ஆதாம்கான்...
மால்வா அரண்மனைக்குள் டெல்லி பாதுஷா நிகழ்த்திய திடும் பிரவேசம் கண்டு திகைத்துப்போன ஆதாம்கான், ஓடிவந்து அக்பர் முன் மண்டியிட்டான். ‘‘நானே முறையாக எல்லாவற்றையும் தங்கள் காலடியில் சமர்ப்பிக்க டெல்லி கிளம்பிக் கொண்டிருந்தேன்!’’ என்று பசப்பினான். தளபதியின் வார்த்தைகளை மன்னர் நம்பவில்லை என்று கேள்வி. எனினும் மஹாம் அங்கா, தன் சாமர்த்தியத்தால் ‘விசாரணை கமிஷன்’ எதுவும் நியமிக்கப்படாமல் பார்த்துக் கொண்டாள். ஆதாம்கான் அப்போதைக்குத் தப்பித்தாலும், மன்னர் ஒரு எரிச்சலுடனேயே அதற்குப் பிறகு தளபதியை நடத்தினார்.
(ஒரு கொடூரமான துணுக்குச் செய்தி: அந்தப்புர பெண்களையெல்லாம் கொன்றுவிட்ட ஆதாம்கான், இரண்டு அழகிகளை மட்டும் ஒளித்துவைத்துக் கொண்டிருந்தான். இரவில் மகனின் அறையில் உறங்கிக் கொண்டிருந்த அவர்களைப் பார்த்துத் திடுக்கிட்ட மஹாம், ‘‘யார் இவர்கள்?’’ என்று கேட்க, ஆதாம்கான் விஷயத்தைச் சொன்னான். ‘‘முட்டாள்! நாளை அக்பரிடம் இவர்கள் தப்பிச் சென்றால், நீ போட்ட வெறியாட்டமெல்லாம் சந்தி சிரிக்குமே… பிறகு, உன் கதி என்னாகும்?’’ என்று பதற்றப்பட்ட அவள், தூக்கத்தில் இருந்த அந்தப் பெண்களின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தாள்!)
ஆதாம்கானைத் தன்னோடு வரச்சொல்லி ஆணையிட்ட அக்பர், மால்வா பிரதேசத்துக்கு ஆளுநராக உப தளபதி ஃபிர்முகமதுவை நியமித்துவிட்டு ஆக்ரா திரும்பினார். திரும்பும் வழியில் ஒரு காட்டுப் பகுதியைக் கடக்க நேரிட்டது. சற்று நேரம் அங்கு தங்கி வேட்டையாடியபோது, புலி ஒன்று உறுமிக் கொண்டு வர, வாளை உருவிக்கொண்டு பாய்ந்த அக்பர், அந்தப் புலியை ஒரே வீச்சில் கொன்று சாய்க்க… அதைக் கண்டு எல்லோரும் பிரமித்துப் போனதாக அக்பரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அப்துல் ஃபஸல் குறிப்பிடுகிறார்.
ஒருவேளை, ஆதாம்கான் மீது மன்னருக்கு இருந்த கோபமெல்லாம் புலிமீது திரும்பியிருக்கலாம்!
ஆக்ரா வந்து சேர்ந்த அக்பர், காபூலில் வசித்துக் கொண்டிருந்த தந்தை ஹுமாயூனின் நண்பரான அட்காகான் என்ற ஓர் அறிஞரை வரவழைத்து (நவம்பர் 1561-ல்), அவரைப் பிரதம அமைச்சராக நியமித்தார். தன் ஆலோசனையைக் கேட்காமல் இந்த நியமனம் நிகழ்ந்தேறியதுகண்டு, மஹாம் அங்காவைக் கவலையும் பீதியும் பீடிக்க, யோசனையில் ஆழ்ந்தது அந்தப் பெண் நரி!
இதற்கிடையே, மால்வா ஆளுநராக ஆக்கப்பட்ட ஃபிர்முகமது, தன் படையுடன் சுற்றுப்புறத்து ஊர்களைச் சூறையாடுவதையும், ஒரு குட்டி செங்கிஸ்கான் கணக்கில் மக்களை வெட்டித் தள்ளுவதையும் வாடிக்கையாகக் கொள்ள… காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த பஸ்பகதூருக்கு வசதியாகப் போய்விட்டது. அண்டைப் பிரதேசங்களை ஆண்டுவந்த குறுநில மன்னர்களை இணைத்துப் படையொன்றை விரைவாகத் திரட்டிக்கொண்டு வந்தார் முன்னாள் மால்வா மன்னர். நடந்த போரில் ஃபிர்முகமது தோற்றுப்போய், ஒரு குதிரையில் ஏறித் தப்பிக்கப் பார்த்தான். அவனை பஸ்பகதூரின் வீரர்கள் துரத்த… வழியில் குறுக்கிட்ட நர்மதா நதியைக் கடக்கப் பார்த்த ஃபிர்முகமதுவைக் குதிரையோடு சேர்த்து வெள்ளம் அடித்துக்கொண்டு போனது!
மால்வா - மறுபடி பஸ்பகதூர் கைக்குப் போய்விடவே, அக்பர் தலையிலடித்துக் கொண்டு, இன்னொரு படையை அனுப்ப வேண்டியிருந்தது. போரில் தோற்றுச் சிறைப்பட்ட பகதூர், அக்பரிடம் சரணாகதி அடைய… மன்னிப்புக் கிடைத்தது. அதற்குப் பிறகு, அக்பரின் அரசவையில் ஒரு முக்கிய பிரமுகராகச் செல்வாக்குடன் பல ஆண்டுகள் வாழ்ந்து காலமானார் பஸ்பகதூர்.
1562 பிறந்தது. புத்தாண்டு அக்பரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மொகலாய ஆட்சியிலும் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்தத் திருப்பம் ஏற்படுத்திய விளைவுகள், சரித்திரப் பிரசித்தி பெற்றவை…
ஆஜ்மீரில் இருந்த க்வாஜா மொய்தீன் சிஷ்டி என்ற ஞானியின் கல்லறைக்குச் சென்று வணங்குவதற்காக அக்பர் ஜனவரி மாதம் அந்த ஊருக்குச் சென்றார். அப்போது அருகில் இருந்த ஜெய்ப்பூருக்கும் மன்னர் வருகை தர, அவரை மிகுந்த மரியாதையோடு வரவேற்றார், ராஜபுத்திர மன்னர் பார்மால் (சில வரலாற்று ஆசிரியர்கள் ‘பிஹாரிமால்’ என்று அழைக்கிறார்கள்). அதைத் தொடர்ந்து, இந்திய மக்களுக்கு வியப்பும் மகிழ்ச்சியும் தந்த ஒரு நிகழ்ச்சி அங்கே நடந்தது!
ராஜபுத்திர மன்னரின் மகளும் மொகலாய பாதுஷாவும் கண்ணோடு கண் நோக்க… அது, திருமணத்தில் முடிந்தது! ஜெய்ப்பூர் இளவரசியின் தம்பி பகவான்தாஸ், அக்பருடைய முக்கிய அமைச்சர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார்.
இப்படியாகத்தான் முதன்முறையாக ராஜபுத்திர-மொகலாய உறவு துளிர்விட்டது! அதுமட்டுமல்ல… இந்த ராஜபுத்திர மனைவி மூலம் அக்பருக்குப் பிறந்தவர்தான் - பிற்பாடு பட்டத்துக்கு வந்த ஜஹாங்கீர்! பாதி ராஜபுத்திரரான(!) ஜஹாங்கீரும் ராஜபுத்திரப் பெண்களை மணந்துகொண்டது பிற்பாடு!
வர வர அக்பர் தன் பிடியிலிருந்து மெள்ள நழுவுவது செவிலித்தாய் மஹாம் அங்காவுக்குப் புரிந்தது. ஆத்திரத்தில் தூக்கமிழந்த அந்தப் பெண்மணி, ‘புதிய பிரதம அமைச்சர் அட்காகானைத் தீர்த்துக் கட்டினால்தான் சரிப்படும்… பிறகு ஆதாம்கானை அந்தப் பதவிக்குச் சிபாரிசு செய்யலாம்’ என்று முடிவு கட்டினாள். ஆனால், இந்த விஷயத்தில் தாயைவிட அவசரப்பட்டான் ஆதாம்கான்!
மிகுந்த பொறுப்புடனும் நேர்மையுடனும் பணியாற்றி வந்த அட்காகான், ஒரு நாளை காலை நெருங்கிய நண்பர்களுடன் அமர்ந்து புனித குர்-ஆன் ஓதிக்கொண்டிருந்தபோது, உள்ளே வெறியோடு புகுந்த ஆதாம்கான், அந்த முதியவரின் மார்பில் பலமுறை வாளைப் பாய்ச்சிக் கொன்றான். கூடியிருந்தோர் பதறி அலற, திரும்பி ஓடினான் அந்தக் கொலைகாரன். அப்போது பக்கத்து அறைக்கதவு திறந்தது. ஏதோ சத்தம் கேட்டு வெளியே வந்து நின்றவர்… மன்னர் அக்பர்!
தரையில் பிரதம அமைச்சர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த காட்சியைப் பார்த்த அக்பர் திகைத்துப் போனார். விநாடியில் விஷயத்தை யூகித்த மன்னரின் கரம் இடையில் இருந்த வாளை உருவியது - தான் அரசர் என்ற நினைப்பு வர, மறுபடி வாளை உறைக்குள் போட்டுக் கொண்ட அக்பர், கண்கள் சிவக்க நிமிர்ந்து ஆதாம்கானைப் பார்த்தார். ‘‘ஏன் இப்படி நடந்தது?’’ என்ற கேள்வி, மன்னரிடமிருந்து உறுமலாக வெளிப்பட்டது.
‘‘பாதுஷா! என்னை மன்னியுங்கள்… அதாவது, வந்து…’’ என்று நடுங்கிக் குழறிய வண்ணம், தன் கையை நீட்டியவாறு அக்பரை நெருங்கினான் ஆதாம்கான். அவனை மேலே பேசவிடாமல் மின்னல் வேகத்தில் முஷ்டியை உயர்த்தி, அக்பர் வீசிய குத்து பேரிடியாக அவனைத் தாக்க… மல்லாந்து வீழ்ந்தான் மஹாம் அங்காவின் மகன். நடந்த கொடுமையைக் கூடியிருந்தோர் கலங்கிய வண்ணம் பாதுஷாவிடம் விவரித்தார்கள். உடனே காவலர்கள் அழைக்கப்பட்டனர். அக்பரின் ஆணையின்படி, ஆதாம்கானின் கால்களையும் கைகளையும் கயிற்றால் கட்டினார்கள். அவனை அலாக்காக உப்பரிகைக்குத் தூக்கிச் சென்றார்கள். கீழே மைதானத்தில் இருந்த சில தளபதிகளும் மற்ற வீரர்களும் திகைப்போடு அண்ணாந்து பார்க்க, ‘‘கீழே வீசியெறியுங்கள் இவனை!’’ என்றார் அக்பர்.
சுமார் நாற்பது அடி உயரத்திலிருந்து தூக்கியெறியப்பட்டு, எலும்புகள் முறிந்து படுகாயப்பட்டும் ஆதாம்கானின் உயிர் போகவில்லை! மறுபடி மேலே ஆதாம்கானைத் தூக்கிவரச் செய்து, இரண்டாவது முறை அவனைத் தூக்கிப் போடச் செய்தார் அக்பர். விழுந்த விநாடியில் இந்த முறை மண்டை பிளந்து செத்துப்போனான், ஆட்டம் போட்ட அந்தத் தளபதி.
மஹாம் அங்காவை அழைத்துவரச் சொன்னார் அக்பர். நடந்த கொடுமையையும் ஆதாம்கானுக்குத் தான் அளித்த தண்டனை பற்றியும் அவரே விவரித்தார். அந்தப் பெண்மணியின் கனவுக்கோட்டைகள் சரிந்தன. அதிலிருந்து பித்துப் பிடித்ததைப் போல ஒரு இருட்டறையில் முடங்கிக் கிடந்த மஹாம் அங்கா, சில வாரங்கள் கழித்து (மே 1562-ல்) இறந்து போனாள்.
பைராம்கானுக்கும் மன்னருக்கும் இடையே நிலவிய நல்லுறவு அகன்று, சுமார் இரண்டாண்டுகளுக்கு மஹாம் அங்காவின் செல்வாக்கு டெல்லியை அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காலகட்டத்தை ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் சிலர், ‘உள்பாவை ஆட்சி (Petticoat Government)’ என்று வர்ணிக்கிறார்கள். ஆனால், ஆதாம்கானுக்குக் கிடைத்த தண்டனைக்கு பிறகு, அக்பருக்கு மிக மிக நெருங்கியவர்கள்கூட மன்னரிடம் வாலாட்டவில்லை என்பதும், பிறகே இந்த வகையான இடையூறுகள் எதுவுமில்லாமல் அக்பரின் ஆட்சி ராஜபாட்டையில் கம்பீரமாகப் பயணிக்க ஆரம்பித்தது என்பதும் உண்மை!
மன்னருடன் நேரடியாக மோதுவதற்காக ராஜபுத்திர மாவீரர்கள் சிலர் மட்டும் காத்திருந்தனர். ஒரு வீராங்கனையும்தான்..!
Leave a comment
Upload