தொடர்கள்
ஆன்மீகம்
ஆன்மீக ஆசான் - 30 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20210204113731709.jpg

மற்ற மதங்களில் இல்லாத பல அம்சங்கள் நம் மதத்தில் இருக்கின்றன. அதில் ஒன்று, கர்மக் கொள்கை, Karma theory என்று சொல்கிறார்கள். நம் மதத்திலிருந்து வந்த பௌத்தம், சமணம் போன்ற மதங்கள் இதை ஒப்புக் கொண்டாலும் ஏனைய மதங்களில் இந்தக் கொள்கை இல்லை.

‘கர்மா தியரி’ என்ன? எந்தச் செயலுக்கும் பிரதியாக ஒரு விளைவு உண்டு. Cause and effect என்பதாகவும், action and reaction என்பதாகவும், இவை தவிர்க்க முடியாத விதிகளாக இருக்கின்றன என்று ஃபிஸிக்ஸில் சொல்கிறார்கள். பௌதிகத்தில் சொல்வதையே மநுஷ்ய வாழ்க்கைக்கும் பொருத்தி ‘கர்மக் கொள்கை’யை நம் ஆன்றோர்கள் கூறுகிறார்கள். பிரபஞ்சத்தில் ஜடமான பூதங்கள் போலவே சைதன்யம் என்ற அறிவுள்ள ஜீவன்களும் அடக்கம். இவை ஒன்று சேர்ந்துதான் லோக வாழ்வு. எனவே, ஒன்றுக்கு இருக்கிற நியதி, தர்மம் இன்னொன்றுக்கும் இருக்கத்தான் வேண்டும். மனிதனின் ஒவ்வொரு கர்மாவுக்கும் விளைவாக ஒரு பலன் உண்டாகித்தான் தீர வேண்டும் என்பதே Karma theory. ‘பாப கர்மம்’ செய்தால் அதற்கான தண்டனையை மனுஷ்யன் அநுபவிக்க வேண்டும். ‘புண்ணிய கர்மம்’ செய்தால் அதற்கான நற்பலனை இவனை வந்தடையும் என்கிறது நம் மதம்.

இம்மாதிரி பாப, புண்ணிய கர்மங்களை மனிதன் அநுபவிக்க வேண்டும் என்பதனாலேயே அவனுக்குப் பல பிறவிகள் உண்டாகின்றன என்கிறது நம் மதம். நல்லது செய்ய வேண்டும், கெட்டது செய்யக் கூடாது என்பதைச் சகல மதங்களும் சொன்னாலும், அவை நம் மதம் மாதிரி இத்தனை அழுத்தம் கொடுத்து காரணம் — விளைவு (cause and effect) தொடர்பைச் சொல்லவில்லை. மறுபிறப்புக் கொள்கையை (reincarnation theory) மற்ற மதங்கள் — பாரத தேசத்தில் தோன்றாத மற்ற மதங்களில் எதுவுமே — சொல்லவில்லை. அது மட்டுமில்லை. இதற்கு மாறாகப் பல தினுசான கருத்துக்களைச் சொல்கின்றன. ஆனபடியால் அந்த மதஸ்தர்கள் மனிதனுக்குக் கர்மா தீருகிற வரை பல ஜன்மங்கள் உண்டு என்ற நம் கொள்கையை பலமாக ஆட்சேபிப்பார்கள். பொதுவாக அந்நிய மதஸ்தர் கருத்து என்னவென்றால், ‘இந்த ஒரே ஜன்மாவோடு மநுஷ்யனுக்குப் பிறவி தீர்ந்து விடுகிறது. இந்த ஜன்மா முடிந்தபின் அவன் உயிர் என்றைக்கோ ஒரு நாள் ஸ்வாமி கூறுகிற தீர்ப்பைக் கேட்பதற்காக ஓரிடத்தில் போய் இருக்கும். அந்த நாளில் (judgement Day) ஸ்வாமி இவன் இந்தப் பிறவியில் செய்த பாப, புண்ணியங்களைக் கணக்குப் பார்த்து இவனை நித்திய ஸ்வர்க்க வாசத்துக்கோ அல்லது நிரந்தர நரக வாசத்துக்கோ (eternal damnation) அனுப்பி விடுவார்’ என்பதேயாகும்.

என்னிடம் வந்த ஒரு வெள்ளைக்காரர் — இப்போதெல்லாம் என்னிடம் நிறைய வெள்ளைக்காரர்கள் வந்தபடி இருக்கிறார்களே! — அவர்களில் ஒருத்தர்; இவர் புஸ்தகம் கிஸ்தகம் எழுதிப் பிரசித்தி பெற்றவர் —வேடிக்கையாகச் சொன்னார். அவருக்கு பைபிளில் எங்கு பார்த்தாலும் கடவுள் அன்பே உருவானவர் (God is love) என்று சொல்லிவிட்டு, இப்படிப்பட்டவர் ‘ஒரு தப்புப் பண்ணினவனைத் துளிகூடக் கருணையில்லாமல் மீளவே வழி இல்லாத நித்திய நரகத்திற்கு அனுப்புகிறார் என்று சொல்லுவது பொருத்தமில்லாமல் தோன்றியதாம். எனவே ஒரு பாதிரியாரிடம் சமாதானம் கேட்டாராம். அதற்குப் பாதிரியார், நிரந்தர நரகம் இருப்பது வாஸ்தவம். ஆனால், நிரந்தரமாகக் காலியாகவே இருக்கிறது’ என்றாராம்!

ஆனால் யோசித்துப் பார்த்தால் இதை நாம் ஏற்றுக் கொள்வது சிரமமாக இருக்கும். ஸ்வாமி கருணை காரணமாகப் பாவியைக்கூட நரகத்துக்கு அனுப்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால், அவர்கள் சித்தாந்தப்படி அவர் பாவியின் உயிரை எங்கே அனுப்ப முடியும். அவர்கள் கொள்கைப்படி மறு ஜென்மா இல்லையாதலால் பூலோகத்துக்கு மறுபடி அனுப்ப முடியாது. ஆனதால், பாபியையும் ஸ்வர்கத்துக்குத்தான் அனுப்ப வேண்டியதாகும். அப்படியானால் நாம் லோகத்தில் எந்த பாபத்தை வேண்டுமானாலும், எத்தனை பாபங்களை வேண்டுமானாலும் கூசாமல் செய்து கொண்டே போகலாம்; முடிவில் எப்படியும் ஸ்வாமி நம்மை ஸ்வர்க்கத்துக்கு அனுப்பி விடுவார் என்று ஆகும். அதற்கப்புறம் லோகத்தில் சகலரும் ஒழுங்கு தப்பித்தான் நடப்பார்கள்.

நம் மதப்படியும் கர்ம பலனைத் தந்து தீர்ப்புத் தருகிற பலதாதாவான ஈசுவரன் பரம கருணாமூர்த்திதான். ஆனால் அதற்காக லோகம் அதர்மத்தில் மனமறிந்து விழட்டும் என்று விடுகிறவன் அல்ல அவன். அதனால் என்ன பண்ணுகிறான்? நம் பாப பலனை (புண்ய பலனையும்தான்) அநுபவிப்பதற்காக நம்மை இன்னொரு ஜன்மா கொடுத்து, மறுபடி இந்த உலகுக்கே அனுப்பி வைக்கிறான். ஸ்வர்க்க ஆனந்தம், நரகக் கஷ்டம் இரண்டும் இந்த உலகிலேயேதான் இருக்கின்றன. நாம் கலந்தாங்கட்டியாகப் பாபம், புண்ணியம் இரண்டும் போன ஜன்மாவில் பண்ணியிருப்பதால் இப்போது கெட்டது நல்லது இரண்டையும் சேர்த்து அநுபவிக்கிறோம்; ரொம்பப் பாவம் செய்தவர்கள் ரொம்பக் கஷ்டப் படுகிறோம்; ரொம்பப் புண்ணியம் செய்தவர்கள் நிறைய சந்தோஷப் படுகிறோம். பொதுவிலே பார்த்தால் ரொம்பக் கஷ்டப் படுகிறவர்கள் அல்லது சமமாக கஷ்ட— சுகம் உள்ளவர்கள்தான் இருக்கிறோமே தவிர, தாங்கள் பரம சுகமாக இருப்பதாக நினைக்கிறவர்கள் ரொம்பவும் துர்லபமாகவே இருக்கிறார்கள். இதிலிருந்தே நாம் அனைவரும் பொதுவில் பாபமே அதிகம் பண்ணியிருக்கிறோம் என்பது புரிகிறது.

பகவான் கருணை காரணமாக, ‘இன்னொரு ஜன்மாவிலாவது இவன் பாபத்தைக் கழுவிக் கொள்வானா’ என்று பார்ப்பதற்காக, ஒரு பெரிய வாய்ப்பாக (opportunity) பிறவியைக் கொடுக்கிறார். அதிலே குரு, சாஸ்திரம், க்ஷேத்திரங்கள் இத்யாதி வசதிகளை எல்லாம் கொடுத்து, இவனுடைய அழுக்கைத் துடைக்க முன்வருகிறார். ‘இவன் கையாலாகாதவன். ஒரு நாளும் தானாக முன்னேற மாட்டான்’ என்று அடியோடு உதவாக்கரையாக நினைத்து இவனுக்குப் பாவியானாலும்கூட ஸ்வர்க்கத்தைக் கொடுத்து விடுகிறார் என்பதைவிட இப்படி இவனைக் கூட நம்பி, இவன் தன்னைத்தானே கடைத்தேற்றிக் கொள்வான் என்று நம்பிக்கை வைத்து, புனர் ஜன்மா தந்து, இதில் இவனுடைய நன்முயற்சிகளுக்குப் பலவிதத்தில் கைகொடுக்க ஸ்வாமி முன் வருவதாகச் சொல்வதுதான் நன்றாக இருக்கிறது. பொருத்தமாக இருக்கிறது. அதுதான் பரம கருணையாகவும் இருக்கிறது. ‘எனக்கென்று முயற்சி என்ன இருக்கிறது? — எல்லாம் உன் செயல்’ என்று ஜீவன் சரணாகதி செய்கிறபோது ஸ்வாமியே இவனை ஒரே தூக்காகத் தூக்கிவிடுகிறார் என்பது வாஸ்தவம். ஆனால் இவனாக முயற்சியை விடுகிற சரணாகதியில் அநுக்கிரகம் செய்வது வேறு; இவனுக்கு முயற்சி செய்யவே லாயக்கில்லை என்று நினைத்து அநுக்கிரகம் செய்வது வேறுதான். புருஷ யத்தனம் என்று ஒன்று இருப்பதாக நினைக்கிற வரையில் அதில் ஜீவனை நம்பிவிட்டு வைப்பதுதான் பரம கருணை. அதுதான் நிஜமான அநுக்கிரகம்.

நிரந்தர நரகத்துக்கு ஸ்வாமி எவரையும் அனுப்புவதில்லை என்பது ஒரு தனிப்பட்ட பாதிரியாரின் அபிப்ராயம்தான். அதுவேதான் கிறிஸ்துவம் முதலான, ‘ஒரே பிறவி’ மதங்களின் கோட்பாடு என்று சொல்லுவதற்கில்லை. ஒரே ஜன்மத்தில் ஒருத்தன் பண்ணுகிற புண்ணியத்துக்காக அல்லது பாபத்துக்காக அவனை ஸ்வாமி ஸ்வர்க்கம் அல்லது நரகத்துக்கு நிரந்தரமாக அனுப்பிவிடுகிறார் என்பதுதான் அம்மதங்களின் பொதுக் கருத்து, அதிலும் நாம் பொதுவாக பாபமே பண்ணுவதால் நரக தண்டனை பெறுகிறவர்கள்தான் ஜாஸ்தியாக இருப்பார்கள் என்பதால், தீர்ப்பு நாளைக்கே ரொம்பவும் பயங்கரமான பெயர் — Doomsday என்றே வைத்திருக்கிறார்கள். இது பகவானின் கருணைக்குக் குறைவாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.