தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு – 8

மீதமுள்ள சார்பெழுத்தைத் தொடர்கிறார் பரணீதரன்.

20230217072215649.jpg

மேடையில் உள்ள எலுமிச்சம்பழத்தை ஏதோ பரிசோதனை செய்து காண்பிக்கப் போகிறர் என்று நினைத்துக் கொண்டிருக்கையைலேயே அதைப் பற்றி,"குறுக்கம் என்பது அருகில் உள்ள எலுமிச்சை பழம் போல தான். அதை நாம் பிழிய பிழிய எப்படி ஒரு எலுமிச்சம் பழம் சிறியதாகிறதோ, அதுபோலவே ஒரு எழுத்து குறுக குறுக அதனுடைய உச்சரிப்பும் சிறியது ஆகிறது," என்று விளக்கியபடியே தொடர்கிறார்.

ஐகாரக்குறுக்கம்

ஐகாரக்குறுக்கம் = ஐகாரம் + குறுக்கம். ஒரு சொல்லில் ஐகாரம்(‘ஐ’) குறைந்து ஒலித்தால் அது ஐகாரக்குறுக்கம் ஆகும். ஐகாரம் ஒரு சொல்லின் முதலில், இடையில், கடையில்(கடைசியில்) வரும். சொல்லின் முதலில் வரும் பொழுது தன்னுடைய இரண்டு மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் சொல்லின் நடுவில் வரும் பொழுது இரண்டு மாத்திரையில் இருந்து ஒரு மாத்திரையாகவும் சொல்லின் கடைசியில் வரும் பொழுது இரண்டு மாத்திரையில் இருந்து ஒரு மாத்திரையாகவும் குறுகும். அதேபோல் தனி எழுத்தாகவும்(ஓர் எழுத்து ஒரு மொழி) வந்தால் குறுகும். அதனை சுட்டும் பொழுது குறுகாது. அளபெடையிலும் குறுகாது.

எடுத்துக்காட்டாக

ஐ(‘ஐ’)ந்து, ஐவர், ஐநூறு, ஐயாயிரம் - ஐகாரம் மொழிக்கு (சொல்லிற்கு) முதலில் - 11/2 மாத்திரை
வளை(‘ஐ’)யல், துடைப்பம், இடையர், இடையில், கடையில், கடையம், - ஐகாரம் மொழிக்கு (சொல்லிற்கு) இடையில் - 1 மாத்திரை
மலை(‘ஐ’), நாகை, தொகை, தோகை, தலை, பாகை, பாதை - ஐகாரம் மொழிக்கு (சொல்லிற்கு) கடையில் - 1 மாத்திரை

நசை(‘ஐ’)இ, தசைஇ – அளபெடையில் (முன்பே பார்த்தது போல் அளபெடை என்பது ஒரு எழுத்தின் உடைய அளவு கம்மியாக வருவதால் அதை சரி செய்வதற்காக நாம் மேலும் ஒரு எழுத்தை சேர்க்கிறோம் அதனால் தான் இங்கு ஐகாரம் குறையாமல் முழுவதுமாக இரண்டு மாத்திரைகள் வருகிறது.) - 2 மாத்திரை

ஐ – தனி எழுத்தாக ஐகாரத்தை சுட்டும் பொழுது – 2 மாத்திரை

பை(‘ஐ’), கை, வை – தனி எழுத்தாக ஓர் எழுத்து ஒரு மொழியாக வரும் பொழுது - 1 மாத்திரை

ஐந்திறைச்சிலை - ‘ஐ’ந்தி’றை’ச்சி’லை’ – ஒரே சொல்லில் வரும் மூன்று ஐகாரக்குறுக்கங்கள்.

இதை நன்னூலில் இவ்வாறாக ஆசிரியர் கூறுகிறார் :

தற்சுட்டு அளபு ஒழி ஐம் மூவழியும் நையும் ஒளவும் முதல் அற்று ஆகும்.

இதை பிரிக்கும் பொழுது –

தன் சுட்டு அளபு ஒழி ஐம் மூ வழி உம்

நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்

ஔகாரக்குறுக்கம்

ஔகாரக்குறுக்கம் = ஔகாரம் + குறுக்கம். ஒரு சொல்லில் ஔகாரம் (‘ஔ’) குறைந்து ஒலித்தால் அது ஔகாரக் குறுக்கம் ஆகும். சொல்லின் முதலில் மட்டுமே ஔகாரம் வரும். சொல்லின் இடையிலோ, கடையிலோ வராது. சொல்லின் முதலில் மட்டும் அது தன்னுடைய இரண்டு மாத்திரை அளவில் இருந்து குறைந்து

ஒன்றரை மாத்திரையாக குறுகி ஒலிக்கும். அதனை சுட்டும் பொழுது குறையாது.

எடுத்துக்காட்டாக

வௌ(‘ஔ’)வால், ஔவை, பௌவம் – ஔகாரம் மொழிக்கு (சொல்லிற்கு) முதலில் - 11/2 மாத்திரை

ஔ - தனி எழுத்தாக ஔகாரத்தை சுட்டும் பொழுது – 2 மாத்திரை

என்று சொல்லிவிட்டு இது குறித்த நன்னூலாரின் சூத்திரத்தைப் பகிற்கிறார்

தற்சுட்டு அளபு ஒழி ஐம் மூவழியும் நையும் ஒளவும் முதல் அற்று ஆகும்.

மகரக்குறுக்கம் பற்றி அவர் தொடர்கிறார்.

மகரக்குறுக்கம் = மகரம் + குறுக்கம். ‘ம்’ என்கிற மெய்யெழுத்து தன்னுடைய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாக குறுகி ஒலிப்பது மகரக் குறுக்கம் ஆகும். ‘ம்’ முன்னால் ‘ண்’ அல்லது ‘ன்’ எழுத்து வந்தால், அந்த ‘ம்’ குறுகி ஒலிக்கும். எடுத்துக்காட்டு மருண்ம் (மருளும்), போன்ம் (போலும் என்பதன் மரூஉ), உண்ம், சென்ம். இந்த சொற்களை உச்சரிக்கும் போது மருண், போன், உண், சென் என்ற சொற்களை போல உச்சரிக்க வேண்டும். இது தனிமொழி (ஒரு சொல்) மகரக்குறுக்கம் ஆகும். அதேபோல் ஒரு சொல் ‘ம்’ என்று முடிந்து அடுத்த சொல் ‘வ’ என்று தொடங்கினால், ‘ம்’ குறுகி ஒலிக்கும். எடுத்துக்காட்டு நெல் தரு’ம்’ வயல், வாழு’ம்’ வகை செய்தான். இதற்கு புணர்மொழி(இரண்டு சொல்) மகரக் குறுக்கம் என்று பெயர்,

இதை நூல் ஆசிரியர்கள் இவ்வாறாக கூறுகிறார்கள் என பரணீதரன் சொன்னவை:

ண ன முன் உம் வஃகான் மிசை உம் ம குறுகும் – நன்னூல்

செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்

னகார மகாரம் ஈர் ஒற்றாகும் – தொல்காப்பியம்

அவர் தொடர்ந்து, ஆய்தக்குறுக்கம் பற்றி கீழ்வருமாறு விவரிக்கின்றார்.

ஆய்தக்குறுக்கம் = ஆய்தம் + குறுக்கம். ஆய்த எழுத்து தன்னுடைய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது ஆய்தக் குறுக்கம் ஆகும். ஒரு சொல்லின் கடைசியில் ‘ல்’ அல்லது ‘ள்’ வந்து அடுத்த சொல்லில் ‘த’ வர்க்கம் ஆகிய ‘த’, ‘தா’, ‘தி’, ‘தீ’, ..... ,‘தௌ’ ஆகிய எழுத்துக்களில் ஏதேனும் ஒன்று வந்தால் இந்த ‘ல்’ அல்லது ‘ள்’ எழுத்து, ‘ஃ’ ஆக மாறும். அப்பொழுது அந்த ஆய்த எழுத்து தன்னுடைய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும். எடுத்துக்காட்டு

கல் + தீது = கஃறீது

முள் + தீது = முஃடீது

இதை நன்னூலில் இவ்வாறாக ஆசிரியர் கூறுகிறார் :

லளவீற் றியைபினா மாய்த மஃகும் – நன்னூல்

இதை பிரிக்கும் பொழுது –

ல, ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்

சிறப்புச் செய்தியொன்றையும் பரணீதரன் தருகிறார். மிகவும் சுவாரசியமான கூர் நோக்கு அது.

பொதுவாக நன்னூல் சூத்திரங்களில் பவணந்தி முனிவர் ஒரு விஷயத்தை விளக்கும் பொழுது அதை நாம் சுலபமாக புரிந்து கொள்வதற்காக அந்த சூத்திரத்திலேயே அவர் விளக்க வேண்டிய விஷயத்தை ஒரு சொல்லாக வைத்திருப்பார். அப்படி நாம் அந்த சூத்திரத்தை படிக்கும் பொழுது நமக்கு குழப்பம் இருந்தால் அவருடைய சூத்திரத்தில் உள்ள அந்த சொல்லை பார்த்தால் அவர் என்ன கூற வருகிறார் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும். மேலே உள்ள சூத்திரத்தில் கூட ஆய்த குறுக்கத்தை விளக்க அந்த சூத்திரத்தின் உள்ளேயே ஆய்த எழுத்தை பவணந்தி முனிவர் பயன்படுத்தி உள்ளார்.

எழுத்துக்களின் உச்சரிப்பில் அடுத்துக்கொள்ளப்படும் மூச்சின் அளவே மாத்திரை, நாமும் இந்த சொற்களை உபயோகிக்கையில் அந்த அளவிலான மூச்சையே ஒரு அனிச்ச செயலாகவே செய்கிறோம் என்றார். ஆச்சர்யமாயிருக்கிறதல்லவா?

வட்டார வழக்கில் இந்த மாத்திரைகள் படும் பாடு என்றேன். அது பற்றி வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ள ஒரு அட்டவணையையும் ஒரு சில உதாரணங்களையும் அடுத்த வாரம் பார்ப்போமே என்றார்.