தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் - மணல் திருட்டு மாநிலம்.

20230328184332594.jpg

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகிலுள்ள முறப்பநாடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் லூர்து பிரான்சிஸ் தாமிரபரணி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க காவல்துறையில் புகார் தந்திருந்தார். இந்தப் புகாரால் எரிச்சலான இருவர் கிராம நிர்வாக அலுவலரை அவரது அலுவலகத்தில் வெட்டி இருக்கிறார்கள் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றும் சிகிச்சை பலனின்றி லூர்து பிரான்சிஸ் இறந்து போனார்.கிராம நிர்வாக அதிகாரி தனது கடமையை செய்யவிடாமல் தடுத்த மணல் கடத்தல் காரர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் தந்தார். காவல் நிலை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருந்தால் நேர்மையான அரசு ஊழியர் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்.

ஆனால் அந்தக் கடமையை காவல்துறை அதிகாரிகள் செய்யவில்லை. இறந்து போன கிராம நிர்வாக அதிகாரி பற்றி அவர் இறந்த பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் நேர்மையான அதிகாரி என்று புகழ் பாடுகிறார். ஆனால், இதே மாவட்ட ஆட்சித் தலைவரிடம் எனக்கு இங்கு பணி செய்ய பயமாக இருக்கிறது. என்னை வேறு இடத்துக்கு மாற்றுங்கள் என்று சொன்னபோது மாவட்ட ஆட்சித் தலைவர் அந்தக் கோரிக்கை பரிசீலனை கூட செய்யவில்லை. ஏன் அப்படி சொல்கிறார் என்றும் ஆராயவில்லை.

அந்த கிராம நிர்வாக அதிகாரி கோரிக்கை நிறைவேறி இருந்தால் ஒருவேளை அவர் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். எனவே கிராம நிர்வாக அதிகாரி இறந்ததற்கு மணல் கடத்தல் காரர்கள் மட்டும் காரணம் அல்ல என்பதுதான் கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கம் சொல்லும் குற்றச்சாட்டு.

(இவர் உயிர் காப்பாற்றப்பட்டிருந்தாலும் மணல் கொள்ளை என்னவோ தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்திருக்கும். இனியும் இருக்கும் என்பது வேறு விஷயம்)

ஆனால் இதற்கு இதுவரை அதிகாரிகளும் அரசோ எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காக்கிறார்கள்.

முதல்வரும் அவசர அவசரமாக இறந்து போன கிராம நிர்வாக அதிகாரி குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்று அறிவித்தது கூட சிறுபான்மை அரசியலோ என்று சந்தேக நிழல் தட்டுகிறது.

இறந்து போனவர் சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர். சிறுபான்மை வாக்கு வங்கிக்காக இந்த ஒரு கோடி நிவாரணமோ என்ற கேள்வி எழுகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆட்சிக்கு வந்த அடுத்த ஐந்தாவது நிமிடம் நீங்கள் மணல் அள்ளலாம் உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள் என்று பேசியவர் இப்போது அமைச்சரவையில் முக்கிய இடத்தில் இருக்கிறார். இறந்தவர் குடும்பத்திற்கு ஏன் அவசர அவசரமாக நிவாரணம் என்ற கேள்விக்கு ஒருவேளை அமைச்சரைக் காப்பாற்றத் தானோ என்னவோ ?

கேட்டால் இதுவும் திராவிட மாடல் என்று பதில் வரும்.