மனிதர்கள் நாம் ஒவ்வொருவரும் நம் குறைகள் நீங்க இறைவனை வழிபடுகின்றோம். இது நமக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இன்பதுன்பம் என்பது உண்டு. எல்லா உயிர்களுக்கு நன்மையும், இன்பமும் அளிப்பதோடு மட்டுமல்லாமல் மீண்டும் பிறவா முக்தியை அளிக்க வல்லவர் சிவபெருமான்.
மனிதர்களைப் போலவே விலங்குகளும் தங்கள் பிறவியின் பலனை அடைவதற்காக இறைவனை வழிபட்டு வந்ததாகப் புராணங்களிலும், பல கோவில் வரலாறுகளிலும் உள்ளன. இறைவன் மீது பக்தி செலுத்துவதில் விலங்குகளும் மனிதர்களுக்கு இணையானவை. தேவர்களோ, முனிவர்களோ தான் பெற்ற சாபத்திற்கு விலங்குகளாக மாறி பிறகு சிவனைப் பூஜித்து, அந்த சாபத்தில் இருந்து மீண்டுள்ளனர். சில விலங்குகள் தன்னை அறியாமலே சிவனை வழிபட்டு சாப விமோசனமும், முக்தியும் அடைந்துள்ளன. மனிதர்களைப் போல் பல்வேறு விலங்குகள் வழிபட்ட சிவஸ்தலங்கள் பற்றி இங்கே அறிந்துகொள்வோம்.
பசு வழிபட்ட சிவஸ்தலங்கள்:
ஆவூர் பசுபதீஸ்வரம் மற்றும் பட்டீஸ்வரம்.
ஆவூர் பசுபதீசுவரர் கோயில்: இது திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வசிட்டரின் சாபம் பெற்ற காமதேனு பிரம்மனின் அறிவுரைப்படி வழிபட்டு சாபம் நீங்கிய ஸ்தலம்.
பட்டீஸ்வரம் பட்டீசுவரர் கோயில்: இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. காமதேனுவின் புதல்வியான பட்டி பூசித்த ஸ்தலம்.
யானை சிவனைப் பூஜித்த ஸ்தலம் - திருக்கொட்டாரம்:
இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் காரைக்காலில் இருந்து 12 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. காரைக்காலில் இருந்து திருநள்ளாறு, நெடுங்காடு வழியாகக் கும்பகோணம் செல்லும் சாலையில் நெடுங்காடு தாண்டியபிறகு வரும் திருக்கொட்டாரம் கூட்டுச் சாலை என்ற பிரிவிலிருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தில் துர்வாச முனிவரால் சாபம் பெற்ற ஐராவதம் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றது.
அணில்,குரங்கு,காகம் வழிபட்ட ஸ்தலம் -
குரங்கணில் மூட்டம்:
காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி சாலையில் (8 கி.மீ.) தூசி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து சுமார் 2 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம். சாபத்தால் காகமாக மாறிய எமனும், அணிலாக மாறிய இந்திரனும், குரங்காக மாறிய வாலியும் இங்குள்ள சிவனை வழிபட்டு, சாபவிமோசனம் பெற்ற ஸ்தலம்.
பன்றி வழிபட்ட ஸ்தலம் - சிவபுரம்:
கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணம் - திருவாரூர் சாலையில் சாக்கோட்டை என்ற இடத்தில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு கிளைப்பாதையில் சுமார் 2 கி.மீ. சென்றால் சிவபுரம் சிவகுருநாதசுவாமி கோயிலை அடையலாம். திருமால் வெள்ளைப் பன்றி வடிவிலிருந்து பூஜித்து பேறு பெற்ற ஸ்தலம் இது.
சிலந்தி மற்றும் யானை வழிபட்ட ஸ்தலம் - திருவானைக்காவல்:
திருவானைக்காவல் திருச்சி மாநகரில் அமைந்துள்ள காவிரி ஆற்றுக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் அமைந்துள்ள ஸ்தலம் இது. இந்த ஸ்தலத்தில் சிலந்தி ஒன்று சிவலிங்கத்தின் மீது வலை பின்னி வெயில், மழை, மர சருகுகள் சிவலிங்கத்தின் மீது விழாமல் பாதுகாத்தது. யானை தனது துதிக்கை மூலம் காவிரி ஆற்றில் இருந்து நீரும், பூவும் எடுத்து வந்து சிவனை வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அகற்றி விட்டு தனது வழிபாட்டைத் தொடரும். மீண்டும் சிலந்தியும் வந்து வலையைப் பின்னும். மேலும் அது யானையைத் தண்டிக்க நினைத்து அதனுடைய துதிக்கைக்குள் சென்றது சிலந்தி. இறுதியில் இருவரும் மடிந்தனர். இவைகளின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக்கினார். சிலந்தி மறுபிறவியில் கோட்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது.
எறும்பு வழிபட்ட ஸ்தலம் - திருவெறும்பூர்:
திருவெறும்பூர் என்று தற்போது அழைக்கப்பெறும் திருஎறும்பியூர் திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோயில் ஒரு சிறு குன்றின் மீது உள்ளது. அசுரனிடம் இருந்து தங்களைக் காப்பாற்றத் தேவர்கள் எறும்பு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்ட தலம். இன்றும் எறும்பீஸ்வரர் கோயிலில் எறும்புகள் வணங்கி, பிரசாதத்தை எடுத்துச் செல்லும் அற்புதம் நிகழ்கிறது.
ஈ வழிபட்ட ஸ்தலம் - திருஈங்கோய்மலை:
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் இருந்து, காவேரி நதியைக் கடந்து செல்கையில், அதன் மறுபுறமான வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. அகத்திய மாமுனிவர், ஈயின் வடிவில் வழிபட்ட தலம் என்பது இதன் தனிச்சிறப்பு. மேலும் இது, ரத்தினாவளி சக்தி பீடமாகவும் விளங்குகிறது. இந்த மலையை மரகதமலை என்பர்.
பாம்புகள் வழிபட்ட ஸ்தலம் - திருப்பாம்புரம்:
திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் என்று ஸ்தலத்தில் ஆதிசேஷன் என்ற பாம்பு சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றுள்ளது. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருப்பாம்புரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும், அச்சமயம் கோவிலுக்குள் பாம்புகள் எங்கேனும் உலாவிக்கொண்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பதில்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்துக்கு உள்ளது. மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 8 கி.மீ.தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மீ. சென்றும் இத்தலத்தை அடையலாம்.
நண்டு வழிபட்ட ஸ்தலம் - நண்டாங்கோவில்:
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருவியலூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் திருந்துதேவன்குடி சிவஸ்தலம் இருக்கிறது. இந்திரன் சாபத்திற்கு ஆளான கந்தர்வன் நண்டாக இவ்வாலயம் வந்து பூசித்தார். கற்கடம் என்றால் நண்டு. நண்டு பூசித்த தலமாதலால் சிவபெருமான் கற்கடேஸ்வரர் ஆனார். தற்போது நண்டாங்கோவில் என்று அறியப்படும் இத்தலம், தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது.
ஆமை வழிபட்ட ஸ்தலம் - திருக்கச்சூர்:
திருக்கச்சூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கூர்ம அவதாரத்தின் போது திருக்கச்சூர் என்ற தலத்தில் கோயில் கொண்டுள்ள சிவனை வழிபட்டு, தேவ - அசுரர்கள் மந்தார மலையைக் கடைந்த போது, அந்த மலையைத் தாங்கும் சக்தியைப் பெற்றார். (கச்சபம் என்றால் ஆமை) என்பதால், இவ்வூர் கச்சூர் எனும் பெயர் பெற்றது.
கிளி வழிபட்ட ஸ்தலம் - சேலம்:
சேலம் அருள்மிகு சுகவனேஸ்வர் திருக்கோயில் சேலம் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. பிரம்மாவினால் சபிக்கப்பட்ட சுக பிரம்மரிஷி சாபம் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டவுடன் நீங்கியது. கிளியாக மாறிய சுக பிரம்மரிஷி வழிபட்ட சிவன் சுகவனேஸ்வரராக அருள்கிறார்.
கழுகு வழிபட்ட ஸ்தலம் - திருக்கழுக்குன்றம்:
கழுகுகள் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் திருக்கழுக்குன்றம் என்று பெயர் ஏற்பட்டது. நான்கு யுகங்களிலும் கழுகுகள் சிவபெருமானைப் பூஜித்து வருகின்றன.
வண்டு வழிபட்ட ஸ்தலம் - திருவண்டுதுறை:
திருவாரூர் மாவட்டம், திருவண்டுதுறையில் பிருங்கி முனிவர் வண்டு உருவில் சிவ பெருமானை வழிபட்டுள்ளார். இந்த கோவிலின் கருவறையில் இன்றும் வண்டுகளில் ரீங்கார ஒலியைக் கேட்க முடியும்.
இதேபோல் இன்னும் பல விலங்குகள் சிவபெருமானை வழிபட்டு முக்தி அடைந்துள்ளன.
Leave a comment
Upload