(இந்தக் கட்டுரை அடிக்கத் துவங்கி ஒரு வரி கூட ஆகவில்லை அதற்குள் நான்கு காமுகர்களும் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர் என்ற ஆறுதல் செய்தி.)
ஒரு நண்பரின் திருமணம் இந்தியாவில். ஹாங்காங் அலுவலகத்தில் இருந்து பலர் அந்த திருமணத்திற்கு இந்தியா செல்ல திட்டமிட்டனர்.
அந்த நண்பரின் நெருங்கிய சக ஊழியர் ஒரு சீனப் பெண் மட்டும் வரவில்லை என்றார். காரணம்..? இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று என் கணவர் சொல்லி விட்டார். அங்கேயெல்லாம் போகக் கூடாது என்று அனுமதி தரவில்லை என்றார். நீ நினைப்பது போல இந்தியாவில் விமான நிலைய வாசலில் பெண்களை காத்திருந்து யாரும் துரத்துவதில்லை என்று எவ்வளவோ வாதிட்டும் பயனில்லை.
இது நடந்தது நிர்பயா தில்லி சம்பவத்திற்குப் பின்.
அதன் ஆங்கார எழுச்சியும் அதைத் தொடர்ந்து எழுந்த விழிப்புணர்வும் நம் தேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியதா என்றால்... இல்லை, என்று தலை குனிந்து வெட்கத்துடன் ஓப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது.
அதுவும் மாற்றுத் திறனாளியை ஏமாற்றி வன்புணர்வு செய்த காமுகர்கள் இருக்கும் சென்னையும் சரி, பொள்ளாச்சியும் சரி, சமீபத்தில் கோவை பள்ளி மாணவி ஒருவர், வடக்கே ஆசீஃபா, தற்போது ஆந்திராவில் கால்நடை மருத்துவர் வன்புணர்வு செய்து கொன்றது வரை
தொடர்கதையாகவே இருக்கிறது. (இதிலேயும் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்ற சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது)
இதில் ஒரு சினிமா இயக்குனர், இனி பெண்கள் தங்களுக்கு பலாத்காரம் நடக்கும் போது போராடக்கூடாது அதை அனுமதிக்க வேண்டும், வன்கொடுமை தவறில்லை... ஆனால் கொலை செய்வது தான் தவறு என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார். கொலையை தடுக்க வேண்டும் தான். உண்மை. ஆனால் அதற்கு இப்படியா பெனாத்துவது???
வன்கொடுமையோ, கொலையோ, இது போன்ற குற்றங்களுக்கு சாதி சாயம் பூசுவதும், மதச் சாயம் பூசுவதும் எப்போதும் மதச்சார்பு இல்லை என்று சொல்லும் கூட்டம் தான் உண்மையில் பிரச்சினை. குற்றங்களை அதன் தன்மையிலேயே அணுக வேண்டும். இதற்கு மதமும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை.
பாலியல் வன்கொடுமை கேஸில் என்கெளண்டர் செய்து கொல்வதை வரவேற்கும் பொது மக்கள், இன்னொரு விஷயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தச் சட்டம், பட்டமெல்லாம் எளிய மனிதர்களைத்தான் உடனடியாக தண்டிக்கும். பொள்ளாச்சி விஷயம் போல பெரிய பணக்காரர்களோ அல்லது அரசியல்வாதிகளோ சம்பந்தப்பட்டிருந்தால் சட்டத்தின் கோணம் மாறும்.
இது ஒழிய வேண்டும். பணக்காரனோ, ஏழையோ, வயதானவனோ (ரோ என்ன வேண்டிக் கிடக்கிறது?) இளைஞனோ, எந்த மதத்தை சேர்ந்தவனானாலும், இயக்கத்தை சேர்ந்தவனானாலும் சட்டம் ஒரே போலத்தான் பாவிக்க வேண்டும். அப்படித்தான் சட்ட புத்தகத்தில் இருக்கிறது. நடைமுறையில் தான் இல்லை.
பாலியல் வன்கொடுமைக்கு பல்வேறு நாடுகளில் என்ன தண்டனை கொடுக்கிறார்கள்..?
அமெரிக்கா...
மாநில சட்டத்தில் அந்த குற்றம் வருகிறதா அல்லது தேசிய சட்டமா என்பதை பொறுத்தது. சில வருடங்கள் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படுகிறது.
ரஷ்யா...
மூன்று முதல் ஆறு வருடம் சிறை. ஒரு வேளை கடுமையாக காயப்படுத்தியிருந்தால் இருபது வருடம் வரை சிறைத் தண்டனை.
நார்வே...
(இப்படி சொகுசா சிறை இருந்தா என்ன புண்ணியம்??)
நான்கு முதல் பதினைந்து வருடங்கள் வரை சிறை. நார்வேயில் சிறைகள் சிறைகள் போலவே இருக்காதாம். சொகுசாக வேறு இருக்கும் என்று சொல்கின்றனர். (ரொம்ப அவசியம்?)
இஸ்ரேல்...
பதினாறு வருடங்கள் முதல் ஆயுள் தண்டனை வரை. இஸ்ரேலைப் பொறுத்தவரை சில அத்து மீறிய சில்மிஷங்களும் ரேப்பில் வந்து விடும்.
பிரான்சு...
பதினாறு வருடங்கள் அல்லது ஆயுள் தண்டனை. குற்றத்தின் வீர்யத்தை பொறுத்தது.
சீனா, வட கொரியா, ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா, எகிப்து, ஈரான்...
மரண தண்டனை...
இதிலும் குற்றங்குறை இல்லாமல் இல்லை. வடகொரியாவைப் பொறுத்தவரை இந்தச் சட்டத்தை பயன்படுத்தி, அரசுக்கு எதிராக இருக்கும் வேண்டாதவர்களையும் சந்தடி சாக்கில் போட்டுத் தள்ளி விடுகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
எகிப்து, ஈரான் போன்ற நாடுகளில் சாகும் வரை தூக்கிலுடுகிறார்கள்.
சவூதி அரேபியாவில் முச்சந்தியில் வைத்து லேசாக மயக்க மருந்து கொடுத்து ஒரே சீவாக தலையை சீவுகிறார்கள்.
மனித உரிமை கூட்டமெல்லாம் அங்கே மூச்சு விடப்படாது.
சீனாவில் நீதிமன்றங்கள் அந்த அளவுக்கு நம்பகத்தன்மையாக இல்லை. அங்கும் வேண்டாதவர்களை தீர்த்துக் கட்ட இந்தச் சட்டத்தை உபயோகிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால், சீனாவில் உடனடி தீர்ப்பு இருக்கும். குற்றம் நடந்ததாக தெரிந்தால் யார் என்னவென்று பார்க்காமல் தண்டனையை நிறைவேற்றி விட்டு அடுத்த வேலை பார்க்க போய் விடுவார்கள்.
இந்தியா...
உண்மையில் சட்டத்தில் ஆயுள் தண்டனை வரை கொடுக்க வழியிருக்கிறது. ஆனால் பெரும்பாலும் இதிலிருந்து தப்ப வாய்ப்பிருப்பதாகவே தோன்றுகிறது. அதிலும் சிறார் குற்றவாளியாக இருந்தால் ஜெயிலில் நன்றாக சாப்பாடு போட்டு வளர்த்து, வெளியே அனுப்பி தையல் கடை, பெட்டிக் கடையெல்லாம் வைத்துக் கொடுக்குமளவு சட்டத்தில் நம்மூரில் ஏராள ஓட்டைகள்.
நிர்பயா வழக்கில் வெளியே வந்த ஒரே குற்றவாளி. தென்னிந்தியாவில்தான் எங்கேயோ சமையல் வேலை செய்து கொண்டிருப்பதாக தகவல் !!
கோயம்புத்தூரில் நடந்த குழந்தைகள் மரணம் இன்னமும் நெஞ்சை விட்டு நீங்கவில்லை.
கருணை வேண்டுமாம்...
அப்போது சைலேந்திர பாபு கோயம்புத்தூர் எஸ்.பி என்று ஞாபகம். சேட்டு வீட்டு குழந்தைகள் இரண்டை கொடூரமாக கொன்ற இரண்டு பேரில் ஒருவனை என்கவுண்டர் செய்து கொன்றனர்.
அடுத்த நாள் மனித உரிமை கூட்டம் ஒரு ஊர்வலம் சென்றது. போலீஸ் கொடுமையை எதிர்த்து.
அன்றுதான் தமிழக பொது மக்களுக்கு ரோஷம் வந்து பார்த்தோம். ஊர்வலத்தை கல்லால் அடித்தே கலைத்தனர்.
அதில் இன்னொரு குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு தண்டனை கீழ் கோர்ட்டில் தீர்ப்பாகி, அதன் அப்பீல் ஹைகோர்ட்டுக்கு சென்று, பின்னர் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போய் இன்னமும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. காரணம் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பப்பட்டிருக்கிறதாம்.
கருணை என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லாமல் போய் விடும். அந்தப் பிஞ்சுக் குழந்தைகளை ஈவு இரக்கமில்லாமல் கொன்ற குற்ற உணர்ச்சி கொஞ்சமேனும் இருந்தால் இப்படி கருணை மனு அனுப்பவாவது தோன்றுமா..? புரியவில்லை.
மேற்கத்திய நாடுகளில் வன்புணர்வு இல்லாமல் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்ட சிவப்பு விளக்கு பகுதிகள் இருக்கிறது என்ற சிலர் வாதமும் குற்றக் கணக்கெடுப்பை பார்த்தால் தோற்றுப் போகிறது.
இருப்பினும் வளர்ந்து வரும் நாடுகளை விட சிவப்பு விளக்கு அனுமதிக்கப்பட்ட நாடுகளில் குற்றங்கள் குறைவாக இருப்பது உண்மை தான். (ஒரு தகவலுக்காக!)
(இன்று தெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொலை செய்து எரித்த இந்த நான்கு மிருகங்களும் சுட்டுக் கொல்லப்பட்டன)
முதல் வரியில் சொன்னது போல இன்னும் நாலைந்து என்கவுண்டர்களை செய்தால் தான் இப்படிப்பட்ட காமுகர்களுக்கு ஒரு வேளை பயம் வரக் கூடும்.
ஆனால், பாவம் என்கவுண்டர் செய்த போலீஸ்காரர்கள் தான் மேலதிகாரிகள் முதல், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகைகள் வரை பலருக்கு பதில் சொல்ல நேரிடும்.
குற்றத்திற்கு புல்லட்டுகளால் பதில் சொன்னவர்களுக்கு, இதற்கு பதில் சொல்லத் தெரியாதா என்ன!??
தொடரட்டும் பதில்கள். குற்றங்கள் நிற்கும் வரை!!!
Leave a comment
Upload