வடகிழக்கு மழையின் தாக்கம் ஞயிற்றுக்கிழமை அதிகமாக இருந்தது. இதில் நீலகிரி, குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் சற்று அதிகமாக இருந்தது.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை மேட்டுப்பாளையம் முழுவதும் பலத்த மழை. விடிய... விடிய கொட்டிக் கொண்டிருந்தது. நகராட்சிக்கு உட்பட்ட நடூர் என்ற அருந்ததியர் கிராமத்தின் குடியிருப்பை ஒட்டியுள்ள பெரிய தடுப்பு சுவர் தண்ணீரில் ஊறி குடியிருப்பின் மேல் சரிந்து விழுந்தது.
மழையின் தாக்கத்தை கூட உணராமல், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அத்தனை பேரும் இடிபாடுகளில் சிக்கி உயிர் இழந்தனர் என்ற அதிர்ச்சி தகவல் மேட்டுப்பாளையம் முழுவதும் பரவ... தீயணைப்புப்படை, காவல்துறை விரைந்து வந்து தரை மட்டமான வீடுகளின் மண் குவியலை ஜே.சி.பி. மூலம் அப்புறப்படுத்த... தோண்டத் தோண்ட.. பிணங்களைதான் எடுக்க முடிந்தது.
பதினேழு இறந்த உடல்களை எடுத்தவுடன், மேட்டுப்பாளைய வாசிகள் கொதித்துப் போய் சாலை மறியலில் ஈடுபட.. அந்த இடமே போராட்டக் களமாகியது. காவல்துறையினர் அப்பாவி பொது மக்களின் மேல் தடியடி நடத்தியது ஒரு மிருகத்தனமான செயல் என்கின்றனர்.
நடூர் கிராமத்தில் உள்ள துணிக்கடையின் பிரமாண்ட சுவர், இந்தக் குடியிருப்பை தொட்டாற்போல் மறைத்து கட்டப்பட்டு, அப்பாவி உயிர்களை காவு வாங்கியதை எவராலும் ஜீரணிக்க முடியவில்லை.
ஆனந்தன், அருக்காணி, சிவகாமி, குருசாமி, ஒப்பியம்மாள் ஆகிய ஐந்து குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த கொடூர விபத்தில் பரிதாபமாக இறந்தனர்.
மேட்டுப்பாளையத்தில் உள்ள சக்கரவர்த்தி துகில் மாளிகை சொத்தின் தடுப்பு சுவர் தான் இந்த பரிதாபத்தை நிகழ்த்தி விட்டது.
மாவட்ட நிர்வாகம், நகராட்சியிடம் இந்த சுவர் வலுவானது அல்ல... எப்பொழுது வேண்டுமென்றாலும் விழும் அபாயம் உள்ளது என்று புகார் மனுக்கள் கொடுத்தும், நிர்வாகம் காது கொடுத்து கேட்கவில்லையாம். காரணம் அந்த சுவர் பெரிய இடத்து சுவர் என்பதால் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது இந்த சோக சம்பவம்.
அமெரிக்கா, துபாய், குவைத் செய்திகளில் இந்த விபத்தை பற்றி மிகவும் வருத்தமாகவும் நகராட்சியின் அலட்சிய போக்கை சாடியுள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் நேரடியாக நடூர் வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, சம்பத்தப்பட்ட ஜூவுளி உரிமையாளரை கைது செய்யவும், முன் நடவடிக்கை எடுக்காத நகராட்சி அதிகாரிகளின் மேல் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சி தலைவரிடம் நேரடியாக போனில் பேசி சாடினார்.
அவரை தொடர்ந்து நம் முதல்வர் எடப்பாடியார் நேரில் வந்து ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை அறிவித்தார்.
முதல்வர் வருகிறார் என்றவுடன் போர்க்கால வேகத்தில் குண்டும் குழியுமான சாலைகள் தார் போட்டு செப்பனிடப்பட்டன. அவசரமாக டெங்கு தடுப்பு நிலவேம்பு கஷாயம் வலு கட்டாயமாக கொடுத்தது தான் அதிர்ச்சியான விஷயம். இதே வேகத்தில் முன் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சோகத்தை தவிர்த்திருக்கலாம்.
மேட்டுப்பாளையம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அருண்குமாரிடம் பேசியபோது, “எல்லாம் முடிந்த பின் என்ன சொல்வது? அந்தப் பகுதி மக்கள் பலமுறை நகராட்சி, மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் அந்தச் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தமான விஷயம். அநியாயமாக அப்பாவி மக்கள் உறக்கத்தில் இறந்து போனது வேதனையான ஒன்று. ஒரு சுவரை கட்டும் போது, நகராட்சி பார்வையிட வேண்டாமா.. அதை கட்டின மேசனுக்கு கூட மனசாட்சி இல்லையா... சரியான அடித்தளமே இல்லாமல் கற்களை மட்டும் அடுக்கி வைத்து இருப்பதை என்ன என்று சொல்வது?
எங்க தலைவர் நேரில் வந்து நடந்த சம்பவத்தை பார்த்த பின் மிகவும் மனம் உடைந்து விட்டார். தற்போது இங்கு எல்லாம் தலை கீழ். அரசு நிவாரணம் கொடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்... போன அப்பாவி உயிர்களை திரும்ப கொடுக்க முடியுமா?” என்றார்.
இந்த கோர விபத்து நடந்தவுடன், அந்த ஜவுளிக் கடையின் உரிமையாளர் சிவசுப்ரமணியம் தலைமறைவானார்.... அவரை முதல்வர் வருவதற்கு சற்று முன் கைது செய்தது போலீஸ்!
இந்த விபத்தில் பலியான நிவேதிதா மற்றும் ரங்கநாதன் ஆகிய சிறுவர்களின் கண்களை அவர்களின் தந்தை செல்வன் தானமாக கொடுத்ததுதான் பெரிய விஷயம் என்கின்றனர்.
இறந்த பதினேழு அப்பாவிகளின் உடல்களை உறவினர்களிடம் காவல்துறை ஒப்படைக்காமல் எரியூட்டி விட்டது என்று பலரும், பிரபல செய்தித்தாளும் குற்றம் சாட்டினார்கள்.
ஒரு நாளிதழ் செய்தியாளரிடம் பேசிய போது, “இறந்த உடல்களை கூராய்வு செய்த பின், அரசு மருத்துவமனையில் இருந்து எரியூட்டும் இடத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் சென்று உறவினர்களிடம் உடல்களை காட்டிவிட்டு தான் எரியூட்டினார்கள். ஏற்கனவே பொது மக்கள் ஆக்ரோஷத்தில் இருந்தார்கள். எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க காவல்துறை அப்படி ஒரு நடவடிக்கை எடுத்தார்கள். இறந்தவர்களின் வீடுகளே தரை மட்டமான பின் உடல்களை எப்படி அங்கு கொண்டு போகமுடியும் சொல்லுங்கள்” என்றார்.
உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியின் பக்கத்து ஊரில் நடந்த இந்த அத்து மீறல் அவருக்கு எப்படித் தெரியாமல் போனது என்ற கேள்வியும் மேட்டுப்பாளையத்தில் வலம் வருகின்றன.
இந்த விபத்தை ஏற்படுத்திய சுவரை ஜாதி சுவர் என்று கூறுகிறார்கள். இந்த நவீன காலத்தில் இப்படி ஜாதி வேற்றுமையை பார்க்கின்ற ஒரு ஜூவுளி கடை உரிமையாளர், தன் கடைக்கு உயர்ந்த ஜாதியினரை மட்டுமா அனுமதிக்கிறார் என்றும் கேட்கிறார்கள் இந்த பகுதி மக்கள்.
எது எப்படியோ வடகிழக்கு பருவ மழை ஒரு முழு சுவரை உட்கொண்டு பதினேழு பேர் உயிரை அநியாயமாக காவு வாங்கிவிட்டது!
Leave a comment
Upload