தொடர்கள்
Daily Articles
ராக தேவதைகள்... - மாயவரத்தான் சந்திரசேகரன்

3

சாருகேசி

20200804140608746.jpg

ஐந்தே பாட்டுக்கள்... மன்மத லீலையை வென்றார் உண்டோ, வசந்த முல்லை போலே வந்து, ஆடல் காணீரோ, ஆடல் கலையே தேவன் தந்தது, அகலே அகலே நீலாகாசம்.. இவற்றை திரும்ப திரும்ப கேட்டு மனதில் ஏற்றி கொண்டால் போதும்! சாருகேசியை தூக்கத்தில் கேட்டால் கூட நீங்கள் பட்டென்று சொல்வீர்கள். அந்த அளவிற்கு ராகத்தின் ஜூஸ் இந்த பாடல்களில் இறங்கி உள்ளது. அப்படியென்றால் இதே ராகத்தில் அமைந்துள்ள மற்ற பாடல்கள் என நீங்கள் புருவத்தை உயர்த்துவது புரிகிறது. அதெல்லாம் என்னைப் பொறுத்தவரை இரண்டாவது டிக்கா‌ஷனில் போடப்பட்ட காபி. மேலே சொன்னது முதல் டிக்காஷன். இந்த வரிசையில் ஐந்தாவதாக சொன்னது மலையாளம்! படம் மிடுமிடிக்கி. இசை எம்.எஸ். பாபுராஜ். முழு பெயர் முகமது சபீர் பாபுராஜ். 49 வயதில் இறந்து போன அசாத்திய கலைஞர். 1960 களிலேயே ஹிந்துஸ்தானி ராகங்களை மலையாள சினிமாவிற்கு கொண்டு வந்தவர். அவர் பாடல்களில் சாரங்கி, சரோடு, ஷெனாய் போன்ற ஹிந்துஸ்தானி வாத்தியங்கள் செய்யும் ஜாலம் நம் மனதை உலுக்கி விடும்.

20200804140724372.jpg

இளையராஜா எப்போது பேசினாலும் பாபுராஜை சிலாஹிப்பார். ஜேசுதாஸ் ‘அகலே... என்று எடுத்த எடுப்பிலேயே மேலே இழுக்கும் போதே நம் உடம்பு சிலிர்க்கும். எஸ். ஜானகியுடன் இணைந்து பாடும் பிரமாதமான சாருகேசி டூயட்! 'ஆஜாரே... பரதேசி’ ‘மதுமதி’ இந்திப் பாடலில் கூட இந்த ராகத்தின் சாயல் உள்ளது.

20200804140626496.jpg

நம்முடைய பாகவதருக்கு வருவோம்! 1944-ல் வெளிவந்த ‘ஹரிதாஸ்’ படத்தில் இடம் பெறும் ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ பாடலை தியாகராஜ பாகவதர் பாடுகிற போது சாருகேசி கங்கை போல கரை புரண்டு ஓடும். பாபநாசம் சிவனின் இசையால் பாடல் அழகு பெற்றதா, பாகவதரின் சாரீரம் அந்த மயக்கத்தை தந்ததா... புரியாத புதிர். பட்டி தொட்டியெல்லாம் பல வருடங்கள் ஒலித்த பாடல்! இன்றைக்கும் அந்த ராகத்திற்கு இப்பாடலே முதல் ரெஃபரன்ஸ்!

2020080501385313.jpeg

சாரங்கதாரா படம் என்றாலே எனக்கு ‘வசந்த முல்லை போலே’ தான் நினைவுக்கு வரும். டி.எம்.எஸ். சாருகேசியை அணு அணுவாக ரசித்திருப்பார். குறிப்பாக ‘இந்திர வில் நீயே சந்திர ஒளி நீயே’, என்று மேல் ‘ம’ வை தொட்டுவிட்டு “ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே”... என்று டி.எம்.எஸ். கீழே இறங்கி வரும் அழகு இருக்கே... அதைவிட எந்த ஹீரோயினும் அழகில்லை! ஜி. ராமநாதன் போன்ற மேதைகளால் மட்டுமே இப்படி ராகத்தின் ஆன்மாவை கொண்டுவர முடியும். இன்று ராகங்களை தெரிந்து கொள்ளாமல் கீபோர்டில் இசையை தேடும் அவலம் நடக்கிறது கோலிவுட்டில்.

20200804140746597.jpg

அதே ஜி. ராமநாதன் எம்.ஜி.ஆரின் ‘மதுரை வீரன்’ படத்தில் ‘ஆடல் காணீரோ’ என்றொரு பாடலை தந்திருப்பார். பாடியவர் எம்.எல். வசந்தகுமாரி. கேட்க வேண்டுமா? எம்.எஸ்ஸுக்கும், அவருக்கும் இசையில் போட்டா போட்டியே நடந்த காலம் அது! பல்லவி முடிந்து முதல் சரணத்திலேயே (அனுபல்லவி) சாருகேசியில் சின்ன ஆலாபனையே செய்திருப்பார் எம்.எல்.வி. அனாயசயம். அற்புதம்!

20200804140809725.jpg

அம்பிகா சதஸில் ஆட, ரஜினி வீணையை மீட்டியபடி பாடும் ‘ஆடல் கலையே தேவன் தந்தது’ காட்சியை மறக்க முடியுமா? ‘ஸ்ரீ ராகவேந்திரர்’ படத்தில் இளையராஜா படு சம்பிரதாயமாக இந்த ராகத்தை கையாண்டிருப்பார். பாட்டுக்கு நடுவிலேயே சற்று ஆலாபனை, ஸ்வரங்கள், கொஞ்சம் ஜதிகள் என்று களேபரமான ராஜாங்கம் நடத்தியிருப்பார். ஜேசுதாஸ் பாடிய கிளாஸிகல் பாடல்களில் இது மிகச் சிறந்த ஒன்றாக இருக்க முடியும்!

சாருகேசி பொதுவாக உருக்கம், கருணை, இரக்கம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ராகம். இது மேலே போகிற போதும் ஏழு ஸ்வரங்கள். கீழே வரும் போதும் ஏழு ஸ்வரங்கள் என்பதால் சம்பூர்ண ராகம் என சொல்வார்கள் இசை அறிஞர்கள். 26-வது மேளகர்த்தா ராகம் கூட. இந்த ராகத்தில் மேலே பஞ்சமம் வரை போகலாம் என்றாலும் மத்யமம் வரைக்கும்தான் பொதுவாக நம் வித்வான்கள் போவார்கள். காரணம் அதிலேயே ராகத்தின் சொரூபம் பளீரென தெரிந்துவிடும். பஞ்சமம் போனால் சுகம் கிடைப்பதில்லை. கர்நாடக சங்கீதத்தை பொறுத்தவரை தியாகராஜரின் ‘ஆட மோடி களதே’, சுவாதி திருநாளின் ‘கிரிபயா பாலய சவ்ரே’, பாபநாசம் சிவனின் ‘கருணை வருமோ’, என்று சில கீர்த்தனைகள் சாகாவரம் பெற்றவை. லால்குடி ஜெயராமன் ‘இன்னும் என் மனம்’ என்ற அழகான வர்ணத்தை இந்த ராகத்தில் அமைத்துள்ளார்!

சினிமாவில் இடம்பெற்ற சற்று ‘லைட்’டான சாருகேசிகளை அலசலாம். எஸ். வரலட்சுமி பாடிய ‘வெள்ளி மலை மன்னவா’, டி.எம்.எஸ். மென்மையாக பாடிய ‘தூங்காத கண் ஒன்று உண்டு’ ஆகிய இரண்டும் கே.வி. மகாதேவன் இசையமைத்தவை. வரலட்சுமிக்கு ஒரு அதிர்ஷ்டம் உண்டு. எப்போதாவது பாடுவார். அவை பெரும்பாலும் ஹிட்டாகி விடும். எம்.எஸ்.வி. சாருகேசியில் நிறைய கொடுத்துள்ளார் என்றாலும் ‘ரிக்ஷாக்காரன்’ படத்தில் ‘அழகிய தமிழ் மகள்’, ‘ராஜபார்ட் ரங்கதுரை’யில் ‘அம்மம்மா தம்பி என்று நம்பி’, ‘பிள்ளையோ பிள்ளை’யில் ‘மூன்று தமிழ் தோன்றியது’ ஆகியவை முக்கியமானவை. குறிப்பாக மு.க. முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’யில் வரும் ‘மூன்று தமிழ்’ டூயட்டில் மெல்லிசை மன்னர் சாருகேசியை, ‘சாரு கேசரி’ போல அவ்வளவு தித்திப்பாக தந்திருப்பார். இசை ஞானிக்கு ஆடல் கலையே மாஸ்டர் பீஸ் என்றாலும், அரும்பாகி மொட்டாகி, சக்கரைக் கட்டி, தூது செல்வதாரடி, மயங்கினேன் சொல்ல தயங்கினேன், காதலின் தீபம் ஒன்று என வரிசையாக பல ஜனரஞ்சக கற்கண்டுகளை அள்ளிக் கொடுத்துள்ளார். விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் டைட்டில் சாங்கில் இந்த ராகத்தின் லட்சணம் ஓரளவு தெரியும்படி அழகை கையாண்டிருப்பார் சங்கர் கணேஷ்.

20200804141817685.jpg

‘உதயா உதயா’ பாடலில் ஏ.ஆர். ரஹ்மான் சாருகேசியை கொண்டு வந்திருக்கும் விதம் வித்தியாசமாக இருக்கும். ஜி. ராமநாதன் காலத்து பாடலை போல நீங்கள் அழுத்தமாக எதிர்பார்க்க முடியாது! பட்டாம்பூச்சி தோளில் பட படவென்று உரசிவிட்டு காதோரமாக பறந்து செல்வது போல அவ்வளவு மிருதுவாக இருக்கும். ‘காதல்..ல் தீண்டவே, கடல் தாகம் உண்டானதே..’ என்று சாதனா சர்கம் மயங்குவதும், ‘உன் பாதி வாழ்கிறேன்... என் பாதி தேய்கிறேன்’ என்று ஹரிஹரன் அனுபவித்து இழுத்து பாடுவதும், நடுவே வயலின் அழகாக கண்ணாமூச்சி காட்டுவதும், ரிதம் தொந்தரவு செய்யாமல் மென்மையாக தொடர்வதும் உங்களுக்கு புரிந்தால் ரஹ்மான் ஏன் யாரும் தொட முடியாத இடத்தை அடைந்தார் என்று புரியும். மகா கலைஞர்கள் மட்டுமே வெற்றிடம் எங்குள்ளது என அறிவார்கள். இதே போன்று இன்னொரு அழகு டூயட் ‘எனக்கு 20, உனக்கு 18’ படத்தில் வரும் ‘ஏதோ ஏதோ ஒன்று’ பாடல். ‘உயிரே... இதயம்..’ என்று கோபிகா பூர்ணிமா இழுக்கும் ஓரு இடத்திலேயே சாருகேசி ஆயிரம் முத்தமிடுகிறதே! பாழாய்ப்போன சினிமா வியாபார உலகம், ரஹ்மான் என்ற அபூர்வ கலைஞனின் உயர்ந்த படைப்புகளுக்கு வேகத் தடையாக உள்ளதே என்ற வேதனை எனக்கு எப்போதும் உண்டு!

20200804141012129.jpg

‘நேருக்கு நேர்’ படத்தில் ‘எங்கெங்கே’ என்றொரு டூயட்டை ஹரிஹரனுடன் ஆஷா போஸ்லே பாடுவார். கேட்கவே வெய்யிலில் பன நொங்கு சாப்பிடுவது போலிருருக்கும். உபயம்... தேனிசை தென்றல் தேவா. எஸ்.பி.பியும் சித்ராவும் பாடும் ‘செந்தூரப்பாண்டிக்கு..’, அவ்வை சண்முகியின் ‘காதலா காதலா’ போன்றவை தேவாவின் கர்நாடக சங்கீத ஞானத்தை பறை சாற்றும். குறிப்பாக காதலாவில் ஹரிஹரனும், சுஜாதாவும் மேல் ஸ்தாயியில் மெய்மறந்து வானில் விளையாடும் சங்கதிகள் அட்டகாசமானவை. புதிதாக வந்திருக்கும் சில ஜீன்ஸ்களை விட தேவா நூறு மடங்கு கிரியேடிவான இசையமைப்பாளர். அதே போல பரத்வாஜும் நல்ல கற்பனை வளமும், சங்கீத ஆளுமையும் உடையவர். தமிழ் படவுலகம் அவரை சீக்கிரம் ஏன் ஓரங்கட்டியது என்பது சற்று விளங்காத விஷயம். ‘திருட்டு பயலே’யில் அவரது ‘தையதா தையதா’ திரும்ப திரும்ப முணு முணுக்க வைக்கும் ரம்மியமான சாருகேசி.

புதிதாக முளைத்திருக்கும் இசையமைப்பாளர்களின் சாருகேசிகள் எதுவும் இந்த நிமிடம் வரை என் காதில் விழவில்லை. கேட்டு எழுத எனக்கும் ஆசைதான்!

இசை பெருகும்...