வெற்றிக்கு சில புத்தகங்கள் - 5
வாருங்கள் வாசிப்போம்; வாசிப்பை நேசிப்போம்
அற்புத சக்தி
ரகசியம் (The Secret ) புத்தகத்தை எழுதிய ரோண்டா பைரன் அவர்களின் அடுத்த புத்தகம் இது. The Power (அற்புத சக்தி ) என்னும் தலைப்பில் இதனை அவர் நமக்கு தந்திருக்கிறார்.
சிவாஜி தி பாஸ் படத்தில், ரஜினி இடைவேளைக்கு முன்னால் ஒரு நாணயத்தை சுண்டி போட்டு பூப்பாதை, சிங்கப்பாதை என்று தேர்வு செய்வார் நினைவிருக்கிறதா? அதே போல இசைப்புயல் ரஹ்மான் ஆஸ்கார் விருது விழாவில், எனக்கு முன்னால் இருந்த இரு பாதைகளில், நான் வெறுப்பு பாதையை விடுத்து அன்பு பாதையை தேர்ந்தெடுத்தேன் என்று சொன்னாரே... அது தான் இந்த புத்தகத்தின் அடிப்படை.
ரகசியம் புத்தகத்தை படித்துவிட்டு பலரும் அவருக்கு கடிதம் எழுதி தங்கள் அனுபவத்தை தெரிவித்திருக்கிறார்கள், நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறார்கள். “அதனை எல்லாம் தொகுத்தபோது பல புதிய வெளிச்சங்களை நான் அடையாளம் கண்டிருக்கிறேன். உங்கள் வாழ்க்கை வளம்பெற அவை உதவும்” என்கிறார் ரோண்டா பைரன்.
அது என்ன அற்புத சக்தி என்கிறீர்களா? நம்மால் பார்க்க முடியாவிட்டாலும், பல சக்திகள் மூலம் தான் நம் வாழ்க்கை நடக்கிறது. புவி ஈர்ப்பு விசை, மின் காந்த சக்தி போன்றவை... அதே போல நமக்குள் இருக்கும் ஒரு மகா சக்தியை நாம் அடையாளம் கண்டால், நம்மால் பல சாதனைகளை செய்ய இயலும் என்கிறார் அவர்.
இந்த மகா சக்தியை திறந்து வெளியே விட மூன்று சாவிகளை அவர் தருகிறார்.
1. அன்புச்சாவி
2. நன்றிச்சாவி
3. விளையாட்டுச்சாவி
அன்புச்சாவி
“அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ் ..” அதாங்க நம்ம வள்ளுவர் சொன்னது தான்... அந்த சாவியால் திறக்காத பூட்டோ, இதயமோ இல்லவே இல்லை.
அந்த சாவி கொண்டு உங்களுக்காக எல்லா மனங்களையும் திறந்திடுங்கள். அவர்கள் மூலம் கிடைக்கும் அன்பு, மகிழ்ச்சி என்கிற மட்டற்ற சக்தியை வாரி பருகுங்கள்....
நன்றிச்சாவி
இந்த ஊரடங்கு காலத்தில் எந்த நோய் நொடியும் அண்டாமல், குடும்பத்தோடு நேரம் செலவழித்து, மூன்று வேலை உணவு கிடைத்ததா? நீங்கள் பாக்கியம் செய்தவர் சாமி, நன்றி சொல்லுங்கள் அந்த சாமிக்கு. அதற்கு காரணமான எல்லாருக்கும் நன்றி சொல்லுங்கள். உங்கள் ஒவ்வொரு நாளும் நன்றியோடு துவங்கி, நன்றி சொல்வதோடு முடியட்டும். மனதிற்குள்ளேயே சொல்லுங்கள் போதும்.
எல்லோரும் எதையோ ஒன்றை நமக்கு சொல்லி தருகிறார்கள், அதற்கு நன்றி சொல்லுங்கள்....
விளையாட்டுச்சாவி
விளையாட்டோடு தான் நம் வாழ்க்கை துவங்குகிறது. விளையாட்டாகவே நிறைய கற்றுக்கொள்கிறோம். ஆனால் வளர்ந்தவுடன் விளையாட்டை மறந்து விடுகிறோம். “உர்ரென்று” முகத்தை வைத்துக்கொள்கிறோம்....
ஒன்றை கவனியுங்கள். சீரியஸாக இருப்பவர்களுக்கு சீரியஸ் பிரச்சனைகளே வந்து சேர்கிறது. ஜாலியாய் சந்தோஷமாய் இருப்பவர்கள் பிரச்சனைகளையும் சந்தோஷமாய் கையாண்டு விடுகிறார்கள்.
ஒரு புதிய விஷயத்தை செய்ய துவங்கும்போது, அது முடிந்து விட்டதாகவே கற்பனை செய்யுங்கள். பாரதி பாடியது போல பத்து வருடங்களுக்கு முன்னரே “ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே, பள்ளு பாடுவோமே...” அது தான் டெக்னிக்.
விளையாட்டாய் கற்பனை செய்வோம், கற்பனை தான் வெற்றிக்கு வழி சொல்லும் உற்சாக ஊற்று.. மகிழ்ச்சியை எங்கும் பரப்புவோம்.
“நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு” என்று ஒரு வாசகம் உண்டு. நாமும் நம்முள்ளே மகா சக்தி ஒன்று உண்டென்று நம்புவோம், அன்பு, நன்றி மற்றும் விளையாட்டு சாவியை பயன்படுத்தி அதனை திறந்து நம் மனதிலிருந்து பொங்கிப் பெருகச் செய்வோம்......
வெற்றி உங்களுடையதே......
Leave a comment
Upload