ஹுமாயூன்..
இந்த தருணத்தில், வடக்கே ஆப்கானிய ஷெர்கான் எழுப்பிய போர்முரசு பற்றித் தகவல் வந்தது. உடனே அவசரப்பட்டு ஆக்ரா திரும்பினார் ஹுமாயூன். குஜராத்தில் உறுதியாக காலூன்றாமல், பாதியில் மன்னர் இப்படி ஊர் திரும்பியதை ஹுமாயூன் செய்த பெரும் தவறாக வரலாறு குறிப்பிடுகிறது. விளைவு? பகதூர் ஷா போர்ச்சுக்கீசிய படையின் உதவியுடன், இழந்த பிரதேசங்கள் அத்தனையையும் மிகச் சுலபமாக திரும்பவும் கைப்பற்றிக் கொண்டார். ஹுமாயூனின் வீரர்கள் சிந்திய ரத்தம் அத்தனையும் வீணாகப் போனது! வீரம் மிகுந்த மொகலாயப் படை உற்சாகம் இழந்ததுதான் மிச்சம்.
ஆனால், பகதூர் ஷாவுக்கு முடிவு வேறு வகையில் சம்பவித்தது மறுபடியும் போர்ச்சுக்கீசியரை சந்தித்து, எதிர்கால உறவு பற்றி பேச்சுவார்த்த நடத்த டையூ வந்த பகதூர் ஷாவுக்கு, கப்பலில் விருந்து ஏற்பாடுகள் செய்திருந்தனர் போர்ச்சுக்கீசிய அதிகாரிகள். கப்பலை நோக்கி ஒரு படகில் சென்ற குஜராத் சுல்தான், கொந்தளித்த கடலில் கால் தவறி விழுந்தார். ஹுமாயூன் செய்ய தவறிய வேலையை, சுறாக்கள் செய்து முடித்தன!
இதற்குள் தெற்கு பீஹார் முழுவதையும் கைப்பற்றியிருந்த ஷெர்கான் வடக்கே முன்னேறி, அலஹாபாத் அருகே கங்கை, நதிக்கரையில் இருந்த சுனார் கோட்டையைப் பிடித்தார்.
சுலபத்தில் நெருங்க முடியாத, எசகுபிசகான இடத்தில் அமைந்திருந்த சுனார் கோட்டையை ஹுமாயூன் படை முற்றுகையிட்டது. ‘சுனார் கோட்டையை நிர்வகிக்க யாரோ ஒரு பிரதிநிதியைத்தானே தாங்கள் நியமிக்கப் போகிறீர்கள்! அது, நானாக ஏன் இருக்கக்கூடாது! மேன்மைதங்கிய மன்னருக்கு விசுவாசமான ஊழியனாக நான் பணிபுரிவேன்..!’ என் ஷெர்கான் பசப்புக் கடிதம் எழுதியதை நம்பி ஏமாந்தார் ஹுமாயூன். இதைத் தொடர்ந்து படைபலத்தை அதிகரித்துக் கொண்ட ஷெர்கான், குபீரென்று பாய்ந்து வங்காளத்தை விழுங்கினார். கோபம் கொண்ட ஹுமாயூன், சுனார் கோட்டையைக் கைப்பற்றி காவல் போட்டுவிட்டு, வங்காளம் நோக்கி கிளம்பினார். உடனே ‘என் எஜமானரே! தேவையில்லாமல் உங்கள் ஊழியனான என்னோடு ஏன் மோதுகிறீர்கள்? வங்காளத்தை விட்டுக்கொடுத்தால், பீஹாரைத் தங்கள்முன் வைத்துத் தங்கள் பாதங்களை முத்தமிடுவேன். வங்காள சிம்மாசனத்தை அலங்கரிக்கும் குடை, மகுடம் எல்லாவற்றையும் உங்கள் காலடியில் வைத்து, ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய் கப்பம் அனுப்புவேன். இந்த ஏழையின் கூற்றுக்குச் செவிசாயுங்கள்!’ என்று ஷெர்கான் ஒரு கடிதம் அனுப்ப (வாசகர்கள் கரெக்டாக ஊகித்திருப்பீர்களே!), ஹுமாயூன் உடனே மகிழ்ந்துபோய் ஷெர்கானை மன்னித்து, அவர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்!
நல்ல காலமாக வங்காளத்திலிருந்து வந்த ஒரு பிரதிநிதி, ஷெர்கானின் குள்ளநரித் திட்டங்களை ஹுமாயூனுக்கு விளக்க, சற்று காலதாமதமாக வங்காளத்துக்குள் ஹுமாயூனின் படை புகுந்தது. அப்போது வங்காள தலைநகராக (கங்கை பல கிளைகளாகப் பிரியும் பகுதியில்) இருந்த கவுர் நகரை சுலபமாகவே கைப்பற்றியது. ஆனால், ஹுமாயூனின் சபலங்களைப் பற்றி நன்கு புரிந்து வைத்திருந்த ஷெர்கான், கவுர் நகரத்து அரண்மனையை ஒரு உல்லாசபுரியாகத் தயார்நிலையில் வைத்துவிட்டே, ஒரு பெரும் படையுடன் வெளியேறினார்! ஹுமாயூன் அரண்மனைக்குள் புகுந்தவுடன், அதன் ரம்மியமான அழகைப் பார்த்து கிறங்கிப் போனார். ஏராளமான அழகிகள் வேறு மன்னருக்குப் பணிவிடை செய்யத் தயாராக நின்றிருந்தனர். மங்கைகள் சூழ, அந்த மயக்கத்தை ஓபிய வில்லைகள் அதிகரிக்க, அந்தப்புரத்தில் காணாமல் போனார் ஹுமாயூன் பாதுஷா!
சில மாதங்கள் கழித்து, ஒருவழியாக ஹுமாயூன் மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்தால்… வந்த செய்தி பயங்கரமாக இருந்தது. பலம் பொருந்திய ஆப்கானிய அதிரடிப் படையுடன் தப்பிச் சென்றிருந்த ஷெர்கான், சுனார் கோட்டையில் காவலில் இருந்த 700 மொகலாய வீரர்களை வெட்டி தள்ளி, கோட்டையை மறுபடியும் கைப்பற்றி, அதைத் தொடர்ந்து காசியை கபளீகரம் செய்து, கன்னோசியையும் காலடியில் மண்டியிட செய்தார். பிறகு ஆப்கான் படை, ஜான்பூரையும் ஜாலியாகவே வாரிப் போட்டுக் கொண்டது.
ஷெர்கானின் நிஜப்பெயர் ஃபரீத். ஒருமுறை மற்ற வீரர்களுடன் வேட்டையாடப் போனபோது, திடீரென்று அவர்மீது பாய்ந்த கொழுத்த புலியைத் தன் கைகளாலேயே தடுத்து வீழ்த்தி, புரட்டிப் போட்டு குறுவாளால் குத்திக் கொன்றார் ஃபரீத். அதிலிருந்து புலியை வென்ற வீரர் - ‘ஷெர்கான்’ என்று அழைக்கப்பட்டார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது!
இப்போது ஷெர்கான்முன் அணிதிரண்டு நின்றிருந்தனர் ஆப்கான் வீரர்கள். அவர்களிடையே ஷெர்கான் செய்த முழக்கம், புலியின் உறுமலாக இருந்ததில் வியப்பில்லை! ‘‘மாவீரர்களே! நம் கனவு நிறைவேறும் தருணம்… நம் லட்சியம் கைகூடும் வேளை - இதோ வந்துவிட்டது! போதையில் வீழ்ந்து கிடக்கும் இந்த மொகலாய மன்னரை முறியடிப்போம். டெல்லியைக் கைப்பற்றுவோம். மீண்டும் ஆப்கானிய சாம்ராஜ்யம் அமைத்து, இழந்த மானத்தை மீட்டு, ஆப்கானிய இனத்தின் பெருமையை நிலைநாட்டுவோம்!’’ என்று அவர் கூவ, வாட்களை உயர்த்தி உணர்ச்சிகரமாக ஆரவாரம் செய்தது ஆப்கானியப் படை!
வங்காளத்தில் இருந்த ஹுமாயூன், இந்த செய்தி கேட்டு திகைத்தார். ஆனால், சோதனைகள் பாக்கியிருந்தன! ஆக்ரா திரும்பியிருந்த சகோதரர் ஹிண்டால், அண்ணன் ஹுமாயூனுக்கு எதிராகப் புரட்சிக்கொடி உயர்த்தி, தன்னை ‘பாதுஷா’ என்று அறிவித்துக் கொண்ட துரோகம் நிகழ்ந்தது.
இதுகேட்டு லாகூரிலிருந்து பத்தாயிரம் குதிரை வீரர்கள் அடங்கியு படையுடன் வந்த இன்னொரு சகோதரர் காம்ரான், ஹுமாயூனுக்கு உதவிக்குப் போவதற்கு பதில், ஹிண்டாலை துரத்தியடித்துவிட்டு, ‘‘அரியணையில் அமரப் பிறந்தவன் நான்தான்!’’ என்று முழங்கிவிட்டு, மகுடம் சூட்டிக்கொண்டார்!
மனம் வருந்திய ஹுமாயூன், அந்த நிலையிலும் இரு சகோதரர்களுக்கும் அறிவுரை கூறி கடிதங்கள் அனுப்பினார். ‘நமது தந்தை பாபர் பாதுஷா ரத்தம் சிந்தி உருவாக்கிய சாம்ராஜ்யத்தை கேவலம், சகோதர சண்டையால் சின்னாபின்னமாக்க நினைப்பது, அவருக்கு நாம் செய்யும் மன்னிக்க முடியாத துரோகம்’ என்றெல்லாம் அவர் எடுத்து சொல்லியும், சகோதரர்கள் கேட்பதாக இ்லலை. ‘எப்படியும் அண்ணனை ஷெர்கான் பரலோகம் அனுப்பப் போகிறார். பிறகு நானா, நீயா என்பதுதானே பிரச்னை?(!)’ என்று இருவரும் பேராசையுடன் கணக்குப் போட்டனர்.
ஆண்டு கி.பி.1539…
சகோதரர்களை வழிக்குக் கொண்டுவர, ஆக்ராவை நோக்கிக் கோபத்துடனும் வேதனையுடனும் ஹுமாயூன் படையுடன் கிளம்பியபோது, நல்ல மழைக்காலம். பாட்னாவுக்கும் காசிக்கும் நடுவே உள்ள சாஸா என்ற நகரில் பெருகி வந்த கங்கையைத் தற்காலிக பாலம் அமைத்து ஹுமாயூன் படை கடக்க நினைக்கையில், ஷெர்கானின் ஆப்கானியப் படை இரவு நேரம் பார்த்து, பின்னாலிருந்து பாய்ந்து மொகலாயர்களைக் குதறியது!
இந்த தாக்குதலில், சுமார் 8,000 மொகலாய வீரர்கள் கங்கை நதியில் மூழ்கி இறந்தனர். ஒரு ஆப்கானிய குதிரை வீரன் செலுத்திய அம்பு, ஹுமாயூன் கையை உரசி சென்று காயப்படுத்தியது. அப்படியும் ஒரு குதிரையில் ஏறி, நதியை ஹுமாயூன் கடக்கப் பார்க்க… அவர் உயிருக்குயிரான குதிரை வெறித்த பார்வையோடு வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போனது…
பரிதாபமாக மூழ்க ஆரம்பித்தார் ஹுமாயூன் பாதுஷா..!
அப்போது, ஆண்டவன் தன் உதவிக் கரத்தை - ஒரு ஏழைக் கூலியாள் மூலம் - நீட்டிய அதிசயம் நிகழ்ந்தது!
தினந்தோறும் கூலிவேலை செய்வோர் பெரும் வெள்ளத்திலும் அலட்சியமாக கங்கையைக் கடப்பது அந்த காலத்தில் சர்வசாதாரணம். காற்று நிரப்பப்பட்ட தோல் பைகளை (இன்று நீச்சல் குளங்களில் நாம் பயன்படுத்துவது போல!) உதவியாக அணைத்துக்கொண்டு நீந்தி, அவர்கள் நதியைக் கடப்பது வழக்கம்! மன்னர் ஆபத்தில் இருப்பதைக் கவனித்த ஒரு கூலியாள் பாய்ந்து நீந்திச் சென்று, மன்னரை இழுத்து அணைத்துக்கொண்டு, மறுபுறம் கரையேற்றிக் காப்பாற்றினார்! அந்தப்புர பெண்கள் பலரும், ஹுமாயூனின் ஒரு இளம் மகளும் வெள்ளத்தில் மூழ்கி இறந்த பரிதாபமும் நிகழ்ந்தது.
இந்த ஏழையின் உதவியில் உணர்ச்சிவசப்பட்டு போன ஹுமாயூன், ‘‘ஆக்ராவுக்கு நல்லபடியாக நாம் போய்ச் சேர்ந்ததும் உனக்கு பதிலுதவி செய்ய என்னை அனுமதிக்க வேண்டும்!’’ என்று கண்கலங்கக் கூறினார்.
தட்டுத்தடுமாறி சில வீரர்களுடன் ஆக்ரா அடைந்தார் மன்னர் ஹுமாயூன். அங்கே (தற்காலிகமாக) மனம் மாறிய சகோதரர்கள் காம்ரானும், அஸ்காரியும், ஹிண்டலும் அண்ணனை தலைகுனிந்தவாறு அன்புடன் வரவேற்று மன்னிப்புக் கேட்டனர். தோட்டத்தில், தந்தையின் கல்லறை அருகே சகோதரர்கள் கூடித் தழுவிக்கொண்டு கண்ணீர் விட்டனர் (இதைத் தொடர்ந்து, சில மாதங்கள் கழித்துதான் பாபர் உடல் காபூலுக்குக் கொண்டு செல்லப்பட்டது!).
பிறகு, தன்னைக் காப்பாற்றிய ஏழையை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்திய ஹுமாயூன், தொடர்ந்து சொன்னதைக் கேட்ட எல்லோரும் (அந்த ஏழை உட்பட) திகைப்பிலும் வியப்பிலும் ஆழ்ந்தனர்.
ஹுமாயூன் கம்பீரமாக முழங்கினார்.. ‘‘என் உயிரைக் காப்பாற்றிய இந்த நண்பரை இரு நாட்கள் ஆக்ரா சிம்மாசனத்தில் மன்னராக அமர்த்தி, அவருக்கு நான் பிரத்யேகமாக பணிவிடை செய்ய முடிவு எடுத்திருக்கிறேன்!’’
யார் எடுத்துச் சொல்லியும் பாதுஷா கேட்கவில்லை. இரண்டு நாட்கள் அந்த ஏழைக் கூலியை ஆக்ராவில் மன்னராக அமர்த்தினார் ஹுமாயூன். அந்த ‘இரண்டு நாள் மன்னர்’ தன் ஆட்சியில் சிலரை வேலையில்கூட அமர்த்தியதோடு அல்லாமல், முடிந்தவரை பல ஏழைகளுக்கு பண உதவி செய்ததாகவும் கேள்வி! ‘நடந்தது தேவையில்லாத கூத்து!’ என்று சலித்துக் கொள்கிறார் ஹுமாயூனின் சகோதரி குல்பதன் பேகம் - அவர் எழுதிய ‘ஹுமாயூன் சரிதை’யில்!
சற்று உடல்நலம் சரியில்லாமல் படுக்கையில் இருந்த காம்ரான் திகைப்புடன், ‘மன்னரின் உயிரைக் காப்பாற்றியவருக்குப் பெரும் பரிசுகள் தரலாம். ஆனால், ஒரேயடியாக மகுடம் சூட்டும் அளவுக்குப் போக வேண்டுமா? படையுடன் ஷெர்கான் ஆக்ராவை நோக்கி வந்துகொண்டிருக்கும் இந்த சோதனையான வேளையில், இதுபோன்ற விளையாட்டுகளில் மன்னர் ஈடுபடுவது எனக்குப் புரிபடவில்லை!’ என்று ஓலையனுப்ப, ‘என் உயிரையே காப்பாற்றியவர் அவர். அது எப்பேர்ப்பட்ட உதவி என்பது உனக்குப் புரியாது!’ என்று மன்னரிடமிருந்து உணர்ச்சிகரமாகப் பதில் வந்தது!
இப்படிச் சொன்ன ஹுமாயூனின் உயிருக்கு உலைவைக்க, ஆவேசத்துடன் ஆக்ராவை நெருங்கி வந்து கொண்டிருந்தது ஷெர்கானின் ஆப்கானியப் படை..!
Leave a comment
Upload