தொடர்கள்
விகடகவியார்
விகடகவியார்

அடுத்த குறி அமைச்சர் விஜயபாஸ்கர்...

20210008193708356.jpeg

விகடகவியார் உள்ளே நுழைந்ததும் “அமித்ஷா படம் நிறைய வைத்துக்கொள்ளுங்கள், பயன்படும். இப்போதைக்கு அவர்தான் செய்தி நாயகர்” என்று சொல்லி அமர்ந்தார். உடனே நாம் “அமித் ஷா விஜயம் தள்ளிப்போனது ஏன்” என்று கேட்டோம். விகடகவியார் புன்முறுவல் பூத்தபடி “தள்ளிப் போகவில்லை, ரத்தாகிவிட்டது. இப்போதைக்கு அவர் தமிழகம் வருகிறார் போல் இல்லை. அவர் தொட்டதெல்லாம் நடக்கும் என்பார்கள்... ஆனால், தமிழ்நாட்டில் நடக்கவில்லையே” என்றார்.

20210008194143406.jpeg

“நீர் ரஜினி பற்றிய செய்திக்கு வருகிறீர்.. அப்படித்தானே?” என்றோம். அதற்கு விகடகவியார் “அதுவும்தான். ரஜினி விஷயத்தை ஆடிட்டர் குருமூர்த்தி தான் கவனித்து வந்தார். முதலில் ரஜினி இல்லை என்றார், அப்புறம் வருகிறேன் என்றார். இப்போது இல்லை என்கிறார். குருமூர்த்தி உண்மையில் ரஜினியிடம் என்ன பேசினார் என்பது இதுவரை மர்மமாகவே இருக்கிறது. கொரோனா அச்சத்தால் இந்த முறை ஓட்டலில் தங்காமல் ராஜ் பவன் அல்லது ரஜினியின் பண்ணை வீடு என்றும் முடிவு செய்திருந்தார் அமித்ஷா. குருமூர்த்தியும் தைத்திங்கள் அன்று ரஜினியை சந்திக்கலாம் என்றெல்லாம் சொல்லி இருந்தார். ஆனால், ரஜினியோ தாம் விரைவில் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல வேண்டி இருக்கும், இன்னொரு முறை சந்திப்போம் என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அதனால் தான் அமித்ஷா சென்னை விஜயம் ரத்து. குருமூர்த்தி மீது ஏக கடுப்பில் இருக்கிறார் உள்துறை அமைச்சர்” என்று விகடகவியார் சொன்னதுமே... “சரி. ரசிகர்களுக்கு ரஜினி என்ன சொல்ல விரும்புகிறார்?” என்று நாம் கேட்டோம்.

“ரஜினி ரசிகர்கள், ரஜினிக்கு நிறைய இப்போது சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். கிட்டத்தட்ட... ரஜனி மக்கள் மன்றம், காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி மோதலை தூக்கி சாப்பிடும் அளவிற்கு அங்கு வாட்ஸ் அப்பில் சண்டை நடந்து வருகிறது. அவையெல்லாம் தரம் குறைந்திருப்பதால், அதை நான் உனக்கு சொல்ல விரும்பவில்லை” என்று விகடகவியார் சொன்னதும்... நாம், “சரி, அப்படியிருந்தும் பிஜேபி கட்சியின் தேசிய தலைவர் நட்டா, துக்ளக் விழாவிற்கு வருகிறாரே” என்றோம்.

“அது, குருமூர்த்தி சில தலைவர்களிடம் பேசி அவரை சம்மதிக்க வைத்தாராம். இதன் நடுவே சுப்பிரமணியசாமி, ‘துக்ளக்கை குருமூர்த்தி எப்படி கைப்பற்றினார்’ என்று அமித்ஷா விசாரிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வைத்திருக்கிறார்” என்றார் விகடகவியார்.

20210008193759934.jpeg

“சரி. அதிமுக - பாரதிய ஜனதா கூட்டணி உண்டா இல்லையா? அதை சொல்லும்..” என்று நாம் அடுத்த விஷயத்துக்கு போனோம்.

“முதல்வர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தனது அரசின் சாதனைகளை பற்றி தான் பேசுகிறார். மோடி பற்றியோ மத்திய அரசு பற்றியோ அவர் பேசுவதில்லை” என்று விகடகவியார் சொன்னதும்... நாம் உடனே, “நீர் இதன் மூலம் சொல்லவரும் கருத்துதான் என்ன” என்று கேட்டோம்.

“பாரதிய ஜனதா தீர்மானமாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. மு.க. அழகிரி, விஜயகாந்த், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் துண்டு துக்கடா கட்சிகளை சேர்த்து மூன்றாவது அணி அமைத்து போட்டியிடலாம் என்று ஒரு யோசனையும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதன் நடுவே 49 பேர் போட்டியிடும், பெயர், தொகுதி என்று பாரதிய ஜனதா சார்பில் ஒரு சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வலம் வந்தது. அதை பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் நாராயணன் மறுத்திருக்கிறார். அதே சமயம் அந்தப் பட்டியல் கிட்டத்தட்ட தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அது எப்படி வெளியே போனது என்ற விசாரணையும் நடந்து வருகிறது” என்று விகடகவியார் சொன்னதும்...

20210008194255102.jpeg

“எந்தக் கட்சியும் ரகசியமாக எதுவும் செய்ய முடியாது போல் இருக்கிறது” என்று நாம் சொன்னதும்... “இதுதான் அரசியல், என்ன செய்ய” என்று விகடகவியார் சிரித்தபடியே சொல்ல... நாம் உடனே “அதிமுகவின் நிலைப்பாடுதான் என்ன?” எனக் கேட்டோம்.

அதற்கு விகடகவியார், “கூட்டணி ஆட்சி கிடையாது. தேர்தல் கூட்டணி அமைந்தாலும் அதன் பெயர் அதிமுக கூட்டணிதான். இந்த இரண்டு விஷயத்திலும் எடப்பாடியார் உறுதியாக இருக்கிறார். பெரும்பான்மை அதிமுக நிர்வாகிகள் அவருக்கு ஆதரவு. ஆனால்...ஓபிஎஸ் நிலைப்பாடுதான் இன்னும் உறுதியாக தெரியவில்லை. தற்போதும் ஓபிஎஸ் மீது பாரதிய ஜனதா கரிசனம் காட்டுகிறது” என்று சொன்னதும்... “இது என்ன புதுக் கணக்கு” என்றோம்.

“தங்களுக்கு சரி படாவிட்டால், கட்சியை மீண்டும் இரண்டாக்கி விடலாம் என்பதுதான் பாஜகவின் ஆவேசம். ஆனால்.. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதும் தெரியவில்லை. எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் ஒரே விமானத்தில், ஒரே காரில், பி.எச். பாண்டியன் சிலை திறப்பு விழாவிற்கு போனார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. மூத்த தலைவர் கேபி முனுசாமி தான், தற்போது எடப்பாடியின் மனசாட்சி. அவர்தான் ஓபிஎஸிடம் சற்று ஓபனாக, உள்ளது உள்ளபடி பேசுகிறார். இருந்தாலும் ஓபிஎஸ் இப்படி அப்படி என்ற தவிப்பான மனநிலையில்தான் இருக்கிறார். மதில் மேல் பூனை மனசு அவருக்கு என்பது உண்மையோ உண்மை.”

20210008193850362.jpeg

“சரி மு.க. அழகிரி விஷயத்துக்கு வாரும்” என்றோம்...

“அவர் ஒரு நாள் ஹாட் டாபிக் அவ்வளவுதான். அவர் கருணாநிதி புகழ் பாடுவார், அதை திமுக ஏற்காது. பாரதிய ஜனதாவுக்கும் இதே யோசனைதான். ஆனால், மு.க. அழகிரிக்கு ஒரு யோசனை சொல்லியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட 20 தொகுதிகளில், உங்கள் சார்பாக வேட்பாளரை நிறுத்துங்கள். அங்கெல்லாம் நீங்கள் ஸ்டாலினுக்கு எதிராக பிரச்சாரம் செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்”

“சரி அழகிரி அதற்கு ஒப்புக் கொண்டாரா” என்று நாம் ஆர்வமாக கேட்க... நம்மை ஒருமுறை கவனித்துவிட்டு, “அது தெரியவில்லை. ஆனால், அவர் தொண்டர்களிடம் பேசி முடிக்கும் போது... ‘நான் எந்த முடிவு எடுத்தாலும் நல்லதோ, கெட்டதோ அதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும்’ என்று தனது ஆதரவாளர்களிடம் அழகிரி ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். அதை கொஞ்சம் கவனிக்கத்தான் வேண்டும்” என்றார் விகடகவியார்

20210008193910404.jpeg

“சரி. சசிகலா, தினகரன் பற்றி எல்லாம் எந்தச் செய்தியும் இல்லையா?” என்று நாம் கேட்டதும்... “தினகரன், டெல்லியில் முகாமிட்டு பாரதிய ஜனதா தலைவரை சந்திக்க முயற்சிப்பதாக சொல்கிறார்கள். அவர் தான் முதல்வர் வேட்பாளர் என்றும் சொல்கிறார்கள். ஆனால், இதெல்லாம் இப்போதைக்கு நம்பும்படி இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இருந்தாலும், எனக்கு கிடைத்த செய்தியை உம் காதில் போட்டுவிட்டேன்” என்று விகடகவியார் சொன்னதும்...

2021000819404227.jpeg
“திமுக கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லையா” என்று அவரை திமுக செய்திக்கு இழுத்தோம்.

“ஏன் இல்லாமல்... கூட்டணிக் கட்சிகளை கணிசமான அளவு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டும் என்பது ஸ்டாலினின் விருப்பம். சமீபத்தில் ஸ்டாலினை சந்தித்த வைகோ, அவரை வானளாவப் புகழ்ந்து பேசிவிட்டு... கடைசியாக எங்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் தேவை என்றால் நாங்கள் குறைந்தது 20 இடங்களில் போட்டியிட வேண்டும். அதுவும் எங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். புகழ்ந்து பேசும் போது மலர்ச்சியாக இருந்த ஸ்டாலின் முகம், தொகுதி பங்கீடு பற்றி பேச்சு வந்ததும் முகம் சுருங்கி, நான் மற்ற தலைவர்களை கலந்து ஆலோசனை செய்து விட்டு சொல்கிறேன் என்று அனுப்பி வைத்தாராம். அதற்கு சில தினங்களுக்கு பின் வைகோ ‘இந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் எங்கள் கட்சி சின்னத்தில் தான் போட்டியிடுவோம்’ என்று சொன்னார்.

திருமாவளவன், உதயசூரியன் சின்னம் என்றால் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வோம் என்று சொல்லி வருகிறாராம்” என்று விகடகவியார் சொன்னதும்... நாம், “அடடா.. ஸ்டாலினுக்கு சங்கடம் தான் போலிருக்கிறது” என்றோம்.

உடனே விகடகவியார், “இருங்கள். இன்னும் முடியவில்லை. திமுகவின் சிறுபான்மை பிரிவு ஒரு கருத்தரங்கை சமீபத்தில் நடத்தியது. அதில் இந்திய தேசிய லீக் தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன் பேசும்போது, “சென்ற தேர்தலில் 16 இடங்களை தந்தது திமுக, வரும் சட்டமன்ற தேர்தலில் இதைவிட அதிக இடங்களை ஸ்டாலின் கொடுப்பார் என்று நம்புகிறோம்” என்று ஐஸ் வைத்தார். ஆனால், இறுதியாக ஸ்டாலின் பேசும்போது “இடம் குறித்து கவலை வேண்டாம், நாம் ஆட்சி அமைக்க போகிறோம்... அதுதான் முக்கியம்” என்று ஒரு மாதிரியாக சமாளித்தார். இந்த கருத்தரங்கத்திற்கு ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அதற்கு தமிழகம் முஸ்லீம் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே டி.ஆர். பாலு, அவரை தொடர்பு கொண்டு நீங்கள் கூட்டத்திற்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு அசாதுதீன் ஓவைசி, ‘நான் வருகிறேன் என்று சொல்லவில்லை.. நீங்கள் தான் அழைத்தீர்கள், இப்போது நீங்கள் தான் வரவேண்டாம் என்று சொல்கிறீர்கள்’ என்று சொல்லி தொடர்பை துண்டித்தார்” என்று சொல்லி விகடகவியார் சிரித்தார்.

20210008194101957.jpeg

“அவ்வளவுதானா செய்திகள்?”என கேட்டோம்.

“ஹாங்...உமக்கு ஒரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன்... திடீரென, பொள்ளாச்சி பாலியல் வழக்கு சூடு பிடிப்பதுபோல், விஜயபாஸ்கர் மீதான குட்கா ஊழல் வழக்கும் சூடுபிடிக்கும். இது எனக்கு டெல்லியில் இருந்து கிடைத்த தகவல்” என்று சொல்லி நிறுத்தினார்.

“சத்தியமூர்த்தி பவன் செய்திகள் எதுவும் இல்லையா?” என்று நாம் கேட்டதும்... “தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் இரண்டு வருட போராட்டத்திற்கு பிறகு, தற்சமம் வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி கார்த்திக் சிதம்பரம், ‘இந்த ஜம்போ நிர்வாகிகள் பட்டியலால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. எந்த நிர்வாகிக்கும் அதிகாரம் இல்லை. அதிகாரமில்லாத பதவி எதற்கு?’ என்று தனது டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார். அதற்கு பதிலடியாக, ‘சிவகங்கையில் கூட நிறைய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருந்தாலும், அவர்களுக்கு மட்டும் நீங்கள் என்ன சுதந்திரம் தந்து இருக்கிறீர்களா... அங்கும் நீங்கள் சொல்வதை தானே நாங்கள் கேட்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்’ என நிர்வாகிகள் தரப்பு பதில் கேள்வியெழுப்பியது. இதற்கு கார்த்தி சிதம்பரம் எதுவும் சொல்லவில்லை” என்று சொன்ன விகடகவியார் “அடுத்த வாரம் பார்ப்போம்” என்றபடி சட்டேன கிளம்பி விட்டார்.