தொடர்கள்
ஆன்மீகம்
ராதா கல்யாணம் - லண்டனிலிருந்து கோமதி

20231101230336476.jpeg

இறைவனை சென்றடைய ஞான மார்க்கம், பக்தி மார்க்கம், யோக மார்க்கம், சரணாகதி என பல வழிகள் இருந்தாலும், அவனை சென்றடைய வேண்டும் என்ற எண்ணமே இவை அனைத்திற்கும் மூலம்.

இந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அனைவரையும் அந்த வழியில் நடத்திச் செல்ல கொண்டாடப்படுவதே ராதா மாதவ கல்யாணம்.

இன்னும் ஆழமாகக் கூற வேண்டும் என்றால் ஜீவாத்மா பரமாத்மாவை உணரும் விழா என்றும் கூறலாம்.

இதனை மிகவும் பிரமாண்டமாக நான்கு வருடங்களாக லண்டனில் ராதா மாதவ கமிட்டி நடத்தி வருகிறார்கள்.

உடையாளூர் திரு. கல்யாண ராமன் அவர்கள் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் சுமார் ஆயிரத்து ஐநூறு பேர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த ஆவலோடு கலந்து கொள்வது கூடுதல் சிறப்பு. இந்த வருடம் இந்த திருமண வைபவம் லண்டன் வெம்பிளியில் நவம்பர் 24,25 மற்றும் 26 ஆம் தேதிகளில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இரண்டு மாதங்களுக்கு முன்பே இதற்கான ஏற்பாடுகள்/முன் நிகழ்வுகள் துவங்கி விட்டன. யூ.கே வில் பல இடங்களில் உஞ்சவிருத்தி, நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. இந்த முறை டப்ளின்,முனிச் என்று ஐரோப்பா வரை இதை கொண்டு சென்றது கூடுதல் சிறப்பு. பாராட்டுதலுக்குரிய செயலும் கூட. இதை தொடர்ந்து உடையாளூர் அவர்களின் நாமசங்கீர்த்தனம் பல கோவில்களில் அரங்கேறியது. இவை அனைத்திலும் மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, இந்த திருமண வைபவ நிகழ்வை பல இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு உறுதுணையாகவும் அமைந்தது.

ஜெயதேவர் அருளிய அஷ்டபதி ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதிதாக கேட்பது போன்று தோன்றுவதோடு, புதிய அனுபவத்தையும் அளிக்கிறது. உடையாளூர் திரு கல்யாணராமன் அவர்கள் ராதை கிருஷ்ணனுக்காக காத்திருந்தது, ஜெயதேவர் அதை எழுதும் பொழுது ஒரு அஷ்டபதியில் தடுமாற்றம் ஏற்படும் பொழுது கிருஷ்ணனே அதை வந்து எழுதியது, ராதைக்கும் கிருஷ்ணனுக்கும் இடையே நடந்த உரையாடல் என அனைத்தையும் தனக்கே உரிய பாணியில் கூறி அனைவரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தினார். இறுதி நாளன்று மாங்கல்ய தாரணத்திற்கு முன்பு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் முத்துகுத்தலில் நடனம் ஆடியது முத்தாய்ப்பாக அமைந்தது.

இத்தகைய பெரிய விழா ஒரு சிலரால் மட்டுமே நடத்தப்படுவது அல்ல. இதன் பின்னால் பல தன்னார்வலர்கள் அவர்களது உழைப்பு , அனுபவம் வாய்ந்த முதியவர்கள், அவர்களின் ஆலோசனை என பலரது பங்கு, ஈடுபாடு இவை அனைத்தும் கலந்த வெளிப்பாடே இந்த ராதா மாதவ கல்யாண விழா. இதில் சிறுவர், சிறுமியரை ஈடுபடுத்தி கொண்டது ஹைலைட்.

20231101230403386.jpeg

இந்த விழாவை பற்றி ராதா மாதவ கமிட்டியை சேர்ந்த திரு. ராஜா அவர்கள் கூறிய பொழுது, லண்டனில் சம்பிரதாய பஜனை வாரம் ஒரு முறை ஒரு வீட்டில் நிகழ்ந்ததாகவும், அங்கு அவர்கள் நாமசங்கீர்தனம் நடத்தியதாகவும் கூறினார். அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல எண்ணிய பொழுது ராதா மாதவ கல்யாணம் நடத்த முடிவு செய்து, நான்கு வருடங்களாக நடத்தி வருவதாக கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை மையமாக வைத்து நடைபெறும் இந்த விழா, இந்த ஆண்டு புண்ணிய தலங்களை கருவாகக் கொண்டு அமைந்தது என்றும், மண்டப அலங்காரங்களாக விளங்கும் கிளிகள் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வரவழைக்கப்பட்டன என்றும் கூறினார். நாம் அனைவரும் நமது பிறந்த நாளையே ஆடம்பரமாக கொண்டாடும் பொழுது கிருஷ்ணனின் திருமணத்தை, நாம் எத்தகையதொரு பெரிய விழாவாக கொண்டாடவேண்டும் என்று அவர் கூறியது மனதை நெகிழ வைத்தது.

20231101230431763.jpeg

மூன்று நாட்களும் கல்யாண விருந்து, ஆடல், பாடல், நாம சங்கீர்த்தனம், பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்த அனுபவம், விழா முடிந்து செல்லும் பொழுது தாம்பூலம் என ஒவ்வொன்றும் என்றும் நம் நினைவில் நிற்கும்.