காஞ்சிபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள உத்திரமேரூரில் ஒரு பெரிய கல்வெட்டுச் சாசனமே இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டு கல்வெட்டு வரலாற்றுச் சின்னங்கள் அநேகம் அங்கு உள்ளன. அதனால் இதற்குக் கல்வெட்டு ஊர்' என்று வரலாற்றில் மிக முக்கிய பெயரும் உண்டு.
அந்தக் காலத்தில் இருந்தே தேர்தல் முறைகள் ஜனநாயக அடிப்படையில் தான் பின்பற்றப்பட்டு வருகின்றது. அத்தகைய தேர்தல்களுக்கு நம் தமிழகம் முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறது என்பது ஆச்சரியத்திற்கு உரியது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் வாழ்க்கை, பஞ்சாயத்து ஆட்சிமுறை பற்றிய செய்திகள் யாவும் இக் கல்வெட்டுக்களில் உள்ளது. இக்கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள், பத்தாம் நூற்றாண்டு கால தமிழும் கிரந்தமும் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இந்த நூற்றாண்டில் நடைபெற்ற குடவோலை தேர்தல் விதிமுறைகளையும், வேட்பாளர்களின் தகுதிகளையும் விரிவாகத் தெரிவிக்கும் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. இங்குக் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுக்களில் மக்களாட்சி முறையும், தேர்தல் முறையும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றில் இவ்வூரை உத்திரமேரூர், சதுர்வேதி மங்கலம் என்று குறிக்கிறது. மற்றும் ராஜேந்திர சோழ சதுர்வேதிமங்கலம், விஜயகண்டகோபால சதுர்வேதிமங்கலம், வடமேருமங்கை, உத்திரமேலூர், பாண்டவவனம், பஞ்சவரத க்ஷேத்ரம் இவ்வாறாகப் பலவிதமாக அழைக்கப்பட்டுள்ளன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் தமிழகத்தில் ‘மக்களாட்சி’ நடந்திருக்கிறது. மக்களாட்சி தத்துவத்தைப் போற்றும் வகையில் நேர்மையான முறையில் தேர்தல் நடத்தி, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை சோழர் காலத்தில் அரசியல் சாசனம் ஒன்றில் தெளிவாக எழுதி வைத்துள்ளனர்.
குடவோலை முறைக் கல்வெட்டுக்கள் :
குடவோலை முறை 9வது நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்தது. குடவோலை முறையில் கிராம நிர்வாக சபை உறுப்பினரைத் தேர்வு செய்ததைப் பற்றி இரண்டு கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.அவற்றுள் முதலாவது கல்வெட்டு, 12 வரிகளைக் கொண்டது. இது முதலாம் பராந்தகனின் 12-வது ஆட்சி ஆண்டையும் (கி.பி. 917), மற்றொன்று 18 வரிகள் கொண்டது இது 14-வது ஆட்சி ஆண்டையும் (கி.பி. 919) சேர்ந்தது.
குடவோலை என்பது கிராம நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேர்ந்து எடுக்கப் பழங்காலத்தில் பயன்பட்டது. இந்த முறையில் கிராமத்தின் பகுதி வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி, ஒரு பானையில் போட்டுக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள்.
கல்வெட்டுச் செய்திகள்:
சம்வத்ஸர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், பஞ்சவார வாரியம் என்று பிரிக்கப்பட்டிருந்தாலும், உறுப்பினர்களின் பணி என்ன என்பது நேரடியாகக் கொடுக்கப்படவில்லை. அதன் பெயர் கொண்டு ஸம்வத்ஸர வாரியம் - ஆண்டுக்கு ஒருமுறை கூடும் மேற்பார்வைக் குழு என்றும், தோட்ட வாரியம் – தோட்டப் பணிகளைக் கண்காணிப்பது என்றும், ஏரி வாரியம் - நீர் நிலைகளை நிர்வகிப்பது என்றும், பொன் வாரியம் - பொன்னின் மாற்றைக் காண்பதற்கும், பஞ்சவார வாரியம் - நில வரி வாரியம் (ஐந்தில் ஒரு பங்கு நில வருவாய் பெறும் குழு) என்றும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அந்த அமைப்பின்படி, அரசு அதிகாரி ஒருவரும் உடன் இருக்க, ஒவ்வொரு ஆண்டும் சம்வத்ஸர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், பஞ்சவார வாரியம் போன்ற வாரியங்கள் அமைக்கப்பட்டு, அதன் செயல்பாட்டுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களுக்கான தகுதிகள் என்ன? அவர்களது பதவிக்காலம் என்ன? என்பது போன்ற தகவல்களும் இக்கல்வெட்டில் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன.
முதல் கல்வெட்டு:
1/4 வேலிக்கு மேல் இறைக் கட்டும் நிலம் வைத்திருக்கவேண்டும். ( இக்கால அளவில் சொன்னால் கிட்டத்தட்ட ஒன்ணரை ஏக்கர் நிலம்.)
2. சொந்த மனையில் வீடு கட்டப்பட்டிருக்கவேண்டும்
3. வயது 30மேல் 60க்குள் இருக்கவேண்டும்
4. வேதத்திலும், சாஸ்திரத்திலும், செய்யும் தொழில் காரியத்திலும் நிபுணராக இருக்கவேண்டும்
5. நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான எண்ணங்களையும் பெற்றிருக்கவேண்டும்.
6. கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும், அவர்களது நெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இருக்க இயலாது.
இரண்டாவது கல்வெட்டு:
1. கால் வேலிக்கு அதிகமான இறை செலுத்தக் கூடிய சொந்த நிலம் பெற்றிருக்க வேண்டும்.
2. அந்நிலத்தில் சொந்த மனை இருக்கவேண்டும்.
3. வயது வரம்பு முந்தைய கல்வெட்டில் 30க்கு மேல் 60க்குள் என்றிருந்தது. பின் அது மாற்றப்பட்டு 35க்கு மேல் 70க்குள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. மந்தர பிரமாணம் அறிந்து அதைப் பிறருக்கு எடுத்துச் சொல்லுபவராக இருக்க வேண்டும்.
5. 1/8 நிலமே பெற்றிருப்பினும் 1 வேதத்திலும் 4 பாஷ்யத்திலும் நிபுணராக இருக்கவேண்டும்.
6. நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான ஆன்மாவையும் பெற்றிருக்கவேண்டும்.
7. கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக் கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும், அவர்களது நெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இயலாது.
8. ஏதாவதொரு வாரியத்தில் இருந்து கணக்குக் காட்டாது சென்றவர்களும் அவர்களது உறவினர்களும் உறுப்பினராகக்கூடாது. (முன் கல்வெட்டில் இவ்விதம் குறிக்கப்படவில்லை); தாயின் சிறிய, பெரிய சகோதரிகளின் மக்கள் - தந்தையின் சகோதரி மக்கள் - மாமன் - மாமனார் - மனைவியின் தங்கையை மணந்தவர் - அக்கா, தங்கையைத் திருமணம் செய்தவர் - தன் மகளை மணம் புரிந்த மருமகன் . இது போன்ற சுற்றத்தினர் யாரும் தங்களது பெயர்களைக் குடவோலைக்கு எழுதுதல் கூடாது.
9. ஆகமங்களுக்கு எதிராக (அகமிஆகமான) பஞ்சமா பாதகங்கள் செய்தவர், கொள்கையை மீறுபவன் (ஸம்ஸவர்க்கப்பதிதரை), பாவம் செய்தவர்கள், கையூட்டு பெற்றவர்கள் அதற்கான பரிஹாரகளைச் செய்து தூய்மை அடைந்திருந்தாலும் அவர்களை உறுப்பினராகும் தகுதியற்றவரே. அவர்களது உறவினர்களும் உறுப்பினராக இயலாது. கொலைக்குற்றஞ்செய்யத் தூண்டுபவர், கட்டாயத்தினால் கொலைக்குற்றம் செய்பவர் (சஹசியர்), அடுத்தவர் பொருளை அபஹரிப்பவர், ஊர் மக்களுக்கு விரோதியாய் இருப்போர் (கிராம கண்டகர்) இவர்கள் உறுப்பினராகத் தகுதியற்றவர்களாவர்.
10. கழுதை ஏறியோரும், பொய் கையெழுத்திட்டோரும் உறுப்பினராகத் தகுதியற்றோராவர். இதன் மூலம் உறுப்பினர்களுக்கான தகுதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
இதுகுறித்து பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள், வைகுண்ட பெருமாள் கோயிலில் தற்போதும் உள்ளன.
குட ஓலை முறை தேர்தல்:
அந்தக் காலத்தில் ஊராட்சியை நடத்தக் குடவோலை முறையில் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்றைக்கு நடைமுறைப்படுத்த முடியாத பல நல்வழிச் சட்டங்களை அன்று மிகவும் நேர்த்தியாகச் செயல்படுத்தியிருக்கிறார்கள் என்பது வியப்பை அளிப்பது.
உத்திரமேரூர் அந்த காலத்தில் 30 குடும்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்தந்த குடும்பை நிர்வாகம் செய்ய, அதே குடும்பிலிருந்து ஒரு நபரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கான தேர்தல், குட ஓலை முறையில் நடந்தது. கிராம மக்கள் மற்றும் பெரியவர்கள் முன்னிலையில் ஒரு பானை வைக்கப்பட்டு, அதில், வேட்பாளர்களின் பெயர்களை ஓலையில் எழுதி வைக்கப்படும். ஒரு சிறுவனை அழைத்து, பானையில் உள்ள ஒரு ஓலையைக் குலுக்கி எடுக்கச் சொல்வர். அதை ஊர் பெரியவர் கையில் கொடுப்பார். அவர், அதில் எழுதியுள்ள பெயரை அனைவருக்கும் கேட்கும்படி வாசிப்பார். அதை, அனைவரும் உறுதி செய்து, வேட்பாளரைத் தேர்வு செய்வர். பொதுமக்கள் முன்னிலையில் வெளிப்படையாகத் தேர்தல் நடைபெறுவதால், முறைகேடுகள் தவிர்க்கப்பட்டுள்ளது. யார் ஒருவர் பெயர் வருகிறதோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவ்விதமே 30 குடும்பிற்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது கடமைகளை ஆற்றுவர். அவர் ஒரு குறிப்பிட்ட காலம் ஊருக்காக உழைக்க வேண்டும். அடுத்த முறை அவர் பெயர் இடம் பெறாது. மற்றவர் பெயர் இடம் பெறும். இதனால் “என்னைத் தேர்ந்தெடு” என்ற பிரசாரம் இல்லை. தவறான வழியில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. யார் பெயர் வருகிறதோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் கட்டாயம் ஊருக்காக ஒரு முறையாவது உழைக்க வேண்டும். இதனால் “யாரோ நிற்கிறான் நமக்கென்ன” என்று அலட்சியமாக யாரும் இருக்க முடியாது. அனைவருக்கும் பங்கு இருந்தது. தவறு செய்பவர்களை நீக்கவும் வழியிருந்தது.
குடும்புகள் பிரிக்கும் முறை:
இந்தக் காலத்தில் ஊரை நாம் வார்டுகளாகப் பிரித்து ஆட்சி செய்வதுபோல அந்தக் காலத்தில் குடும்புகளாகப் பிரித்து ஆட்சி செய்தனர். உத்திரமேரூரில் 30 குடும்புகள் இருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றன. ஓர் ஊரின் பராமரிப்புக்கு என்ன என்ன துறைகள் தேவையோ அதை வாரியங்களாகப் பிரிப்பார்கள்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சேர்ந்தது ஊர்ச்சபை. இவ்வூர்ச் சபையைச் சேர்ந்தவர்கள் சிறு குழுக்களாகப் பல பணிகளைக் கவனிப்பார்கள். அக்குழுக்களுக்கு வாரியம் என்று பெயர். இளைஞர்கள், உடல் வலிமையுள்ளவர்கள், கடுமையான பணிகளையும், வயதிலும் ஆற்றலிலும் முதிர்ந்தவர்கள் மேற்பார்வை புரியும் பணிகளையும் புரிவார்கள். இவ்வாறு உத்திரமேரூரில் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட வாரியங்கள் மூலம் ஏரிகளும், குளங்களும் ஆண்டுதோறும் தூர் எடுக்கப் பெற்று நீர்நிலைகளாகத் திகழ்ந்தன. ஏராளமான நீரோடும் கால்வாய்கள் வெட்டப்பட்டு நீர்ப்பாசனம் நிறைந்திருந்தது. பல்லாயிரம் வேலி நிலங்கள் பண்படுத்தப்பட்டுப் பயிர் நிலங்களாக மாறின. செல்வம் செழித்தது. கல்வி மிகுந்தது. இயல் இசை நாட்டியம் முதலிய கலைகள் மிகுந்தன. அவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் கோயில் கட்டடங்களும், சிற்பங்களும், கல்வெட்டுகளும் ஆயிரக்கணக்கில் இன்றும் சான்றுகள் கூறுகின்றன.
உலகையே வியக்க வைத்த தேர்தல் முறைக்கு முன்னோடியான உத்திரமேரூர் கல்வெட்டுகள் வரலாற்றில் மிக முக்கியமானவை.
Leave a comment
Upload