சுவற்றில் மிகப்பெரிய ப்ளோஅப் தொங்கிக் கொண்டிருந்தது.
அந்த ப்ளோஅப்பில் ஒரு மரக்கிளையில் மாயக்கண்ணன் அமர்ந்து குழலூதிக் கொண்டிருந்தான். கீழே அவனைச் சுற்றி ஆயர்பாடி பெண்கள் மயங்கி நின்றிருந்தனர்.
மேஜையில் ஒரு புல்லாங்குழல் இளைப்பாறிக் கொண்டிருந்தது. அந்த புல்லாங்குழல் பிளாட்டினத்தால் செய்யப்பட்டு வைரங்கள் பதிக்கப்பட்டிருந்தன. அந்த புல்லாங்குழலிருந்து அமானுஷ்யம் வழிந்தோடியது.
அர்த்தநாரி அறைக்குள் பிரவேசித்தான். அவனுக்கு வயது 32. அவனது முகத்தில் ஆண்மையும் பெண்மையும் பாதிக்கு பாதி குடியிருந்தன. நடுவகிடு கேசம், கச்சித நெற்றி, காதலை வெளிப்படுத்தும் கண்கள், கத்தி போன்ற மூக்கு. ரோஜா அடித்த உதடுகள். நீள்கழுத்து. கழுத்தில் உத்திராட்சங்கொட்டை மாலை அணிந்திருந்தான். காதுகளில் கடுக்கன், உயரம் 175 செ.மீ. உடல் முழுக்க நீலநிறமாய் இருந்தான். பற்கள் முத்து போல் பிரகாசித்தன. வந்தவன் புல்லாங்குழலை தொட்டுக் கும்பிட்டான்.
அந்தப் புல்லாங்குழல் சாதாரண ராகங்களை இசைக்கும் புல்லாங்குழல் அல்ல. அதில் இசைக்கப்படும் ராகங்களை வெறும் மனித காதுகளால் கேட்க இயலாது, எல்லாமே அல்ட்ரா ஸோனிக் ராகங்கள். அர்த்தநாரியால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அல்ட்ரா ஸோனிக் ராகங்களை இசைக்க முடியும். கடற்கரை ஒரம் போய் நின்று ஒரு குறிப்பிட்ட அல்ட்ரா ஸோனிக் ராகத்தை அர்த்தநாரி வாசித்தான் என்றால் ஒரு டன் கடல் மீன்கள் வலையில்லாமல் கரைக்கு வந்து சிக்கும், அர்த்தநாரி இன்னொரு அல்ட்ரா ஸோனிக் ராகத்தை இசைத்தால் மழை வரும். அர்த்தநாரி இன்னொரு வகை அல்ட்ரா ஸோனிக் ராகத்தை இசைத்தால் வயல் அமோக விளைச்சல் காணும்.
அர்த்தநாரி புல்லாங்குழலை எடுத்து அரைமணிநேரம் வாசித்தான்.
“வணக்கம்!” கோரஸ் குரல்கள் கேட்டு கண் திறந்தான் அர்த்தநாரி. அவன் எதிரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குழுமியிருந்தனர்.
“வணக்கம்... யார் நீங்க?”
“நாங்க சென்னையின் செயற்கைகோள் நகரமொன்றில் வசிக்கிறோம். எங்கள் நகரத்தின் ஜனத்தொகை அம்பதாயிரம். எங்களது நகரத்தில் கொசு, கரப்பான், ஈக்கள் மற்றும் பல்லி தொல்லை தாங்க முடியல. நாங்களும் என்னன்னமோ மருந்துகளை அடிச்சு பாத்தம். பூச்சிகள் தொல்லை கூடுச்சே ஓழிய குறையல. நீங்கதான் ராகம் இசைச்சு அவைகளை அறவே ஒழிச்சு தரனும்!” முறையிட்டனர்.
விட்டால் அழுது விடுவார்கள் போல. சிலர் அர்த்தநாரியின் கால்களில் விழுந்து சேவித்தனர். சிலர் அர்த்தநாரியின் கைகளை பிடித்து முகத்தில் புதைத்துக்கொண்டனர்.
சிலநொடிகள் யோசித்தான் அர்த்தநாரி.
“உங்களை பாக்க பாவமாய் இருக்கிறது. வழக்கமாக நான் இது மாதிரியான சில்லரை வேலைகளை செய்வதில்லை!”
“அய்யா! நீங்க கொஞ்சம் கருணை காட்டுங்க. நீங்க என்ன கேட்டாலும் தரோம்!”
“நான் என்ன உங்க உயிர்களையா கேக்கப் போரேன். பத்து வருடம் நீங்க எல்லாம் கொசு, கரப்பான், பல்லி, ஈக்கள் பிரச்சனை இல்லாம இருக்க நான் உதவுரேன். அந்த உதவிக்கு நீங்க எனக்கு முப்பது இலட்சம் பிளாஸ்டிக் பணம் தரணும்... என்ன சொல்றீங்க?”
“பத்து வருஷத்துக்கு வேணாம்... அஞ்சு வருஷத்துக்கு எவ்வளவு கேக்றீங்க?”
‘‘இங்கு பேரம் கிடையாது. நான் சொன்ன பணத்துக்கு நீங்க ஒத்துக்கிட்டா நாளை காலை சூர்யோதயத்துக்கு முன்னாடி உங்க நகரத்துக்கு வந்து என் புல்லாங்குழலால் அல்ட்ரா ஸோனிக் ராகம் இசைப்பேன். இசைத்த மறுநொடி ஏற்கனவே இருந்த அனைத்த கொசு பல்லி ஈக்கள் கரப்பான் சுருண்டு செத்துவிழும். அதன்பின் அல்ட்ரா ஸோனிக் ஒலி அலைகள் உங்க நகரத்து காற்றுமண்டலத்தில் பத்து வருடம் தங்கி கொசு, ஈக்கள் பல்லி, கரப்பான் அற்ற சுற்றுப்புறத்தை பரிசளிக்கும். பத்து வருடங்களுக்கு கொசுவத்தி சுருளோ கிரீமோ கொசு, கரப்பான், பல்லி கொல்லிகளோ ஏதும் தேவையில்லை. எந்த பூச்சிகள் வசித்தாலும் அவை உங்க நகரத்துக்கு வெளியேதான் வசிக்கும்!”
“இந்த அல்ட்ரா ஸோனிக் ஒலி அலைகளால் மனிதர்கள் எங்களுக்கு கெடுதி எதாவது ஏற்படுமா?”
“ஏற்படாது!”
“கொசு ஈக்கள் கரப்பான் பல்லி வளர்வதற்கான சாதகமான சூழ்நிலைகள் எங்க நகரத்தில் தொடர்ந்தால்?”
“எந்த சாதகமான சூழ்நிலை இருந்தாலும் ஒரே ஒரு கொசு பல்லி கரப்பானை கூட பத்து வருஷத்துக்கு நீங்க உங்க நகரத்தில் பார்க்க முடியாது!”
“பத்து வருடங்களுக்கு பின்?”
“மீண்டும் நீங்கள் பணம் கொடுத்தால் அதற்கடுத்த பத்து வருடங்களுக்கு பல்லி, கரப்பான், கொசு வராத வண்ணம் அல்ட்ரா ஸோனிக் ராகம் இசைப்பேன்!”
ஊர்மக்கள் குதூகலித்தனர்... “ஹைய்யா... கேக்கவே பரமநிம்மதியா இருக்கு... நீங்க சொன்ன மாதிரி எல்லாம் நடக்குமா அர்த்தநாரி?”
“என்னை நம்புங்கள் என் அல்ட்ராஸோனிக் ராகங்களை நம்புங்கள்... எல்லாவற்றுக்கும் மாயக்கண்ணன் போதுமானவன்!”
வந்தவர்கள் விடைபெற்று சென்றனர்.
விடியற்காலை மணி நான்கு.
மின்காந்தக்காரில் போய் இறங்கினான் அர்த்தநாரி.
செயற்கைகோள் நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஃபைபர்பிளாஸ்டிக் சாலையில் நின்று கொண்டான்.
“கண்ணா! நான் மேற்கொண்டிருக்கும் இந்த காரியம் முழு வெற்றி பெற உதவிபுரிவாயாக!”
சூரியோதயத்துக்கு முன் அர்த்தநாரி புல்லாங்குழலை எடுத்து முத்தமிட்டான். புல்லாங்குழலிருந்து அல்ட்ரா ஸோனிக் ஒலிக்கற்றைகள் பாய்ந்து வளைந்து நெளிந்தோடின.
ஒரு மோனநிலையில் கண்கள் செருக புல்லாங்குழலை வாசிக்க ஆரம்பித்தான். ஊர்மக்கள் காதுகளில் எதுவுமே விழவில்லை. ஒரு ஊமைப்படம் பார்ப்பதுபோல ஊர்மக்கள் உணர்ந்தனர்.
அர்த்தநாரி மிகச்சரியாக நான்கு நிமிடங்கள் புல்லாங்குழல் வாசித்து முடித்தான். அவன் வாசித்து முடித்த மைக்ரோ நொடி சூரியன் உதித்தது. கிழக்குவானில் க்ளைடாஸ்கோப் வர்ணங்கள் கிளைத்தன.
சூரிய வெளிச்சத்தை பார்த்த நகரமக்கள் ஆனந்தமாய் விக்கித்தனர். எங்கு பார்த்தாலும் கொசுக்களும் கரப்பான்களும் ஈக்களும் பல்லிகளும் சுருண்டு சுருண்டு விழுந்து செத்துக்கொண்டிருந்தன. டன் கணக்கில் விழுந்த பூச்சி குப்பைகளை சேகரித்து எரிக்க ஆரம்பித்தனர்.
அர்த்தநாரி புல்லாங்குழலை இடுப்பில் செருகிக் கொண்டான்.
“நகரத்து மக்களே! மகிழ்ச்சியா? முப்பது லட்சம் பிளாஸ்டிக் பணம் எடுங்க!”
நகரத்து மக்கள் குயுக்தியாய் யோசித்தனர். தங்களுக்குள் கிசுகிசுப்பாய் விவாதித்துக் கொண்டனர். பின் நகரத்து மக்களின் ஒருவன் தொண்டையை செருமிக்கொண்டு முன்னே வந்தான்.
“புல்லாங்குழல் தம்பி! நாலுநிமிஷ வேலைக்கு முப்பதுலட்சம் பிளாஸ்டிக் பணம் மிகமிக அதிகம். உனக்கு முப்பது லட்சத்தை குடுத்துட்டு நாங்க சோத்துக்கு சிங்கி அடிக்றதா? காலை டிபனை சாப்ட்டுட்டு ஆயிரம் ரூபா கூலியை வாங்கிட்டு போ!”
அர்த்தநாரி நெற்றிக்கண்ணை திறந்தான். “மனிதப்பதர்களே! காரியம் முடிஞ்சதும் நன்றி கெட்டதனமா பேசுறீங்களா? உங்களை நான் என்ன செய்றேன்னு பாருங்க!”
நகரத்து மக்கள் கிண்டலாய் சிரித்தனர்.
“என்ன செய்வ? எங்களை அடிப்பியா? இல்ல வாசிச்ச அல்ட்ரா ஸோனிக் ராகத்தை வாபஸ் வாங்கப்போறியா?...”
நகரத்து மக்களில் சிலர், “சரி உங்களுக்கும் வேணாம் எங்களுக்கும் வேணாம்... அய்யாயிரம் பிளாஸ்டிக் பணம் வாங்கிட்டு போ!”
“நீங்க எந்தப் பணமும் தரவேண்டாம்... உங்களுக்கு தகுந்த பாடத்தை விரைவில் கற்பிக்கிறேன்!” கறுவிக்கொண்டே தனது இருப்பிடத்துக்கு திரும்பினான் அர்த்தநாரி.
அர்த்தநாரி நெற்றியில் விபூதி ஈஷி நடுவில் குங்குமம் பொட்டு வைத்திருந்தான். செயற்கைகோள் நகரத்துக்கு வெளியே இருந்த குன்றின் மேல் ஏறி ஒரு புது அல்ட்ரா ஸோனிக் ராகத்தை இசைத்தான்.
அவ்வளவுதான்...
மறு நானோநொடியில் அந்த செயற்கைகோள் நகரமே அல்லோல கல்லோலப்பட்டது. நகரின் திருமணமான பத்தாயிரம் பெண்களுக்கும் செவிகளும் நாக்குகளும் செயலிழந்து போயின.
பெண்கள் கதறி அழுதனர்.
தங்களது கணவர்மார்களை பிடித்து உலுக்கினர்.
நகரத்து ஒட்டுமொத்த ஆண்களும் ஊர்வலமாய் அர்த்தநாரியின் இல்லம் நோக்கி போயினர்.
புல்லாங்குழல் துவாரங்களுடன் விளையாடியபடியே அர்த்தநாரி வரவேற்றான்...
“மாற்றுத்திறனாளி மனைவிமார்களின் கணவர்மார்களே... வாங்கவாங்க?”
“எங்கள் மனைவிமார்களை செவிட்டு ஊமையாக்கியது நீதானா? என்ன காரியம் செய்தாய் இளைஞனே?”
“நன்றி மறந்த உங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கிட்டேன். இனி உங்க மனைவிமார்கள் நீங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க மாட்டார்கள். தேன்மதுர தமிழில் உங்களுடன் உரையாட மாட்டார்கள். கதறி அழுங்கள் மக்களே!”
“அய்யய்யோ... இனி நாங்க என்ன செய்வோம்?”
‘‘பதறுகிறீர்கள் இல்லையா? நல்லது! உங்க மனைவிமாருக்கு கேட்கும் திறனும் பேசும் திறனும் மீள எனக்கு நீங்க அம்பது லட்சம் பிளாஸ்டிக் பணம் தரணும்!”
“எங்களுக்கு தண்டனை தருவதாய் நினைத்து பரிசு வழங்கி விட்டாய் அர்த்தநாரி!”
“என்ன சொல்றீங்க?”
“கொசு ஈக்கள் கரப்பான் தொந்திரவுகளை விட ஆபத்தானவை எங்க மனைவிமார்களின் காதுகளும் நாக்குகளும். அவைகளை முடக்கி எங்களை ஆனந்தக்கடலில் தள்ளிவிட்டாய் இசைதம்பி நீ. எந்த உதவிக்கும் நன்றி மறக்கலாம் இந்த மகத்தான உதவிக்கு நன்றி மறக்கலாமா? தெய்வமே! நீ வாழ்க! உன் புல்லாங்குழல் வாழ்க! புல்லாங்குழலின் அல்ட்ரா ஸோனிக் ஒலியலைகள் வாழ்க வாழ்க!”
அரைக்கண் மூடி திறந்தான் அர்த்தநாரி.
ஒரு கோடி பிளாஸ்டிக் பணத்தை அர்த்தநாரியின் காலடியின் வைத்து அனைவரும் சாஷ்ட்டாங்கமாக விழுந்து சேவித்தனர்.
அர்த்தநாரி தர்மசங்கடமாய் நெளிந்தான். “மனைவி மீது காதல் இல்லாத ஜடங்களா நீங்கள்? மனைவியின் மீது சிறிதும் நன்றியில்லாத ஆணாதிக்க மிருகங்களாடா நீங்க? முப்பது லட்சம் பிளாஸ்டிக் பணத்தை கொடுக்காம ஏமாற்றினதை விட மோசமானது இப்ப நீங்க எனக்கு ஒரு கோடி பிளாஸ்டிக் பணம் தர்றது. உங்க ஒருகோடி பிளாஸ்டிக் பணத்தை ஏத்துக்கிட்டா ஆணில் பெண் சரிபாதி என்கிற என் கொள்கைக்கு பங்கம் வந்து விடும்... உங்க கோடி ரூபாய் பிளாஸ்டிக் பணம் யாருக்கு வேணும்? எடுத்துட்டு போங்கடா?” பணத்தை எட்டி உதைத்து சிதற்றினான் அர்த்தநாரி.
புல்லாங்குழலை எடுத்தான். அந்த செயற்கைகோள் நகரத்து அனைத்து வயது ஆண்களின் ஆண்மையையும் அடியோடு நிரந்தரமாய் அகற்ற ஒரு அல்ட்ரா ஸோனிக் ராகத்தை வாசிக்க ஆரம்பித்தான் அர்த்தநாரி.
ஒரு கவிதை நியாயம் பிறந்தது...
Leave a comment
Upload