தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 73 - பரணீதரன்

பரணீதரன் அந்தகக் கவி வீரராகவ முதலியார் பற்றி இன்னும் சொல்ல ஆரம்பிக்கின்றார்.

அந்தகக் கவி வீரராகவ முதலியார் மாண்டபோது கயத்தாற்று இராஜா பாடிய செய்யுள். மனதை உருக்கக் கூடியதான சில செய்திகளை இந்த செய்யுளில் அவர் கூறியுள்ளார். இப்படிப்பட்டதான செய்யுள்களை கையறுநிலை என்று கூறுவர். அதாவது தலைவனை இழந்ததால், தன்னுடைய நிலையை இழந்து செயலற்று இருப்பது. கைவிடப்பட்ட நிலை என்பது தான் கையறுநிலை :

முன்னாட்டுத் தவமுனியுஞ் சேடனும் வான்மீகனுமுன் முன்னில்லாமற்

தென்னாட்டு மலையிடத்தும் பாரிடத்தும் புற்றிடத்துஞ் சென்றுசேர்ந்தார்

இந்நாட்டுப் புலவருனக் கெதிரிலையே கவிவீர ராகவாநீ

பொன்னாட்டுப் புலவருடன் வாதுசெய்யப் போயினையோ புகலுவாயே

20240514192758876.jpg

அதாவது, முன்னொரு காலத்தில் வாழ்ந்த தவ முனிவரான அகத்தியரும், ஆதிசேஷனும், வால்மீகி முனிவரும் முன்பு போல இப்பொழுது இல்லாமல் தென்னாடு ஆகிய பாண்டிய நாட்டில் உள்ள பொதிகை மலையிலும், பூமியின் இடத்திலும், புற்றிலும் சென்று சேர்ந்தார்கள்.

அதாவது, அகத்திய முனிவர் (தமிழுக்கு முதன் முதலில் இலக்கணம் வகுத்தவர்) பொதிகையில் சென்று சேர்ந்தார்,

ஆதிசேஷனும் (ஆயிரம் தலை படைத்ததால் எல்லாவற்றிற்கும் விளக்கங்களை கொடுக்கக்கூடியவர். வேதங்களை முற்றுமாக ஒரே நாளில் ஓதக் கூடியவர்) பூமியை தாங்கி நின்றார்,

வால்மீகி (ராமாயணம் என்னும் பெருங்காப்பியத்தை வடமொழியில் உருவாக்கியவர். வடமொழியில் அமைந்த முதல் பெருங்காப்பியத்திற்கு சொந்தக்காரர்) முனிவரோ வான்மீகம் என்னும் கரையான் புற்றிற்குள் புகுந்தார். இப்பொழுது இவர்கள் யாரும் இல்லை என்பதால் வேறு எந்த புலவர்களும் உனக்கு நிகராக இல்லாததால் கவி வீரராகவரே! நீர் தங்கத்தால் ஆன பொன்னாடு என்று கூறக்கூடிய மேல் நாடாகிய சொர்க்கத்தில் உள்ள புலவர்களுடன் வாது செய்வதற்கு போய்விட்டீரோ நீங்களே கூறுங்கள் என்று கூறுகிறார். கவி வீரராகவருக்கு நிகரானவர்கள் அகத்திய முனிவர், ஆதிசேஷன் மற்றும் வால்மீகி முனிவர் மட்டுமே என்று கயத்தாற்று இராஜா கூறுகிறார்.

அடுத்து, சித்திரக் கவியை பாடிய சில புலவர்களை பற்றி சொல்லத் தொடங்குகிறார்.

சித்திரக்கவி என்பது ஒரு கவிதையை ஓவிய வடிவமாக உருவாக்குவது.

சித்திரக்கவியில் பல்வேறு விதமான பிரிவுகள் இருந்தாலும் இன்று நாம் பார்க்கப் போவது திருவெழுக்கூற்றிருக்கை என்ற ஒரு வகையான சித்திர கவியை தான்.

இந்தக் கவிதையை பாடுவதில் பேர் போனவர்கள் திருமங்கை ஆழ்வார் திருஞானசம்பந்தர் அருணகிரிநாதர் மற்றும் நக்கீரதேவ நாயனார் ஆவார்கள்.

20240514192909948.jpg

திரு + எழு +கூற்று + இருக்கை என்பதே திருவெழுக்கூற்றிருக்கை ஆகும்.

அதாவது ஏழு என்ற எண்ணிக்கை வரை சென்று பல்வேறு விதமான புராண சம்பவங்களையும் கூற்றுக்களையும் தன்னுள்ளே இருத்தி வைத்திருப்பது திருவெழுக்கூற்றிருக்கை ஆகும்.

இதில் ‘திரு’ என்ற அடைமொழி சேர்த்து வருவதால் இந்த வகையான செய்யுள்கள் பொதுவாக கடவுளின் கூற்றுக்களை மட்டுமே பாட பயன்படுத்தப்படும் செய்யுள் வகையாகும் என்பது நமக்குத் தெரிய வருகிறது.

எண் ஒன்று முதல் ஏழு வரை சென்று மீண்டும் ஏழு முதல் ஒன்று வரை வருவதே இந்த செய்யுளின் சிறப்பு அம்சமாகும். இவ்வகை செய்யுள்கள் திருப்புகழ், நாலாயிர திவ்ய பிரபந்தம், தேவாரம் மற்றும் சைவத் திருமுறைகளில் நம்மால் பார்க்க முடிகிறது. இந்த செய்யுள்கள் பொதுவாக முருகப் பெருமானுக்கும், திருமாலுக்கும், சிவபெருமானுக்கும் பாடப்பட்டுள்ளது.

அவர்களே இந்த செயல்களின் பாட்டுடைத் தலைவர்கள் (Hero) ஆவார்கள். பொதுவாக திருவெழுக்கூற்றிருக்கை மிகவும் பெரியதாக இருக்கும். அதனால் இந்த செய்யுள் மற்றும் அதன் விளக்கத்தை வாரம் ஒன்றாக பார்த்து நாம் முடிப்போம். இந்த செய்யுள்ளுக்கு ரத பந்தம் அல்லது தேர் பந்தம் என்ற பெயரும் உண்டு. இப்போதைய காலக் கட்டத்தில் பாம்பன் ஸ்வாமிகள் முருகப் பெருமான் மேல் ஒரு ரத பந்தம் பாடி உள்ளார். கீழே உள்ள படங்கள் மேலே சொன்ன நால்வரின் திருவெழுக்கூற்றிருக்கை ஆகும். இதன் செய்யுள்களும் அதனுடைய விளக்கங்களும் வரும் வாரங்களில் விளக்குவதாக கூறி விடை பெறுகிறார்.

20240514192952459.jpg