ஹாய் மதன் கேள்விகளுக்கு
www.vikatakavi.in/haimadhan
கே.ஆர். உதயகுமார், சென்னை-1.
வெங்காயம் விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறதே?
உங்கள் கேள்வியை படித்தவுடனேயே எனக்கு கண்ணீர் வருகிறது. ஏன் இப்படி பண்றீங்க?!
“நவோதயா” செந்தில், புதுச்சேரி.
ஒருவழியாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டதே!. நடத்தி விடுவார்களா? அல்லது நடத்த விடுவார்களா?
இந்தியாவில் எல்லாமே 'நடந்துவிட்டால் தான்' உண்டு!
மா .உலகநாதன், திருநீலக்குடி.
மாணவிகளின் தற்கொலைப் பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறதே?
மாணவிகள் சென்சிடிவ் ஆக வளர்கிறார்கள். பெற்றோர் கவனம் குறைச்சல். மாணவிகள் தங்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறார்கள். ஆண்களை விட பெண்கள் இன்னும் ஆழமாக உணர்ச்சிகளை கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அறிவும் அதிகம். தற்கொலை செய்து கொள்ள கொஞ்சம் அறிவு தேவை!
கே.ஆர். உதயகுமார்., சென்னை-1
ஜேம்ஸ்பாண்ட் நடிகர்களில் தங்களைக் கவர்ந்தவர் யார்?
ஷான் கானரி, மற்றும் டேனியல் க்ரெய்க். ஜேம்ஸ் பாண்டுக்கு ஒரு பர்சனாலிட்டி, கேரிஸ்மா தேவை. அது இவர்கள் இருவரிடமும் இருக்கிறது.
பாரதி சேகர், ஹுப்பள்ளி.
தண்டனையை உறுதி செய்த பின்னும் அதனை நிறைவேற்ற ஏன் இவ்வளவு காலதாமதம் ஏற்படுகிறது?
அநேகமாக எல்லா (ஜனநாயக) நாடுகளிலும் இது நிகழ்கிறது. அமெரிக்காவில் 'Death Row' என்று உண்டு. அதாவது மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் சில ஆண்டுகள் இருப்பவர்கள்.. உயிரோடு வைத்திருந்தால் ஏதேனும் நிகழக்கூடும். அவர் நிரபராதி என்று தெரிய வரலாம். இறக்கப் போகிறார். இன்னும் ஓரிரு ஆண்டுகள் வாழ விடலாமே என்கிற காரணமும் இருக்கலாம். ஆனால் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு அந்த நேரம் பறந்து போய் விடுவது போல இருக்கும்.
“நவோதயா” செந்தில், புதுச்சேரி.
இதுபோன்ற நமது செயல்கள்தான் உலகரங்கில் நம் நாட்டைப்பற்றி தலைகுனிய வைக்கின்றது என மதனார் எந்தச் செயலை குறிப்பிட விரும்புகின்றார்?
பாலியல் பலாத்காரக் கொலை. குறிப்பாக குழந்தைகளைக் கொல்வது. மற்றும் Mob Lynching (கும்பல் கொலை).
முருகானந்தம், சேலம்.
ராதா ரவியையும், நமீதாவையும் கட்சியில் சேர்த்ததால் பாஜாகா தமிழகத்தில் வளருமா?
பாஜக வளராததால் தானே இப்படியெல்லாம் செய்கிறார்கள்!
கே.ஆர். உதயகுமார்., சென்னை-1
ப. சிதம்பரம் ஒரு வழியாக ஜாமீனில் வெளியே வந்து விட்டாரே?
அவருக்கு முன்பே ஜாமீன் கொடுத்திருக்கலாம். ‘டார்ச்சர்’ பண்ணிவிட்டார்கள்.. அது பழைய பகை?!
பாரதி சேகர், ஹுப்பள்ளி.
பெண்கள் பாதுகாப்பில் மீடியாவின் பங்களிப்பு என்ன?
திட்டம் போட்டு எதுவும் செய்யவில்லை.. மீடியாவுக்கு கருணை கொஞ்சம் குறைச்சல். நியூஸ் தான் முக்கியம் என்பதை சற்று வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏன் வருத்தத்துடன்? என்றால் நானும் ஒரு ஜர்னலிஸ்ட்!
“நவோதயா” செந்தில், புதுச்சேரி.
கார்த்திகை தீபத் திருவிழாவை மதனார் எப்படி (சிறுவயதில்) கொண்டாடினார், எப்படி (தற்போது) கொண்டாடுகின்றார்?
சிறுவயதில் நாம் எல்லாவற்றிலும் ஈடுபடுத்திக் கொள்கிறோம். ஆர்வமும். க்யூரியாஸிட்டியும் தான் காரணம். நானும் விளக்குகளைக் கொண்டு போய் வரிசையாக வைக்க உதவியிருக்கிறேன்!
ஹாய் மதன் கேள்விகளுக்கு
www.vikatakavi.in/haimadhan
மகேந்திரன், பெங்களூர்.
எல்லாவற்றிலும் ஜாதி பாற்பது மக்களா, அரசியல்வாதிகளா? உதாரணம் ஜாதி சுவர் இடிந்து 17 பேர் பலி.
மக்கள்தான். அரசியல்வாதிகள் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஜாதியை ஒழிக்க முடியாது. உலகெங்கும் ஜாதி உணர்வு உண்டு. பெரிய கட்டுரை எழுத வேண்டியிருக்கும்!
கே.ஆர். உதயகுமார்., சென்னை-1
கர்நாடகா இடைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்க பணம் தரவில்லை என போராட்டம் நடத்தினார்களாமே?
இதுதான் ‘Habit’! பழக்கப்படுத்தி விட்டால் அப்படித்தான். மக்களும் குழந்தைகள் மாதிரிதான். தினம் சாக்லேட் கொடுத்து விட்டு ஒரு நாள் கொடுக்காவிட்டால் கூட ‘வீல்’ என்று அலறும்!
மாதவன், சென்னை.
‘மனிதனுக்குள் மிருகம்’ எழுதியவர் நீங்கள். பலாத்காரம், எரித்து கொலை என பல சம்பவங்களை கேட்கும் பொழுது நெஞ்சம் பதறுகிறது. இதனை பற்றி உங்கள் பார்வை, இதனை எப்படி தடுப்பது?
மனிதனுக்குள் மிருகம்! தலைப்பே காரணத்தை சொல்லி விடுகிறதே. இதுபற்றி உலகெங்கும் ஆராய்ச்சிகள் செய்து வருகிறார்கள். பல காரணங்களைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இதைத் தடுக்க முடியாது. மிருகம் ‘ஜீன்ஸ்’லேயே இருக்கிறது என்பது சில ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
“நவோதயா” செந்தில், புதுச்சேரி.
நிலவில் விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை ஒரு தமிழர் கண்டுபிடித்துள்ளாரே, இது குறித்து.
உலகம் முழுக்க கண்டுபிடிக்க முடியாமலிருக்கும் போது ஒரு தமிழர் கண்டுபிடித்தது பெருமை தானே. நாம் வீட்டில் தொலைத்த ஒரு பொருளையே தேட சிரமப்படுகிறோம்!
பாரதி சேகர், ஹுப்பள்ளி.
இன்னும் அதிக அளவில் காவல் நிலையம், நீதிமன்றம், நீதிபதிகள் அமைக்க என்ன தடையாக இருக்கிறது?
செலவு தான்! இவ்வளவு பேருக்கு இவ்வளவு காவல் நிலையம் என்று கணக்கெல்லாம் இருக்கிறது. இந்தியாவில் குறைச்சல். வழக்குகளைப் பாருங்கள். ஒவ்வொரு நீதிபதியிடமும் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் தேங்கியிருக்கின்றன. குறைச்சலான நீதிபதிகள் தான் காரணம். ஆனால் என்ன அதிகரித்தாலும் குற்றங்கள் குறையாது. ஒவ்வொரு குற்றத்துக்கும் காரணம் இருப்பதுதான் காரணம்!
மா .உலகநாதன், திருநீலக்குடி.
பாக்கியராஜ் பெண்களின் கற்பு பற்றி பேசி எசகு பிசகா மாட்டிக்கிட்டாரே?
கருத்துக்கள் சரியாக இருந்தாலும் அதைச் சொல்கிற விதம்தான் முக்கியம். அதில் பாக்கியராஜ் கொஞ்சம் கோட்டை விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன்!
“நவோதயா” செந்தில், புதுச்சேரி.
“இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்கிற திருக்குறளுக்கு மிகவும் பொருத்தமானவர் இவர் என்று மதனார் யாரைக் கருதுகின்றார்? என்ன காரணத்திற்காக?
மறைந்த சேஷன்!
ஹாய் மதன் கேள்விகளுக்கு
www.vikatakavi.in/haimadhan
Leave a comment
Upload