தொடர்கள்
கதை
இருநூறு ரூபாய்- கி. ரமணி.

20230224171449767.jpg

ருக்மணிக்கு கோபமாக வந்தது.காலை எட்டு மணிக்கு வரச் சொல்லியிருந்த இந்த தனம் நிதானமாக பதினோரு மணிக்கு வருகிறாள்.

இன்று சீக்கிரமாக வேலை முடிந்து விட்டது என்றால் தனத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பத்து மணிக்கு ஆட்டோவை வரச் சொல்லி கிளம்பி கண் ஆஸ்பத்திரிக்கு போகலாம் என்று இருந்தாள்.

கொஞ்ச நாளா காட்ராக்ட், குளுகோமா, அது இது என்று என்னென்னவோ வியாதி கண்ணுக்கு வர ஆரம்பித்திருப்பதாக கண் டாக்டர் பயமுறுத்துகிறார் .

" தனம்! ஏன் இவ்வளவு லேட்டு"

என்று கொஞ்சம் கேஷுவலாகவே கேட்டாள் ருக்மணி.

ஒரு மாதமாகத் தான் வீட்டு வேலைக்கு வருகிறாள் தனம் . ரொம்பவும் சத்தம் போட்டா வேலைய விட்டாலும் விட்டுவிடுவாள் என்ற பயம் இருந்தது ருக்மணிக்கு.

ஏற்கனவே வீடு வேற சென்னை ஜாபர்கான் பேட்டையில் கொஞ்சம் உள்ளே தள்ளி இருந்த தனி வீடு.

"ஒண்ணும் இல்லைமா.கொஞ்சம் லேட்டாயிடுச்சு" என்று சொல்லி துடைப்பத்தை எடுத்துக் கொண்டு பெருக்கப் போனாள் தனம்.

தமிழ் நாட்டுக்கு ரம்மி அவசியமா இல்லை மூணு சீட்டும் வேணுமா .. என்ற மாதிரித் தலைப்பில், வெள்ளி டிவியில் நடந்து கொண்டிருந்த ஏதோ ஒரு விவாதம் முடிந்ததும் டிவியைஅணைத்துவிட்டு கிளம்பிய ருக்மணி வீட்டு வெளிப் பக்கம் கிணற்றடிக்கு போனாள்.

தனம் அழுது கொண்டிருந்தாள்.இடது கை முட்டியில் பெரிய காயம். கொஞ்சம் ரத்தம் வடிந்து புடவை எல்லாம் கரையாய் இருந்தது.

பதறிப் போன ருக்மணி கேட்டாள்.

" ஏய்! தனம் என்ன ஆச்சு? எங்க விழுந்த?"

அழுகையை நிறுத்தாமல் விசும்பிக் கொண்டே தனம் சொன்னாள்.

." காலையில சண்டை ஆயிடுச்சுமா வீட்டுக்காரரோட... அடிச்சி கீழ தள்ளிட்டாரு. கையில கால்ல அடி."

" அடப்பாவி! கடங்காரா!. சரி.சண்டை முடிஞ்ச உடனே உன்ன ஆஸ்பத்திரி கூட்டிட்டுப் போக வேண்டியது தானே."

" அட போங்கம்மா. அவர் சும்மா வீட்ல கிடந்தாலே பரவால்ல. அவர் பாட்டு கிளம்பி குடிக்க போயிட்டாரு. டாஸ்மாக்குக்கு."

"படு பாவி. இவனோடல்லாம் எப்படி வாழற. சனியனைத் தலை முழு கிட்டு நீ பாட்டு தனியா இருக்க வேண்டியதுதானே.புள்ள குட்டியும் இல்ல..... சரி பக்கத்துல சீனிவாசன் டாக்டர் ஆஸ்பத்திரிக்கு போய் காயத்தை காட்டி மருந்து போட்டுட்டு வந்துரு ஏடிஎஸ்னு ஒரு இன்ஜெக்ஷன் போடுவாங்க. போயிட்டு வந்துரு. சரியா."

ஒன்றும் பதில் சொல்லாமல் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள் தனம்.

" நான் சொல்றது காதுல

வுழலையா? "

" அதில்லம்மா. கையில ஒரு பைசா இல்லை. "

" அடப்பாவமே. சம்பளத்தை எல்லாம் என்ன பண்ற?. சரி நான் இருநூறு ரூபாய் தரேன். ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்துடு . பணத்தை அடுத்த மாசம் சம்பளத்தில் கழிச்சிக்கிறேன்."

பணத்தை கொடுத்து தனத்தை டாக்டரிடம் அனுப்பி வைத்தாள் .

பாவம்,.. பெயரில் மட்டும் தான் தனம்.. என்று நினைத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் வேலைக்கு வந்த போது ருக்மணி அவளிடம் சென்று "கையை காட்டு" என்று பார்த்தாள்..

காயம் நேற்று போல் தான் அப்படியே. இருந்தது.

" டாக்டர பாக்கலையா"

"இல்லம்மா.போய்கிட்டு இருக்கும்போது அது எதிரே வந்திச்சு."

"எது எதிரே வந்திச்சு?".

" யேம் புருஷன் தான் மா. வந்து என்கிட்ட இருந்து இருநூறு ரூபாய் பணத்தை எடுத்துகிட்டு குடிக்க போயிடுச்சு."

" அறிவு இருக்கா உனக்கு?.ஏன் பணத்தை கொடுத்த?."

" கொடுக்கவில்லைனா நடு ரோட்ல ஒதச்சிருக்கும்மா.உயிரே போயிடுச்சுன்னா அப்பால அறிவு என்னாத்தப் பண்ணும்."

"சரி, நான் மருந்துக்காககொடுத்த பணத்தை அவன் கையில தண்ணி அடிக்க கொடுத்துட்டே. அதானே."..

" ஆமாம்மா அடுத்த மாசம் சம்பளத்தில் பிடிச்சுக்கோங்க."

அடுத்த மாசம் சம்பளத்தில் ஞாபகமாகப் பிடித்துக் கொண்டாள் ருக்மணி.

. திரும்பவும் அப்பப்ப இருநூறு ரூபாய் கேட்டு வாங்குவாள் தனம் .அம்மாக்கு காது வலி, நாத்தனார் பொண்ணு சடங்கு.. என்று காரணம் இருக்கும்.

இருநூறு கேட்கும் போது, அவள் கேட்கும் உண்மையான காரணமும், பணம் போய் சேரப்போகும் இடமும் டாஸ்மாக் தான் என்று ருக்மணி புரிந்து கொள்வாள்.

ஆனால் தனம் அது காரணம் இல்லை என்று சாதிப்பாள்.

மூன்று மாதம் சென்றது.தனம் ரொம்ப படிக்கவில்லை என்றாலும் அவளுடைய பொதுஅறிவு, சமயோஜிதம்,இவை ருக்மணியை ரொம்பக் கவர்ந்தது. ருக்மணியின் கைபேசியில் கூகுள் பே செயலியை பதிவிறக்கம் செய்து காய்கறி வாங்குவதிலிருந்து கார்ப்பரேஷன் கட்டணம் கட்டுவது வரை ருக்மணிக்கு கற்றுக் கொடுத்தாள் தனம். அது மட்டுமல்ல ஆதார் கார்டில் பழைய போன் நம்பரில் இருந்து புதிய போன் நம்பர் மாற்ற , தனமே கூட போஸ்ட் ஆபீஸ் வந்து மாற்றிக் கொடுத்தாள்.

ருக்மணியைத் துளியும் மதிக்காமல், வாசல் குப்பையை அள்ளாமல், சுத்தம் பற்றி விளக்கும் லவுட் ஸ்பீக்கர் பாட்டுடன் செல்லும் குப்பை வண்டிக்காரரை தினமும் குப்பை எடுக்க வைத்தாள் தனம்.

(" அம்மா இவருக்கு மாசம் இருபது ரூபாய் கொடுத்துருங்க. டெய்லி எடுப்பாரு" )

ஊபர், ஓலா,ஸ்விக்கி செயலிகளை கைபேசியில் இறக்கி, வண்டி பிடிக்க,உணவு வாங்க உதவினாள்.

எதற்கெடுத்தாலும்,அமெரிக்காவில் இருக்கும் பெண்ணிடன்,அல்லது பிள்ளையிடம், கைபேசி பற்றி ஏதாவது சந்தேகம் கேட்டுத் திட்டு வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போச்சு.

முன்பெல்லாம் கணவரிடம் இதைப் பற்றிஎல்லாம் ஏதாவது கேட்டால் "எனக்கு இது பத்தி ஒண்ணும் தெரியாது. ஏதாவது பண்ணு." என்று எரிந்து விழுவார்.

இப்போ அவரே வந்து" ருக்மணி என்னோட ஏர்டெல் பில்லையும் ஆன்லைன்ல கட்டிவிடேன்." என்று கெஞ்சுகிறார்.

கடந்த மூன்றே மாதத்தில் தான் பத்து இன்ச் உயர்ந்து விட்டது போல்

ருக்மணிக்கு தோன்றியது.

. கணவர் ஏதோ ஆடிட் விஷயமாக பெங்களூருக்கு கிளம்பிப் போன அன்று காலை பதினோரு மணிக்கு ருக்மணிக்கு திடீரென்று தலை சுற்றியது. அருகில் இருந்த தனத்தை அழைத்தவாறே கீழே சாய்ந்து விட்டாள்.

மத்தியானம் ஒரு மணிக்கு கண்விழித்த போது விஜயா ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருப்பது தெரிந்தது.தனம் அருகில் இருந்தாள்.

"நீங்க திடீர்னு விழுந்துட்டீங்களா. நூத்திஎட்டு கூப்பிட்டு உங்களை இங்க இட்டுக்கினு வந்துட்டேன். இந்த ஆஸ்பத்திரியில் முன்னமே வந்து இருப்பதாக சொல்லி இருக்கீங்க இல்ல.அதான்.

இஸ்கேன் எல்லாம் எடுத்து பாத்துட்டாங்க அம்மா. ஒன்னும் இல்லையாம். உங்க சுகரு ரொம்ப கம்மியா இருந்ததுனு குளுக்கோஸ் ஏத்தி இருக்காங்க. அவ்வளவுதான். வேற ஒன்னும் இல்லியாம். இன்னும் ஒரு மணி நேரத்துல கிளம்பிடலாம்னு சொல்லிட்டாங்க. டாக்டர் வந்து பார்த்ததும் கிளம்பலாம்மா. உங்க போனைப் பார்த்து ஐயா நம்பரை கண்டுபிடிச்சு அவருக்கு போன் பண்ணி சொல்லிட்டேன் கவலை ஒன்னும் இல்லனு . நைட்டு வந்துருவாருமா.."

" இதுக்கெல்லாம் பணம்?"

நான் குடுத்தேன் அம்மா.

பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ் ஆஸ்பத்திரிக்கு கட்டிட்டேன். ஆம்புலன்ஸ்க்கு எண்ணூறு ஆச்சு."

" உனக்கு எங்க இருந்தும்மா இவ்வளவு பணம்? "

" அம்மா, உங்க மாச சம்பளம், பூக் கடையில பூ கட்டுற காசு, அடுத்த தெருவில் குழந்தையை ஸ்கூல்ல விட்டு கூட்டி வர துட்டு, அம்மா உணவக வேலைல வர்ற காசு எல்லாத்தையும் சுய உதவிக் குழு ஒன்னு இருக்குதும்மா எங்களுக்குள்ள.......

....அதுல சீட்டா கட்டிடுவேன். எப்ப வேணாலும் பணம் எடுத்துக்கலாம். பணம் பத்திரமா இருக்கும்.

பணம் வேணும்னு போன்ல நான் சொல்லோ, குழுல இருந்து பணத்தை ஆஸ்பத்திரி கொணாந்து கொடுத்துட்டாங்க ."

"ஓ. அப்படியா.எல்லா பணத்தையும் குழுவில் கட்டிட்டா அப்ப மத்த செலவுக்கு என்ன பண்ணுவ."

" எங்க அப்பாக்கு ஒரு துண்டு நிலம் கூடுவாஞ்சேரில இருக்குமா.சின்ன வூடு கட்டி,குடி வச்சிருக்கோம்.கோரு மென்ட் கூடோ வூடு கட்ட பணம் கொடுத்துச்சு.அந்த வாடகை பணத்தில் தான்மா செலவு

எல்லாம்."

ருக்மணிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. தனத்தின் நிதி நிர்வாகம் அசர வைத்தது.எவ்வளவு இடத்தில் வேலை பார்க்கிறாள். சேர்க்கிறாள்.

தன்னைப் பற்றி,.....

..ஒழுங்கான கட்டுப்பாடு இல்லாமல் சர்க்கரைக் குறைவால் மயங்கியது,...( ஹ்ம்ம். சட்டுனு ஒரு சாக்லேட்டானும் சாப்பிட்டிருக்கலாம் ).... தனம் தனக்காக பணம் செலவழித்தது... எல்லாம் நினைத்து கொஞ்சம் வெட்கப்பட்டுக் கொண்டாள் ருக்மணி.

" எல்லா பணத்தையும் வீட்டுக்கு வந்த உடனே கூகுள் பேல ஒன் அக்கவுண்டுக்கு கொடுத்து விடுகிறேன். "

தனம் பதில் சொல்லாமல் சிரித்தாள்.

அடுத்த மாதம் ஒன்றாம் தேதி தனத்தை அழைத்தாள் ருக்மணி.

நீ எனக்கு பெரிய உதவி செஞ்சிருக்க. நல்ல பொண்ணு.இந்த மாதத்தில் இருந்து உன்சம்பளத்தை ரெண்டாயிரத்தி ஐநூறு ரூபாயிலிருந்து மூவயிரம் ரூபாயா மாத்தி இருக்கேன்."

"தேங்க்ஸ் மா."

"ஆனா ஒண்ணு . அப்பப்போ வந்து உன் வீட்டுக்காரன் குடிக்கிறதுக்கு இருநூறு ரூபாய் கடனா கேட்காத."

" . அது முடியாதும்மா. அப்பப்போ நான் வந்து கேட்கதான் அம்மா கேட்பேன். அடுத்த மாசம் புடிச்சுக்கோங்க."

ருக்மணி சிரித்தாள்

"உன்ன நெனச்சா வேடிக்கையா இருக்கு.குடிகார புருஷனை வேண்டாம்னு விரட்டுன்னா மாட்டேங்குற.சரி.அது உன் இஷ்டம்.

இவ்வளவு பணம் சேர்த்து வைக்கிறியே! அதிலிருந்து உன் புருஷனுக்கு அப்பப்போ இருநூறு ரூபாய் கொடுத்து தொலைக்க வேண்டியது தானே. எதுக்கு நீ கடன் வாங்கிக் கொடுக்கணும்.?"

சிறிது யோசனைக்குப் பிறகு தனம் சொன்னாள்.

" நான் சேர்த்து வைக்கிற பணம் என் எதிர்காலத்துக்கும்மா. எனக்கு குழந்தை பிறக்குமா?. புருஷன் திருந்துவாரா? இல்ல குடிச்சு,குடுச்சு சாவாரா?...என்று எல்லாம் எதுவும் தெரியாது.

எதிர்காலத்தில் எனக்கு பணம் வேணும். அத்த இப்பவே காலி பண்ண நான் தயார் இல்லை.

என் புருஷனுக்கு நான் பணம் சேத்து வைக்கிறது தெரியாதுனு தான் இப்போ வரை நினைக்கிறேன்.நம்பறேன்.

நான் லவ் பண்ணி கட்டிக்கிட்ட என் மாமா பையன் தான் என் புருஷன்.. .

ரொம்ப நல்லவருதாம்மா அவரு. மோசமான கும்பல்ல சேர்ந்து குடிக்கிறாரு. ஒழுங்கா வேலைக்கு போறதில்ல. ஆனா திருந்திடுவாருனு நம்புறேன்.

மேலும் மேலும் நான் அடி வாங்குறதுக்கு பதிலா இருநூறு ரூபாய் அப்பப்ப கொடுத்துத் தொலைவது ஈசி இல்லையாம்மா. என் புருஷனுக்கும் நான் உன்கிட்ட தான் கடன் வாங்குறேன்னு தெரியும். அதனால ரொம்ப அதிகமா கேட்காது.!

அதுனால, சேர்த்து வைக்கிற பணம் என் எதிர்காலத்துக்கு. உங்ககிட்ட கடன் வாங்கற இருநூறு ரூபா அன்னன்னைக்கு நாளைக் கடத்தன்னு வெச்சுக்கலாம்மா." என்று முடித்த தனம் தன் பாத்திரம் கழுவும் வேலையைத் தொடர்ந்தாள்.

ருக்மணி தனத்தை பார்த்த பார்வையில் ஆச்சரியமும் மரியாதையும் கலந்து இருந்தது.!