தொடர்கள்
முதன் முதலாய் - ஒவ்வொரு முதல் முயற்சியிலும் வெற்றி பெற - 12 - வேங்கடகிருஷ்ணன்

20191104105702300.jpg

கடலையை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் இருவரும். அப்போது அவர்களை நோக்கி ஒரு முதியவர் வந்தார். முகத்தில் அயர்ச்சி, சரியான சாப்பாடில்லை என்று தெரிந்தது. என் பேரன் வீட்டுக்கு போகணும் வழி தெரியல, கொஞ்சம் உதவி செய்யறீங்களா என்றார். குமார் உடனே எழுந்து போய் பக்கத்தில் இருக்கும் கடையிலிருந்து ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி வந்தான். அவரிடம் கொடுத்து குடிக்கச் சொன்னான். பக்கத்தில் வந்த சுண்டல் பையனை அழைத்து ஒரு பொட்டலம் சுண்டல் வாங்கி அவரிடம் தந்தான்.


குமார்: “சாப்பிட்டுக்கிட்டே பேசலாம், ரொம்ப களைச்சு போய் இருக்கீங்க.”


முதியவர்: “ஆமாம் பா, செங்கல்பட்டுலேர்ந்து வர்றேன், திருவொற்றியூர் போகணும், ஆனா தவறி போய் காந்தி சிலைகிட்ட இறங்கிட்டேன், ஏதோ ஞாபகம்”


கிருஷ்: “உங்க பேரன் வீட்டு விலாசம் வெச்சுருக்கீங்களா..?” என்றார்.


முதியவர் அதை காதில் வாங்கிக் கொண்ட மாதிரியே தெரியவில்லை, சுண்டல் சாப்பிடுவதில் கவனமாக இருந்தார். அவர் சாப்பிட்ட விதத்திலேயே பசி தெரிந்தது. அருகில் வந்த சைக்கிள் டீ காரரிடம் மூன்று டீ சொன்னான். அவருக்கும் கொடுத்து விட்டு இருவரும் எடுத்துக் கொண்டார்கள். ஊதி ஊதி குடித்தார். அது குடித்து முடியும் வரை அவன் எதுவும் பேசவில்லை.


முடித்த பின்பு அவர் பேசினார். இது தான் அட்ரஸ்... என்று ஒரு காகிதத்தை பையிலிருந்து எடுத்து கொடுத்தார். அதில் மொபைல் நம்பரும் இருந்தது. குமார் தன் மொபைலிலிருந்து அந்த எண்ணுக்கு பேசினான். பேசியது அவரின் பேரன் தான். அவருக்கு மன நிலை சரியில்லை என்றும் காது அவ்வளவாக கேட்காது என்றும் சொல்லி அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி விடச் சொன்னான். தான் பணம் கொடுத்து விடுவதாக சொன்னான்.


கிருஷ்ணமூர்த்தி சார் உடன் வர குமார், முதியவரை அழைத்துக்கொண்டு பீச்சை விட்டு வெளியே வந்து சாலையில் போன ஆட்டோ ஒன்றை நிறுத்தி விவரம் சொல்லி, போய்ச் சேர்ந்ததும் தனக்கு சொல்லும் படி சொல்லி அவர் நம்பரை வாங்கிக் கொண்டான். ஆட்டோ கிளம்பி சென்று விட்டது. அப்படியே அதையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தவன், திடீரென நினைவு வந்தவனாக கிருஷ்ணமூர்த்தி சாரைத் தேட, அவர் அருகிலிருந்த காவல் உதவி மையத்திலிருந்து வெளியே வந்தார்.


குமார்: “என்ன சார், போலீஸ் பூத்துலேர்ந்து வரீங்க. ஏதாவது கம்பளைண்ட் பண்ணீங்களா?” என்று கேட்டான்.


கிருஷ் : “அதெல்லாம் ஒன்னும் இல்ல, அந்த பெரியவர் ஏறின ஆட்டோ நம்பரை பதிவு பண்ணி, அவரை தொடர கேட்டுக்கிட்டேன். கண்ட்ரோல் ரூமுக்கு அந்த ஆட்டோ நம்பரை கொடுத்து செக் பண்ண சொல்லிருக்காங்க. தேவைப்பட்டா பேசுங்கன்னு சொல்லியிருக்காங்க” என்றார்..


குமார்: சார் சூப்பர் சார்... பதட்டப்படாம இருக்கீங்க, சிந்திச்சு செயல் படுறீங்க. உங்கள்ட்ட கத்துக்க நிறைய விஷயம் இருக்கு” என்றான்.


கிருஷ்: நீயும் சும்மா இல்ல பா, “இன்னும் உன் மனசுல கருணை, அடுத்தவங்களுக்கு உதவி செய்யணும்னு நினைக்கிற மனசு. சென்னைக்கு வந்தும் மாறாம இருக்கறதுக்கு, என்னோட வாழ்த்துக்கள்” என்று சொல்லி தொடர்ந்தார். “உன்னோட அந்த உதவி செய்யற குணம், அவரை பாத்தவுடனே, தண்ணி பாட்டில் வாங்கின பாரு, அந்த புத்தி சாதுர்யம், டக்குனு அங்க கிடைச்ச சுண்டலும் , டீயும் வாங்கி குடுத்த பாரு, நீ நின்னுட்ட.... சபாஷ்..!!”

குமார் சந்தோஷமானான்.


கிருஷ்: “இது உன்னோட மிகப்பெரிய பலம் / பலவீனம் கூட.....”


குமார்: “பலம் சரி, பலவீனம் எப்படி சார்?”


கிருஷ்: “இவர் வயதானவர் சரி, ஆனா இந்த மாதிரி பிரச்சனை பண்ற ஆட்களும் வருவாங்க. கொஞ்சம் யோசிக்கணும். அவசரப்படக்கூடாது. சிலர் நம்மகிட்டயிருந்து காசு வாங்கறதுலேயே குறியா இருப்பாங்க, அவங்கள தெரிஞ்சுக்கணும்.”


குமார்: “புரியுது சார்.”


கிருஷ்: “உன்னோட ஆபத்துக்கள் என்னனா 'ரொம்ப நல்லவனா இருக்கறது. ஈஸியா எல்லாத்தையும் நம்பறது, உணர்ச்சி வசப்படறது'. இதெல்லாம், உன்னோட குறைபாடுகள்ன்னு எடுத்துக்கிட்டாலும்... இதனால் உனக்கு ஆபத்துக்கள் வரும், நீ இதை ரொம்ப ஜாக்கிரதையா கையாளனும்.”


குமார்: புரியுது சார். வேற..


கிருஷ்: “நாம முன்னாடி ஆரம்பிச்ச சேமிப்பு, கல்யாணம் ரெண்டு பத்தியும் எதுவுமே தெரியாம உன் வாழ்க்கையை நீ தொடரணும்னு நினைக்கறியே அது ஒரு ஆபத்து... officeல இன்னும் மேல பதவி உயர்வு வேணும்ன்னு சொல்றியே, உன்னை வேலைல இருந்து தூக்க வாய்ப்புகள் அதிகம். அது உனக்கு தெரியுமா?”


குமார்: “என்ன சார் , அஸ்திவாரத்தையே ஆட்டுறீங்க...”


கிருஷ்: “ஆமாம், corporate உலகம் நிலை இல்லாதது, அதுல என்ன மாறுதல் நடந்தாலும் உடனே பாதிக்கப்படறது, கீழ் லெவல்ல இருக்கற employees தான். அதனால உடனே உன்னை நீ இன்னும் நல்லா qualify பண்ணிக்கணும்.”


குமார்: “அப்படின்னா நா என்ன பண்ணனும் சார்?”


கிருஷ்: உன் வேல சம்பந்தமா ஏதாவது கோர்ஸ் இருந்தா படிக்கணும், உதாரணமா நீ software programmerனா இன்னும் தேவைப்படற, உனக்கு தெரியாத ப்ரோக்ராம் language படிக்கலாம்... python மாதிரி... இது வெளில நல்ல instituteல சொல்லி தருவாங்க, படிச்சு முடிச்சு certificate வாங்கின உடனே, அதை உன் கம்பெனி HRக்கு copy கொடுக்கணும். உன்னோட சீனியர் கிட்டயும் சொல்லணும், அப்ப அது சம்மந்தப்பட்ட project வரும்போது உன்ன அதுல சேத்துப்பார். அப்புறம் அதுல உன் திறமையை காண்பிச்சு, நீ அடுத்த லெவெலுக்கு போகணும்.”

20191104105809463.jpg

குமார் தடாரென்று கிருஷ்ணமூர்த்தி சாரின் காலில் விழுந்தான். பதறிப்போய் அவனை தடுத்து தூக்கிய கிருஷ்ணமூர்த்தி சார், “என்னப்பா குமார் இது... எழுந்திரு, எழுந்திரு... இதெல்லாம் எதுக்கு பா...” அவர் கண்களும் குமாருடையதைப்போலவே கலங்கி இருந்தன.

பயணம் தொடரும்....