரது சேவையைப் பாராட்டி, இந்திய அரசு 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை அளித்தது. 2020 ஆம் ஆண்டு கர்நாடகாவின் மத்திய பல்கலைக்கழகம், இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து பெருமைப்படுத்தியது. வெளிநாட்டு சுற்றுசூழல் நிறுவனங்களும் இவருக்கு மரியாதை செய்தன. விருதுகள் குறித்த பெருமைகளை தன் மனத்தில் ஏற்றிக் கொள்ளாமல், தன் பணியைத் தொடர்கிறார் இந்த இயற்கையின் காதலி.

2021020513245916.jpg

ஏஞ்செலா மெர்கெல் ஜெர்மனியின் பெண் அதிபர். 2005 ஆம் ஆண்டு ஜெர்மனியின் முதல் பெண் அதிபரானவர். இப்போது தொடர்ந்து நான்காவது முறையாக இப்பதவியில் இருந்து ஆட்சி செய்கிறார .. போர்ப்ஸ் இதழின், உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகளின் வரிசையில் முதலிடம் பிடித்தவர். ஐரோப்பிய நாடுகளின் தன்னிகரற்ற தலைவராக வலம் வருபவர். பொருளாதர வீழ்ச்சியில் சிக்குண்ட ஜெர்மனியை நிமிர வைத்தவர். லட்சக்கணக்கான சிரியன் அகதிகளுக்கு அடைக்கலம் தந்தவர். ஐரோப்பியாவின் 75% மக்கள் தம் தலைவராக அடையாளம் காட்டும் தங்கத் தலைவி.

20210205132533370.jpg

பெண் இனத்தின் பெருமைக்குச் சான்றாக இருக்கும் இப்பெண்மணிகள், நாளைய உலகின் நம்பிக்கை நட்சத்திரங்கள். இவர்களுக்கு இந்நாளில் ‘விகடகவி’யின் பணிவான வணக்கமும், வாழ்த்துக்களும்...

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்...