- 3 -
“மச்சி அவனுக்கு எங்கயோ மச்சம் இருக்குடா” பல நண்பர்கள் குழுக்களில் அடிக்கடி கேட்கும் வார்த்தை இது.. காசு, பணம், கார், பீர் போன்றவற்றிற்கு பெரும்பாலும் இது பொருந்தாது.. ஒருவனுக்கு மச்சம் என்று மற்ற நண்பர்கள் சொன்னால், அது நிச்சயமாக பெண் சம்பந்தப்பட்டதாகத் தான் இருக்கும். சொல்பவர்களும் சந்தோஷத்துடன் சொல்ல மாட்டார்கள். இயலாமையும் வயிற்றெரிச்சலும் கை கோர்த்து வார்த்தையாய் வெளிப்படும். என்னப் பொருத்தவரையில் இயலாமை தான் என்னை நல்லவனாக வைத்திருந்தது என்பேன். பதினேழு வயதில் எனக்கென்று கார் வாங்கித் தந்தார் அப்பா. ஆனால் வீட்டில் இருந்து கல்லூரி, கல்லூரியில் இருந்து வீடு, இதைத் தாண்டி வெளியே போவதற்கு பயம். வீட்டில் இருக்கும் மது வகைகளை குடித்தால் அப்பா ஒன்றும் சொல்லப் போவது இல்லை.. ஆனால், ஏனோ அது பிடிக்கவில்லை. கற்றுக்கொண்ட ஒரே நல்ல பழக்கம் சிகரெட்.. இன்று வரை வாரத்திற்கு ஒரு சிகரெட் என்ற கணக்கில் தொடர்கிறது . பெண்களைக் கண்டால் அப்படி ஒரு கூச்சம்... ஆனால் அதிலும் ஒரு வேடிக்கை பாருங்கள். நான் எப்போதுமே ஒரு முரடன். அது இயலாமையின் வெளிப்பாடா என்பது தெரியாது.. ஆனால் எந்தப் பெண்ணைக் கண்டாலும் நகர்ந்து போய் விடுவேன்.
பஞ்சு அருணாசலம் அண்ணன் கதை வசனம் எழுதிய ‘ஹலோ பார்ட்னர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு, அரசு ஸ்டுடியோவில் நடைபெற்றது. “டிங் டாங் டிங் டாங் டிங்குலாலோ” என்ற கிளப் டான்ஸ் படமாகிக் கொண்டிருந்தது. விஜயலலிதா ஆடிக் கொண்டிருந்தார். அவருக்கு நேர் எதிரில் நான் உட்கார்ந்திருந்தேன். அவரை நேரே பார்க்க கூச்சம். அவ்வப்போது ஓரக்கண்ணில் பார்ப்பேன். இதை அவர் பார்த்து விட்டார். அடுத்த முறை அவரைப் பார்க்கும் போது வேண்டும் என்றே அவரும் அதே போல என்னைப் பார்த்தார். குப்பென்று வியர்த்து விட்டது. செட் வாசலில் வந்து நின்று விட்டேன். அவ்வுளவு தான் என் தைரியம்.
1972ஆம் வருடம் என் நண்பன் அன்பில் பொய்யாமொழியை பார்க்க... ஒருமுறை நான் லாயிட்ஸ் காலனிக்கு போய்க் கொண்டு இருந்தேன். மாலை சுமார் 7 மணி இருக்கும்.. சிகரெட் பிடிக்க வேண்டும் போல் இருந்தது. டிரைவின் உட்லாண்ட்ஸ் ஹோட்டல் எதிரில் காரை நிறுத்தி, காலனியில் பிடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த ஒற்றை சிகரெட்டை பற்ற வைத்தேன். என் கார் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது.. திரும்பிப் பார்த்தேன்.. பளபளவென்ற ரோஸ் நிறப் புடவையில் தலை நிறைய மல்லிகைப் பூவுடன் நல்ல கருப்பு நிறத்தில் ஒரு முப்பது வயது பெண்மணி என் காரில் ஏறி முன்னால் என் அருகில் உட்கார்ந்தார். அவர் கன்னங்களில் பூசி இருந்த காக்காய்ப்பொன் அந்த இருட்டிலும் மினுமினுத்தது...
“ ம்ம்.. போங்க” என்றார்...
“எங்க?” நடுக்கத்துடன் என் குரல் வெளிவந்தது.
“எங்க வேணும்னாலும்.. சீக்கிரம்.. எனக்கு டைம் ஆகுது..”
“நான் என் ஃபிரண்ட் வீட்டுக்கு போறேன்...”
“அப்புறம் ஏன் என்னப் பாத்திட்டு காரை நிறுத்துனீங்க?”
“சிகரெட் பற்ற வைக்க...”
“ஏய் என்ன கிட்ட பாக்கணும்னு ஆசைப்பட்டியா? சின்னப் பையா..” என் கன்னத்தில் ஒரு தட்டு தட்டிவிட்டு கிழே இறங்கி இருட்டில் கரைந்து போனார் அந்தப் பெண்.
50 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்றும் அது என் நினைவில் பசுமையாக இருக்கிறது..
வந்த வேலையை விட்டுவிட்டு பந்தக்காலை பிடித்துக் கொண்டு நின்றது போல என்று ஒரு சொலவடை உண்டு. அது போல நானும் சொல்ல வந்த விஷயத்தை விட்டுவிட்டு ஏதேதோ சொல்லிகொண்டிருக்கிறேன்.
முன்னால் சொன்னது போல “மச்சி அவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” வகையறாவில் எனக்கும் ஒரு நண்பன் உண்டு.. ஒரு வித்தியாசம் இவனுக்கு உடம்பு முழுவதும் மச்சம். எல்லா மச்சங்களும் இணைந்து அவன் நிறத்தையே கன்னங்கரேலென்று ஆக்கி விட்டது. அப்பா சொன்னது போல...
“நாகப் பழத்திலேயும் நல்காயாம் பூவிலேயும்
காகக் கருப்பினிலும் கருங்கருப்பு எங்க மச்சான்”
என்று ஒரு பெண் தன் மாமனைப் பற்றி பாடுவாளாம்..
என் நண்பனும் அப்படி ஒரு பளபள கருப்பு. ஆனால் மாதம் ஒரு பெண்ணுடன் சுற்றுவான். வயது வித்தியாசம் இல்லாமல் பிளஸ் டூவில் இருந்து டூ பிளஸ் குழந்தைகளுடன் இருக்கும் பெண் வரை அவனுக்கு பழக்கம்.. அவன் மீது நான் பொறாமைப்படுவது வழக்கம்.
“உனக்கு Introduce பண்ணவா? என்று கேட்பான்.. எனக்கு பயத்தால். Urination Time வந்துவிடும். நல்ல பாடகன்.. நான் என்ன எழுதித் தந்தாலும் அதை அற்புதமான ராகத்தில் பாடுவான்.. மிகச் சிறந்த விளையாட்டு வீரன்.
ஒரு வழியாக அவனுக்கு திருமனம் நிச்சயமானது.. மிக அழகான, நல்ல குணவதியான பெண். அவர் நல்ல சிகப்பு நிறம். இருவரும் சேர்ந்து போனால், வெள்ளைத் தாளில் கருப்பு மை கொட்டியது போல இருக்கும். அந்தப் பெண் தன் கணவன் மீது உயிரையே வைத்து இருந்தார்.. விதி வசத்தால் திருமணம் நடந்து ஐந்து வருடங்கள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை.. திருமணத்திற்கு முன்னடந்த தன் விளையாட்டுக்கள் காரணமாகத் தான் தனக்கு குழந்தை இல்லை என்று நினைக்க ஆரம்பித்தான். நான் தான் அவனுக்கு மிக நெருங்கிய நண்பன் என்பதால் நானும் அவனை பல வழிகளில் தேற்றிப் பார்த்தேன்.. ஆனாலும் நாளுக்கு நாள் அவனுக்கு தாழ்வு மனப்பான்மை கூடிக்கொண்டே போனது.. யாரவது சிரித்தால் கூட தனக்கு குழந்தை இல்லை என்பதால் தான் சிரிக்கிறார்கள் என்று சண்டைக்கு போவான். இப்படியே போய் மிக இளம் வயதில் மரணமடந்துவிட்டான்.
என் நண்பனை விட மிக மோசமான பெண்பித்தர்களை நான் திரைத் துறையிலும், வெளியிலும் பார்த்து இருக்கிறேன்.. அவர்களில் சிலருக்கு குழந்தைகள் இருக்கின்றன, சிலருக்கு இல்லை.. ஆனாலும் இன்றும் அதே போல்த் தான் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.. இவர்களைப் பார்த்த பிறகு எனக்கு ஒன்று மட்டும் உறுதியாக தெரிந்தது.. மனசாட்சி உள்ளவர்கள் தவறு செய்தால், அதிக நாள் வாழமாட்டார்கள் என்பது தான் அது.
(தொடரும்)
Leave a comment
Upload