தொடர்கள்
வலையங்கம்
தேர்வில் மிஸ்ஸான மாணவர்கள் !!

20230217185620705.jpg

இந்த ஆண்டு நடந்த பிளஸ் டூ பொதுத் தேர்வில் முதல் தினம் நடந்த மொழிப் பாடத் தேர்வில் 50,674 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை மறுதினம் நடந்த ஆங்கில பாடத் தேர்வில் 49 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை மொத்த தேர்வாளர்களில் ஆறு சதவீதம் பேர் தேர்வு எழுதவில்லை சென்ற ஆண்டு தேர்வு எழுதாதவர்கள் சதவீதம் நான்கு சதவீதம் அது இப்போது 6சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. இதற்கு அமைச்சர் சொல்லும் காரணம் பள்ளிகளில் படித்துக்கொண்டு இருந்த தங்கள் படிப்பை தொடர முடியாமல் இடைநிற்றல் மாணவர்கள் 1.90 லட்சம் பேர் அவர்களை மீண்டும் பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தி பள்ளிக்கு வரவைத்து சேர்த்தோம் இவர்களையும் சேர்த்து தான் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை8.81 இலட்சமாக உயர்ந்தது. ஆனால், இடைநிற்ற மாணவர்கள் பள்ளிக்கு ஒரு சில நாட்கள் வந்து விட்டு மீண்டும் அவர்கள் பள்ளிக்கு வரவில்லை. அவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்க அறிவுறுத்தப்பட்டது. அப்படி இடைநிற்ற மாணவர்களில் 50,000 பேர் தான் தேர்வு எழுதவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

நாம் கல்வியில் முன்னேறிய மாநிலம் என்று சொல்லி வருகிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பிளஸ் டூ வரை இலவசக் கல்வி தான். நோட்டுப் புத்தகங்கள், பாட புத்தகங்கள், சீருடை, காலனி,சைக்கிள், மடிக்கணினி இப்படி எல்லாமே இலவசம்.அப்படி இருந்தும் 1.90 லட்சம் மாணவர்கள் படிப்பை தொடர முடியாமல் பாதியில் பள்ளிக்கு வராமல் நின்று போய் இருக்கிறார்கள் என்றால் நமது கல்வி முறையில் எங்கோ ஏதோ கோளாறு என்று தான் நாம் யோசிக்க வேண்டும். 50,000 பேர் தேர்வு எழுதவில்லை அப்படி என்றால் அந்த 50,000 பேர் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. அமைச்சர் இடைநிற்றல் தேர்வு எழுதாதவர்கள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனைசெய்ய இருப்பதாக சொல்லியிருக்கிறார். அந்த ஆலோசனை கூட்டம் என்பது மாணவர்கள் படிப்பை பாதியில் தொடர முடியாததற்கான காரணம் 50,000 பேர் தேர்வு எழுத முடியாத காரணம் போன்ற விஷயங்களில் உண்மையான காரணத்தை ஆராய்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் இது பற்றி அதிகாரிகள் ஆசிரியர்களிடமும் மனம் திறந்து பேச வேண்டும் ஆசிரியர்களும் உண்மையைச் சொல்ல வேண்டும்.விளம்பரத்துக்காக ஏதோ சாதித்து விட்டோம் என்று ஸ்மார்ட் கிளாஸ் கணினி தொழில்நுட்பம் என்று பெருமை பேசிக்கொள்வது உண்மையான கல்வி முன்னேற்றமாக இருக்காது இதை அரசு அதிகாரிகள் ஆசிரியர்கள் உணர வேண்டும்.

அதே சமயத்தில் இந்திய அளவில் இப்படி இடைநிற்றல் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் கொடுத்தால் மாநிலக் கல்வியின் தேர்ச்சி சதவிகிதம் குறையும் என்று அறிந்தும் மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த அமைச்சருக்கு பெரிய ஷொட்டு. ஒரே ஒரு மாணவர் வந்து எழுதினாலும் அவரது வாழ்க்கை எவ்வளவு முக்கியம்..