பொது
மக்கள் கொண்டாடிய என்கவுண்டர்! - தில்லைக்கரசி சம்பத்

20191106173637541.jpg

டிசம்பர் 6 அப்போதுதான் புலர்ந்திருந்தது.. நடு ராத்திரி 2 மணி அளவில் தெலுங்கானா மாவட்டம் சாதன் பள்ளி என்ற இடத்தில் அந்த ஆளரவமற்ற பாலத்தின் அருகில் சில காவல் வாகனங்கள் அதிகம் சத்தமில்லாமல் மெதுவாக ஊர்ந்து வந்து நின்றன..சென்ற வாரத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொன்ற லாரி டிரைவர் பாஷா காதர் மற்றும் நவீன் என்ற ஓட்டுனர்களையும், கேசவலு மற்றும் சிவா என்ற க்ளீனர்களையும் வண்டியிலிருந்து இறக்கி சம்பவ இடத்திலேயே வைத்து விசாரித்துக் கொண்டிருந்தனர். அத்தருணத்தில் குற்றவாளிகள் என சொல்லப்பட்ட அந்த நால்வரும் திடீரென போலீஸாரை துப்பாக்கி மற்றும் கற்களால் தாக்கி தப்பிக்க முயல...அவர்களை அங்கேயே என்கவுன்டர் செய்கிறது தெலுங்கானா போலீஸ்!

2019110617370766.png

இச்சம்பவம் வெள்ளியன்று காலை 8 மணி வாக்கில் பரவ ஆரம்பிக்க... இந்தியா முழுவதும் மக்கள் மகிழ்ச்சியுடன் அந்தப் பெண் மருத்துவரின் கொலை செய்தியால் புண்பட்டிருந்த மனதிற்கு சிறிது ஆறுதல் மருந்து பூசிக்கொண்டார்கள்...


மேலும் சம்பவம் நடந்த இடத்தில் சிறிது நேரத்தில் 2000-க்கு மேற்பட்ட பொதுமக்கள் கூடி போலீஸுக்கு ஆதரவாக பட்டாசு வெடித்து, அவர்கள் மேல் பூக்கள் தூவி அவர்களை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு ஏகத்துக்கும் கொண்டாடினர்.

20191106173722231.jpg

நரகாசுரன் இறப்பிற்கு தீபாவளி கொண்டாடுவது போல் தெலுங்கானாவில் மக்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டிக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டார்கள். காலையிலேயே எல்லா தொலைகாட்சி செய்தி நிறுவனங்கள் ப்ரேக்கிங் நியூஸாக இச்செய்தியினை வெளியிட ஆரம்பித்தனர்... பிரேமலதா விஜயகாந்த் போன்ற அரசியல்வாதிகள் இதை வரவேற்க, 'என்கவுன்டர் செய்தது தவறு' என்று கூறிய அருணன், கனிமொழி போன்றோரின் கருத்துகள் ஆச்சரியம் அளித்தன... இவர்களையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு மனித உரிமை செயல்பாட்டாளர் ஹென்றி திபேன்...


“இது ஜனநாயகத்திற்கு எதிரானது.. என்கவுன்டர் தவறு..” என வாதிட்டார்...

செய்தியாளர்கள்... “ஏன் அப்படி சொல்கிறீர்கள்..? இனி இப்படி குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயம் வரும் அல்லவா..??! சாமான்ய மக்கள் ஆதரவு கருத்துகளை கூறி வரவேற்கிறார்களே..!!” என வினவ...

20191107000600364.jpeg

“சாமானியன் கை தட்டி வரவேற்கிறார்கள் என்பதற்கெல்லாம் மதிப்பு கொடுத்துக் கொண்டு இருக்க முடியாது.. ...!” என்று கூறி... ஜனநாயகமும், சாமான்ய மக்களின் கருத்தும் வேறு வேறு என்ற அரிய கருத்தை உதிர்த்தார்.

அடுத்து கருத்து சொன்ன அ.மார்க்ஸ் (மனித உரிமை செயற்பாட்டாளர்) இந்த என்கவுண்டரை கடுமையாக கண்டனம் தெரிவித்ததோடு, இதை செய்த போலீஸாரை சஸ்பெண்டு செய்து அவர்கள் மேல் கொலை வழக்கு பதிய வேண்டும்.. எனக் கூறி, முதலில் பேசிய ஹென்றியையே, நல்லவர் என நினைக்கும் வண்ணம் அருமையான கருத்து தெரிவித்தார்.

இதைப் பார்த்த போது சில வருடங்களுக்கு முன் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏவில் நடந்த சம்பவம் ஒன்று ஞாபகம் வந்தது.. அங்கே ஒரு நாள் மாலையில் மைதானத்தில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் இளைஞர்கள் என பலர் விளையாடிக் கொண்டிருந்த போது... வெறி பிடித்த பன்றி ஒன்று அங்குள்ளவர்களை துரத்தி துரத்தி கடிக்க ஆரம்பித்தது. பத்து இருபதுக்கும் மேற்பட்டவர்களை இரத்தம் சொட்ட சொட்ட கடித்தது. விரட்டினாலும் போகாமல் மேலும் வெறிகொண்டு எல்லாரையும் தாக்கி கொண்டிருந்தது... வெறி பிடித்த பன்றி ரேபிஸ் வந்த நாய்க்கு நிகரான ஆபத்து கொண்டது... அங்கே இருந்த இளைஞர்கள் அது மேலும் யாரையும் கடிக்காமல் இருக்க கையில் இருந்த கிரிக்கெட் பேட்டால் பன்றியை அடித்துக் கொன்றனர்... அப்புறம் என்ன நடந்தது என கேட்கிறீர்களா..? ப்ளூ க்ராஸ் அமைப்பினர் அப்பாவியான பன்றியை அடித்துக் கொன்றதாக ஓலமிட்டு, கடுமையான கண்டனம் தெரிவித்ததுடன் அந்த இளைஞர்களின் மேல் காவல் நிலையத்தில் பன்றியை அநியாயமாக கொன்றதாக வழக்கு பதிந்தனர். இந்த பைத்தியக்காரதனத்திற்கு ஈடாக இருக்கிறது இந்த மனித உரிமை ஆர்வலர்களின் கருத்துகள். நாடு முழுவதும் சிறு குழந்தைகளிலிருந்து வயதான பெண்மணிகள் வரை இத்தகைய பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். பல சமயங்களில் இவர்கள் கொல்லப்படுகிறார்கள். மனிதன் ஒரு பேசத்தெரிந்த மிருகம் என்று வருத்தத்துடன் நினைக்கும்போது...

20191106173750647.jpg


“யாரப்பாத்து மிருகம்னு சொல்ற..? என்னைக்காச்சும் நாலு மிருகங்க ஒன்னா சேர்ந்து இன்னொரு மிருகத்தை பாலியல் வன்கொடுமை செஞ்சு பெட்ரோல் ஊத்தி கொல்றதை பாத்திருக்கியா? பொறந்த குட்டியை எந்த மிருகமாவது இதே போல வன்புணர்வு செய்து சிதைச்சு சாவடிக்கிறதை பாத்திருக்கியா? எந்த மிருகமாவது அடுத்த மிருகத்தை தாழ்ந்த சாதினு சொல்லி தீண்டாமை சுவரை கட்டி, அவங்கள எல்லாம் ஒதுக்கி வைத்து பார்த்து இருக்கியா..? அப்ப என்னா மண்ணாங்கட்டிக்கு மனுசனை மிருகம்னு சொல்ற? இந்த பூமியில மனுசன் அளவுக்கு கொடூரமான உசுரு வேற எந்த இனத்திலும் கிடையாது... இன்னொரு தடவ கொடூர குற்றங்களை செய்யற மனுசனை மிருகம்னு சொல்லி மிருகங்களை அவமானப்படுத்தின..!!! ஒரு கட்டைய எடுத்து மண்டை மேல போடுவேன்... பாத்துக்க...” என்றபடி நம் மனசாட்சியே நம்மோடு கடுமையாக எதிர்த்து நின்று வாதிட்டது. யோசித்துப் பார்தால் அது உண்மையே... ஏன் மனிதன் இவ்வளவு கொடூரமானவனாக இருக்கிறான்?

20191106173821551.png

தெலுங்கானாவில் 2017-ல் மட்டும் 552 பாலியல் வன்கொடுமைகள் நடந்து இருக்கின்றன... நாடு முழுவதும் பார்த்தால் கணக்கு எங்கேயோ போகிறது... ஆண்கள் எல்லோரும் அவ்வளவு கொடூரமானவர்களா என்றால் கண்டிப்பாக இல்லை.. சில ஆண்கள் தான்.. உளவியல் ரீதியான ஆராய்ச்சியில் ஸ்வீடன் நாட்டு ஆய்வாளர்கள் இந்த கொடூர பாலியல் வன்முறைக் கொடுமைகள் தொடர்பான குற்றவாளிகளை ஆராய்ந்த போது, அவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் மதுவின் ஆதிக்கம்_ 9.3% , போதை மருந்து_3.9%, மனக் கோளாறு (personality disorder)_2.6% மற்றும் மனநோய் (psychosis)_1.7% என இவைகளை முக்கிய காரணிகளாக அவர்கள் கொண்டுள்ளதை கண்டறிந்துள்ளார்கள்.

Schizophrenia எனும் மனச்சிதைவு நோய் அல்லது அது சம்பந்தப்பட்ட மன நோய் இருந்தாலும் இம்மாதிரியான குற்றங்களில் ஈடுபட அதிக காரணிகளாக இருக்கின்றன என கூறுகிறார்கள். அறிவாற்றல் சிதைவு தவறுகள் எனப்படும் "Cognitive distortions errors" ஒரு ரேப்பிஸ்ட்டை தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கச் செய்கிறது...


இப்படி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குற்றவாளிகளை வெறும் சிறை தண்டனை மாற்றிவிடுமா என்பதே கேள்வி!! அவன் சிறையிலிருந்து விடுபட்டாலும் வெளியே வந்து, மீண்டும் இக்குற்றங்களை செய்ய மாட்டான் என்பது என்ன நிச்சயம்..?

பெண்களை ஒரு போகப் பொருளாக உருவகப்படுத்துவது இன்னொரு காரணி. இன்றைய ஆண்ட்ராய்டு காலகட்டத்தில் கையில் ஆளுக்கொரு தொலைபேசியை வைத்து கொண்டு சுற்றும் ஆண்களுக்கு தங்குதடையில்லாமல் ஃபோனில் ஆபாச நிர்வாண படங்கள் மற்றும் குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாச படங்கள் என பலவற்றை பார்ப்பதும் இம்மாதிரியான பாலியல் குற்றங்கள் நடைபெற முக்கிய காரணிகளாக இருக்கின்றன... சென்னைதான் இந்தியாவிலேயே அதிகமாக குழந்தைகளின் ஆபாச படங்கள் பார்ப்பதில் முதலிடமாம். இந்திய கலாச்சாரம், தமிழர் பண்பாடு, மண்ணு, மட்டை என்று சொல்லி கடைசியில எங்கே வந்து கேவலமாக நிற்கிறோம் பாருங்கள்..

20191106173838513.jpg

ஆபாச படங்கள் வருவதை இந்தியா முழுமைக்கும் தடை செய்ய வேண்டும். பூரண மது விலக்கை அமல் படுத்த வேண்டும் என்பது தொலைதூரக் கனவுகள். இப்போதைக்கு நம் சென்னை போலீஸ் அறிமுகம் செய்த காவலர் SOS என்ற செயலியை பெண்கள் தங்கள் செல்பேசியில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஆபத்து சமயங்களில் செல்பேசியை மூன்று முறை அசைத்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் போய்விடும். மற்றும் அருகில் சந்தேகப்படும்படி நெருங்கும் நபர்களிடமிருந்து தப்புவதற்கு கையில் பெப்பர் ஸ்ப்ரே, மிளகாய் தூள் வைத்திருப்பது போன்ற சமயோஜித முறைகளை.. சில அடிப்படை தற்காப்பு கலைகளை ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் பெண்களுக்கு சொல்லித் தருவதை நடைமுறைப் படுத்த வேண்டும்.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்.. ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது பழைய மொழி.. ஒருவர் நிரபராதியாக இருந்தாலும் பரவாயில்லை.. தொலைந்து போகட்டும்...!! ஆனால் அந்த ஒரு நிரபராதிக்காக இனி எந்த ஒரு குற்றவாளியையும் தப்பிக்கவிடக் கூடாது.... எரிந்து கரிக்கட்டையாக கிடந்த நிலையிலும் கால்கள் விரிந்தபடி கிடந்த ப்ரியங்காவின் சடலம் நமக்கு உணர்த்துவதெல்லாம், அவர் எத்தகைய கொடூரத்திற்கு ஆளாகி இறந்து போயிருப்பார் என்பதே!


கோவையில் இரண்டு குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டது, ஆந்திராவில் 9 மாத குழந்தை வன்புணர்வு செய்து கொல்லப்பட்டது, பொள்ளாச்சி பொறுக்கிகள் செய்த பாலியல் கொடூரங்கள்... பாலியல் வன்கொடுமை செய்த உபியின் கொடூர கொலைகார அரசியல்வாதியை எதிர்த்து வழக்கு போட்டு போராடிக் கொண்டிருந்த உன்னாவோ இளம் பெண், நேற்று குற்றவாளிகளால் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டு இன்று உயிருக்கே போராடி கொண்டிருக்கும் நிலை (இச்செய்தியை நீங்கள் படிக்கும் நேரம் அந்த இளம் பெண் இறந்து கூட போயிருக்கலாம்). இவை எல்லாம் பார்க்கும் போது, நம் தாய்த்திருநாட்டின் கண்மணிகளான பெண்ணினம், அடிமட்டத்து ஆண்களிலிருந்து சக்தி வாய்ந்த அரசியல்வாதிகள் வரை தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றனர் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

'இதே தப்பை பணக்காரன், அரசியல் கட்சிக்காரன் செஞ்சா அவங்களை தப்பிக்க விட்ருவீங்க..!' என்று குற்றவாளிகளுக்கு ஆதரவாக கேள்விகள் எழுப்பப்படுகின்றன... மக்களா அவர்களை காப்பாற்றுகிறார்கள்..???? பணக்காரனை பணமும், செல்வாக்கும், கட்சிக்காரனை கட்சிகளும் காப்பாற்றுகின்றன.. அவர்களுக்கு தண்டனை வழங்காமல் தப்பிக்க விட்டால் அது ஆட்சி நடத்தும் அரசின் தவறு... செல்வாக்கால் நூறு பேர் தப்பிக்கும் போது, இதுபோல் எந்த ஆதரவுமில்லாத அடிமட்ட சமுதாய குற்றவாளிகளை தண்டிப்பதின் மூலம் போலீஸும் மக்களும் சிறிது மனசாந்தி அடைவது உண்மையே... ஆனால் எவனாக இருந்தால் என்ன..??? கொடூர கொலைகள் செய்யும் அனைவருமே என்கவுன்டர் செய்யபடவேண்டும் என்பதே பொது மக்களின் ஏகோபித்த அபிப்பிராயம்.. அப்படியாவது இனி இம்மாதிரியான குற்றங்கள் வருங்காலத்தில் நிகழாமல் இருக்கட்டும்..


அத்தோடு 18 வயதுக்கு குறைவான குற்றவாளி என நிர்பயா வழக்கில் தையல் மிஷின் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நீதிவான்களே..!! ஒரு கொடூர குற்றத்தை செய்யும் அளவிற்கு அவன் வயது இருக்கும்போது, தண்டனையை மட்டும் ஏன் வயதுக்கு ஏற்றவாறு குறைத்து விடுதலை செய்கிறீர்கள்? சட்டத்தை திருத்துங்கள்.. குற்றத்தின் கொடூரத் தன்மைக்கேற்ற தண்டனைகள் தாம் கொடுக்க வேண்டுமே தவிர வயதுக்கேற்ற தண்டனைகள் அல்ல...

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு 7 வருடங்கள் ஆகியும் இன்னும் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை...


மத்திய அரசு தற்போது நிர்பயா பலாத்கார குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்த நிலையில், சீக்கிரம் நியாயம் கிடைக்கும் என நம்பப்படுகிறது...


நிர்பயா குற்றவாளிகள் திஹாரில் இல்லாமல் சைபராபாத் சிறையில் இருந்திருந்தால் கதையே இன்று வேறு...


ஆந்திராவில் இரண்டு இளம் பெண்கள் மேல் ஆசிட் வீசிய மூவரை 2008-லேயே என்கவுண்டர் செய்தவர், தற்போதைய சைபராபாத் காவல் ஆணையர் விசி சஜ்னார்.... நிர்பயா குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை விரைவில் நிறைவேற்ற முடியாவிடில் அவர்களை முடிந்தால் ஒரு முறை தெலுங்கானாவிற்கு அழைத்து வாருங்களேன்...


நேற்று நான்கு குற்றவாளிகளை என்கவுண்டரில் போட்ட பின்பு, சஜ்னாரின் துப்பாக்கியில் இன்னும் சில குண்டுகள் பாக்கி இருக்கின்றனவாம்..!