தொடர்கள்
Daily Articles
முகங்கள்... - ஆசிரியர் தினம்... - மரியா சிவானந்தம்

2020080418333644.jpg

சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரல் ஆனது. ஏகப்பட்ட ‘லைக்’ குவித்து ‘ஷேர்’ செய்யப்பட்ட அந்த அழகான காணொலி, கூகுள் - சுந்தர் பிச்சை, ஓய்வு பெற்ற தன் ஆசிரியையைத் தேடி சந்தித்து உரையாடும் நிகழ்ச்சியை பதிவு செய்திருந்தது. சில நாட்களில் ‘அந்த வீடியோவில் இருந்தவர் சுந்தர் பிச்சை அல்லர். அவர் IC 3 நிறுவனத்தின் தலைவர் கணேஷ் கோலி’ என்ற செய்தி உலவியது. அவர் சுந்தர் பிச்சையோ, கணேஷ் கோலியோ... ஆனால், அந்த காணொலி சொல்லும் சேதி சிறப்பானது. கல்வியுடன் தன்னம்பிக்கையையும், அன்பையும் வாரி வழங்கும் ஆசிரியர், மாணவர் மனதில் நிரந்தரமாக இடம் பிடிக்கிறார். எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும், இத்தகைய ஆசிரியர் தம் சேவைகள் மறக்கப்படுவதில்லை. ஆசிரியர் தினத்தன்று நாம் நினைத்து மனதில் வணங்கிக் கொள்ளும் ஒரு ஆசிரியரேனும் ஒவ்வொருவர் நெஞ்சிலும் நிற்கக் கூடும்.

‘ஆசிரியர் தினத்தை முன்னிட்டு விகடகவி சார்பாக சில ஆசிரியைகளை தொடர்பு கொண்டு உரையாடினோம். அனைவரும் நீண்ட அனுபவமும், அர்ப்பணிப்பும் கொண்டவர்கள். இவர்கள் முகநூலில் அல்லது ஊடகங்களில் வெளிச்சம் பெற்றவர் அல்லர். ஆனால் ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர்கள். சிறந்த அர்ப்பணிப்பும் தியாக உணர்வும் மிக்கவர்கள்.

முதலில் டாக்டர். வசந்த கல்யாணி. கணிதத்தில் முதுகலைப்பட்டதாரி. 1980-களின் துவக்கத்தில் அதிகம் பிரபலமாகாத கணினி கல்வியை துவக்கத்தில் இருந்தே பயின்று அதில் பட்டப்படிப்பும், ஆய்வும் செய்து முனைவர் பட்டம் பெற்று, இப்போது அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் கணினித் துறை தலைவராக பணி செய்து வருகிறார். அவரிடம் இன்றைய கல்விநிலை, கொரோனா கால ஆன்லைன் வகுப்புகள் பற்றி அவரிடம் பேசிய போது, அவர், ‘இந்த லாக் டவுன் ஒரு வித்தியாசமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. கல்வித் துறைக்கும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இது ஒரு சவாலாக அமைந்து விட்டது. என் மாணவிகள் இந்த ஆன்லைன் வகுப்புகளில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். நாங்களும் அதை அவர்களுக்கு பயனுள்ள வகையில் மாற்ற புதிய வழிகளை கண்டுபிடித்து கற்பிக்கிறோம். அறிவை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ள இந்த ஆசிரியப்பணி, மனநிறைவை அளிக்கிறது. இத்தலைமுறை மாணவர்கள் எதையும் சுலபமாக, விரைவாக கற்கிறார்கள். எப்போதையும் விட இக்கால மாணவர்கள் முனைப்புடன்,சுய ஊக்கத்துடன் இருக்கிறார்கள். ஒரு ஆசிரியையாக நான் பெரிதும் பெருமை படுகிறேன்” என்றார்.

20200804182629414.jpg

அவரை தொடர்ந்து, நாம் பேசியது திருமதி. மார்கெரெட் ஜோன் அவர்கள். வேலூர் அக்சிலியம் கல்லூரியில் கணிதத்துறை தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். 1975 ஆம் ஆண்டு எம்.எஸ்சி முடித்தவுடன் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்து, 1993ஆம் ஆண்டு முதல் துறைத்தலைவர் ஆக இருந்தவர். இவரது குடும்பமே பேராசிரியர்கள் நிறைந்த குடும்பம். எனவே இயல்பாகவே இப்பணிக்கு தன்னை இளவயதில் இருந்தே தயார்படுத்திக் கொண்டவர். இவரது பணிக் காலத்தைப் பற்றி கேட்டபோது, “புதிய கடினமான பாடங்களை நான் விரும்பி தேர்ந்தெடுத்து கற்பித்தேன். கற்பித்தலை மிகவும் ரசித்தேன். என் மாணவிகளை நான் தனிப்பட்ட விதத்தில் அறிந்து வைத்திருந்தேன். அவர்கள் குடும்ப பின்னணியுடன், அவர் தம் நிறை குறைகளையும் அறிந்து, அவர்களை நேசித்து வழி காட்டி உள்ளேன். அதனால் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் என்னால் செய்ய முடிந்தது. ஓய்வுக்குப் பின்னும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன். கணிதம் கற்பித்தல் எனது தணியா வேட்கை. அதை இன்னும் பள்ளி மாணவர்களுக்கு செய்து வருகிறேன்” என்றார். ஒரு கிராமப் பின்னணியில் இருந்து கல்லூரி முதலாண்டில் நுழையும் வெள்ளந்தி பெண் மூன்றாண்டுகளில் கல்வியுடன் தன்னம்பிகை மிக்க பெண்ணாக வெளியே செல்லும் பரிணாம வளர்ச்சியை, தான் பெருமையுடன் ரசித்ததாக கூறுகிறார். இவரது முதல் செட் முதல் இறுதி செட் மாணவிகள் வரை இனிசியலுடன் பெயர்களை நினைவில் வைத்திருப்பது இவரது அருங்குணம்.

2020080418353557.jpg

திருமதி. செல்வி விக்டர் மற்றுமோர் ஓய்வு பெற்ற ஆசிரியை. சென்னை ஈவார்ட்ஸ் பள்ளியில் கெமிஸ்ட்ரி கற்பித்தவர். தன் 35 ஆண்டுகள் பணியை மிகவும் நேசித்து செய்தவர், நன்றாக படிக்கக் கூடிய பிள்ளகளை விட, படிப்பில் மந்தமான பிள்ளைகளை தான் மிகவும் அக்கறை எடுத்து கற்பித்ததும், அவர்கள் நல்லமுறையில் வெற்றி பெற்றபோது மனம் மகிழ்ந்து போனதாகவும் சொல்கிறார் இவர்.

ஆசிரியையாய் இருப்பது கடவுள் தந்த வரம் என்று பெருமையுடன் சொல்லும் இவர், மிக அருமையான விதத்தில் தனது ஓய்வு காலத்தை செலவிடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் 80 முதல் நூறு ஏழை மாணவர்களுக்கு, தன்னார்வலர் உதவியடன் இலவச வகுப்புகள் எடுத்து, அவர்கள் பள்ளியில் தேர்ச்சி பெறவும், நல்ல மதிப்பெண் பெறவும் கடுமையாக உழைக்கிறார். இந்த மாணவர்களின் பெற்றோர் பெரும்பாலும் கூலி வேலை, வீட்டு வேலை செய்பவர்கள். பல ஆண்டுகளாக தொடரும் இந்த இலவச சேவையால், இவரிடம் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பலர் ஐ.டி துறையில், மேலும் பல துறைகளில் பணியில் இருக்கிறார்கள். இந்த தன்னலமற்ற சேவை வெளியுலகிலோ ஊடகங்களிலோ பேசப்படவில்லை. ஆனால் ‘இச்சமூகத்திற்கு சேவை செய்ய கடவுள் தந்த வாய்ப்பு இது’ என்று இவர் தன்னடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறார்.

20200804182854415.jpg

நான் சந்தித்த மற்றுமோர் ஆசிரியை திருமதி. கிளாட்வின் அவர்கள். சென்னை கேம்பிரிட்ஜ் பள்ளியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். பி.எ. (சரித்திரம்) படித்தவுடன் திருமணமாகி சென்னை வந்தவருக்கு, பணி தேட வேண்டிய சூழலில், தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார். முதுகலை, எம்.ஃபில் என்று தொடர்ந்து படித்தார். தனியார் பள்ளிகளில் கற்பித்தவர், அயல்நாட்டு மொழிகளில் ஈடுபாடு ஏற்பட்டு பிரென்ச், ஜெர்மன் கற்றுக் கொண்டார். அதை கற்பிக்கவும் தொடங்கினார். இப்போது ஆன்லைன் வகுப்புகள், வழிகாட்டிகள் தயாரித்தல் என்று மேடம் பிஸி. இவரது அனுபவங்களைப் பற்றி கேட்ட போது, ஒரு நேர்மையான பணியில் முழு அர்ப்பணிப்பு கொண்ட ஆசிரியையாக தான் இருந்ததாக சொல்கிறார். டிஸ்லெக்ஸியா எனும் கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு, தான் சிறப்பு கவனம் கொண்டு கற்பித்ததை நினைவு கூர்கிறார். இம்மாதிரி குழந்தைகளுக்கு மொழித் தேர்வுகளில் இருந்து விதி விலக்கு உண்டு என்று சொல்பவர், சில பெற்றோர் இந்த குறைபாடு இல்லாத பிள்ளைகளையும் போலி மருத்தவ சான்று கொண்டு வந்து, அந்த சலுகைக்காக நிற்கும் போது மிகுந்த வேதனையும் கோபமும் அடைவார். ஆரம்பப்பள்ளி குழந்தைகளை மிகவும் நேசிப்பவர். ‘சின்ன குழந்தைகள் நாம் காட்டும் அதே அன்பை தயக்கமின்றி தருவது ஒரு இனிமையான அனுபவம்’ என்கிறார்.

20200804182932749.jpg

ஆரம்பப்பள்ளி குழந்தைகளுடன் வாழ்தல் ஆகச் சிறந்த வாழ்க்கை அனுபவம். அதை பகிர்ந்து கொண்டார் திருமதி. கஸ்தூரி கண்ணன். இவரும் சென்னையில் எஸ்.டி.ஏ பள்ளியில் பணி செய்தவர். கணவர் மாநில அரசில் உயர் அதிகாரி. வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தவிர பெரிய குடும்பத்தை கவனிக்க வேண்டிய பொறுப்புகள் இருந்தாலும், தான் மிகவும் நேசித்த ஆசிரியப் பணியைத் தொடர்ந்து நிறைவேற்றியவர். ‘அடித்தளம் சரியாக இருந்தால்தான் கட்டிடம் உறுதியாய் இருக்கும். ஆரம்பக் கல்வி சிறப்பாக இருந்தால்தான் மேற்படிப்பு சரியாக இருக்கும்’ என்று கூறும் இவர், மிகுந்த அன்புடன் தன் மாணவர்களை நேசித்து, அவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கியவர். இவரது மாணவர்களைப் பற்றிய நினைவுகளில் இவர் மூழ்கிப் போகிறார். “அவர்களின் சிறிய உலகத்தில் உள்ள அன்பு, பாசம், கோபம், கண்ணீர் போன்ற உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு அவர்தம் பின்னணிக்கு தக்கவாறு தம் வழிகளை நெறிப்படுத்திக் கொள்பவரே நல்ல ஆசிரியர்” என்று இவர் சொல்வது முற்றிலும் உண்மை. மாணவர்கள் மட்டுமன்றி அவர்தம் பெற்றோரும் இவரிடம் மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டு இருந்ததையும், இப்போதும் எங்கு பார்க்க நேர்ந்தாலும் வந்து வணங்கிச் செல்வதையும் நெகிழ்ச்சியுடன் விவரிக்கிறார். ‘சிற்ந்த ஆசிரியர் விருது’ வாங்கிய இவர், ஓய்வுக்குப் பின்னும் கற்பித்தலில் ஆர்வம் கொண்டு தன்னை தேடி வருபவர்களுக்கு உதவி செய்பவர். ‘A teacher is always a teacher’ என்னும் தொடர் இவருடன் பேசும் போது மனதில் எழுகிறது.

20200804183049169.jpg

‘கற்பிக்கும் எவரும் கற்றுக் கொள்கிறார்’. பள்ளி பாடங்களை மட்டும் கற்பிக்கும் ஆசிரியரை மாணவர்கள் மறந்து விடுகிறார்கள். வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத் தருபவரே மனதில் நிற்கிறார்கள். இக்கால கல்வி முறையில் ஒழுக்க நெறிகளை, மனித மதிப்பீடுகளை, மொழியின் வளத்தினை கற்பிப்பது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. அந்நாள் போல் இன்று இல்லை. இது ஆசிரியர்களுக்கு மட்டுமன்றி மாணவர்களுக்கும் பொருந்தும்.

மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றி கொண்டு, புதிய வழிகளை வசப்படுத்திக் கொண்டு, தொடர்ந்து கற்றுக் கொண்டே கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.