தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 4 "முதல் நாள்" - மோகன் ஜி

20240312101503661.jpg

இன்னைக்கு நாலு நாளைக்கு முந்தி,

இன்று ஏப்ரல் 9ஆம் தேதி.

இன்றைக்கு சரியாக நாற்பத்தி நான்கு வருடங்களுக்கு முன், பெங்களூர் அவென்யூ ரோடில், ஒரு வங்கியின் வாசலில் நின்றிருந்தேன்.

காலை மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. என் ஸ்டெப் கட்டிங் தலையை ஆறாவது முறையாக வாரிவிட்டுக் கொண்டேன்.

எனக்கு அருகில் ப்ரீஃப் கேஸுடன் ஆஜானுபாகுவாக ஒரு நடுவயதைத் தாண்டிய மனிதர் வந்து நின்றார். சூட் போட்டிருந்தார். எஸ்.வி.ரங்காராவ் அடர்த்தியான கிராப்புடன், இன்னமும் கொஞ்சம் கருப்பாக இருந்தால் எப்படி இருக்கும்? ஆம்...அந்தமாதிரி தான் இருந்தார் அவர். என்னை ஏற இறங்கப் பார்த்தபடி நின்றார்.

"தம்பி! பத்துமணிக்குத்தான் பேங்க் திறப்பாங்க!" என்றார்.

"ஐ நோ! நான் இங்கே தான் வேலை செய்யறேன்"

"உங்களை நான் இந்த பேங்க்கில் இதுக்குமுன்னே பார்த்ததே இல்லையே?"

"சரியாகப் பார்த்திருக்க மாட்டீங்க"

"ஓஹோ!" மேற்கொண்டு அவர் பேசவில்லை. ஆனால் என் மீதான அவரின் நோட்டம் தீவிரமாகியது.

அவரை எதற்கோ தவிர்க்கத் தோன்றியது. அங்கிருந்து வெளியே வந்தேன். நெரிசல்மிக்க அந்த குறுகிய சாலையைக் கடந்து, எதிர்ப்புறம் இருந்த டீக்கடையில் அமர்ந்தேன்.

''ஏனு பேக்கு?"

டீ வந்தது.

ஊதிக் குடித்தபடி வெளியே பார்த்தேன். அந்த ரங்காராவின் பார்வை எதிர்புறத்திலிருந்து என்னைத் துளைத்தபடி இருந்தது.

'ஐய்ய.. மூஞ்சைப் பாரேன்' என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

மணி பத்து. வங்கிக்குள் நுழைந்தேன். ஹாலில் நடுநாயகமாக அமர்ந்திருந்த அதிகாரியிடம் வலக்கையை நீட்டியபடி 'ஐ ஆம் மோகன். மோகன் குருமூர்த்தி. இன்று இங்கு பணியில் சேர வந்தேன்."

"ஓ.. வாங்க மோகன் . வெய்ட்டிங் ஃபார் யூ! வெல்கம் டு திஸ் கிரேட் ஆர்கனைசேஷன். ஐ ஆம் ரமேஷ்"

சில குசலங்களுக்குப்பின் என் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை வாங்கிப் பரிசீலித்தார். ஒரு ஜாயினிங் ரிப்போர்ட் எழுதிதரச் சொல்லி வெள்ளைக்காகிதம் கொடுத்தார். வீட்டில் இராமர் விக்கிரகத்துக்கு இன்னொரு வில்போல் சாற்றிவைத்து, அம்மா எடுத்துக்கொடுத்த ஹீரோ பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தேன்.

"மோகன ! உள்ளே முதலில் மேனேஜரைப் பார்த்து இந்த ரிப்போர்ட்டையும் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரையும் தந்துவிட்டு வாங்க! மற்ற ஸ்டாஃபை அறிமுகம் செய்விக்கிறேன்." என்று கோடியில் இருந்த மேனேஜர் கேபினை சுட்டிக்காட்டினார்.

'மே ஐ கமின் சார்?’ என்று கேட்டபடி கேபினுக்குள் நுழைந்தேன்.

சுழல் நாற்காலியில் இருந்து திரும்பியது சற்றுமுன் வெளியே வாசலில் சந்தித்த ரங்காராவே தான். மூக்குக் கண்ணாடிக்குள் பாய தயாராகும் சிறுத்தையின் கண்கள்.

"குட்மார்னிங் சார். இன்று பேங்க்கில் சேர வந்தேன்" என்றபடி அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் கடிதங்களை நீட்டினேன்.

"உட்காருங்க ஹீரோ! இங்கே ஏற்கெனவே வேலை செய்யறதா இல்லே சொன்னீங்க?"

"அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் தந்தாலே வேலைல இருக்கிறதாகத்தானே அர்த்தம்? மெண்ட்டலி ஐ ஐடெண்டிஃபையிட் மை செல்ஃப் வித் தி பேங்க் சார்" என்று வழிந்தேன்.

கடுவன் முகத்திலே முதல் புன்னகைக்கீற்று!

"நல்லா சமாளி" என்றார். என் பூர்வோத்திரம்; எங்கு தங்கப்போகிறேன் என்றெல்லாம் கேட்டார். சில வழிகாட்டுதல்கள். சில நியமங்களைச் சொல்லிமுடித்தபோது எனக்குள் சகஜமாகி இருந்தார். மணியடித்து பியூனை அழைத்து, 'சகுந்தலாவைக் கூப்பிடு' என்றார்.

உள்ளே வந்த சகுந்தலாவுக்கு என் வயதுதான் இருக்கும்.

"இது மிஸ்டர் மோகன். இன்னைக்கு நம்ம கிளையிலே ஜாயின் பண்றார். போன வாரம் 'யெல்லா ஓம்பிரகாஷ்'க்கு ஜாயினிங் ரிப்போர்ட்டுக்கு பார்வார்டிங் லெட்டர் அடிச்சியே... அதேபோல இவருக்கும் ஒரு லெட்டர் அடிச்சுக் கொண்டு வாம்மா"

"ஓ கே .. ஹீரோ! ரமேஷ் கிட்டே போங்க! குட்லக்!" என்று எழுந்து கைகுலுக்கினார்.

"நன்றி சார்.. எதுக்கு நீங்க எழுந்துகிட்டு.. "

"பாத்ரூம் போகணும்யா!"

சகுந்தலாவுடன் சிரித்தபடி வெளியே வந்தேன். எல்லோருக்கும் அறிமுகம் செய்யப்பட்டேன்.

"ரமேஷ் சார்! நான் என்ன வேலை பண்ணனும்? "

"ஒண்ணும் பண்ண வேண்டாம். இன்னைக்கு என் பக்கத்தில் உட்காருங்க. கதையடிப்போம்..

உங்களைப்பற்றி சொல்லுங்க. என்னைப் பற்றிக் கேளுங்க. வேலைதான் இனிமே காலம்பூரா இருக்கே!"

"நல்ல நேரம் முடிவதற்கு முன்னே ஏதேனும் சாஸ்த்திரத்துக்கு வேலை செய்யறேனே?" என்றேன்.

"ஓ..சாஸ்திரமெல்லாம் பார்ப்பியா? சரி வா!" என்று ஒரு காலி டேபிளுக்குக் கூட்டிப் போனார். மாத இறுதிநாளின் சேமிப்புக் கணக்குகளின் இருப்புத் தொகைகளை பட்டியலிட்ட ஜாட்டிங் புக் ஒன்றைக் கொடுத்தார்.

"இதில் பக்கம்வாரியாக கூட்டல்போட்டு கீழே பென்சிலால் தொகையை எழுதி வைங்க. சாஸ்திரம் முடிஞ்சதும் கதையடிக்கலாம்!" என்று கண்சிமிட்டிச் சென்றார்.

ஜாட்டிங் நோட்டை கூட்டல் போடப் பிரித்தேன்.

முதல் பேரே ருக்மணி பாய்! என் அம்மாவோட பெயர். ‘பாய்’ தான் எக்ஸ்ட்ரா!

சென்டிமென்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்…அ

பைசா வரிசையைக் கூட்டி முடிக்குமுன்,

'ஹலோ' எனும் குரல் கேட்டது.

அருகில் காபி கோப்பையுடன் சகுந்தலா நின்றிருந்தாள்.

"இன்னைக்கு காபி என் கணக்கில்... நாளையிலிருந்து சங்கர்லால் கிட்ட வாடிக்கை சொல்லிக்குங்க. மாதம் ஒருமுறை அவனுக்குப் பணம் கொடுத்தால் போதும்"

"நன்றி சகுந்தலா!" என்று கோப்பையை வாங்கிக் கொண்டேன்.

சகுந்தலாவுடன் பேசிக்கொண்டே காபியைக் குடித்து முடித்தபோது எஸ்வி ரங்காராவ் என்னை நெருங்கி வந்திருந்தார். எழுந்தேன்.

"என்ன துஷ்யந்தா?! காபி குடிச்சாச்சா! ஏதும் வேணும்னா என்னைக் கேளு. மத்தியானம் சாப்பிட என்னோடு வா! "என்றார்.

"சரி சார்!"

“மேனேஜர் சார்! இவரைத் தப்பா கூப்பிடுறீங்க. இவர் பேர் மோகன்” என்று வெகுளியாகக் குறுக்கிட்டாள் சகுந்தலா.

‘ஓ..ஐ ஸீ!’ நமுட்டுச் சிரிப்புடன் மேனேஜர் நகர்ந்தார்...

அடக் கிழவா!!