படப்பிடிப்புக்கு நான்கு நாட்கள் இருக்கும்போது டைரக்டர் பி.மாதவன் கடைசி நிமிடத்தில் 'நாம் மூவர்' என்ற மகேந்திரனின் வித்தியாசமான கதையை இயக்க பயமாக இருக்கிறது என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார். இதையறிந்த மகேந்திரன் யாருக்கும் சொல்லாமல் காரைக்குடிக்கு அருகில் அவர் குடும்பம் தங்கி இருந்த கண்டனூருக்குப் போய்விட்டார். ஆனால், அடுத்த சில நாட்களில் கண்டனூர் தபால் நிலையத்துடன் தொடர்பு கொண்டு, மகேந்திரனுடன் தொலைபேசியில் பேசி டிக்கெட்டுக்கு பணம் அனுப்பி, அவரை மீண்டும் சென்னைக்கு வரவழைத்துவிட்டார் தயாரிப்பாளர் கே.ஆர். பாலன்.
‘கதையில் கொஞ்சம் மாறுதல் செய்து கொஞ்சம் மசாலா சேருங்க. நம்ம எடிட்டர் ஜம்புலிங்கத்தை டைரக்ட் பண்ண வைக்கலாம்’ என்றார். ‘இவ்வளவு சிரமப்பட்டு என்னை ஊரிலிருந்து வர்வழைத்திருக்கிறாரே இவருக்கு சென்னையில் வேறு எழுத்தாளர்களே கிடைக்க மாட்டார்களா என்ன?’ என்ற எண்ணத்தோடும், அதே சமயம் மகேந்திரனுக்கு அவர் மீது ஏற்பட்ட மரியாதையாலும், அவர் கேட்டுக் கொண்டபடியே கதையில் தேவையான மாற்றங்களை செய்து கொடுத்தார்.
ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் நாகேஷ் ஆகியோர் நடித்து வெளியான நாம் மூவர் என்ற அந்தத் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்திற்கு இசை எஸ்.எம்.சுப்பையா நாயுடு. இந்தப் படத்தில் தாயின் பிறந்த நாளுக்காக மகன் பாடுவதாக ஒரு பாடல் அமைந்திருந்தது. ‘பிறந்த நாள் இன்று பிறந்த நாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்’ இந்தப் பாடலைத்தான் இலங்கை வானொலி தினமும் காலையில் நிகழ்ச்சி துவங்கவதற்கு முன் பாடலாக ஒலிபரப்பி, அன்று பிறந்த நாள் கொண்டாடும் நேயர்களுக்கு வாழ்த்து சொல்வார்கள்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலன் பிக்சர்ஸ் தயாரித்த படம் சபாஷ் தம்பி, பணக்கார பிள்ளை ஆகிய படங்களுக்கும் மகேந்திரன் கதை எழுதினார். அந்தப் படங்களும் வெற்றி பெற்றன. மகேந்திரன் எழுதிய அந்தப் படங்கள் வெற்றி பெற்றாலும், அதனால் மனம் உடைந்தது என்னவோ மகேந்திரனுக்கு தான்!
‘எப்படிப்பட்ட சினிமா கூடாது?’ என்று நினைத்தாரோ, அதே மாதிரி சினிமாவைக் கொண்டு பிழைப்பு நடத்துவது நிரந்தரமாகிவிட்டால் என்ன செய்வது?’ என்று யோசித்தார். இதற்கிடையில் சென்னையிலேயே அவரது திருமணம் முடிந்து, குழந்தையும் பிறந்துவிட்டது. அதனால் மனைவி, குழந்தையை ஊருக்கு அனுப்ப முடிவு செய்தார். ரயிலுக்கான டிக்கெட்டும் எடுத்தாகி விட்டது. அன்று பார்த்து ஆனந்தி பிக்சர்ஸ் வேணு செட்டியார் மகேந்திரன் வீட்டுக்கு அவசரமாக வந்து, ‘உடனே முக்தா பிலிம்ஸுக்கு வந்து ஒரு கதை சொல்லிட்டு, அப்புறம் வேணா ஊருக்குப் போ’ என்று பிடிவாதம் செய்தார். அவருடைய கட்டாயத்தால் மகேந்திரன் போய் சொன்ன கதைதான் நிறைகுடம் என்ற பெயரில் திரைப்படமானது. கர்ப்பிணி மனைவியையும், குழந்தையான மகனையும் ஊருக்கு அனுப்பிவிட்டு, முக்தா பிலிம்ஸுக்கு வந்து, மாதா மாதம் கதைக்கான சம்பளத்தை வாங்க மகேந்திரன் மட்டும் சென்னையில் தங்க வேண்டியதாயிற்று.
நடிகர் திலகம் நடித்த நிறைகுடம் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட திருப்பங்கள், எல்லாம் அவரது பிந்தைய வாழ்க்கையை எப்படியெல்லாம் திசை மாற்றின என்பது பின்னால் வரப்போகிறது.
நாடோடி மன்னன் படம் தோல்வி கண்டிருந்தால் எம்.ஜி.ஆர் மதுரைக்கோ, அங்கிருந்து காரைக்குடிக்கோ வந்திருக்க மாட்டார். அவரை சந்திக்கும் வாய்ப்பு மகேந்திரனுக்கு கிடைத்திருக்காது. அதனால் விளைந்த அவரது சினிமா பிரவேசமும் நடந்திருக்காது.
அழகப்பா கல்லூரியில் எம்.ஜி.ஆர் முன்னிலையில் பேசிய ஒரு நிகழ்ச்சி, அவரை எப்படிச் சுற்றி வளைத்து சினிமாவுக்குள் இழுத்து வந்தது என்பது காலத்தின் கட்டாயம். அவரது சினிமா பிரவேசத்துக்கு எம்.ஜி.ஆர்தான் வித்திட்டு உரம் போட்டு, நீர் வார்த்து வளர்த்தார் என்பதை மகேந்திரன் எந்த கட்டத்திலும் மறக்கவில்லை.
இவையெல்லாம் தற்செயலான நிகழ்வுகளால் உருவானது என்று சொன்னாலும், அந்த தற்செயலான நிகழ்ச்சிகளின் காரணிகளான கதாபுருஷர்கள் எப்பேர்ப்பட்ட நன்றிக்குரியவர்கள். அத்தகைய எதிர்பாராத வாய்ப்புகள் கனிந்த தருணங்களின்போது தன்னை அறியாமலேயே மகேந்திரனும் ஒரு வித தயார் நிலையில் இருந்திருக்கிறார் என்பதையும் இங்கே சொல்லாமல் இருக்க முடியாது.
‘இயற்கை அதிசயங்களில் அவரும் ஒருவர்’ என்று நம்மை நினைக்க தூண்டுகிறவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தமிழ் சினிமாவின் நிரந்தரப் பெருமை. அந்த மகா கலைஞன் உலக சினிமாவில் புகழ் பெற்ற நடிகர்கள் நடித்த ஏராளமான படங்களை மகேந்திரன் பார்த்திருக்கிறார். அவர்களில் பலர் மூன்று நான்கு வேறுபட்ட கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்று மிகச் சிறப்பாக நடிக்கும் ஆற்றல் படைத்தவர்களாக இருந்தார்கள். நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை, அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது என்பதே வியப்பானது. ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது மட்டும் பெரிய காரியமல்ல. அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் அமானுஷயத் திறன் படைத்தவர் அந்த மேதை. சமூகப் படங்களா, சரித்திரப் படங்களா, புராண இதிகாசப் படங்களா அவர் எதைத்தான் விட்டு வைத்தார்?
சத்ரபதி சிவாஜியை மாணவர்களின் கண்முன்னே கொண்டு வந்தவர். வீரபாண்டிய கட்டபொம்மனை நமக்கு அறிமுகப்படுத்தியவர். சிவபெருமான் இப்படித்தான் பேசியிருப்பார். நடந்திருப்பார். சிரித்திருப்பார் என்று நமக்குக் காட்டியவர்.
தில்லான மோகனாம்பாளில் நாதஸ்வரக் கலைஞனாக, மிருதங்க சக்கரவர்த்தியில் மிருதங்க வித்வானாக, கப்பலோட்டிய தமிழனில் வ.உ. சிதம்பரம் பிள்ளையாக, கைகொடுத்த தெய்வம் படத்தில் பாரதியாராக, கர்ணனாக, திருவருட்செல்வர் படத்தின் அப்பராக, புகழ்பெற்ற் பிராமண வழக்கறிஞராக, திருடனாக, வயதான தாத்தாவாக, கம்பீரமான் போலீஸ் அதிகாரியாக, உடல் ஊனமுற்றவராக அப்பாவியாக, மாமேதையாக அவரைப் போல நடிக்க வேறு எவராலும் முடியுமா? நவராத்திரியில் அவர் ஏற்று நடித்த ஒன்பது வேடங்களைப் போலவோ, தெய்வமகனில் அவர் நடித்த அப்பா மகன்கள் கதாபாத்திரங்கள் போலவோ, சபாஷ் மீனாவிலும், கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரியிலும் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் போலவோ, திரும்பிப்பார், அந்த நாள், ரங்கூன் ராதா போன்று, அவர் ஏற்று நடித்த அந்த வில்லத்தனமாகவோ, அந்த சிவாஜியுடன் இணைவேன் என்று மகேந்திரன் கற்பனையே செய்யவில்லை.
(தொடரும்)
Leave a comment
Upload