புடவை அமைவதெல்லாம்..
மனைவியை தாஜா படுத்த, செய்த தவறை மறைக்க... ‘கணவன்மார்களின் பிரம்மாஸ்திரம் புடவை’ என்று சொல்லலாம்.
என் மனைவியின் புடவை ஆசை அது அலாதியானது. அவள் தேர்ந்தெடுக்கும் புடவையின் கலர் பிரீக்ரெட், இங்ப்ளூ, உத்த பச்சை, கிளிப்பச்சை, லைட் ப்ளு, மஞ்சப்பொடி கலர், மிளகாய்ரெட், கருநீலம், வாடாமல்லி கலர். புடவையில் இத்தனை நிறங்களா என்று குழம்பிப்போய், நிறம் தெரியா கணவனாய் பரிதவிக்கிறேன்.
புடவையில் இத்தனை நிறங்கள் என்று நான் குழம்பி போய் இருக்கும்போதே... பட்டு, சில்க் காட்டன், காஞ்சி பட்டு, சுங்குடி, சின்னாளம்பட்டு, காட்டன், மைசூர் சில்க், கோரா என்று புடவை வகையறாக்களை பெரிய பட்டியலாக சொல்லி என்னை திணற அடிப்பாள்.
அவள் புடவை வாங்குவது தீபாவளி, பொங்கல், நவராத்திரி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி, பிறந்தநாள். அவள் பிறந்தநாள், என் பிறந்தநாள், திருமண நாள், ஆடித் தள்ளுபடி, ஹியர்எண்ட் சேல் என்று அவளது புடவை கடை படையெடுப்பு காலம் தவறாமல் நடக்கும். இது தவிர வீடு தேடி வரும் புடவைகாரிடமும் புடவை பர்ச்சேஸ் உண்டு.
அவள் புடவை எந்தக் கடையில் போய் எடுப்பாள் என்பது அவளுக்கே தெரியாது, வண்ணாரப்பேட்டை என்றால் அந்த பேட்டை முழுவதும் அலசுவாள். தி.நகர் என்றால் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, வடக்கு உஸ்மான், தெற்கு உஸ்மான், பாண்டிபஜார் என்று படையெடுப்பாள். சவுகார்பேட்டை என்றால் தம்பு செட்டி தெரு முதல் காசி செட்டி தெரு வரை அவள் பார்வை நீளும்.
அவளது ஷாப்பிங் ஸ்டைலே தனி. முதலில் ‘விண்டோ ஷாப்பிங்’தான். எல்லா கடைகளிலும் புதுவரவு, விலை இப்படி அவளது சர்வே நடக்கும். நாம் ஏதாவது உணர்ச்சிவசப்பட்டு, ஒரு புடவையை எடுத்து இது நன்றாக இருக்கிறது என்று சொன்னால்... இதே கலர்ல உங்கள் தங்கச்சி புடவை வைத்து இருக்கா... அதையே நான் கட்டிக்கிட்டா என் மரியாதை என்ன ஆகும் என்பாள். இது நல்லா இருக்கு இதை எடுத்துக்கோ என்று சொன்னால், பொண்டாட்டி என்ன புடவை வைத்திருக்கிறானு கூட உங்களுக்கு தெரியல என்று கடையில் வைத்து மானத்தை வாங்குவாள். ஓ சாரி. நான் மேரேஜ் டேக்கு உனக்கு வாங்கித் தந்தேன் இல்ல என்று பெருமையாக சொன்னால்... கிழிச்சிங்க, என் தம்பி கோபால் வாங்கித் தந்தான் என்று உடனே பதிலடியாக சொல்லி, மூக்கு உடைபடும். சுற்றியிருக்கும் கணவன்மார்கள் இது தேவையா என்று ஏளனமாய் பார்ப்பார்கள். மனைவிகளே தங்கள் கணவன்களை பார்த்து எப்படி என்று பரிகாசிப்பார்கள்.
இதெல்லாம் புடவை வாங்கும் வைபவத்தின் போது அடிக்கடி இந்த அசடு வழிதல் நடக்கும்.
என் மனைவி புடவை தேர்ந்தெடுப்பதே ஒரு தனிக்கலை. குறைந்தது 200 புடவை பார்த்து, எந்தக் கலரும் நன்றாக இல்லை என்று கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல், வேறு கடைக்கு கிளம்புவாள். அங்கு புடவை எப்படியோ செலக்ட் பண்ணி விட்டு, மேட்சிங் ப்ளவுஸ் தேடி பார்த்துவிட்டு, மேட்சிங் பிளவுஸ் கிடைக்கவில்லை என்று சொல்லி கூலாக கிளம்புவாள். மேடம் புடவையிலேயே மேட்சிங் பிளவுஸ் இருக்கிறது என்று கடைக்காரர் சொல்வது, அவள் காதில் விழாது. ஒரு வேளை அவள் காதில் விழவில்லையா என்று நான் மேட்சிங் பிளவுஸ் புடவையில் இருக்காம் என்று சொன்னால், அதுதான் எனக்கு தெரியுமே... அந்தப் புடவை கட்டினால், கொஞ்சம் வயசானவங்க மாதிரி தெரியுமோ என்று எனக்கு சந்தேகம், அதான் என்று சொல்வாள்.
ஒருவழியாக புடவை அல்லது புடவைகள் வாங்கி வீட்டுக்கு வந்தால், ராத்திரி ஒரு முறை பார்த்துவிட்டு, அதன் பிறகு காலையில் சூரிய வெளிச்சத்தில் ஒருமுறை பார்ப்பாள். அதன் பிறகு வாங்கிய புடவைகளை, எதிர்வீட்டு. பக்கத்து வீட்டு பெண்களை அழைத்து காட்டி, எப்படி என் செலக்சன் என்று பெருமைப்பட்டுக் கொள்வாள். மாமி எப்படித்தான் உங்களுக்கு இந்த கலர் சாய்ஸ் எல்லாம் கண்டுபிடிக்கறிங்களோ. புடவை செலக்சனில் உங்களை அடிச்சிக்க முடியாது, அதுவும் அந்த அரக்கு பார்டர் ரொம்ப அட்ராக்க்ஷன் என்று பக்கத்து வீட்டு காஞ்சனா சொன்னால், இந்தா எடுத்துக்கோ உனக்கு இல்லாததா என்று தாராளமாய் தருவாள். வேணாம் மாமி, நீங்க ஆசைப்பட்டு வாங்கினது என்று காஞ்சனா புடவையை கையில் வைத்துக்கொண்டு சொன்னா, ஒன்னும் பிரச்சனை இல்லை, இவர் சும்மாதானே இருக்கார் நான் போய் வாங்கி வரச் சொல்றேன், நீ எடுத்துக்கோ என்று சொல்லி விடுவாள். நான் கடைக்கு போய் அந்த அரக்கு பார்டர் புடவையை எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பினால், இது வேணாம் நீங்க ஒரு கருநீல புடவைய சேர்த்து அனுப்பி இருக்கீங்களே அதை வாங்கிடுங்க. அவ கட்ற அதே கலர் புடவைய நான் கட்டின நல்லாவா இருக்கும் என்று அப்படியே உல்டாவாக விடுவாள்.
சில சமயம் புடவை சாயம் போயோ, சுருங்கிய போனால் அந்தக் கடைக்காரர் படும் பாடு பெரும்பாடு. டிவியில் நயன்தாரா கட்டிண்டாலே என்று ஆசைப்பட்டு வாங்கினா, இப்படி பல்இளிக்குது. எங்க ஆத்துக்காரரும், நயன்தாரா பிஆர்ஓவும் ப்ரெண்ட். அவர்கிட்ட சொல்லி, நயன்தாராவை இனிமே உங்க விளம்பரத்துல நடிக்க விடாமல் பண்ணிடுவேன். அப்படியும் மீறி நடிச்சா, உங்க படத்துக்கு பெம்மனாட்டி எல்லா வரமாட்டாங்க என்று உங்களை போட்டு கொடுத்துவிடுவேன் என்று கத்தி கூட்டத்தை கூட்டுவாள். கடை ஓனரின் மச்சான், சூப்பர்வைசர் உட்பட சாரி மேடம் தப்பு நடந்துச்சி, மன்னிச்சு வேற புடவை எடுத்துக்கோங்க என்று சமாதானப் படுத்தியதும், ஏதோ வேண்டா வெறுப்பாக எடுப்பதுபோல் விலை ஜாஸ்தி என்று ஒதுக்கி வைத்திருந்த புடவையை எடுத்து வைத்துக்கொண்டு இத்தோடு இந்த இரண்டு காட்டன் புடவை தாங்க போதும் என்று கூலாக சொல்வாள்.
அங்கிருந்த வாடிக்கையாளர்கள் இதான் உன் கடை லட்சணமா என்று பெயர் ரிப்பேர் ஆகி விடும் என்று பயந்து போய் கடைக்காரர் என் மனைவியை பார்சல் பண்ணி வெளியே அனுப்ப பார்ப்பார். என் மனைவியும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வாள்.
சில சமயம், நான் ஏதாவது வேட்டிக்கு ஆசைப்பட்டு நான் ஒரு வேட்டி எடுத்துக் கொள்ளட்டுமா என்று கேட்டாள்... பீரோ முழுக்க வேஷ்டியா வாங்கி குவிச்சிருக்கீங்க, நடுவுல என் புடவை ரெண்டு மூணு இருக்கு. முதல்ல வேஷ்டியை அவிழாம கட்டிக்க கத்துக்கோங்க, அதற்கப்புறம் என் தம்பி கிட்ட சொல்லி மயில்கண் வேஷ்டியே வாங்கித்தர சொல்கிறேன் என்று என் மானத்தை வாங்க... அதன் பிறகு அவள் கூட போய், நான் ஜட்டி, பனியன் கூட வாங்க ஆசைப் பட்டது கிடையாது.
Leave a comment
Upload