தொடர்கள்
Daily Articles
வந்தார்கள்... வென்றார்கள்! - மதன்

20200804134548486.jpg

3
முகமது கோரி..


வாளேந்தினான் பிருத்விராஜ்!

டெல்லி...!

இந்தியாவின் நெற்றிப் பகுதியை வசீகரமாக அலங்கரிக்கும் இந்த மங்கலப்பொட்டை அழிக்கப் பார்த்த வேற்று நாட்டவர்கள்தான் எத்தனை பேர்! அதற்காக எத்தனை எத்தனை முயற்சிகள்...!
உலக சரித்திரத்தில் - எத்தனையோ நகரங்கள் சுவடில்லாமல் மடிந்து மண்ணுக்குள் புதைந்து போயிருக்கின்றன. ஆனால், டெல்லியின் கதை வேறு. எந்தச் சக்தியாலும் இந்த நகரத்தை நிரந்தரமாக வீழ்த்த முடியவில்லை - வரலாற்றுப் பக்கங்களிலிருந்து அகற்றவும் முடியவில்லை! மீண்டும் மீண்டும்‌ ஃபீனிக்ஸ் பறவையாக உயிர்பெற்று சிலிர்த்தெழுந்து நின்றது டெல்லி!

ஆனால், கம்பீரமான இந்த மாநகரம் வரலாற்றுப் போக்கில் வாங்கிய கத்திக் குத்துகளும் தாங்கிய சோதனைகளும் நம்மைத் திகைக்க வைக்கின்றன...

முதலில்...

பாபர் நிறுவிய மொகலாய சாம்ராஜ்யத்துக்குள் நாம் பஸ் ஏறிப் பயணம் செய்வதற்குமுன் ஒரு ‘ஃப்ளாஷ் பேக்’ ராக்கெட்டில் ஏறிப்பின்னோக்கி வேகமாகப் பயணிப்போம். அந்தக் கால டெல்லியைப் பற்றிச் சற்று உணர்ச்சிபூர்வமாகப் புரிந்து கொள்ள இந்த வேகப் பயணம் உதவும்...

ஆகாயத்திலிருந்து ஒன்றும் – ‘திடுதிப்’பென்று குதித்த நகரமல்ல டெல்லி! என்றோ முன்னாளில் டெல்லியும் ஒரு பொட்டல்காடாகத்தான் இருந்திருக்க வேண்டும். அப்போதைய வரலாற்றுக் குறிப்புகள் இன்று ஏதும் இல்லை. மகாபாரதத்தில் டெல்லியைப் பற்றி வருகிறது - ‘இந்திரப்பிரஸ்தா’ என்ற பெயரில் பாண்டவர்கள் யமுனை நதிக்கரையில் உருவாக்கிய ஊர் அது என்று. டெல்லியருகே சில ஆண்டுகளுக்குமுன் தோண்டி எடுக்கப்பட்ட பொருட்கள், கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாண்டவர்கள் ஆட்சிக்குப் பிறகு டெல்லியில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. கி.மு.-வில் வந்த மெகஸ்தனீஸ், ஹுவான்சுவாங் போன்ற புகழ்பெற்ற வேற்றுநாட்டுப் பயணிகள்கூட டெல்லியைப் பற்றி ஏதும் தாங்கள் எழுதிய விவரங்களில் குறிப்பிடவில்லை.

முறையாக எழுதப்பட்ட வரலாற்றின்படி கி.பி.736-ல் டெல்லியை ஒரு ஊராக உருவாக்கி உருப்படியாக உட்கார்ந்து ஆட்சிபுரிந்தவர்கள் தோமார் என்று அழைக்கப்பட்ட ராஜபுத்திரர்கள்தான்.. அப்போது அந்த ஊருக்கு வைக்கப்பட்ட பெயர் தில்லிகா. ஆரம்பத்தில் (தற்போதைய) ஹரியானா பகுதியில் வாழ்ந்து வளர்ந்த இந்த ராஜபுத்திர வம்சத்தின் புகழ்பெற்ற மன்னன் ஆனங்பால். இன்று குதுப்மினார் உள்ள பகுதியில்தான் லால்கோட் (சிவப்புக் கோட்டை) என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் பெரும் கோட்டையை ஆனங்பால் கட்டினான். அந்தக் கோட்டைக்குள் நுழைய ஒன்றுக்கு மேற்பட்ட வாயில்கள் இருந்தன. பிரதான வாயிலில் இருபுறமும் கல்லில் செதுக்கப்பட்ட பெரிய சிங்க பொம்மைகள் ‘காவல்' புரிந்தன! பிரச்னைகளுடன் வரும் மக்கள், மன்னனின் உதவியை நேரடியாக நாட வசதியாக வாயிலில் பெரும் மணி ஒன்றும், அதில் ஒலியெழுப்ப நீண்ட கயிறும் இருந்தன. கோட்டைக்குள் மையத்தில், படமெடுக்கும் நாகப்பாம்பின் சிலையைப் பெரும் பீடமாக்கி (இந்துக்களின் புராணப்படி பூமியை ஆதிசேஷன் தாங்குவதால்...!) அதன்மேல் வானுயர்ந்த ஸ்தூபி ஒன்றையும் கட்டினான் ஆனங்பால் மன்னன்.

இன்று... மூன்று மீட்டர் அகல வெளிக் கோட்டைச் சுவரின் சிதிலமான பகுதிகளையும் ஓரிரு சிதைந்த வாசல்களையும்தான் நம்மால் காண முடிகிறது. குதுப்மினார் உள்ள பகுதிக்குள் தற்போது காணப்படும் இரும்புத்தூண், ஆனங்பால் நிறுவிய ஸ்தூபி அல்ல. நான்காம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த இரும்புத்தூணின் பின்னணி வேறு. 99.72 சதவிகிதம் சுத்த இரும்பினால் உருவாக்கப்பட்ட இந்த ஸ்தூபி, சுமார் 1600 ஆண்டுகளாகத் துருப்பிடிக்காதது ஒரு அதிசயம்! கி.பி. 385-லிருந்து 415 வரை வட இந்தியாவை நெடுக ஆண்ட இரண்டாம் சந்திரகுப்தர் நினைவாக அமைக்கப்பட்ட ஸ்தூபி இது என்றும், அதன் உச்சியில் விஷ்ணுவின் வாகனமாகிய கருடனின் சிலை ஒன்று முன்பு இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். வேறு ஊரிலிருந்து பிற்பாடு குதுப்மினார் பகுதிக்கு இந்தத் தூண் கொண்டுவரப்பட்டது. கருடன் சிலை போன இடம் யாருக்கும் தெரியவில்லை!

தோமார்கள் ஆட்சியமைத்து சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு செளகான் ராஜபுத்திரர்கள், தோமார் ராஜபுத்திரர்களை வென்று டெல்லியைக் கைப்பற்றினார்கள். இந்த வம்சத்தில் கடைசியாக வந்த புகழ்பெற்ற மன்னன்தான் 'சம்யுக்தை' புகழ் (மூன்றாம்) பிருத்விராஜ்.

கன்னோசி நாட்டு மன்னன் ஜெயச்சந்திரனின் மகள் சம்யுக்தையை அவன் காதலித்ததும், அவளுடைய சுயம்வரத்துக்குத் தன் எதிரியான பிருத்விராஜுக்கு ஜெயச்சந்திரன் அழைப்பு அனுப்பாமல் அலட்சியம் காட்டியதும், சுயம்வர வாயிலில் பிருத்விராஜ் போன்று ஒரு சிலையைச் செய்து வாயிற்காப்போன் போல அதை நிற்கவைத்ததும் நமக்குத் தெரிந்த விஷயம்! இது கேள்விப்பட்ட பிருத்விராஜ், புயலாகப் புரவியில் பாய்ந்து சம்யுக்தையைக் கடத்திச்சென்றது (அவள் ‘ஓகே’ சொன்ன பிறகுதான்!) பள்ளி மாணவர்களுக்கும் தெரிந்த உணர்ச்சியூட்டும் காதல் வரலாறு!

சுமார் கி.பி. 1000-லிருந்தே மங்கோலியர்களும் துருக்கியர்களும் இரானியர்களும் ஆப்கானியர்களும் இந்திய எல்லையில் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டதால், மன்னன் பிருத்விராஜ் தன் கோட்டையை ஏற்கெனவே மேலும் பலப்படுத்தியிருந்தான். கோட்டையின் சில பகுதிகளில் புதிதாகத் தற்காப்புச் சுவர்கள் எழுப்பினான். இருப்பினும் பிருத்விராஜ் மன்னனின் ஆட்சியும், காதல் வாழ்க்கையும் நெடுநாள் நிலைக்கவில்லை. லட்சியக் காதலர்கள் வெற்றிகரமாகத் திருமணம் செய்து கொண்டுவிட்டது கண்டு பொறுக்காமலோ என்னவோ, விதி வில்லனுக்கு உதவியது. ஆப்கானிஸ்தானிலிருந்து படையோடு வந்து சேர்ந்த வில்லன் முகமது கோரிக்குச் சம்யுக்தை என்ற பெண் தேவைப்படவில்லை. அவன் விரும்பியது இந்திய மண் - குறிப்பாக டெல்லி!

‘மாற்றானிடம் மண்டியிடக்கூடாது’ என்று வீர முழக்கம் செய்த பிருத்விராஜ், தனியாகப் பிரிந்து நின்ற ராஜபுத்திரக் குறுநில மன்னர்களை மிகக் குறுகிய காலத்துக்குள் ஒன்றுசேர்த்தான். கோரியை எதிர்கொள்ள ராஜபுத்திரப்படை ஓங்கிய வாட்களுடன் தயாரானது.

1191-ம் ஆண்டு கடைசியில், டெல்லி அருகே நடந்த யுத்தத்தில் ராஜபுத்திரர்களின் படையின் வீரத்துக்கும் ஆவேசத்துக்கும் முன் தடுமாறித் தோற்று ஓடியது ஆப்கான் படை.

இந்தத் தோல்வியைச் சற்றும் எதிர்பார்க்காத முகமது கோரி கோபத்தில் கொந்தளித்தான். சில மாதங்களுக்குள் மேலும் ஒரு பெரும்படையுடன் பஞ்சாப் மாநிலத்தைக் கடந்து டெல்லியை நோக்கி முன்னேறினான். இந்த முறை, புதிதாக, 10,000 வில்லேந்திய முரட்டுத்தனமான ஆப்கான் குதிரை வீரர்கள், கோரியின் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தார்கள்.

மறுபடியும் யுத்தம்... வருவதோ, பலம் கூட்டப்பட்ட பெரும்படை.. பிருத்விராஜுக்கு ஒரு முக்கிய இடத்திலிருந்து மட்டும் உதவி கிட்டியிருந்தால் இந்திய வரலாறு மாறியிருக்கும்தான்! தன் மகளை ‘இழந்த' அவமானத்தால் இன்னமும் மருகிக்கொண்டிருந்தான் கன்னோசி மன்னன் ஜெயச்சந்திரன். செல்வாக்கும் படைபலமும் கொண்ட மாமனாரின் உதவி மருமகனுக்குக் கிட்டவில்லை. மருமகனும் உதவி கோரவில்லை. விளைவு - வில்லனுக்குச் சாதகமாகப்போனது!

1192-ல் நடந்த இரண்டாவது யுத்தத்தில் ஆப்கானியப் பெரும்படையின் குள்ளநரித்தனமான கொரில்லாத் தாக்குதலுக்குமுன் நேரடிப் போர் புரிந்த ராஜபுத்திரர்களின் படை களைத்துப் போனது. கடைசிவரை வாளைச் சுழற்றி எதிரிகளை வீழ்த்திய பிருத்விராஜை, ஏராளமான எதிரிகள் சூழ்ந்துகொண்டு சிறைப்படுத்தினார்கள். விலங்கிட்டு ஆப்கான் சுல்தானின்முன் நிறுத்தினார்கள். ‘முதல் யுத்தத்தில் நம்மை மண் கவ்வ வைத்த அந்த ஆபத்தான வீரன் இவன் தானா?’ என்ற நினைப்பு பகீரென மனதில் ஊடுருவியதோ என்னவோ... முகமது கோரி ஆணையிட, கம்பீரமாக நின்ற அந்த நிராயுதபாணியான ராஜபுத்திர வீரனின் தலை இரக்கமேயில்லாமல் உடனடியாக வெட்டி வீழ்த்தப்பட்டது.

ஆம், ரத்தச்சேற்றில் கிடந்த ஆயிரக் கணக்கான ராஜபத்திர மாவீரர்களின் உயிரற்ற உடல்களைத் தாண்டித்தான் முகமது கோரியின் படை டெல்லிக்குள் வெற்றிப் பிரவேசம் செய்ய முடிந்தது!

அரண்மனைக்குள் பிரவேசித்த அந்த அந்நிய நாட்டு மன்னன் திகைத்துப் போனான். அங்கே ராணி சம்யுக்தையும் நூற்றுக்கணக்கான புத்திரப் பெண்களும் தீக்குளித்து, தங்கள் மறைந்த கணவர்களுடன் ஏற்கெனவே வீர சொர்க்கம் புகுந்திருந்தார்கள்.

கன்னோசி மன்னன் ஜெயச்சந்திரனையும் முகமது கோரி விட்டுவைக்கவில்லை. கன்னோசி தரைமட்டமாக்கப்பட்டது. ஜெயச்சந்திரனும் கொல்லப்பட்டான். “என்னதான் மனஸ்தாபம் இருந்திருந்தாலும் மருமகனின் உதவிக்கே போகாத இந்தத் துரோகி இன்னும் ஆபத்தானவன்... தீர்த்துக்கட்டுங்கள் இவனை!” என்று ஆப்கான் மன்னன் குற்றம் சாட்டிவிட்டுக் கொன்றானா என்று தெரியவில்லை!

சில நிமிடங்கள் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது…

இந்திய வீரர்களுக்கு என்ன குறைச்சல்? முன்னேறிய நாகரிகம், மதிநுட்பம் வாய்ந்த அமைச்சர்கள், படைபலம், முறையான போர்த் திட்டம்... எல்லாம் இருந்தும் ஏன் அந்நியப் படையெடுப்பின்போதெல்லாம் வெற்றிகளைவிடத் தோல்விகளை இந்தியர்கள் தழுவ நேர்ந்தது?

சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இதற்குச் சுவையான, பரிதாபமான பல காரணங்களைக் கூறுகிறார்கள்.

(தொடரும்)