தொடர்கள்
Daily Articles
தந்தை உடலை சுமந்த 6 மகள்கள்... - அபிமன்யு

20200807174102370.jpeg


பீகார் மாநிலம், பங்காட்டா அருகே ஜிர்வானியன் கிராமத்தை சேர்ந்தவர் ஹரேந்திர சர்மா (70). இவருக்கு 6 மகள்கள் உள்ளனர். இவர்களில் 3 பேருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. இந்நிலையில், கடந்த 5-ம் தேதி ஹரேந்திர சர்மா திடீர் உடல்நலக்குறைவால் காலமானார்.
இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான உத்தரப் பிரதேச மாநிலம், தியோரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அப்போது அவருக்கு மகன் இல்லாததால், அவரது ஈமச்சடங்குகளை செய்வது யார், அவரது சடலத்தை முன்வரிசையில் தோள் கொடுப்பது யார் என உறவினர்களிடையே கேள்வி எழுந்தது.


இந்நிலையில், ஹரேந்திர சர்மாவின் 6 மகள்களும் முன்வந்து, ‘எங்களை தோளில் சுமந்த தந்தையின் சடலத்தை நாங்களே சுமந்து செல்கிறோம். அவருக்கு மகன் இல்லை என்றால் என்ன? நாங்களே மகனாக இருந்து, அனைத்து சடங்குகளையும் செய்கிறோம்’ என உறுதியாக கூறினர். 6 மகள்களின் தீர்க்கமான முடிவால், உறவினர்களால் மறுப்பு சொல்ல முடியவில்லை.


இதையடுத்து இறந்த தந்தையின் சடலத்தை பாடையில் வைத்து, 6 மகள்களும் தோளில் சுமந்து சென்றனர். இறந்த தந்தையின் சடலத்தை மகள்கள் சுமந்து செல்வதை பார்த்தது, அக்கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் கண்ணீர் வடித்து பாராட்டினர். அதன்பிறகு சுடுகாட்டில் ஹரேந்திர சர்மாவின் சடலத்துக்கு, அவரது மூத்த மகளின் மகனான ஆயுஷ் சர்மா நாணா என்பவர், தாத்தாவின் சடலத்தை எரியூட்டி தகனம் செய்து, இறுதி சடங்குகளை செய்தார். இச்சம்பவம் பீகார், உ.பி. மாநில கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.