தொடர்கள்
கதை
குட்டி ராமு-கி. ரமணி)

2023021722311048.jpeg

அந்த ஈரம் நிறைந்த ஐப்பசி காலை வேளையில் ஜலதோஷம் பிடிக்க ஆரம்பித்த வானம்,லேசாக தும்மல் போட்டு, கொஞ்சம் மழை நீரை வாரி இறைத்துத் கொண்டு இருந்தது.

நீலாங்கரையில் வீட்டு வாசலில் வந்து ஆட்டோவை நிறுத்தச் சொன்னான் குட்டி ராமு.

பின்னர் ஆட்டோவில் இருந்து வெளியே மழைத் தூறல் துளிகளுக்கு இடையே
குதித்து இறங்கினான்.

தன் இளமையான பெயரைப்
போல தன் வயசும் இருபது தான் என்று நினைப்பு போல.. அந்த எழுபத்திரண்டு வயதுக் கிழவனுக்கு.

அவன்..இவன்..என்று மரியாதையற்ற ஒருமையில் எழுதுறேனே என நினைக்க வேண்டாம். குட்டி ராமு என் ஆதி கால,பரம தோஸ்த்.என்னை விட ஒரு வயசு தான் பெரியவன்.வயதாகி இருந்தாலும் தலையில் ஒரு நரை இல்லை.( சாயமோ?).ஒல்லியான உருவம்.வேட்டி, டீ ஷர்ட், .முகத்தில் அம்மைத் தழும்புகள். அதைக் கொஞ்சம் மறைக்க முயலும் பெரிய கருப்பு கண்ணாடி...தலை முடியை பாலும் பழமும் சிவாஜி போலப் படியப் பின் நோக்கி வாரியிருந்தான்....சிவாஜியின் பரம பக்தன்.

இறங்கி,என்னவோ படு சீரியஸ் ஆக
ஆட்டோக்காரன் தோளில் கை போட்டுப் பேசிக்கொண்டிருந்தான்.

ஆட்டோ உள்ளே இருந்த தன் பெட்டியைக்கூட வெளியே எடுக்கவில்லை. நான் வீட்டு கேட் திறந்து நிற்பதைக்கூடப் பார்க்கல.

மூணு நிமிஷம் பேசி,டிரைவர் முதுகில் தட்டிப் பின் ஐனூறு ரூபாயை அவன் கையில் குடுத்து, அவன் கொடுத்த பாக்கியை கருணையுடன் நிராகரித்து, கேட்டு க்குள் நுழைந்து என்னைப்பார்த்து குட்டி ராமு புன்னகைத்தான்.

ஆட்டோ டிரைவர் ராஜ
விஸ்வாசத்துடன் பெட்டியை மரியாதையாக வீட்டுக்குள் வந்து வராண்டாவில் வைத்துவிட்டு வணங்கிவிட்டு,வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

"டேய் எப்படி டா இருக்கே.! நம்ம கிஷோர் நல்ல பையன் பா. சினிமால நடிக்க, படம் வரைய,ட்ரை பண்றான். நைட் முழுக்க ஆட்டோ ஒட்டறான். ஸ்மார்ட் பாய்.நம்ம பிரன்ட் ஆர்ட் டைரக்டர் கந்தசாமி வழியா டைரக்டர் ஷங்கர் கிட்ட சேத்து விடறேன்னு சொன்னேன். "

" சரி யார் டா அந்த கிஷோர்?.

"இவன் தான். திஸ் பாய். இந்த ஆட்டோ டிரைவர் தான்.வர்றப்போ பேசிட்டே வந்தோம். என் போன் நம்பர் கொடுத்திருக்கேன்.கிஷோர்! பத்திரமா வெச்சுக்கோப்பா!அப்புறம் கூப்பிடு."

"சரி சார் வர்றேன். நிச்சயமா கூப்படறேன். கொஞ்சம் பாத்து செய்யுங்க சார். தேங்க்ஸ். " என்றவாறு கியர் ஏற்றி மறைந்தான் கிஷோர்.

"முன்னமேயே தெரியுமா."

"நோ நோ. இப்ப தான். ஆனா நைஸ் பாய் டா."

இது தான் குட்டி ராமு.

அவனைப்பொறுத்த வரை எல்லாரும் நைஸ் பாய்ஸ் தான்.அஞ்சு நிமிஷ அறிமுகத்தில்
மூன்று பரம்பரையை அலசிவிடுவான்.உதவி கேட்டால் முடிந்தால் தட்டாமல் செய்வான். பின் கர்வம் துளியும் இன்றி செய்ததை மறப்பான்.
நல்ல ஆத்மா என்பார்களே அந்த வகை.
ஆனா நிறைய பேர் பார்வையில், அவசரக்குடுக்கை. சாமர்த்தியம் போறாது, முரடன், பொறுப்பில்லா தவன் என்று பல உருவங்கள்.

ஆனால் மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி குட்டி ராமு என்றைக்குமே கவலைப்பட்டதில்லை.

இரண்டாம் வகுப்பில் இருந்து
எஸ் எஸ் எல் சி வரை எங்கள் ஊர் பள்ளிக்கூடத்தில் ஒன்றாகத்தான் படித்தோம்.
பின்னர் நான் பொறியியல் படிக்க சென்னை போக குட்டி ராமு பி ஏ முடித்து ஒரு பொதுத்துறை வங்கியில் கணக்கராக சேர்ந்தான்.
நான் பொறியியல் முடித்து இந்தியா மற்றும் உலகம் சுற்றி ஓய்வுக்கு பின் நீலாங்கரையில் ஒரே மகன் வீட்டில் என் மனைவியுடன் செட்டில் ஆயாச்சு.

குட்டி ராமு வங்கியில் யூனியன் லீடர் ஆனான். மற்றவருக்கு உதவும் அவனது குணம் இந்த விஷயத்தில் அவனுக்கு உதவியது என்று தான் சொல்ல வேண்டும்.

அதே சமயத்தில் இதனால் அவனுக்கு ஏற்பட்ட தொந்தரவுகளும் நஷ்டங்களும் ஏராளம். நண்பர்களுடன் சினிமா எடுக்கிறேன், டிஸ்ட்ரிபியூட் பண்ணறேன் என்று நுழைந்து கொஞ்சம் சம்பாதித்தான். நிறைய பணமும் இழந்தான்., ( ஒரு துணை நடிகையிடம் ஏராளமாகத் தொலைத்ததாகக் கேள்வி. ஆனால் அவனிடம் நான் கேட்டதில்லை. ) ஊரில் இவன் பேரில் இருந்த வீட்டை விற்று கடனை எல்லாம் கட்டி முடித்தான்.

எல்லாருக்கும் எப்பவும் உதவ வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இவனுக்கு குறைந்ததே கிடையாது.

கை ஓட்டை, சாதாரண ஓட்டை இல்ல. பாதாள மெட்ரோ ரயில் செல்லும் டனல் சைஸ் ஓட்டை.இதனால் மனைவிக்கு அவன் மீது நிரந்தர கோபம் உண்டு.அவள் தனியார் கம்பெனியில் வேலை செய்து சம்பாதித்த பணத்தால் தான் பிள்ளையும் பெண்ணையும் இன்ஜினியரிங் படிக்க வைத்து பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி டெல்லி அனுப்பி பையனை
இங்கிலாந்தில் பொருளாதாரம் படிக்க வைத்து ஒரு இன்வெஸ்ட்மென்ட் பேங்கில் உட்கார வைத்து எல்லாம் முடிந்தது.. என்பது அவளது தீர்க்கமான எண்ணம்.
இந்த விஷயத்தில் என்னால், மற்ற நண்பர்களால் குட்டிக்கு ரொம்பஉதவ முடியல. குட்டியின் நண்பர்கள் என்கிற ஒரே காரணத்தால் எங்களுடன் பேசுவதையே முடிந்தவரை தவிர்த்தாள் அவன் மனைவி.

"ஊருக்கெல்லாம் ஓத்தாசை செய்வார். சொந்தப் பிள்ளைக்கும் பொண்ணுக்கும் பொண்டாட்டிக்கும் ஒன்னும் கிழிக்கல. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
தம்புள்ளை தானே வளரும் என்பதெல்லாம் பெரிய பொய் "என்று ஒரு முறை எங்களிடம் கோபமாகக் கூறியிருக்கிறாள்.
இப்போ மனைவி டெல்லிக்கும் இங்கிலாந்துக்கும் சீசனுக்கு தகுந்த மாதிரி மாத்தி மாத்தி வித விதமான குளிர் ஜாக்கெட்டுடன் போய்க்கொண்டிருக்கிறாள்.

குட்டி ராமுவைப் பொறுத்த வரைக்கும் ஒரு மோசமான கணவனாகவும் தந்தையாகவும் வீட்டில் சித்தரிக்கப்பட்டால் கூட நண்பர்கள் கூட்டத்தில், மிக நல்லவனாக முக்கியமானவனாக கருதப்படுவதாக அவன் எப்பவுமே எண்ணியதால் அதனால் அலாதி பெருமை அவனுக்கு உண்டு.

ஸ்கூல்,காலேஜ் அட்மிஷன், வேலைக்கு சிபாரிசு, கடன் வாங்க உதவி செய்வது, அல்லது தானே பணம் கொடுப்பது, உடல் நலம் குறைந்தவர்க்கு ஆஸ்பத்திரியில் சேர்த்து அங்கேயே இருந்து கவனிப்பது...சாவு என்றால் நால்வரில் ஒருவராய் ஒரு புறம் தூக்கி காடுவரை..என்று என்னென்னவோ உதவிகள் செய்வான். ஆனால் தனக்காக ஒன்று கேட்க மாட்டான். பெருமை அதிகம்.
யார் சொல் பேச்சும் கேட்க மாட்டான்.


நிறய உள்ளூர் வெளியூர் விஐபிக்கள் தனக்கு ரொம்ப தெரிஞ்ச மாதிரி 'அவன் வந்தான்... போனான்..' என்று ஏக வசனத்தில் பேசுவான். அதன் நிஜத்துவத்தை பற்றி இதுவரை யாரும் விவாதித்தது கிடையாது., (நமக்கு ஏன் வம்பு என்றுதான்.).

இப்போது கவலை இல்லை. பேங்க் பென்ஷன் வருகிறது.ஸ்ரீரங்கத்தில் ஒரு சிறிய ஒரு பி ஹெச் கே பிளாட்டில் செட்டில் ஆகிவிட்டான்.குடிப்பழக்கம் ரொம்ப நாளா உண்டு. இப்போ ரொம்ப குறைஞ்சு போச்சு என்று போன முறை பார்த்தபோது கொஞ்சம் வருத்தத்துடன் பெருமைப்பட்டுக்கொண்டான்..

"பழைய ஆள், பிரண்ட்ஸ் யாருமே இப்ப இல்லடா.கிடைக்கிற சரக்கும் நீர்த்துப் போச்சு. முன்ன மாதிரி கிக்கே இல்ல."

கோவில் கைங்கரியம் நிறைய செய்வதாக சொல்லிக் கொண்டான்.

லோக்கல் எம் எல் ஏ, கவுன்சிலருடன் சேர்ந்து நற்பணி மன்றம் நடத்துவதாக சொன்னான். (போன வருஷம் ஐம்பது கலப்பு திருமணம் ஆச்சு. )இதெல்லாம் நடந்து மூன்று வருடம் கழிந்து விட்டது

கொரோனாவுக்கு அப்புறம் இப்பத் தான் போனவாரம் என்னை காண்டாக்ட் பண்ணினான்.

"டேய் அடுத்த வாரம் சென்னை வரேன். ஒரு வாரம் இருப்பேன்.ஒரு புது படத்துக்கான ஸ்டோரி டிஸ்கஷன்இருக்கு. மஹாபாலிபுரத்தில. என் பிரன்ட் சிவா டயலாக் . பெரிய்ய பேனர்.உங்க வீட்டுக்கு வந்து ஒரு நாள் இருக்கேன். வர அன்னிக்கு முந்திய நாள் சொல்கிறேன். என்றான். நேற்று கன்ஃபார்மும் பண்ணினான்.

ராத்திரி பையனிடம் சொன்னேன்.
"கார்த்திக்,நாளைக்கு என் ஓல்ட் ஃப்ரெண்ட் நம்ம குட்டி ராமு ஞாபகம் இருக்கா. அவன் வராம்பா. ஒரு நாள் இங்க இருப்பான். மாடியில் நானும் அவனும் தங்கறோம் சரியா,"

லேப்டாப்பில் மூழ்கி இருந்த மகன்.
ஓகே பா. ஆஸ் யூ ப்ளீஸ்.அப்புறமா ஐ வில் ஸே ஹலோ டு தட் அங்கிள்."

அவன் யார் என்று புரிந்து கொண்டானா. இல்லையா.. ஒன்றும் தெரியவில்லை. அப்படி அவனுக்குத் தெரிந்து தான் நான் என்ன பண்ணப் போகிறேன் என்று விட்டு விட்டேன்.

நம் பிள்ளைகளுடைய டிஜிட்டல் ஸ்மார்ட் உலகில் நம் நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் அந்நியர்கள்.

ஐந்து நிமிட உரையாடலில் புன்சிரிப்புடன் மரியாதை காட்டி, கொட்டி,உபசரித்து, பின் முழுசாக மறக்கப்பட வேண்டியவர்கள்.

என் பிள்ளை கார்த்தி ஒரு வெற்றிகரமாக இயங்கும் அமெரிக்க நிறுவனத்தின் சி.இ.ஓ நிலையில் இருக்கிறான். பி. டெக்
முடித்து ஏகப்பட்ட போட்டியில் வேலை கிடைக்குமா என தவமிருந்து ஜெயித்து நிறுவனதுக்குள் இளம் பொறியாளனாக நுழைந்து இருபது வருஷத்தில் அசுர வளர்ச்சி. அவனுக்கும் நிறுவனத்துக்கும்தான்.

இன்றைய நிலையில் அவனுடன் ஐந்து நிமிஷம் பேச, ஒரு நாள் முன் சம்மதம் வாங்கணும்( என்னையும் சேர்த்துதான்!)என்பது போல ஒரு எப்ப பார்த்தாலும் பிஸி ஆள்.

நாற்பத்தி இரண்டு வயதில் தன் நிறுவனத்தை மட்டுமே திருமணம் செய்துகொண்டு அதற்கு இந்தியாவில் நிறைய கிளைகள் பெற்றுக்கொடுத்தவன்.கம்பெனி வீடு கொடுத்திருக்கிறது. வீட்டு வேலைக்கு இரண்டு பேர் + கார்+ டிரைவர் + வாட்ச்மேன் என்று ஏக தடபு டல்தான்.

சரி, குட்டி ராமு பற்றிய குட்டி ஃப்ளாஷ் பேக் பாத்தாச்சு.கார்த்திக் பற்றி ஒரு அவுட் லைன் ஆயாச்சு.

குட்டி ராமு வீட்டுக்குள் வந்தான். என் மனைவி கமலா எதிரில் வந்து " வாங்கோ, வாங்கோ, பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.
மல்லிகா எல்லாரும் ( ராமு மனைவி) சௌக்கியமா?" என்றாள்.
"யாருக்குத் தெரியும்.?ஆனா அவ எப்பவுமே சௌக்கியமா தான் இருப்பா. என்ன கேடு அவளுக்கு?"

மல்லிகா பற்றிய பேச்சைத் தவிர்த்து இருக்கலாமோ என்று என் மனைவி எண்ணியது அவள் முகத்தில் தெரிந்தது.

குட்டி ராமு தொடர்ந்தான்.

" ஆமாம் கமலா, நீ என்ன இவ்வளவு வெயிட் போட்டுட்ட. வயசு 60க்கு மேல ஆகுது இல்ல. பிரஷர் சுகர் ஒன்னும் இல்லை என்று சொல்லாதே. நிச்சயம் குறைக்கணும் வெயிட்ட. நான் ஒரு யோகா தெரப்பி சஜஸ்ட் பண்றேன். அத பண்ணு."

கமலா பயங்கர எரிச்சல் கலந்தபுன்னகையுடன்
" ஓ.வேல கிடக்கு.உள்ளே போறேன்.
கைகால் எல்லாம் வாஷ் பண்ணிட்டு
சாப்பிட வாங்க. "

என்று இடத்தை விட்டு அகன்றாள்.

குட்டி ராமு செம்ம ஃபார்ம் ல இருந்தான். சப்தம் போட்டு பாடிக்கொண்டு பாத்ரூமில் குளித் தான். விபூதி அணிந்து பூஜைக்கு ரெடி ஆனான்." புஷ்பம் எல்லாம் எங்கே?கமலாவைக் கூப்பிடு" என்றான்.

"அவ பிஸி டா. வீட்டு வாசல்ல தோட்டத்துல அரளி பவளமல்லி முல்லை எல்லாம் இருக்கு. சர்வன்ட் கிட்ட பறிச்சுத் தர சொல்றேன்."

" என் பூஜைக்கு வேலைக்காரி எதுக்குடா பூ பறிக்கிறது. அப்புறம் பாதி புண்ணியம் அவளுக்கு போயிடும் " என்று ஏதோ பெரிய ஜோக் சொன்னமாதிரி சிரித்தான்.

ஒரு பூ பாக்கி இல்லாமல் அரளிச்செடி, முல்லைக்கொடி எல்லாத்தையும் மொட்டையாக்கி விட்டான். கீழே விழுந்திருந்த எல்லா பவழமல்லிப் பூவையும் பொறுக்கி விட்டான்.

கிட்டத்தட்ட ஒரு கூடை பூவை சன்னதியில் வைத்து, ஒரு பெரிய சொம்பில் பால், ஒரு சீப்பு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு குங்குமம், மஞ்சள், உடைத்த தேங்காய் எல்லாத்தையும் கேட்டு வாங்கி வச்சு சத்தம் போட்டு அர்ச்சனை செய்தான். திருவாசகம் ஓங்கியகுரலில் சுமாரான சுருதி சுத் தத்தில் பாடினான்.

" நீ பண்றதுக்கு பேரு பூஜையா?யாகமா?" என்றேன்.
அவன் பதில் சொல்லவில்லை.

காலை உணவுக்குப்பின் தோட்டம் சென்று ஆராய்ந்தான்.
"டேய் கண்ணா வாடா" என்று என்னை அழைத்தான்.
"இவ்வளவு இடம் இருக்கு தோட்டத்தில. ஒரு பசுமாடு கன்னுக்குட்டி வாங்கிக் கட்டு டா.
புண்ணியத்துக்கு புண்ணியம் ஆச்சு
பாலுக்கு பாலும் ஆச்சு . சாணியை சேத்து கோபர் காஸ் பிளான்ட் போடலாம் பக்கத்திலேயே.ஃபியூல் சேவ் ஆகும்."

"டேய் குட்டி. மடத்தனமாப் பேசாதே. இங்க அதெல்லாம் முடியாது."

"ஏண்டா முடியாது. வீட்டுக்கு பின்னாலே மேற்கு பக்கம் கொட்டில் கட்டி,பசு வீட்டை பார்த்து நிக்கற படி கட்டணும். வாஸ்துக்கு இவ்வளவு பண்ணினா போதும்.பணம் கொட்டும். சுபிஷம் நிறையும். பையனுக்கு கல்யாணம் ஆகி பேரன் பொறப்பான்."

" கார்த்திக் காதுல விழுந்தா என்ன உதைப்பான்.வீடு கம்பெனி லீஸ்ல எடுத்தது. இந்த கொரியன், ஆஸ்ட்ரே லியன்கிராஸ், க்ரோடன்ஸ் இப்படித்தான் இருக்கும்.எதையும் மாத்த முடியாது.

"ரெண்டு நல்ல மா, சப்போட்டா கன்னு கூட நடக்கூடாதா. நர்சரில நான் வாங்கி வெக்கறேன்."

"நாளைக்கு கார்த்திக் கிட்ட கேட்டு சொல்றேன் டா "என்று குட்டியை சமாளித்தேன்.

கமலா ரொம்ப எங்க பக்கம் வரல. அப்பப்போ அகஸ்மாத்தாக குறுக்கிட நேர்கையில் கச்சிதப் புன்னகையுடன் ஒதுங்கிவிடுவாள்.

மதிய உணவை எனக்கும் குட்டிக்கும் சமயல் பணியாளர் பரிமாறினார்.

சாப்பிட்டு வாசலுக்கு வந்த போது
கமலாவின் மேற்பர்வையில் வாசல் வராண்டா க்ரில் மீது அமைக்கப்பட்டிருந்த கூடு ஒன்றை
பணிப்பெண் எடுத்துக்கொண்டிருந்தாள். குட்டி வேகமாய் அங்கு சென்று
" என்னம்மா அது? " என
" அணில் கூடு கட்டிருச்சு சார். பக்கத்து தென்ன மரத்திலேந்து வருது. அங்க பாம்பு காக்கா வந்து குஞ்ச எடுத்துடும்னு இங்க வந்து கூடு கட்டுது. இந்த இடம் எல்லாம் அசிங்கம் ஆவது னு அம்மா தான் இத்த எடுத்துட சொல்லிச்சு.செத்த தள்ளி கூட்டை வைக்க போறேன். ".

" ராமனுக்கே பாலம் கட்டின அணில் மா. அதுக்குத் தன் கூட்ட எங்க கட்டணம்னு தெரியாதா?அணில் ஒரு வீட்டுல கூடு கட்ட வீட்டுக்காரங்க புண்ணியம் பண்ணி இருக்கணும்.

நீ மாற்றி வைக்கற இடத்த அணில் ஒத்துக்காதும்மா. பாவம் குஞ்சுகள் எல்லாம் சாகப்போகுது" என்று குட்டி ஒரு பிரசங்கம் செய்து பயமுறுத்த, தயங்கி நின்ற பணிப்பெண்ணை கூட்டை விட்டுவிலகச் சொன்னாள் கமலா.
குட்டி மாடிக்கு சென்றதும் என்னை அழைத்து கமலா,
" பேசாம உங்க நண்பரை நம்ம வீட்டிலேயே இருந்துடச் சொல்லுங்க.
வேற ஆளே வீட்டில் வேண்டாம். எல்லா வேலையும் அவரே செஞ்சிடுவாரு போல. " என்று கூறி பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட்டாள்.

அன்று இரவு மாடி அறையில்
"உன்ன பார்த்தது ரொம்ப குஷியா இருக்குடா. ஆனா நீ குடிக்க மாட்ட.
சரி நான் கொஞ்சம் ஏத்திக்கிறேன்.!"

என்று கூறி தன் பெட்டியில் இருந்து
ஒரு அரை விஸ்கி (ஊர் பேர் தெரியாத லேபிளுடன் ) பாட்டிலை எடுத்து தண்ணீர் கலந்து அமோகமாகக் குடிக்க தொடங்கினான்.

"இந்த நாளை மறக்கவே மாட்டேன் அவ்வளவு சந்தோஷமா இருக்குடா!" என்றான். குடிப்பதைத் தொடர்ந்தான்.
பழைய காலம் பற்றி நிறைய பேசிக்கொண்டே இருந்தான்.
"இருந்தோம் "என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

ஐந்தாவது ரவுண்டில் அவன் கில்லி எகிறியது. அடைப்பு நீங்கிய ஷவர் போல பளிச் என்று ஏகமாக அடி வயிற்றிலிருந்து எடுத்து,வெளியே
கொட்டி ,மாடி வராண்டாவை
வாந்தி மயமாக்கினான்.

சத்தம் போடாமல் கீழே சென்று துணி எடுத்து வந்து நானே எல்லாவற்றையும் சுத்தம் செய்து விட்டேன். குட்டி ராமு அங்கேயே குப்புறப் படுத்துத் தூங்கிவிட்டான்.

காலையில் நான் முதலில் எழுந்து விட்டேன். குட்டி ராமு தூங்கிக் கொண்டிருந்தான்.

பல் விளக்கிக் கொண்டிருக்கும்
போது கார்த்திக் வந்தான்.

"ஏம்பா! உங்கள் நண்பர்
நேத்து நைட் பயங்கர ஹை போல.
இப்போ வாசல் பக்கம் நான் வாக்போற போது செம வாந்தி நாத்தம். போடறது தான் போடறார் அட்லீஸ்ட் கொஞ்சம் நல்ல சரக்காவானும் போடக் கூடாதா.? கொஞ்சம் விவேகத்தோட நடந்துக்கிறது எல்லாருக்கும் நல்லது தானே பா. வயசு வேறு நிறைய ஆவுது." என்று சிரித்தான்.

" இல்லப்பா " என்று நான் பூசி மொழுகுவதற்குள் குட்டி ராமு எழுந்து கீழே இறங்கி வந்து விட்டான்.

, "ஹலோ கார்த்திக்.என்னை ஞாபகம் இருக்கா பா" என்று குட்டி கையை
நீட்ட விரல் படுவது தெரியாமல் வெகு நாசுக்காகக் கை குலுக்கிய கார்த்திக்,
"ஹவ் ஆர் யூ அங்கிள்?' என்று பொதுவாக விசாரித்தான்.

"ஃபைன் பா. உன்னப் பத்தி எல்லா விஷயமும் எனக்கு தெரியும். சீக்கிரமா ஒரு கல்யாணம் மட்டும் பண்ணிக்கிட்டா நல்லா இருக்கும்.
அம்மா அப்பாக்கு பேரப்புள்ள வேண்டாமா? "

கார்த்திக் வெறுமே சிரித்தான். கொஞ்சம் கடுப்பு முகத்தில்
தெரிந்தது.

"ஒரு விஷயம் கார்த்திக்.என் நண்பன் சேகர் பையன் திருச்சில B.E முடிச்சுட்டு ரெண்டு வருஷமா கோவிட்னால வேலை இல்லாம இருக்கான். கொஞ்சம் சொல்லி உன் கம்பெனியில் எடுத்துக்கப் பாரேன். நல்ல பையன்.,"என்றான் குட்டி.

கார்த்தி சிறிது நேரம் குட்டியையே பார்த்தான். பின் மெதுவாக
" அங்கிள். இந்த மாதிரி யாரையோ
சந்தோஷப்படுத்த, உங்களுக்கு ரொம்பத் தெரியாத ஒரு பையனை,
தெரிந்த கம்பெனி அதிகாரியிடம் தள்ளி விடலாம் என்கிற முயற்சியை எல்லாம் விடுங்க.இப்போ உள்ள காலம் வேற. ஒவ்வொருத்தனும் தன்
திறமையைத் தானே நிரூபிக்கணும்.
இன்னொருத்தர் தோள்ல பயணம் செய்யற காலம் எல்லாம் மலை ஏறியாச்சு. இதெல்லாம் விட்டுட்டு நிம்மதியா வாழ்க்கையை நல்லா என்ஜாய் பண்ணக் கத்துக்கங்க.." என்றான்.
பின் "அங்கிள். நீங்க இங்க இன்னும் சில தினங்கள் இருப்பதாக பிளான் இருக்கா?. "என்றான்.

குட்டி ராமு " தேங்க்ஸ்ப்பா கார்த்திக்.
ரொம்ப நாளாச்சே உங்க அப்பாவை பார்த்து என்று தான் ஒரு நாள் இருப்பது மாதிரி இங்க வந்தேன். நான் கிளம்பிட்டே இருக்கேன். ஒரு ஆட்டோ மட்டும் வாட்ச் மேன் ஐ கொண்டுவர சொல்லு,பெசன்ட் நகருக்கு. "
மாடிக்கு சென்று தன் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தான் குட்டி ராமு.

ஆட்டோ வந்தது.

கமலாவைக் கூப்பிட்டேன். வந்தாள்.
"சரி நான் வரேன் "என்று எல்லாருக்கும் டாடா சொல்லிப் பெட்டியுடன் கிளம்பிவிட்டான் குட்டி ராமு.

கார்த்திக் பிறகு மெல்ல ஆரம்பித்தான்.

"அப்பா! நான் அங்கிள் கூட பேசின முறை வேணா இன்னும் கொஞ்சம்
ஜென்டில் ஆக இருந்திருக்கலாம்.
ஆனா பேசின விஷயம் சரி இல்லையா? சம்மந்தம் இல்லாமல் யாரோ ஒருவருக்கு உதவுவதாக நினைத்துக்கொண்டு இவர் செய்வது யாருக்கும் சரி என்று எனக்குப் படவில்லை."

கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தேன்.
"ஒவ்வொருத்தர் கருத்தும் வெவ் வேறு விஷயங்களில் வித்யாசமாக இருக்கலாம். அதைப்பற்றி ஒன்றும் இல்லை.உன் கருத்து குட்டி ராமுவின் கருத்தாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் சில சமயம், இப்படிப்பட்ட ஒரு விஷயத்தில் நாமே சம்மந்தப்பட்டிருந்தால் நம் கருத்து வேறு படலாம் இல்லையா?
உதாரணமாக நீ.. உயிராய் மதிக்கும், இன்று சி. இ. ஓ ஆக இருக்கும் உன் அலுவலகத்தில் , அன்று பல வருஷம் முன் நீ புதிதாய் சேர்வதற்கு ,உன்னைப்பற்றி ஒன்றும் தெரியாத ஒருத்தர் சிபாரிசு செய்ய வேண்டி இருந்தது இல்லையா?"

கார்த்திக் சற்று யோசித்து சொன்னான்.
"ஆம் அப்பா. அன்று நான் இந்த நிறுவனத்தில் எப்படியாவது சேரணும் என்று முயன்றேன்.
எக்கச்சக்க காம்பெட்டிஷன்.இரண்டு போஸ்ட்க்கு 50 பேர் ட்ரை பண்ணோம்.
அப்போ நீங்க சொல்லி உங்க நண்பர்
மிஸ்டர் ராமகிருஷ்ணன்,அவருடைய
நண்பரான எங்கள் பழைய வைஸ் ப்ரெசிடெண்ட் துவாரக் நாத் கிட்ட சொல்லிதான் நான் செலக்ட் ஆனேன் என்று தெரியும்.
ஆனால் அதற்கும் இன்றைய நடப்புக்கும் என்ன சம்மந்தம்?" என்றான்.

"நீ என் நண்பன் ராமகிருஷ்ணனை அப்போ பாத்திருக்கியா?"

"இல்லப்பா. பட் ஐ வோ எ லாட் டு ஹிம்."
"நல்லது " என்ற நான் தொடர்ந்தேன்.

"குட்டி ராமு என்று நாங்கள் அழைக்கும் நண்பனின் பெயர் தான் ராமகிருஷ்ணன்.,"