தொடர்கள்
கவர் ஸ்டோரி
ரஜினி வருவாரா, மாட்டாரா..?! - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

20200818211256209.jpeg

தமிழக அரசியல் கட்சிகளில் ஆட்சியைப் பிடிக்க போட்டி போடும் கட்சிகள் இரண்டு தான்... திமுக, அதிமுக.

திமுகவின் தலைவர் ஸ்டாலினைப் பொருத்தவரை அவருக்கு வயது இப்போது எழுபது. அவரது முதல்வர் கனவு 2021 தேர்தலை பொருத்தது. அதற்கான திட்டமிடலை, அவர் ஓராண்டுக்கு முன்பே துவங்கி விட்டார். கருணாநிதியைப் பொருத்தவரை வலுவான கூட்டணி வைப்பார், தொண்டர்களை நம்புவார், தேர்தலின்போது தொண்டர்களை உற்சாகப்படுத்தி வேலை வாங்குவதில் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதிதான்.

ஆனால், இப்போது சமூக வலைத்தளங்கள், தேர்தல் களத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஐடி விங் என்று ஸ்டாலின் கட்சியில் ஒரு தனி அமைப்பு துவங்கி விட்டனர். பிரசாந்த் கிஷோர் என்ற பிரச்சார நிபுணரை 370 கோடி தந்து நியமித்திருக்கிறார். அவரது குழு தினந்தோறும் திமுக ஆதரவு அதிமுக எதிர்ப்பு வேலைகளை சமூக வலைத்தளங்கள் மூலம் செய்து வருகிறது.

ஸ்டாலினும் தன் பங்குக்கு தினமும் எடப்பாடியை வசைபாடி அறிக்கை, பேச்சு என்று அதிமுக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்கிறார். இது தவிர, போராட்டம், எதிர்க்குரல் என்று கொரோனா காலத்திலும் வீட்டு வாசலில் இருந்து எடப்பாடி மீதான தன் எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

2020081821131842.jpeg

ஸ்டாலின் ஆலோசகர்கள் புள்ளி விவரத்துடன், “அடுத்த ஆட்சி நாம்தான், நீங்கள் தான் முதல்வர்” என்று ஸ்டாலினிடம் சொல்லி வருகிறார்கள். இருந்தாலும், ரஜினியின் முடிவு என்ன என்று ஸ்டாலின் தீவிரமாக யோசிக்கிறார். தனது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் அதுபற்றி பேசியும் வருகிறார். ரஜினியை வைத்து தற்போது படம் எடுத்து வரும் மாறன் சகோதரர்கள் அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்று அடித்துச் சொல்கிறார்கள். ஆனால், ஸ்டாலினின் மருமகன் சபரீசன் அதை நம்பத் தயாராக இல்லை. நீங்கள் எதை வைத்துச் சொல்கிறீர்கள் என்று எதிர்கேள்வி கேட்கிறார். திமுக-வை பொருத்தவரை ரஜினி என்ன செய்யப்போகிறார் என்பது பற்றி ரொம்பவும் யோசிக்கிறார்கள்.

இதற்கிடையே செப்டம்பர் மூன்றாம் தேதி ரஜினியின் ட்விட்டர் பதிவு திமுகவை இன்னும் குழப்பி விட்டது...

2020081821134421.jpeg

திமுகவின் அதிமுக்கிய பதவியான பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளரை தேர்ந்தெடுக்க வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுகவின் தலைமை கழகம், ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. செப்டம்பர் 3 வேட்புமனு தாக்கல் தேதி என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு என்று முக்கியத் தலைவர்களுடன் ஏற்கனவே பேசி ஸ்டாலின் முடிவு செய்திருந்தார். எனவே செப்டம்பர் மூன்றாம் தேதி பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு, பொதுச்செயலாளர் பதவிக்கு துரை முருகனும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே இவர்கள் இருவரும் ஒன்பதாம் தேதி நடக்கவிருந்த பொதுக்குழுவில் முறைப்படி பொதுச் செயலாளர், பொருளாளர் என அறிவிக்க இருந்தார் ஸ்டாலின்.

ஆனால், செப்டம்பர் மூன்றாம் தேதி இரவு ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் திமுகவின் பொதுச் செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் துரைமுருகன் அவர்களுக்கும் பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் டி.ஆர். பாலு அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பதிவு செய்திருந்தார். மறுநாள் முரசொலியில் ரஜினியின் வாழ்த்தினை சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து என்று பிரசுரித்து திமுக கொண்டாடியது.

தோழமைக் கட்சித் தலைவர்கள் கூட பொதுக்குழுவில் முறையாக அறிவிக்கப்பட்ட பிறகு, இவர்கள் இருவருக்கும் வாழ்த்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, ரஜினி முந்திக்கொண்டு வாழ்த்தியது எல்லோரையும் திகைக்க வைத்தது.

ரஜினி சினிமாவில் நுழைந்து 45 ஆண்டுகள் முடிந்தபோது, அன்றைய தினம் ஸ்டாலின் மருமகன் சபரீசன் ரஜினியை பாராட்டி அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். கூடவே ‘நானும் உங்கள் ரசிகன் தான்’ என்று அந்த வாழ்த்துச் செய்தியில் சபரீசன் குறிப்பிட்டிருந்தார். ஆனால் உதயநிதி ரஜினிக்கு வயதாகிவிட்டது என்று கிண்டலடித்து கொண்டிருப்பதை சபரீசன் அவ்வளவாக ரசிக்கவில்லை. இதை ஒரு முறை ஸ்டாலின், உதயநிதியிடமே சபரீசன் சுட்டிக்காட்டினார்.

திமுக ரஜினியைப் பற்றி நிறைய யோசிக்க ஆரம்பித்தது ஒரு கட்டத்தில். ஸ்டாலின் ஒரு முக்கிய பிரமுகர் மூலம் “இந்த தேர்தல் எனக்கு முக்கியமான ஒன்று. நீங்கள் அரசியலுக்கு வர வேண்டாம். அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விடுகிறேன்” என்று ரஜினிக்கு சொல்லி அனுப்பி இருக்கிறார். ஆனால், ரஜினி அதுபற்றி எந்த கருத்தும் ஸ்டாலின் அனுப்பிய தூதுவரிடம் சொல்லாமல் அனுப்பி வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், துரைமுருகன், டி.ஆர். பாலு இருவருக்கும் ரஜினியின் வாழ்த்துச் செய்தி வந்தது. இது தவிர ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்ற செய்தியை மெல்ல அவரின் ரசிகர்களுக்கு எட்டுகிறார் போல் பேச தனியாக ஒரு குழுவை திமுக அமைத்து, அவர்கள் மூலம் அந்தச் செய்தியை பரப்பி வருகிறது. திருமதி துர்கா ஸ்டாலின் ஒவ்வொரு நவராத்திரிக்கும் ரஜினி வீட்டு கொலுவிற்கு செல்வது வழக்கம். திருமதி லதா ரஜினிகாந்த் அவரை பிரத்யோகமாக அழைப்பார். இந்த கொலுவிற்கும் திருமதி துர்கா ஸ்டாலின், ரஜினி வீட்டிற்கு சென்று லதா ரஜினிகாந்த்தை சந்தித்து பேச இருக்கிறார். ஸ்டாலின் சில செய்திகளை தன் மனைவியின் மூலம் ரஜினியின் மனைவிக்கு சொல்லி அனுப்ப இருக்கிறார். ரஜினியை சரிசெய்ய, லதா ரஜினிகாந்தே சரியானவர் என திமுக திடமாக நம்புவதாகத் தெரிகிறது.

இதர்கிடையே ‘ரஜினி அரசியலுக்கு வரமாட்டார், அவர் கட்சி தொடங்க மாட்டார்’ என்று அவரது ரசிகர்களே தற்போது பேசத் துவங்கி விட்டனர்.

ரஜினிகாந்தை பொருத்தவரை கொரோனா காலத்தில் அவர் யாரையும் நேரில் சந்திக்கவில்லை. அவரது தொடர்புகள் எல்லாம் செல்பேசி வழியாக தான் இருந்தது. ஆனால் சென்ற வாரம், அவர் சிலரை அழைத்துப் பேசியிருக்கிறார். அதைத்தொடர்ந்து, ரஜினி கட்சி துவங்கப் போகிறார், நவம்பரில் அறிவிப்பு, தேர்தல் ஆணையத்திடம் கட்சி பெயரை பதிவு செய்ய டெல்லியில் வேலை நடக்கிறது என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்தன. ஆனால் ரஜினி கட்சி துவங்குவார், ரஜினி கட்சி தொடங்க மாட்டார் என்று யார் யாரோ கருத்து சொல்கிறார்களே தவிர, இதுவரை ரஜினி சுத்தமாக வாய் திறக்கவில்லை.

20200818211742867.jpeg

பாரதிய ஜனதா அவருக்கு அதிக அளவு அழுத்தம் தந்து வருகிறது. ‘கட்சி எல்லாம் தூவங்க வேண்டாம், பாரதிய ஜனதாவில் சேர்த்து விடுங்கள். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் அரசியல் மக்களுக்கு அலுத்துவிட்டது, அவர்கள் தேசிய நீரோட்டத்தில் வர விரும்புகிறார்கள். இது கிட்டத்தட்ட எம்ஜிஆர் பார்முலா, தேசிய நீரோட்டத்தை ஒட்டியே அவரது அரசியல் இருந்தது. எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தபோது, இந்தி எதிர்ப்பு, மத்திய அரசு மீது விமர்சனம் போன்றவை இல்லை. அப்போது இருந்த மத்திய அரசும், எம்ஜிஆர் மீது கரிசனம் காட்டியது. காரணம், அவர் மத்திய அரசை ஆதரித்தார்’ போன்ற முன்னுதாரணங்களை சுட்டிக்காட்டி ரஜினியை தன்பக்கம் இழுப்பதற்கு இந்த நிமிடம் வரை எல்லா முயற்சிகளையும் பாரதிய ஜனதா செய்து வருகிறது.

20200818211513792.jpeg

அதிமுகவை பொருத்தவரையிலும் கூட ரஜினியிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். “நீங்கள் அரசியல் கட்சி எல்லாம் துவங்க வேண்டாம், எங்களை ஆதரித்து வாய்ஸ் தாருங்கள், இல்லை ஒதுங்கி விடுங்கள். அப்படி என்றாலும் சரி, இப்படி என்றாலும் சரி, உங்களுக்கு சேர வேண்டியது உங்களுக்கு வந்து விடும்” என்று அதிமுகவினரும் பேசியிருக்கிறார்கள். மௌன சாமியாரான ரஜினி, எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு மட்டுமே இருக்கிறார். யாருக்கும் இதுவரை எந்த வாக்குறுதியும் தரவில்லை என்பது மட்டும் உண்மை.

ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று நம்புகிறவர்கள், அவரை எம்ஜிஆர், என்டிஆருடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். எம்ஜிஆர் தீவிர அரசியலில் இருந்து கொண்டுதான் சினிமாவில் நடித்து வந்தார். திமுகவின் வாக்கு வங்கி எம்ஜிஆர் தான் என்பது அண்ணாவிற்கு தெரிந்திருந்தது. அதனால்தான், எம்ஜிஆரை என் இதயக்கனி என்று சொன்னார் அண்ணா. ஒரு முறை அண்ணா பயணித்த கார் ரயில்வே லெவல் கிராசிங்கில் நின்றது, காரிலிருந்து இறங்கி வெளியே வந்து நின்றார் அண்ணா. அவர் காரில் கட்டியிருந்த திமுக கொடியை பார்த்து, அங்கு மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு விவசாயி, நீங்கள் எம்ஜிஆர் கட்சியா என்று கேட்டார். கட்சியின் நிறுவனர் அண்ணா, ஆனால் அவர் ‘ஆமாம், அவர் கட்சி தான் நான்’ என்றார். அதுதான் எம்ஜிஆரின் செல்வாக்கு. இதை மறந்து போய் பதவி மோகத்தில் எம்ஜிஆர் என்ற இதயக்கனியை கருணாநிதி தூக்கி எறிந்தார். அதன் விளைவு எம்ஜிஆர் இருக்கும் வரை கருணாநிதியால் ஆட்சியில் அமர முடியவில்லை.

20200818211541234.jpeg

என்டிஆரைப் பொறுத்தவரை ஆந்திராவில் ரொம்ப வருடமாக, காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்தது. அந்தக் கட்சி தாங்கள் தான் எல்லாம் என்ற மிதப்பில் மக்களை மறந்தது. இது போதாதென்று, தலைமை தங்களுக்கு விரும்பிய தலையாட்டி பொம்மையை முதல்வர் என்று அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தது. இது ஆந்திர மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தச் சமயத்தில்தான் என்டிஆர் கட்சி தொடங்கினார். என்டிஆர் ஆந்திர மக்களின் வாழும் கடவுள். எனவே அவரை யோசிக்காமல் முதல்வர் ஆக்கினார்கள். அவருக்குப் பிறகு 15 ஆண்டுகள் சந்திரபாபு நாயுடு, என்டிஆர் பெயரைச் சொல்லித்தான் ஆட்சி நடத்தினார். “எம்ஜிஆர், என்டிஆர் வரலாறு தெரியாதவர்கள், இவர்கள் இருவருடன் ரஜினியை ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். ரஜினி ஒரு நாளும் எம்ஜிஆராகவோ, என்டிஆராகவோ ஆகமுடியாது” என குமுறும் எம்ஜிஆர் ரசிகர்களும் இன்று தமிழகத்தில் இருக்கிறார்கள்.

இதன் நடுவே ரஜினி ஆதரவாளரான நடிகர் ராகவா லாரன்ஸ், தனது முகநூல் மூலம் “நம் தலைவர் முதல்வர் வேட்பாளர் இல்லை என்பதை என்னால் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும், எல்லா தொண்டர்களின், ரசிகர்களின் உணர்வும் இதுதான். நீங்க வந்தா, நாங்க வரோம்... இப்ப இல்லைனா எப்ப?” என்று கேட்டிருக்கிறார். இதுதான் கிட்டத்தட்ட எல்லா ரஜினி ரசிகர்களின் மனநிலையும்.

ரஜினி ஒரு கூட்டத்தில், ‘அரசியலுக்கு வர நான் பயப்படவில்லை, ஆனால் தயங்குகிறேன்’ என்று குறிப்பிட்டார். பயத்துக்கு பிறந்த குழந்தைதான் தயக்கம் என்பது.

ரஜினி வருவாரா மாட்டாரா என்று முதல்வர் வேட்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். எது எப்படியோ சில மாதங்களில் ரஜினியின் மௌனம் கலைந்துதான் ஆகவேண்டும். அதுதான் காலத்தின் கட்டாயம். தேர்தல் நெருங்கும்போது, ரஜினியின் உண்மை முகம் தெரிந்துவிடும். ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு சொன்னார். அது நிஜமா.. பொய்யா... என்பதற்கான கவுண்ட் டவுன் மெய்யாலுமே இப்போது தொடங்கிவிட்டது. பார்ப்போம்... ரஜினி வெளிக்காட்டப் போவது சுயரூபமா அல்லது விஸ்வரூபமா என்று!