தொடர்கள்
கதை
சுப்புசாமியின் சபதம்...! புதுவை ரா. ரஜனி ஓவியம்: மணி ஶ்ரீகாந்தன் 5.

20240411064648264.jpeg


ஆஃப் பிளேடு கருணாசலத்துக்கு அறையும் குறையுமாக சல்பேட்டா அடித்த உணர்வு. கையில் துட்டுப் புழக்கம் கடந்த சில மாதங்களாகச் சரியில்லை.


'படா பேஜார் புட்ச கவர்மெண்டு...! டிஜிட்டலு... டிஜிட்டலுன்னு கூவி கூவி மனுஷங்கள தாரவாத்துப் பூடுச்சு. கார்டு தேய்க்கிறான்; ஜீ பே... போன் பே... ன்னு பாஸ்வேடு வெச்சுகினு சுத்தறான்காட்டியும்... எயவு எவனாண்டியும் ஒத்த ரூபா துட்டு இல்ல. இப்பிடியே போனாக்கா... லைஃபுக்கு இன்னா கேரண்டி? ஒரே சேடா (sad) போச்சி...!'


குண்டுராஜா ஊரிலில்லை. கிராமத்துக்குப் போயிருக்கிறான். பெருசு எப்போ போனாங்காட்டியும் வீட்டில் ஆளைக் காணோம். பாமாராவ் குஸ்தி போட்டிக்கு ரேணிகுண்டா போயிருக்கிறான்.


'இதுலங்காட்டி அந்த மூதிவேற டஃப்பா கோச்சுகினு ஆத்தா வூட்டுக்கு கம்பிய நீட்டிட்டா...நாஷ்டாவுக்கு லாட்டிரி!'


விரக்தியின் எல்லையைத் தொட்டிருந்த அந்தப் பாவப்பட்ட ரவுடி, ஆப்பக்கடை அம்சாவிடம் 50 அல்லது 100 தேத்தலாம் என்ற ரேஞ்சுக்குப் போயிருந்தான்.


அவளோ ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள்.


"தா வர்றேன், அம்சான்னு போனவன் போனவன்தான். தாராந்துப் போய் பத்து நாள் ஆச்சு. இதிலே நீ வேற அண்ணாத்தை பணம், கிணம்னுகிட்டு...!" - அவன் இவன் என்று ஏக வசனம் பாடியது அவளது மூணாவது புருஷன் ராக்கப்பன் குறித்துதான்!


"தொழிலு விஷயமா அண்ணாத்தை எங்கேயாவது போயிருப்பார். நம்ப அண்ணாத்தையைப்பத்தி எனுக்குத் தெரியாதா?" கருணா அவளை சமாதானம் செய்ய முயற்சித்தான்.


"சரி அம்சா கைலகீற துட்டுடைக் கொடு. ரெண்டு நாள்ல டபுளா வெட்றேன்...!"


"அடிங்... நானே காண்டுலகீறேன். நாலு ஆப்பம் துன்னுட்டுப் போயிகினே இரு...!"


"சரி...எரநூறு வெட்டு, எப்படியாவது பிராஞ்சி குடுத்திடறேன்...!"


"எங் கையில துட்டு கெடையாது. இந்த பொம்மைய வோணும்னா சேட்டாண்ட குடுத்து கேளு...மச்சான் ரெண்டு வாரத்துக்குமுன்ன கொண்டு வந்தது...அப்பால மூட்டுக் கொடுத்திடனும்...!"


அவள் காட்டிய பளபள பொம்மையைப் பார்த்தான் கருணா.


'அட, நம்ம ஒலக நாயகன் கமலகாசன் அடிக்கடி ஆசைப்படுற அவார்டுமாதிரி கீது?" கருணாவின் சிவந்த விழிகள் ஆச்சரியத்தில் மேலும் சிவந்தன.


தட்டுமுட்டுச் சாமான்களோடு அந்த ஆஸ்கர் விருது 13 இன்ச் சிலை, தங்க முலாம் பூசியது, தலை குப்புற கிடந்தது.


"பொம்மைய சேட்டு வாங்க மாட்டான். சரி, கேட்டுப் பாக்கலாம். ஒரு பையில போட்டுக் கொடு...!"


ஒரு குழந்தையை அணைத்து எடுத்துச் செல்வதுபோல் சிலையை எடுத்துச் சென்றான்.
*****


"அங்கே வலது பக்கம் அந்த குறுக்குச் சந்துலதான் டைலர் இருக்கான்...!" என்றாள் அகல்யா.


"ஆர் யூ ஷ்யூர்? ஒன் வே. கடையை விட்டுட்டா, திரும்பி சுத்தி வரணும்..." என்றாள் கோமு, காரை ஓட்டியபடி.


"எஸ் மேடம்... எனக்கு நல்லா தெரியும்...! லெப்ட்லே ஓரம் கட்டுங்க. ரோட்டை கிராஸ் பண்ணி ஜாக்கெட்டை கொடுத்துட்டு வந்துடலாம்...!"


"வெரி நைஸ். தேங்க்யூ...!"


"மேடம், ஆர் யூ நாட் பீலிங் வெல்? உங்க முகம் களையிழந்து இருக்கு, ஏன்...?" (மனதுக்குள் பொங்கிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை).


"எஸ்...யூ ஆர் கரெக்ட்! சம் டெவில்ஸ் ஆர் பிஹைண்ட் மீ. ஆனாலும் எந்த கெட்ட ஆவியையும் ஓட்ட இந்த இதயத்துக்குள் தைரியமிருக்கு...!"


அகல்யா நெளிந்தாள்.


"அந்த ஸ்ரீமதி கண்ணாம்பாள் ஏதோ முயற்சி செய்கிறாளாமே? இன்று நான் பாமுக பிரசிடெண்ட் என்ற பீடத்தில் இருக்கலாம். டுமாரோ ஹூ நோஸ்? மாற்றம் என்பது மாறாதது என்பார்கள். யார் மாறினாலும் நமது ஆர்கனைசேஷன் தொய்வில்லாமல் தொடரணும்...!"


"ஏன் இப்படி பேசுகிறீர்கள் மேடம்? ஒன்றும் ஆகாது. உங்களைத் தவிர அந்த நாற்காலியில் வேறு ஒருவரை நினைத்துப் பார்க்க முடியுமா?" - அகல்யா ஒப்புக்குச் சொல்லி, பாட்டி தடுமாறுவதை உள்ளுக்குள் ரசித்தாள்.


"சில தீய சக்திகள் அதற்காக உதவுவதை நான் உணர்கிறேன் அகல்யா...!"


தீய சக்தி தலை குனிந்தது.


"ஓகே, நோ வேஸ்ட் அவர் டைம். நீங்கள் வண்டியிலேயே இருக்கலாம் அகல்யா. நான் டைலர் ஷாப்பில் இந்த ஸ்டஃப்ஐ கொடுத்துவிட்டு வந்து விடுகிறேன்...!" காரிலிருந்து இறங்கி நடந்தாள் பாட்டி.
*****


டெய்லரிடம் விவரங்களைத் தெரிவித்து விட்டு வந்தபோது, சாலையோரக் கடையில் கலர் கலராக வாக்கிங் ஸ்டிக் விற்றுக் கொண்டிருந்தார் ஒரு வடநாட்டு ஆசாமி.


'ஹும், ஓல்ட் ஏஜ்... மீட் பண்ணித்தானே ஆக வேண்டும்? அவருக்கு ஒரு கைத்தடி ஏன் வாங்கி பிரசென்ட் செய்யக் கூடாது?கொடுத்தால், மகிழ்வாரா அல்லது இகழ்வாரா? நோ பிராப்ளம். என் கடமை கணவரை மகிழ்ச்சிபடுத்துவதே...!'


"350 ரூபாய் அம்மா. 300 கொடுங்க போதும் 100 வயசுக்கு மேலேயும் தாங்கும் இந்த தடி...!"


ஒரு நீல வண்ண கைத்தடியைப் பெற்றுக் கொண்டாள். பின்னர் சாலையைக் கடக்க முயன்றபோது...


"புடி...புடி...உடாதே, திருடன்...திருடன்...!"


பொறுப்பான பப்ளிக் மூன்று பேர், தொப்பை போலீஸ்காரர்கள் இரண்டு பேர், சும்மா நான்கு பேர் ஒருவனை துரத்திக் கொண்டு ஓடி வந்தார்கள். திருடன் அவர்களைவிட ஐம்பது அடி முன்னால் ஓடி வருவதைப் பாட்டி கவனித்தாள்.


'சம்திங் ஹேப்பண்ட் டூ பப்ளிக் பிராபர்டி...!'

தன்னைக் கடந்துபோக வந்த திருடனைப் புதிதாய் வாங்கிய வாக்கிங் ஸ்டிக்கால் தட்டிவிட்டாள். அவன் தலைகுப்புற விழுந்தான். அப்புறம்தான் கவனித்தாள்.


'ஓ திஸ் ஈஸ் புவர் ரவுடி கருணா...!'


கருணா பல்டி எடுத்து விழுந்த வேகத்தில் அவன் கையிலிருந்த துணிப்பை "ணங்" என்ற சப்தத்தோடு சாலையில் விழுந்தது.


'ஹி ஹாஸ் ஸ்டோலன் சம்திங் காஸ்ட்லி!'


கிரீச்சிட்டுக் கொண்டு போலீஸ் ஜீப் நின்றது. வாகனத்திலிருந்து மிடுக்கில்லாமல் இறங்கினார் எஸ்.பி. போலீஸ்காரர்கள் பொறுக்கி எடுத்த துணிப்பையை வாங்கிக் கொண்டவர், "குட்...!" என்றார்.


"ஐயா இந்த அம்மாதான் சமயோசிதமா வாக்கிங் ஸ்டிக்காலே தட்டி, ரவுடியை விழ வெச்சாங்க...!"


"அப்படியா...!" என்று நோக்கியவர், "மேடம் நீங்களா? தேங்க்யூ மேடம். பல வருஷங்களுக்கு முன் ஒரு கேஸ் விஷயமாய் உங்களை ஹானரரி மாஜிஸ்திரேட்டாய் கோர்ட்டில் சந்தித்திருக்கிறேன். உங்கள் நேர்மை, அஞ்சா நெஞ்சம், தீர்ப்புகளைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் சொந்த கணவருக்குகூட சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தந்தவர் நீங்கள். பெரியவர் எப்படி இருக்கிறார்?" என்றார் எஸ்.பி.


"தேங்க்யூ, மிஸ்டர்...வரகுணன்!" என்றாள் பாட்டி அவரது பேட்ஜைப் பார்த்து.


"ஓ.கே. நான் உடனே புறப்பட வேண்டும் எஸ்.பி. சார். இந்தப் புவர் இடியட்... அன்ஃபார்ஜுநேட்லி ஐ நோ ஹிம் வெரி வெல். அப்படியொன்றும் பிரமாதமான ரவுடி கிடையாது. சில்லறையாக லூட் பண்ணுவதுண்டு. இது என்ன கேஸ்...?"


பையிலிருந்து ஆஸ்கர் அவார்டை எடுத்தார் வரகுணன்.


"இவன் இதை அடகு வைக்க வந்திருந்தப்போ சந்தேகப்பட்டு விசாரிச்சோம். ஓடினான் ...!"


"வாட் அகாடமி அவார்ட்?"


"எஸ் மேடம். ஏ.ஆர். ரஹ்மான் வீட்டில் அடித்தது. இரண்டில் ஒன்று திருடு போயிருந்தது. சார் ரகசியமா புகார் கொடுத்திருக்கிறார்...!"


"பெரீம்மா மன்னிச்சிடுங்க. என் தோஸ்த் அடிச்சதை அடகு வெக்க வந்தேன். செஞ்சது தப்புத்தான்மா. ஐயா இனிமே இது மாதிரி நடக்காதுங்கைய்யா...!" - கருணா கையெடுத்துக் கும்பிட்டான்.


"பட், மிஸ்டர் எஸ்.பி., திஸ் அக்யூஸ்ட் ஈஸ் வெல் நோன் டு மீ. என் ஹஸ்பண்டின் பால்ய சிநேகிதன். தண்டனையை குறைக்க முடியுமா பாருங்க...!"


"ஐ ட்ரை மை லெவல் பெஸ்ட் மேடம்...!" என்றவர் மொபைல் அழைக்க பேசினார்.


"ரஹ்மான் ஜீ, வணக்கம். நானே கூப்பிட இருந்தேன். எஸ்...உங்க பிரிஷியஸ் அவார்ட் இப்போதான் திரும்பக் கிடைச்சாச்சு. ஒரு ரவுடியிடமிருந்து கிளவரா ரெகவர் பண்ணியது, பார்மர் மாஜிஸ்திரேட்டு மேடம் கோமு. அவங்க இங்கேதான் இருக்காங்க. ஓ, எஸ். பேசலாம் சார்...!மேடம் ரஹ்மான் சார் லைன்லே...!"


ரஹ்மான் நன்றி கூறினார், பாட்டிக்கு.


கோமுவிற்குள் ஒரு பளீச் மின்னல்!


"மிஸ்டர் ரஹ்மான், குட் பர்சன்ஸ் வித் தெய்வ நம்பிக்கை நெவர் பெயில்ஸ். இசைக்கான உங்கள் உண்மை உழைப்பை யார் தடுக்க முடியும்? பை த வே தங்களுக்கு நேரம் இருந்தால் நான் பத்து நிமிடங்கள் தங்களைச் சந்திக்க இயலுமா? சம்திங் ஃபார் குட். தட் குட் ஃபார் பீயூபிள்!"


"...................."


"வெரி கைண்ட் ஆஃப் மிஸ்டர் ரஹ்மான். எஸ், பக்கத்தில்தான். உடனே வருகிறேன்...!"


காவல் அதிகாரியை அனுப்பிவிட்டு உடனே காருக்குத் திரும்பினாள் பாட்டி. சாலையில் நடந்தவற்றை குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அகல்யாவிடம்,


"அகல்யா நாம உடனே ஏ.ஆர். ரஹ்மான் வீட்டுக்குப் போகணும்...!" என்றாள் பெருமிதமாக.


(அட்டகாசம் தொடரும்...)