தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் : 18-வது மக்களவை

18 ஆவது மக்களவை ஒரு வித்தியாசமான அரசியல் சூழ்நிலையை அனுபவிக்க இருக்கிறது. எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு தேவையான உறுப்பினர்கள் கூட இல்லாமல் இருந்த காங்கிரஸ் கட்சி இந்த முறை எதிர்க்கட்சி அந்தஸ்தை கிடைத்திருக்கிறது. இரண்டு முறை பிரதமர் மோடி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்தார் இந்த முறை கூட்டணி கட்சி தயவுடன் ஆட்சி.

அதே சமயம் 17 வது மக்களவையில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கவில்லை. நிதிநிலை அறிக்கையை பொறுத்தவரை 35 மணி நேரம் மட்டுமே விவாதம் நடந்திருக்கிறது. பொதுவாக நிதிநிலை அறிக்கை விவாதம் பல மணி நேரம் நடப்பது வழக்கம். ஆனால் சென்ற மக்களவையில் அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடைசியாக நடந்த மக்களவை கூட்டம் குளிர்கால கூட்டத் தொடரில் 146 எதிர் கட்சி உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டார்கள். இது சரியான ஜனநாயக நடைமுறை அல்ல. இதேபோல் நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் 135 நாட்கள் விரிவான விவாதங்கள் நடைபெறும். ஆனால் 17-வது மக்களவையில் அவை நடைபெற்ற நாட்கள் 55 நாட்கள் மட்டுமே. அதாவது ஐந்தாண்டுகளில் 272 நாட்கள் மட்டுமே அவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதெல்லாம் ஆரோக்கியமான பாராளுமன்ற நடைமுறை அல்ல.

எனவே 18 -வது மக்களவையில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடக்கட்டும். இது ஆளுங்கட்சி மட்டும் பொறுப்பு என்று தள்ளிவிட முடியாது. எதிர்க்கட்சிகளுக்கும் அந்த ஜனநாயக கடமை இருக்கிறது என்ற உண்மையையும் எதிர்க்கட்சிகளும் தெரிந்து கொள்ள வேண்டும்.