கர்நாடக மாநிலம், தட்சிண கன்னட மாவட்டம், மங்களூருவை சேர்ந்தவர் கோபட்கர். இவரது மனைவி சுமா பட்கர். இவர்களது மகள் ஆதிஸ் ரூபா (17). இவருக்கு 2 கைகளையும் பயன்படுத்தி எழுதும் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆதிஸ் ரூபாவின் அதீத ஆர்வத்தினால், தற்போது 2 கைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி எழுதி வருகிறார். அதுவுமெப்படி? ஒரு கையால் கன்னடத்திலும் மறு கையால் ஆங்கிலத்திலும் ஒரே சமயத்தில் எழுதுகிறார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் மங்களூருவுக்கு விரைந்து வந்தது. அங்கு ஆதிஸ் ரூபாவுக்கு 2 கைகளை பயன்படுத்தி எழுதும் தேர்வை நடத்தியது. இதில், ஒரே நிமிடத்தில் 2 கைகளையும் பயன்படுத்தி 45 வார்த்தைகளை எழுதி ஆதிஸ் ரூபா உலக சாதனையை ஏற்படுத்தினார். அவருக்கு உ.பி. கல்வி நிறுவனம் பாராட்டி, விருது வழங்கி கவுரவித்தது.
இதற்கு முன், ஒரு நிமிடத்தில் 2 கைகளை பயன்படுத்தி 25 வார்த்தைகள் எழுதியதே உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது ஆதிஸ் ரூபா தகர்த்து, உலக சாதனை படைத்துள்ளார் என அக்கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆதிஸ் ரூபா கூறுகையில், ‘எனது தந்தை, தாய் நடத்தும் கல்வி பயிற்சி மையத்தில் படித்து வருகிறேன். தற்போது எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வு எழுதவிருக்கிறேன். எங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தேர்வுக்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் பாடங்களை படிப்பர். மற்ற நேரங்களில், எங்களது தனித்திறமைகளை வளர்க்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. எனக்கு கடவுள் கொடுத்துள்ள 10 விரல்களை பயன்படுத்தி, இன்னும் வேகமாக எழுதி, பல உலக சாதனைகளை படைக்க திட்டமிட்டு உள்ளேன்’ என ஆதிஸ் ரூபா சிரித்தபடி கூறுகிறார்.
ஆதிஸ் ரூபாவின் பெற்றோர் பேசுகையில், ‘எனது மகள் 2 வயதிலேயே ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 30 பக்கங்கள் எழுதுவார். அவருக்கு இசையின் மீதான ஆர்வத்தினால் இந்துஸ்தானி இசை மற்றும் கிடார் இசைக்கவும் பயிற்சி பெற்று வருகிறார். ஏற்கெனவே அவர் பாடல் பாடிய ஒரு ஆல்பமும் வெளிவந்துள்ளது. யக்ஷகானா நாடகங்களில் நடித்துள்ள ஆதிஸ் ரூபா, குரலை மாற்றிப் பேசும் போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட பலவற்றில் பங்கேற்று பரிசுகள் பெற்றிருக்கிறார். தனது 10-வது வயதில், 40 கலைகளின் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.
இதேபோல் அவரிடம் கண்ணைக் கட்டிக் கொண்டு எழுதும் திறனும் உள்ளது. 2019-ம் ஆண்டுவரை 1,600-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆதிஸ் ரூபா தன் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்’ என பெருமிதத்துடன் கூறுகின்றனர்.
Leave a comment
Upload