ஆசியா.
வட கொரியா
இனி வட கொரியாவில் யாரும் வீட்டுக்குள் நாய் வளர்க்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாம். அதிபர் கிம்மின் இந்த உத்தரவு நாய் வளர்ப்பவர்களை பெரும் சோகத்தில் மூழ்கடித்திருக்கிறது.
நாய் வளர்ப்பது சமுதயாத்தின் சம அளவை பாதிக்கிறது என்று காரணம் காட்டி வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் நாய்களை அரசாங்கம் வலுக்கட்டாயமாக வந்து பறித்துச் செல்கிறதாம்.
அது மட்டுமல்ல வட கொரியாவில் புகழ்பெற்ற நாய்க்கறி உணவகங்களுக்கு இதை விநியோகிக்கின்றனராம்.
சில வகை நாய்கள் மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பப்படுகிறதாம்.
தென் கொரிய மக்கள் இந்தச் செய்தியைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர்.
கடந்த வாரம் உலகம் முழுக்க இந்த செய்தி பரவு, வட கொரியாவில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் இந்த செய்தியை வதந்தி என மறுத்திருக்கின்றனர்.
நல்ல காலம் கிம் இனி வட கொரியாவில் எல்லாரும் பேய் தான் வளர்க்கணும் என்று உத்தரவு போடாலம் விட்டாரே !!!
ஆஸ்திரேலியா
வெல்ஷ் என்று ஒரு கிராமம்.
கடந்த 18 மாதங்களாக இந்த கிராமத்தில் ஒரு பிரச்சினை.
சரியாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்த ஊரில் உள்ள இணைய இணைப்பு அத்தனை கிராம மக்களுக்கும் ஒரே சமயத்தில் நிற்கிறது.
உடனே அவர்கள் இணைய நிறுவனத்திற்கு சொல்லி ஒவ்வொரு முறையும் இதை சரி செய்து வந்திருக்கின்றனர்.
ஆனால் அந்த நிறுவனம் மண்டையை உடைத்து கொண்டுள்ளது. அதெப்படி மொத்த கிராமத்திற்கும் ஒரே சமயத்தில் இணைய இணைப்பு போகும் ??
ஒரு பொறியாளர் குழு கிராமம் மொத்தமும் ஆரயாத் துவங்கியது.
மொத்த கிராமத்திற்கும் கேபிளை மாற்றிப் பார்த்திருக்கின்றனர். அப்பவும் அதே பிரச்சினை தொடர்ந்திருக்கிறது.
உள்ளூர் பொறியாளர் மைக்கேன் ஜோன்ஸ் என்பவர் மூத்த பொறியாளர்களின் உதவியை நாட, ஏகப்பட்ட சோதனைகளை நடத்தியிருக்கிறது அந்த குழு.
இறுதியில் இந்த பிரச்சினை single high level impulse noise (shine) (இதை தமிழ்ப் படுத்துபவர்களுக்கு 100 ரூ சன்மானம்) என்ற வகையினால் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட, அந்த அடிப்படையில் இந்த பிரச்சினையை அணுகியிருக்கிறார்கள்.
ஸ்பெக்டரம் அனைலைசர் என்ற சாதனத்தை வைத்துக் கொண்டு ஒரு மழை நாளில் ஊரெல்லாம் நடந்து பார்க்க சரியாக ஏழு மணிக்கு ஒரு வீட்டில் இருந்து ஏராளமான மின் காந்த தாக்குதலை கண்டு பிடித்து விட்டனர்.
கடைசியில் என்ன ஏதுன்று பார்த்தால் சரியாக ஏழு மணிக்கு அந்த வீட்டில் உள்ள ஆள் தனது பழைய டிவியை போட்டு செய்தி கேட்கும் வழக்கம் உள்ளவராம்.
கடைசியில் அவரிடம் இந்த பிரச்சினையை விளக்கி இனி இந்த டிவியை ஜென்மாந்திரத்தில் போட மாட்டேன் என்று கற்பூரம் அணைத்து சத்தியம் வாங்கி கொண்டு தான் விட்டிருக்கிறார்கள்.
இந்த பிரச்சினை நீங்கள் நினைப்பதை விட சாதாரணமானது, பழைய டிவி மட்டுமல்ல, மைக்ரோவேவ் ஓவன், சிசி டிவி காமிரா இவையெல்லாம் கூட இணைய இணைப்பை பாதிக்கக் கூடியது தான் என்கின்றனர் மூத்த பொறியாளர்கள்.
நம்மூர் அம்மாக்கள் பழைய டிவி செட்டை வாங்கி வைத்துக் கொண்டு படிக்கமால் இணைய வலை தளங்களில் அலை பாயும் குழந்தைகளை இப்படி ஒரு யோசனை செய்து படிக்க வைக்க முடியுமா என்று சிந்தித்துப் பார்க்கவும்.
ஆப்பிரிக்கா
கரமோஜா உகாண்டா.
இங்கிருக்கும் சிறை ஒன்றில் பாதுகாவலர்களைத் தாக்கி விட்டு சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட கைதிகள் ராவோடு ராவாக தப்பித்து விட்டனர்.
தப்பித்தவர்கள் சும்மா தப்பிக்கவில்லை. அங்கிருந்த ஆயுதக் கிடங்கையும் உடைத்து சுமார் 15 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளையும் குண்டுகளையும் திருடிக் கொண்டு தான் தப்பியிருக்கிறார்களாம்.
தப்பித்தவர்களின் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கற்பழித்தவர்கள், இப்படி படு பயங்கர குற்றவாளிகள் இருக்கிறார்கள்.
(அரசியல்வாதிகள் இருக்கிறார்களா என்பது பற்றி தகவல் இல்லை)
மலைப் பிரதேசம் என்பதாலும், ஆயுதங்களோடு தப்பித்ததாலும் அவர்களை உடனடியாக பிடிப்பது கடினம் என்கிறார்கள் சிறை அதிகாரிகள்.
கரோனா தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கு குழப்பம், சிறையில் தொற்று ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதிகம் இதனாலேயே இந்த சிறை உடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள் அதிகாரிகள்.
தப்பித்தவர்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். விரைவில் மீதமிருக்கும் அனைவரையும் பிடித்து விடுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
எதற்கும் உகாண்டா பக்கம் கொஞ்ச நாளைக்கு போக வேண்டாம் !!
ஐரோப்பா
ஐரோப்பாவில் இருக்கும் ஏர் பஸ் நிறுவனம் சுற்றுப் புற சூழல் பாதுகாக்க வேண்டும் என்று விரும்பவர்கள் வயிற்றில் பால் வார்த்தது போல ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது.
மாசு ஏற்படுத்தாத விமானங்களை விரைவில் தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
ZEROe என்ற புதிய விமானத்தை அதிகமில்லை 2035க்குள் தயாரிக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இந்த புதிய விமானம் ஏவியேஷன் பெட்ரோலுக்கு பதிலாக ஹைட்ரஜனில் பறக்கும்.
முதல் யோசனை அல்லது சோதனையின் படி, 120 முதல் 200 பயணிகள் வரை சுமார் 2000 மைல்கள் ஹட்ரஜன் எரிவாயு கொண்டு பறக்க வைக்க இருக்கிறார்கள். இது டர்போ ஃபேன் டிசைன் வைத்து வடிவமைக்கப்படும்.
அடுத்ததாக , டர்போ பிராப் வடிவமைப்பில் 100 பேரை ஆயிரம் மைல்களுக்க்கும்,
மூன்றாவது சோதனையாக Blended wing Body என்ற வகையில் 200 பேரை 2000 மைல்களுக்கு சோதிக்கப் போகிறார்களாம்.
(இந்த வகைகளின் வித்தியாசங்கள் என்று கேட்டு சொல்கிறேன் ! )
ஹைட்ரஜனைப் பொறுத்தவரை பெட்ரோல் போல ஒரு டாங்கில் சுலபமாக சேமித்து வைக்க முடியாது. அதன் சேமிப்பு எப்படி என்பது தான் சவால். ஆக அது விமான டிசைனையே மாற்றப் போகிறது. என்கிறது ஏர் பஸ்.
எப்படியோ 2050 வாக்கில் விமானங்கள் மாசு ஏற்படுத்தாத எரி பொருளில் பறக்கும் என்கின்றனர்.
பூமியில் ஹட்ரஜன் தான் 75 சதவிகிதம் கலந்திருக்கிறது. சவால் அதை தனியே பிரித்தெடுப்பது தான்.
சென்னையில் விரைவில் ஹைட்ரஜன் ஆட்டோ வந்தாலும் வந்து விடும்.
2050ல் புதிய வானம் புதிய பூமி என்று பாடலாம்.
தென் அமெரிக்கா
அர்ஜெண்டினா.
தேனீக்களுக்கு செயற்கை முறையில் ஒரு குறிப்பிட்ட வாசனையை நுகரும் படி செய்து உற்பத்தியை பெருக்கலாம் என்று அர்ஜெண்டினா பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
இப்படி தேனீக்களுக்கு பயிற்சி கொடுத்து சூரிய காந்தியில் ஆய்வு செய்த போது 57 சதவிகிதம் வரை கூடுதலாக மகரந்த சேர்க்கை நடைபெற்றதாம்.
தேனீக்களையும் விட்டு வைக்கலையா நீங்க ????
வட அமெரிக்கா.
சிகாகோ.
ப்ளாக் லைவ்ஸ் மேட்டர் என்பது சமீபத்திய அமெரிக்க செய்தி.
இது போலவே கிட்ஸ் லைவ்ஸ் மேட்டர் (குழந்தைகளின் உயிர் முக்கியம்) என்ற வகையில் ஒரு கவனத்தை கொண்டு வர ஆடம் ஹோலிங்வொர்த் என்ற ஆள் செய்த நூதனப் போராட்டம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஒன்றும் பெரிசா இல்லை.
சிகாகோ ஹைவேயில் குதிரை மீது ஏறி தன்னைத் தானே வலைதளங்களில் அதை லைவ்வாக ஓட விட்டு அப்படியே குதிரையையும் ஓட விட்டிருக்கிறார் ஆடம்.
இவர் செய்த இந்த குதிரை சவாரி, நெடுஞ்சாலையில் ஏகப்பட்ட டிராஃபிக் ஜாமை ஏற்படுத்த இவரை குதிரையோடு பிடிக்க போலீஸ் வண்டிகளும், பைக்குகளும், போதும் போதாதற்கு ஹெலிகாப்டரிலும் துரத்தி பிடித்திருக்கிறார்கள்.
குதிரை தானே அது லேன் மாறி மாறி வேறு ஓடியிருக்கிறது பாவம். இது விளையாட்டாக தோன்றினாலும் கடும் விபத்துகளை ஏற்படுத்தியிருக்கும். நல்ல வேளை....ஏதும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன் ஆடம் பிடிபட்டார்.
குதிரையிலிருந்து லைவ்வாக ஒளிபரப்பிய ஆடமின் வீடியோ இங்கே....
எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறாய்ங்கப்பா…
ராம்
Leave a comment
Upload