தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 70 - பரணீதரன்

காளமேகப் புலவரைப் பற்றி இன்னும் சில நிகழ்வுகள் சொல்வதாக ஆரம்பிக்கிறார் பரணீதரன்.

அடுத்ததாக ஒரு புலவர் ஒரே பாடலில் ‘டு’ என்ற எழுத்து அடுத்தடுத்து வருமாறு பாடச் சொல்கிறார். அதற்கு நமது புலவரும் கீழ் வருமாறு பாடுகிறார் :

ஓகாமா வீதோ டுடுடுடுடு நேரொக்க

நாகார் குடந்தை நகர்க்கிறைவர் - வாகாய்

எடுப்பர் நடம்புரிவ ரேறுவரன் பர்க்குக்

கொடுப்ப ரணிவர் குழைக்கு

‘ஓ’, ‘கா’, ‘மா’, ‘வீ’, ‘தோ’ ஆகிய எழுத்துக்களுடன் ‘டு' என்ற எழுத்தை நேராக சேர்க்கும் பொழுது, சிவபெருமானின் சில விஷயங்களை நாம் காண முடியும் என்று கூறுகிறார். அதாவது,

நாகத்தை அணிந்திருக்கும் குடந்தை (கும்பகோணம்) நகரத்திற்கு இறைவனான சிவபெருமான்,

ஓடு -ஓட்டில் (திருவோடு) - எடுப்பார்

காடு - காட்டில்(சுடுகாடு) - நடனமாடுவார்

மாடு - மாடின் மீது (நந்தி) - ஏறுவர்

வீடு - வீட்டை (முக்தி) - அன்பருக்கு கொடுப்பார்

தோடு - தோடை- அணிவார்

அடுத்ததாக ஒரு புலவர் பச்சை வடம், பாகு, சேலை, சோமன் (வேட்டி) ஆகிய நான்கு துணி வகைகளுக்கும் உள்ள வேறுபாட்டினை ஒரு பாடலாக கேட்கிறார். காளமேகமும் பின்வருமாறு பாடுகிறார் :

மாயன் துயின்றதுவும் மாமலராள் சொல்வதுவும்

ஏய குருந்திற்கொண் டேறியதும் - தூய

இடப்பாகன் சென்னியின்மே லேறியதும் பச்சை

வடம்பாகு சேலைசோ மன்

திருமால் தூங்கியதும் - பச்சை வடம் (பச்சை இலை),

திருமகள் சொல் - வெல்லப் பாகிற்கு ஒப்பானது,

கண்ணப்பிரான் குருந்தில் மரத்தில் எடுத்துச் சென்ற பொருள் - சேலை,

சிவபெருமான் தலையில் எறியதும் - சோமன் (சந்திரன்)

20240419210228732.jpg

அடுத்ததாக சற்று கடினமான குறிப்பை கொடுக்க வேண்டும் என்று நினைத்து ஒரு புலவர் ககர வர்க்கத்தில் ( செய்யுள் முழுவதும் ‘க’ என்ற எழுத்தின் வரிசை மட்டுமே வர வேண்டும்) ஒரு செய்யுளை அமைக்குமாறு படித்தார். காளமேகமும் பின்வருமாறு பாடுகிறார் :

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை

கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்கக் - கைக்கைக்குக்

காக்கைக்குக் கைக்கைக்கா கா

இந்தப் பாடலின் பொருள் யாதனின்,

காக்கைக்கு ஆகா கூகை - காக்கைக்கு கூகை இரவில் வெல்லுதற்கு ஆகாது,

கூகைக்கு ஆகா காக்கை-கூகைக்குக் காக்கை பகலில் வெல்லுதற்கு ஆகாது,

(அதனால்) கோக்கு கூ காக்கைக்கு - அரசனுக்காக அவன் நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பாற்று கைக்கும்;

கொக்கு ஒக்க - கொக்கைப் போலத் தகுதியான சமயம் வரும் வரை காத்திருக்க வேண்டும்,

கைக்கைக்கு - பகையை எதிர்த்து,

காக்கைக்கு - காப்பாற்றுவதற்கு,

கைக்கு ஐக்கு ஆகா - (காலமற்ற காலமாயின்) சாமர்த்தியமுள்ள தலைவனுக்கும் இயலாதாகிப் போய்விடும்.

20240419210327826.jpg

இதைக் கேட்டு அதிர்ந்த இன்னொரு புலவர் தகர (செய்யுள் முழுவதும் ‘த’ என்ற எழுத்தின் வரிசை மட்டுமே வர வேண்டும்) வரிசையில் ஒரு பாடலை பாட சொல்கிறார். காளமேகமும் பின்வருமாறு பாடுகிறார் :

தத்தித்தா தூதுதி தாதுதித் தத்துதி

துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி

தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த

தெத்தாதோ தித்தித்த தாது?

தத்தித் தாது ஊதுதி – தாவிச் சென்று பூவின் மகரந்தத்தை ஊதி உண்ணுகின்றாய்

தாது ஊதித் தத்துதி – மகரந்தத்தை ஊதி உண்டபின்னர் திரும்பவும் எங்கோ போகின்றாய்

துத்தித் துதைதி - துத்தி என்று ரீங்காரமிட்டவாறே இன்னுமொரு பூவிற்குச் செல்கின்றாய்

துதைது அத்தா ஊதி – அந்தப் பூவினை நெருங்கி அதன் மகரந்தத்தையும் ஊதி உண்ணுகின்றாய்

தித்தித்த தித்தித்த தாது எது – உனக்குத் தித்திப்பாக இருந்த மகரந்தம் எது? தித்திப்பாகவிருந்த பூ எது? அழகாயிருந்த பூவிதழ் எது?

என்பது இப்பாடலின் பொருள்.

இன்னமும் காளமேகப் புலவரின் பாடல்கள் நிறைய உள்ளன. இவருடைய சிலேடைகளும், வல்லின, மெல்லின, இடையின பாடல்களும், கடவுளரை துதித்தும், நிந்தித்தும் பாடிய பாடல்களும் இன்னும் நிறைய உள்ளன. ஆனால் நாம் வேறு புலவர்களையும் பார்க்க வேண்டி உள்ளதால் மற்ற புலவர்களின் பாடல்களை இப்பொழுது பார்க்கலாம் என்று காளமேகத்தைப் பற்றி நிறுத்திவிட்டு அந்தகக் கவி வீரராகவ முதலியார் பற்றி தொடர்கிறார்

இவையும் பெரும்பாலும் ஆசுகவிகளாகவே உள்ளது. இவருக்கு பார்வை கிடையாது. இருந்தாலும் இவருடைய பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கும். உதாரணத்திற்கு இதோ:

20240419210449300.jpg

சீராடையற்ற வயிரவன் வாகனஞ் சேரவந்து

பாராரும் நான்முகன் வாகனந்தன்னை முன்பற்றிக் கவ்வி

நாராயணணுயர் வாகனமாயிற்று நம்மை முகம்

பாரான் மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே

அதாவது இவருடைய சாப்பாட்டை ஒரு நாய் கவ்விச் சென்று விட்டது. அந்த கஷ்ட நேரத்திலும் இவர் மிகவும் அழகான ஒரு செய்யுளை பாடியுள்ளார்.

இந்த பாடலின் பொருள் உடம்பில் ஆடை அணியாத பைரவரின் வாகனமான நாய், இந்த உலகத்தை உள்ள நான்முகனாகிய பிரம்மதேவன் வாகனத்தை ( அன்னப்பறவை - அன்னம் - கட்டுச் சாதம்) கவ்விக் கொண்டு நாராயணனின் வாகனத்தை ( கருடன்) போல வேகமாக பறந்து விட்டது ( ஓடி விட்டது). இப்போது நம்மை நேராக பார்க்காத ஆட்டு வாகனத்தை உடைய அக்னி பகவான் வயிற்றில் (பசி) வந்து விட்டான் என்று பாடுகிறார். அக்னி பகவான் இரண்டு தலைகளை உடையவர். ஆனால் அவர் நம் நம்மை நேராக பார்க்க மாட்டார். அதைத் தான் நம்மை முகம் பாரான் என்று எழுதி இருக்கிறார். இதற்கு இன்னொரு பொருள் பசி என்பது பணக்காரன் ஏழை என்று பார்க்காமல் எல்லோருக்கும் வருவது.

இவருடைய மற்ற செய்யுள்களையும் இன்னும் சில புலவர்களின் செய்யுள்களையும் வரும் வாரமும் பார்க்கலாம் என்றார் பரணீதரன்.