மயிலாப்பூர் திருவிழா முடிந்து அதன் பின்னாலே நடந்த இந்த ஓவியத் திருவிழா மக்களையும், ரசனையையும் ஒன்று சேர்த்தது.
" மயிலாப்பூர் டைம்ஸ்" பத்திரிக்கை நிறுவனர் வின்சென்ட் டிசோசா மற்றும் கணபதி ஆகிய இருவரின் முயற்சியால் கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்து வந்த இக் கண்காட்சி கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகள் நடை பெறாமல் இருந்தது.
இந்த வருடம் எழுபத்தைந்து ஓவியர்கள் கலந்து கொண்டனர். இதில் மகிழ்ச்சியான விஷயம் அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் பலர் வெளியூரிலிருந்து வந்து கலந்து கொண்டது இன்னும் சிறப்பான ஒன்று.
தேனியில் இருந்து வந்திருந்த இரு ஓவியர்கள் நம்மைக் கவர்ந்தனர். ஒருவர் பாலசுப்ரமணியன் , சிவனடியார் தோற்றத்தில் எல்லாரையும் தன் பக்கம் பார்வையை திரும்பச் செய்தவர். அவரைப் போலவே அவரது ஓவியமும் மிகவும் வித்தியாசமாக பல பணிகளின் கலவையாக அற்புதமாய் மிளிர்ந்தது.
அடுத்தவர் சிவபாலன் இளவயது ஓவியரான இவரின் சிறப்பு நமது தமிழ்நாட்டு கிராமங்களின் கலாச்சாரம் கோவில்கள் ஆகியவற்றை நீர் வண்ண ஓவியமாக வரைவது குறிப்பாக இப்போது பார்ப்பதற்கு அரிதாக போயிருக்கும் பூம்பூம் மாடுகள் இவரின் தனிச்சிறப்பு.
கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் பயின்ற இவர் கும்பகோணம் கோயில்கள் தாராசுரம் கங்கைகொண்ட சோழபுரம் போன்ற பலவற்றை தனது தூரிகையால் உயிர் பெற்று எழச்செய்திருக்கிறார்.
விகடகவியில் சாதனைப் பெண்கள் தொடரில் நம்மோடு பேசி இருந்த இனியாள்,
தனது (ரெசின் )மெழுகு சிற்பங்களை காட்சிப்படுத்தியிருந்தார்.
கண்காட்சியில் பலரையும் கவர்ந்தது மணல் கொண்டு வரைந்திருந்த ஓவியங்கள் தான். அற்புதமான துல்லியத்துடன் ,முக பாவங்களை காட்சிப் படுத்தியிருந்த விதம் எல்லோரையும் வியக்க வைத்தது.
வருடத்திற்கு ஒரு முறை அல்லாமல் , மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இதனை நடத்தினால் நன்றாக இருக்கும் என பார்வையாளர்களும், ஓவிய ஆர்வலர்களும் ஏன் ஓவியர்களும் பிரியப்பட்டார்கள். நம் விருப்பமும் அது தான்...
Leave a comment
Upload