பொது
ஒரே ஆண்டில் 17000 ஆந்தைகள் பலி?! - ஆர்.ராஜேஷ் கன்னா

20191105123639759.png

இந்தியாவில் அதிகளவில் ஆந்தைகள் கொல்லப்படுகிறது.

ஆந்தைகள் விவசாயிகளின் நண்பன் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த பூனா சாவித்திரிபாய் பூலே பல்கலைகழகம், மகாராஷ்டிரா வனத்துறை, எலா ஹபிடட் என்ற தன்னார்வ நிறுவனம் சேர்ந்து நடத்திய ஆறாவது உலக ஆந்தை மாநாட்டில் கிடைத்த சுவாராசியமான தகவல்கள்….

ஆந்தைகள் அதிசய பறவையினத்தை சேர்ந்தது. ஆந்தைகளுக்கு பகலில் கண் தெரியாது, இரவில் அல்லது மங்கலான வெளிச்சத்தில் ஆந்தைகளுக்கு தூரப்பார்வை மிக துல்லியமாக தெரியும். ஆந்தைகள் தனது தலையை இரு திசைகளிலும் சட்டென்று முன்னும் பின்னும் திருப்பி தனது கண்கள் 270 டிகிரி வரை பார்க்கும் ஆபர்வ பறவை ஆகும்.

ஆந்தைகள் பொதுவாக காடுகளில் வசித்தாலும், தமிழகத்தினை பொறுத்தவரை அத்தனை கோயில் கோபுரங்களிலும் தங்கி தனது குடும்பத்துடன் இரவு நேரத்தில் கண்விழித்து தன் இரையை தேடுவதில் படு சுட்டியான பறவையினம். ஆந்தைகள் முழ இருட்டிலும் கூட ஒலி வரும் திசையில் பயணம் செய்து தனது உணவினை வேட்டையாடும் சிறப்பினை பெற்றுள்ளது.

20191105123714725.png

ஆந்தை சுமார் ஒன்று முதல் நான்கு கிலோ எடை வரை இருக்கும்.. ஆந்தையின் இறகுகள் மிகவும் மெலிதாக மென்மையாக இருப்பதால், இரவில் பறக்கும் போது சத்தமில்லாமல் தன் இரையை கண் இமைக்கும் நேரத்தில் லபக்கென்று பிடித்துவிடும் ஆற்றல் அவற்றுக்கு உண்டு. ஆந்தைகள் கூவுவதை வைத்து பழங்கால தமிழர்கள் சகுனங்களை அறிந்து, அதற்கேற்ப தங்கள் விவசாயம் முதல் தினப்பணிகளை செய்து வந்தனர். பஞ்ச தந்திர கதைகளில் ஆந்தைகள் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது.

ஆந்தைகளில் 133 வகைகள் இருக்கிறது என்றும். பெண் ஆந்தை ஆண் அந்தையைவிட எடை அதிகம் கொண்டது. ஒரு பெண் ஆந்தை 15 முட்டைகள் வரை இட்டு குஞ்சு பொறிக்கும். இந்தியாவில் ஆந்தைகளை கெட்ட சகுனமாக பார்க்கிறார்கள். ஆனால், மேலைநாடுகளில் ஞானத்தின் சின்னமாகவும், பல கல்வி நிறுவனங்களில் ஆந்தைகளின் உருவத்தினை எம்ப்ளமாக வைத்துள்ளனர்.

ஆந்தைகள் இரவு நேரத்தில் வயல்வெளிகளில் இருக்கும் எலிகள், வெட்டுக்கிளிகள், பல்லி, ஒணான், சுண்டெலிகள், புழு, பூச்சிகளை சாப்பிட்டு அழிப்பதால், விவசாயிகளின் நண்பனாக ஆந்தைகள் கொண்டாடப்படுகிறது. ஆந்தை ஒரு எலியை பிடித்து தின்றதும் சிறிது நேரத்தில் அதன் வாயிலிருந்து ஒரு உருண்டையை வெளியே உமிழம். ஆந்தை உமிழ்ந்த உருண்டையில் உண்ணப்பட்ட எலியின் ரோமங்கள், நகங்கள், எலும்புகள் மட்டுமே இருக்கும். எலியின் சதையோ அல்லது எலியின் ரத்தமோ ஆந்தை உமிழ்ந்த உருண்டையில் ஒரு துளி கூட இருக்காது. ஆந்தையின் ஜீரண மண்டலம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது அறிவியல் அறிஞர்களை வியப்பில் ஆழ்த்தும் விதமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யப்பட்டுப் போகிறார்கள்.

20191105123838454.png

வேதத்திலும் , மாய உலக கதைகளிலும் ஆந்தைகளுக்கென்று சிறப்பான இடமுண்டு. இந்தியாவில் இருக்கும் மந்திரவாதிகள், தனது கஸ்டமர்களுக்காக ஆந்தை யாகம் செய்கிறார்கள். ஒருவரை பிடிக்கவில்லை என்றால், அவரை பழிவாங்க வேண்டும் அல்லது எதிரிகளை அழிக்க ஆந்தை யாகம் நடு இரவில் துவங்கப்பட்டு... ஆந்தை ரத்தமும், . எலும்பும் யாக குண்டத்தில் இருக்கும் தீயில் பொசுக்கப்படுகிறது. யாகத்திற்கு பிடித்து வரப்படும் ஆந்தை முதலில் சுத்தி செய்யப்பட்டு, ஆந்தையை குளிப்பாட்டி நதிக்கரையோரம் வைத்து இரவு முழவதும் பூஜை செய்தபின், யாகத்தில் ஆந்தையின் உயிர் பலி கொடுக்கப்படுகிறது.

ஆந்தை யாகம் நடத்தும் மந்திரவாதிகளுக்கு இந்தியாவில் கடும் கிராக்கி நிலவி வருகிறது. ஆந்தை யாகம் வெளியே தெரியாமல் நடந்து முடிக்க, மந்திரவாதியும் அவரது கஸ்டமரும் கடும் பிரயத்தனப்படுகிறார்கள். ஆந்தையை இந்தியாவில் சட்டவிரோத காரியத்திற்கு பயன்படுத்தி கொன்றால், 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்பதால் போலீசுக்கும், வனத்துறைக்கும் தெரியாமல் இருட்டான இடத்தில் ஆந்தை யாகத்தினை மந்திரவாதிகள் பதுங்கி சத்தமில்லாமல் நிகழ்த்துகிறார்கள். மந்திரவாதிகள் எப்போது எப்படி ஆந்தையை பிடித்து தங்களது மந்திர சக்தி பூஜைக்கு பலி கொடுக்கிறார்கள் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.

வங்காள தேசத்தில் ஆந்தைகள் லட்சுமியின் வாகனமாக நம்பப்படுகிறது.வங்க தேசத்தில் தீபாவளியன்று கொண்டாடப்படும் காளி பூஜையில் ஆந்தைகளை பூஜை செய்து பலி கொடுக்கும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இந்தியாவில் தற்போது ஆந்தை வேட்டைக்காக பலர் காடுகளில் இரவு நேரத்தில் தங்கி ஆந்தைகளை பிடித்து வந்து ஒரு லட்சம் ருபாய் வரை விற்பனை செய்கிறார்கள். ஆந்தைகளை வாங்குவதற்கு மந்திரவாதிகள் ஆன்லைன் புக்கிங் கூட செய்வதாக தகவல்.

இந்தியாவில் மனதிற்கு பிடித்தவர்களை அடைய வசியம் அல்லது சூனியம் செய்வதற்கு மந்திரவாதிகள் ஆந்தைகளை கொண்டு வரச்செய்து, நடு இரவில் தன்னிடம் வரும் நபரின் தலையில் சுற்றி பலி கொடுக்கும் சடங்கினை நடத்துகிறார்கள். இதற்காக மரப்பொந்துக்களிலும், காடுகளிலும் அப்பாவியாக இரவில் இரை தேடும் ஆந்தையை லபக்கென்று பிடித்து பலி கொடுக்கிறார்கள்.

20191103160510202.jpg

உத்திரபிரதேச மாநிலத்தில் லஸ்காபூர் கிராமத்தில் இருந்த ஒரு சிவன் கோயிலை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோகேஸ் சர்மா விலை கொடுத்து சொந்தமாக வாங்கிக் கொண்டார். அரசியலிலும், பொருளாதாரத்திலும் எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என்று கனவு கண்டுக்கொண்டிருந்த காங்கிரஸ் பிரமுகர், ஊரில் இருந்த மந்திரவாதியை நாடினார். கோயில் கோபுரத்தில் இருக்கும் ஆந்தையை பிடித்து வந்து பூஜை செய்து பலி கொடுத்தால் அரசியலில் முன்னேற்றமும், பெரிய பதவியும், பொருளாதார நிலையும் உயரும் எனச் சொன்னார் மந்திரவாதி.

காங்கிரஸ் பிரமுகரும் மந்திரவாதி சொன்னபடி, சிவன் கோயிலில் இருந்த ஆந்தைகளை பிடித்து வந்து ஒரு தீபாவளியன்று அமாவாசை இரவில் தன் தலையை சுற்றி பூஜை நடத்தி ஆந்தையின் இரத்தத்தினை மந்திரவாதி சொன்னது போல் உடல் முழக்க பூசிகொண்டார். மறுநாள் காலையில், அரசியல் பிரமுகர் நடத்திய ஆந்தை பலி பூஜை ஊர்மக்கள் மத்தியில் பேசப்பட்டதும், பறவைகளை காக்கும் சமூக நல அமைப்பு அரசியல் பிரமுகர் மீது ஆந்தையை சட்டவிரோதமாக கொன்றார் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, வழக்கு பதிந்தனர். சில ஆண்டுகளாக நடைபெறும் ஆந்தையை கொன்ற வழக்கு அரசியல்வாதிக்கு எதிராக நிருபணம் ஆனால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.

கடந்த 2018-ம் ஆண்டு மட்டும் பில்லி சூனியம், மாந்திரீக வேலைக்கென்று மந்திரவாதிகளால் இந்தியாவில் இதுவரை 17000 ஆந்தைகள் கொல்லப்பட்டு இருக்கிறது என்று புள்ளிவிவரத்தினை உலக ஆந்தைகள் மாநாட்டிற்கு வந்திருந்த ஆந்தை ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

20191103161025980.jpg

இரவு நேரத்தில் பறந்து விவசாயிகளின் நண்பனாக திகழம் ஆந்தையை, மந்திரவாதிகள் பிடித்து சூனியம் மற்றும் மாந்திரீகம் செய்கிறோம் என்று பலி கொடுப்பதை தடுக்க, இந்தியாவில் முதல் ஆந்தை மாநாடு புனாவில் நடைப்பெற்றது என எலா அறக்கட்டளையின் இயக்குநரும் WOC India சதீஷ் பாண்டே தெரிவித்தார்.

ஆந்தைகள் தற்போது அழிவின் விளம்பில் இருக்கிறது. எனவே ஆந்தைகளை காப்பாற்ற அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஆந்தைகள் மாநாடு முதல்முறையாக இந்தியாவில் நடத்தினோம் என்கிறார் டிஸ்கவரி சேனலின் இணை அமைப்பாளரும் உலக ஆந்தைகள் மாநாட்டின் இயக்குநர் ஜேம்ஸ் டங்கன் தெரிவித்தார்.

20191103160936813.jpg

ஆந்தைகள் விவசாயிகளின் நண்பன்.. இனியாவது ஆந்தைகளை மூடநம்பிக்கையில் கொன்றுவிடாமல் பாதுகாப்போம் என்ற உறுதி மொழியோடு இந்தியாவில் முதல் உலக ஆந்தைகள் மாநாடு தீர்மானத்தினை இந்தியர்களுக்கு எச்சரிக்கை செய்தியாக சொல்லிவிட்டு முடிந்தது!!