வியட்நாமை சேர்ந்த மிகப்பெரிய பிசினஸ் புள்ளியான ட்ரோங் மை லான் என்ற 67 வயதான பெண்மணிக்கு மரணதண்டனை விதித்து உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது அந்நாட்டு அரசு. இது ஆனந்த அதிர்ச்சியா இல்லை வெறும் அதிர்ச்சியா என்று சொல்ல முடியாத அளவுக்கு கலவையான அதிர்ச்சியாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பலதரப்பட்ட அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடிரூபாய்க்கும் மேலே ஊழல் செய்திருக்கிறார் இந்த பெண்மணி.
ரியல்எஸ்டேட் சாம்ராஜ்ஜியத்தின் முடி சூடா ராணியாக 30 வருடங்களாக வலம் வந்த ட்ரோங் மை லான்
12.5 பில்லியன் டாலர்கள் கபளீகரம் செய்த வழக்கில் கடந்த 2022 ல் கைது செய்யப்பட்டார். இந்த தொகை அந்நாட்டின் 2023 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) ஆறு சதவீதத்திற்கு சமமாகும்.
சீன வம்சாவளியில் வந்த ட்ரோங் மை லான் 1992 ல் வான் தின்பாட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். வியட்நாமின் ரியல்எஸ்டேட் நிறுவனம் நாட்டிலேயே தலைசிறந்த நிறுவனமாக 48 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள நிறுவனமாக வளர்ச்சியுற்றது.
வியட்நாமின் முன்னணி நிறுவனமான ‘வான் தின்பாட்’ நிறுவனத்தின் கீழ், உயர்தர ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. நிதிச் சேவைகளிலும் இந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
ட்ரோங் மை லான், வியட்நாமின் SCB (Saigon Joint Commercial Bank) 2012 லிருந்து 2022 வரை அந்த வங்கியின் நிதியை சட்டவிரோதமாக முறைக்கேடு செய்து வந்திருக்கிறார். ஆயிரக்கணக்கான போலி நிறுவனங்களை உருவாக்கி அந்நிறுவனங்களின் பெயரில் கோடிக்கணக்கில் வங்கியின் பணத்தை கடனாக வாங்கி இருக்கிறார்.
இதற்காக அரசு உயர்அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் என மானாவாரியாக லஞ்சம் கொடுத்து வந்திருக்கிறார். அதில் முக்கியப்புள்ளியான அரசு உயர்அதிகாரி ஒருவர் ட்ரோங் மை லானிடமிருந்து 5.2 மில்லியன் டாலர்கள் ( 43 கோடி ரூபாய்கள்) லஞ்சம் வாங்கிய வழக்கில் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டதில் ஐயா தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். மேலும் லான் உடன் இணைந்து குற்றம் சாட்டப்பட்ட 84 பேருக்கு 3 ஆண்டுகள் முதல் வாழ்நாள் சிறைத் தண்டனை வரை நீதிமன்றம் விதித்துள்ளது.லானின் கணவர் ஹாங்காங் முதலீட்டாளர் எரிக் சு நப்-கீ குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர்.
வியட்நாமில் ஊழலுக்கு எதிரான போராட்டம் கடந்த 2022 ல் பெரும் அளவில் வெடித்தது. ட்ரோங் மை லானின் முறைக்கேடுகள் வெளிவந்த நேரத்தில் அன்றைய வியட்நாமின் அதிபர் வோ வான் துவாங், ஊழல் லஞ்சம் புகாரில் பதவி விலக நேரிட்டது.
இந்த இமாலய ஊழல் ஒன்று தானா இல்லை இன்னும் பல ஊழல் முதலைகள் இது போன்ற வங்கி முறைக்கேடுகள் செய்து பில்லியன் கணக்கில் பணத்தை ஆட்டையை போட்டிருக்கிறார்களா என்று வியட்நாம் அரசும் மக்களும் திகைத்து போய் நிற்கிறார்கள். ஊழல்வாதிகள் மரணதண்டனை வாங்குவதை பார்த்து
இயக்குனர் சங்கர் படம் பார்க்கும் உணர்வு உங்களுக்கு வந்தால் கையை கொடுங்கள்.. நீங்களும் நம்மாள் தான். ஆனால் இப்படி எல்லாம் இந்தியாவில நடக்கும் என்று வீணாக கனவு காணாதீர்கள். சினிமாவில் தான் நடக்கும்.
ஒரு வேளை நம் நாட்டில் இப்படிப்பட்ட தீர்ப்புகள் வந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படலாம். எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் என வாழும் இந்திய சமூகத்தில் மிகப்பெரிய கோடீஸ்வர தொழிலதிபர்களிலிருந்து கடைநிலை அரசு ஊழியர்கள் வரை பாவம் இந்த பட்டியலில் மாட்டி நாட்டின் ஜனத்தொகையே குறைந்து விடும் சார். ஆனால் அந்த கவலையெல்லாம் நம் மத்திய மாநில அரசுகள் நமக்கு உண்டாக்காது. நம் அரசாங்கம் வங்கிகளில் கடன் கட்டாத தொழிலதிபர்களின் கடனை வாராக்கடன் என்று தள்ளுபடி செய்வார்கள் . கடனை கட்டாமல் வெளிநாட்டுக்கு தப்பியவர்களையே “எங்கிருந்தாலும் வாழ்க!” என்று பாடி வாழ்த்துவார்கள்.
ஆனால் ஏழைப்பாழைகள் வங்கிகளில் குறைந்த கையிருப்பு வைத்தால் அந்த பணத்தை அபராதமாக வசூலித்து 30,000 கோடி ஈட்டியிருக்கிறோம் பாருங்கள் என்று மார்தட்டி கொள்வார்கள். 10,000 ரூபாய் கடன் வாங்கிய விவசாயியின் நிலம் ஜப்தி செய்யப்படும். வறுமையில் வாழும் ஏழை மாணவனின் கல்விக்கடனில் கிஞ்சித்தும் குறைக்க மாட்டார்கள்.
ஆனால் பாருங்கள் நமது ரிஸர்வ் வங்கி கடந்த 5 ஆண்டுகளில் பெரிய பணமுதலைகள் வாங்கிய 10 லட்சம் கோடிக்கு மேல் வாங்கிய கடனை தள்ளுபடி செய்திருக்கிறார்கள். ஏழைகள் ,விவசாயிகள் , அடித்தட்டு மக்கள் இவர்களால் எந்த நாட்டிலாவது, எந்த அரசியல்வாதிக்கோ அரசு அதிகாரிகளுக்கோ பிரயோஜனம் உண்டா சார்.? ஒரு பைசாக்கு பிரயோஜனப்படாத இந்த பொதுஜனங்களை பற்றி நம் அரசியல்வாதிகள் எதற்கு கவலைப்பட வேண்டும்?
“அரிசிக்கு ஜிஎஸ்டி சார்! குழந்தை குடிக்கிற பாலுக்கு கூட அநியாய வரி சார் !” என்று எதற்கு கொந்தளிக்கிறீர்கள்? அம்பானி இளையமகனின் திருமண நிகழ்ச்சியை கண்டு களித்தீர்களா? அதானி கூட வந்திருந்தாரே!
மனிதர் 2000 கோடி செலவு செய்திருக்கிறார். ஐபிஎல் அணிகளான குஜராத், சன்ரைசர், மும்பை இன்டியன்ஸ் உரிமையாளர்கள் வெற்றியடைய நாம் கடவுளை வேண்டி கொள்ளவில்லையா? அதையெல்லாம் பார்த்து கைதட்டி பெருமைப்படுவதை விட்டுவிட்டு சும்மா பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை ,சுங்ககட்டணம் ஏறிவிட்டது என தரித்திரம் பிடித்தது போல் அதையே சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள். சொன்னால் அந்தந்த கட்சி ஆதரவாளர்கள் நம்மை எதிர்கட்சிக்காரன் என்று நம்மீது பாய்வார்கள். அதனால் தயவு செய்து வாயை மூடிக்கொண்டிருங்கள். சாதா பொது ஜனங்களை பற்றிக்கவலைப்பட இங்கு எவருமில்லை.
தொழிலதிபர்களை பற்றி கவலைப்பட்டாலும் அரசியல்வாதிகளுக்கு ஒரு நன்மை உண்டு. இருக்கப்பட்டவனுக்கு ஆயிரம் பேர் வருவான் இல்லாதப்பட்டவனுக்கு அவன் நிழல் கூட அவனுக்கு துணையா நிக்காது என்பது தெரிந்த விஷயம் தானே.
இந்தியாவில் வெறும் 10% மக்களிடம் 77% வளமும் இருப்பதாக அறிக்கை ஒன்று புள்ளிவிவரத்துடன் தெரிவிக்கிறது. ஐஐடி பாம்பே ஐஐடி மெட்ராஸில் படித்த பெரும்பான்மை மாணவர்களுக்கே இவ்வருடம் வேலை கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன. பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்து பக்கத்தில் இருக்கும் விலைவாசியையும் எந்திருப்பா என தட்டி எழுப்பி உச்சத்திற்கு கொண்டு செல்லுகிறது. ஆனால் அந்த 10% முக்கியப்புள்ளிகள் ராஜபோகத்துடன் வாழ்கிறார்கள்.
77% வளத்தை வைத்திருக்கும் இந்த 10% பணக்காரர்களில் நேர்மையானவர்களை விட்டுவிடுங்கள். ஆனால் ஊரை அடித்து உலையில் போடுபவர்களை விசாரணைக்கு உள்ளாக்குங்கள்.
வியட்நாமிலும் இந்த 10% த்தில் ஒருவரான ட்ராங் மை லானை அந்நாட்டு அரசு கைது செய்து விசாரணை முடிந்து மரணதண்டனை வழங்கி இருக்கிறது. “ஊழல் என்பது குற்றமல்ல.. கையிருப்பவன் வாங்க தான் செய்வான்” என்று லஞ்சம் வாங்குவதையும் சகஜமாக்கப்பட்டு, ஊழல் செய்யாதவனை பிழைக்கத்தெரியாத பைத்தியம் என்று ஏளனம் செய்யும் இந்தக்காலத்தில் அண்டை நாட்டில் திடீரென மிகவும் மதிக்கப்பட்ட ஒரு பெரும் முதலாளிக்கு லஞ்சம் ஊழல் குற்றங்களுக்காக மரணதண்டனை விதித்து நம்மை போன்ற மக்களை திடுக்கிட வைத்திருக்கிறார்கள்.
தீவிரவாதம் மட்டுமே கடுமையான குற்றம் கிடையாது. ஜனநாயக நாட்டில் பொது ஜனங்களின் வாழ்வுரிமையை பறிக்கும்/பாதிக்கும், பொருளாதார குற்றங்களும் கடும் தண்டனைக்குரிய குற்றங்கள் தான்.
வியட்நாம் அரசு அக்குற்றங்களுக்கு மரணதண்டனை கொடுத்து புதியப்பாதை போட்டிருக்கிறது. லஞ்சமும் ஊழலும் பெருக்கெடுத்து ஓடும் தென்கிழக்கு ஆசியநாடுகளில் முக்கிய நாடான இந்தியா இதை பின்பற்றினால் வருங்காலத்தில் நாடு தப்பிக்கும். ஆனால் நடக்குமா என்பது கேள்விக்குறி தான்.
Leave a comment
Upload