உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு விழா வருடம்தோறும்
செப்டம்பர் 8 தேதி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த ஆலயம் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது... 16 ஆம் நூற்றாண்டில் இந்த வேளாங்கண்ணி என்ற குக்கிராமத்தில், அன்னை மரியாள் மூன்று புதுமைகள் செய்துள்ளார். 1592 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி வேளாங்கண்ணியில் பால்கார சிறுவன் பண்ணையார் ஒருவருக்கு பால் எடுத்து சென்றபோது, மாதா தன் ஏசு குழந்தையுடன் வழிமறித்து தன் குழந்தைக்கு பால் கேட்டுள்ளார்,..
சிறுவன் பாலை கொடுத்து விட்டு, அந்த அம்மவையும் குழந்தையும் ஆச்சிரியதுடன் பார்த்து விட்டு சென்றுள்ளான். குறைவான பால் கொண்டு வந்த சிறுவனை திட்டி தீர்த்துள்ளார் அந்த பண்ணையார். பால் காய்வதற்கு முன்பே, பானையில் இருந்து பொங்கி... வீடு முழுவதும் வழிந்தோட... அதிர்ச்சியில் உறைந்து போன பண்ணையார் மற்றும் அப்பகுதி மக்கள், சிறுவன் பார்த்த அந்த தாய்யையும் குழந்தையையும் காண அந்த இடத்திற்கு ஓடிவந்துள்ளனர்... இந்த அற்புதத்திற்கு பின் அந்த இடம் முக்கியமான ஒன்றாக மாறி... இன்று அங்கு ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டுள்ளது....
வேளாங்கண்ணி நடுத்திட்டு என்ற இடத்தில 1637 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி, மோர் விற்கும் ஒரு கால் ஊனமுற்ற சிறுவனுக்கு அன்னை மரியாள் தோன்றி... “மகனே நீ எழுந்து, நாகப்பட்டினத்தில் உள்ள செல்வந்தரிடம் சென்று ஒரு ஆலயம் கட்ட சொல்” என்று கூற... அந்தச் சிறுவன், “அம்மா நான் எப்படி எழுந்து நடக்க முடியும்?” என்று கேட்க... அந்த அம்மா “சிறுவனே நீ எழுந்து நட... உன்னால் முடியும்” என்று கூற... அவன் எழுந்து நடக்க.. பின் உற்சாகத்தில் ஓட ஆரம்பித்தவன், அந்த செல்வந்தரின் வீட்டிற்கு சென்று தான் நின்றுள்ளான்.. செல்வந்தரின் வீட்டில் இருந்த மாதா சுரூபத்தை காட்டி, இந்த அம்மா தான் என்னிடம் பேசினார் என்று கூற... அவர் ஷாக்கில் மூழ்கி, பின்னர் ஒரு சிறு ஆலயத்தை கட்டியுள்ளார்.
போர்த்துகீசிய மாலுமிகள் பாய் மர கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்க.. கடும் புயலில் சிக்கி தத்தளித்து மூழ்கும் நிலையில் அன்னை மரியாளிடம் பிரார்த்தித்து, எதாவது கரையை அடைந்தால் அங்கு உமக்கு ஒரு கோயில் காட்டுவோம் என்று கூற.. புயல் நின்று... கரையை தட்டி நிற்றதாம் அவர்களின் கப்பல். அந்த நாள் செப்டம்பர் 8 ஆம் தேதி 1671 ஆம் வருடம். அன்று தான் அன்னை மரியாளின் பிறந்த நாள்... செல்வந்தர் கட்டிய சிறிய ஆலயத்தை சற்று பெரிதாக கட்டி கொடுத்தனர் மாலுமிகள். அவர்களின் கப்பலில் இருந்த கொடி மரத்தை ஆலயத்தின் அருகில் நட்டு வைத்து கொடியையும் ஏற்றினார்கள். இது நாள் வரை அதே கொடி மரத்தில் தான் கொடி வருடந்தோறும் ஏற்ற படுகிறது...
ஆலய பீடத்தில் கலை வண்ணம் மிக்க பீங்கான் ஓடுகளால் அலங்கரித்தனர்... இன்றளவும் அந்த பீங்கான் பீடத்தில் ஜொலித்து கொண்டிருக்கிறது. மாதாவின் பிறந்தநாளன்று அன்னை காட்சி அளித்து புதுமைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...
அவரின் பிறந்த நாள் அன்று தான் ஆலய திருவிழாவும், ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
1771 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி, நாகப்பட்டினம் ஆலயத்தின் துணை பங்காக செயல்பட்ட வேளாங்கண்ணி ஆலயம், அருட்தந்தை ஆண்டோனியோ டி ரொசரியோ என்பவரால் தனி பங்காக உருவாகியது. 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் இந்த ஆலயம் பெரியளவில் புதுப்பிக்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி இணை பெருங்கோயிலாக வத்திக்கான் உயர்த்தியது. 2012
ஆம் ஆண்டு பெருங்கோயிலாக உயர்த்திய பொன் விழாவை இந்த ஆலயம் சிறப்பித்தது.
கிழக்கின் லூர்து அன்னை ஆலயம் என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணி. கடந்த 500 வருடமாக பாரம்பரியமிக்க ஒன்பது நாள் திருவிழாவையும், தேர் பவனியையும் கத்தோலிக்க குருக்களும், அணைத்து மத பக்கதர்களும் இணைந்து சிறப்பித்து வருகின்றனர்.
இந்த பேராலயம் கட்டப்பட்டதில் இருந்து மூடியதே இல்லை... புயல் காற்று, சுனாமி தாக்கியபோது கூட ஆலய கதவு திறந்தே தான் இருந்திருக்கிறது... பாதிக்கப்பட்ட மக்களை அரவணைத்து தங்கவைத்த ஆலயம் இது.
கடந்த மார்ச் மாதம் துவங்கின கொரோனா தொற்றால் ஆலயம் முழுவதுமாக மூடப்பட்டது... அதானால் இந்த வருடம் ஆண்டு விழா நடத்துவது ஒரு கேள்வி குறியாகவே இருந்தது... அதே சமயம் ஜெயா பிளஸ் டிவி மற்றும் ஆன் லைனில் தினமும் திருப்பலி நடைபெற்றது. அதனால் திருவிழாவும் ஆன் லைன் மூலம் நடத்தி கொள்ளவது சிறந்தது என்று மாவட்ட கலெக்டர் பிரவீன் பி நாயர் மற்றும் எஸ்.பி. செல்வநாயக ரத்தினம் உத்தரவு பிறப்பித்தனர்.
கடந்த 29 ஆம் தேதி தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் .தேவதாஸ் அம்புரோஸ் திருவிழா கொடியை மந்திரித்து ஏற்றிவைத்தார்...
நகை மாவட்ட எஸ்.பி. செல்வநாயக ரத்தினம் முன்னிலை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தார்...
வழக்கமாக கொடியேற்று விழாவுக்கு மட்டும் பத்து லட்சம் பக்தர்கள் இங்கு குவிவது வழக்கம். இந்த வருடம் கொரோனா தொற்றால் பக்தர்களை வேளாங்கண்ணியினுள் அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் தடை போட்டுவிட்டது. வேளாங்கண்ணி முழுவதும் சீல் செய்யப்பட்டு, காவல்துறையின் கட்டுப்பாட்டில் எட்டாம் தேதி வரை கொண்டுவரப்பட்டுள்ளது. லோக்கல் பக்தர்கள் கூட ஆலயத்தினுள் மாலை நடைபெறும் திருப்பலி, நவநாள், ஜெபமாலை தேர் பவனியில் அனுமதிக்கப்படவில்லை.
மாதாவின் தேர் புறப்படும் போது இசைக்கும் “வண்ண.. வண்ண லில்லி மலர் என்ற பாடல் நூற்றாண்டை கடந்ததாம். அதை எழுதியவர் மற்றும் பாடியவர் ஒரு இந்து சகோதரர் என்பது மிக சிறப்பான ஒன்று...
நாம் விகடகவிக்காக வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய அதிபர் அருட்பணி. பிரபாகர் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம்...
“இதுவரை இப்படிப்பட்ட திருவிழாவை சந்தித்தது இல்லை.. பக்தர்கள் இல்லா திருவிழா.. வேளை நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சீல் செய்யப்பட்டுவிட்டது. எங்க கலெக்டர் கொரோனா தொற்றின் தாக்கம் இருப்பதால், வெளியாட்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்று உத்தரவை பிறப்பித்துள்ளார். அதே போல 9 ஆம் தேதி வரை இங்கிருந்து யாரும் வெளியே போக கூடாது, வெளி ஊரில் இருந்து யாரும் உள்ளே வரக்கூடாது. உள்ளூர் மக்கள் மட்டும் காலை முதல் மாலை வரை ஆலயத்திற்கு வந்து அன்னையை தரிசிக்கலாம்... அதே வேளை திருப்பலி பார்க்கவும் திவ்விய நற்கருணை வழங்க அனுமதி இல்லை. கொடி ஏற்றத்திற்கு பின் தினமும் மாலை ஏழு மணிக்கு ஆலயத்தை சுற்றி அன்னையின் தேர் பவனி நடைபெறும். வழக்கமாக தேர் கடற்கரை வரை சென்று வரும். தற்போது அது தடை செய்யப்பட்டுள்ளது...
ஏழாம் தேதி மாலை பெரிய தேர், ஆயர் அவர்களால் புனித படுத்தப்பட்டு ஆலயத்தை சுற்றி வரும்... எட்டாம் தேதி காலை முதல் ஆலயத்தில் திருப்பலி நடைபெறும். ஆன் லைனில் தான் பார்க்க முடியும். கடந்த 29 தேதியில் இருந்து தினமும் ஒரு கொடி ஏற்றப்பட்டு வருகிறது... 7 ஆம் தேதி ஏற்றப்படும் கொடி 8 ஆம் தேதி மாலை இறக்கப்படும். அத்துடன் இந்த வருட ஆலய விழா முடிவுக்கு வரும். திருப்பூரில் இருந்து கொடிகள் தயாரித்து வருகின்றது. அதே போல மலர்கள் தினமும் பெங்களூரில் இருந்து வருகின்றன. ஏழு லட்சம் பக்தர்கள் கூடும் இந்த வேளாங்கண்ணி, இன்று வெறிச்சோடி காணப்படுகிறது.
இதுவம் இறைவனின் திட்டம் என்று நினைக்கிறேன்... இந்த கொரோனா தொற்று பல புதிய பாடங்களை கற்று கொடுத்து வருகிறது. குடும்பங்கள் இணைந்துள்ளன. குடும்பத்துடன் வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உண்டு மகிழும் நேரம் ஏற்படுத்த பட்டிருக்கிறது. ஏழை, பணக்காரர், உயர்பதவி, பட்டம் எல்லாம் ஒதுக்கப்பட்டு அனைவருக்கும் கடவுள் பக்தி பயம் வந்திருக்கிறது. ஒரு விஷயம் திருமண விவாகரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. எப்படி அமெரிக்காவில் ஏற்பட்ட இரட்டை கோபுர அழிவில் மக்கள் இறைவனிடம் தஞ்சம் புகுந்தனரோ, அதே போல தற்போது மனிதன் இறைவனை தேடி வந்து கொண்டிருக்கிறான்... எல்லாம் கடந்து போகும். அது போல கடந்த 500 வருடமாக பக்தர்களின் அலைக்கடலில் கொண்டாடி வந்த இந்த திருவிழா, பக்தர்கள் இல்லாத திருவிழாவாக கொண்டாடப்படுகிறது... அன்னையின் அடுத்த வருட திருவிழா மிக சிறப்பாக அமைய அன்னையிடம் இந்த வருடம் முழுவதும் மன்றாடுவோம்... ஒரு விஷயம், கடந்த வாரம் அரசு ஆலயங்களை வழிபாட்டுக்கு திறக்க அனுமதி வழங்கின பின், நம் ஆலயம் திறக்கப்பட்டது. பெண்கள், ஆண்கள் ஆலயத்தினுள் வந்து ‘அம்மா உங்களை பார்த்து எத்தனை நாள் ஆகிவிட்டது’ என்று ஆனந்த கண்ணீர் வடித்து வந்ததை பார்த்து நானே கண்கலங்கி விட்டேன்..” என்று முடித்தார்.
நாகப்பட்டினம் எஸ்.பி. செல்வநாயக ரத்தினம் வேளாங்கண்ணி நகரில் முகாமிட்டு, திருவிழா ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். அவரை தொடர்பு கொண்டு பேசினோம்... “வழக்கமாக இந்த ஆலய திருவிழாவிற்கு ஐந்து லட்சத்திற்கு மேல் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்த வருடம் கொரோனா தொற்றால் வேளாங்கண்ணி நகர் சீல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை கண்காணித்து வருகிறார்கள்... உள்ளூர் மக்கள் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை, ஆலயத்தில் மாதாவை காண அனுமதிக்க படுவார்கள், சமூக இடைவெளியுடன்... மாலை ஆலயத்தை சுற்றி தான் தேர் பவனி... அதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 9 ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் இருக்கும், அதற்கு பின் தளர்வுகள் கொடுக்கப்படும்” என்று கூறினார்.
வரலாற்று சிறப்பு மிக்க வேளாளங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருவிழா மற்றும் தேர்பவனியை கொரோனா தாக்கத்தால் ஆன் லைனில் மில்லியன் பக்தர்கள் கண்டு களித்தனர்...
Leave a comment
Upload