தொடர்கள்
தொடர்கள்
சென்னை மாதம் - 69.-ஆர் . ரங்கராஜ்,

பஞ்சேஷ்டி (பஞ்செட்டி) யில் நடந்த அதிசயம்

20230027171923106.jpg
(காஞ்சி நகரை ஆண்டு வந்த பேரரசன் மித்தர துவசன் பஞ்சேஷ்டியில் அகத்தியரை பூஜித்துக்கொண்டு பிரதோஷ விரதமிருந்தான். குசஸ்தலை ஆற்றங்கரையில் உள்ள வனத்தில் அரசன் நடந்து போகும்போது காப்பாற்று காப்பாற்று என்ற குரல் கேட்டது. அரசன் உருவிய வாளோடு ஓடி வர, ஒரு பிராமணனைப் புலி கீழே தள்ளியிருப்பதைக் கண்டான். "அரசன் புலியைத்தடுத்து, எலும்புந்தோலுமாக இருக்கும் இப்பிராமணனைக் கொல்லாதே என்றான். புலி மனிதரைக் கொன்று தின்பது என்பது என்னுடைய தர்மம். எனக்குக் கண் தெரியாது. இந்த மனிதனை விட்டுவிட்டால் மூன்று நாட்களாகப் பட்டினி கிடக்கும், என்குட்டிகள் செத்துப் போய்விடும். நானும் சாவேன், அதற்கு என்ன சொல்கிறாய் என்று கேட்டது. புலியே இவரை விட்டுவிடு; அவரைவிட நான் நல்ல உணவாவேள், வேதியனைக் காப்பாற்றுவதற்கு உயிரைக் கொடுத்தால், நான் நல்ல கதியே அடைவேன். ஆனால் ஒரு வேண்டுகோள் பஞ்சேஷ்டி பெருமானை அர்ச்சிப் பதற்காக வில்வதளங்களைப் பறிந்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது பிரதோஷ காலம் பகவானைத் தரிசித்து வந்து விடுகிறேன். பிறகு என்னைக் கொன்று உன் குட்டிகளுக்கு ஆகாரமாகக் கொடுத்துவிடு என்றான். புலியும் சம்மதித்தது. வேதியர் எழுந்து ஓடி விட்டார். மித்திரதுவசன் அகத்திய தீர்த்தத்தில் மூழ்கி, பிரதோச கால தரிசனம் செய்து வில்வபத்திரத்தைப் பெற்றுப் புலியிடம் போனான். அவனைக் கொல்ல புலி தயங்கியது).

"உன் சத்தியத்தைப் பார்த்தே திருப்தி அடைந்துவிட்டேன் என்று புலி தெரிவித்தது. பசியோடு இருக்கும் கிழப்புலியான உனக்கு ஆகாரமாவதில் எனக்கு முழுசம்மதம் என்று அரசன் மித்திரதுவசன் கூறினான். நான் நல்ல உணவாவேன். என்னைக் கொன்று உன் குட்டிகளுக்கு ஆகாரமாகக் கொடுத்துவிடு என்றான்.

என்னை உண்பாயாக எனக் கூறிப் புலியின் வாயில் தன் தலையைக் கொடுத்தான் மித்திரதுவசன். அந்தச் சமயத்தில் புலி மறைந்தது!

விண்ணிலே சிவபெருமான் காட்சி தந்து வரங்களைக் கொடுத்து மறைந்தார்.

மித்திரதுவசன் பல்லாண்டு காலம் காஞ்சியிலிருந்து தர்மம் தவறாமல் செங்கோல் செலுத்தினான் என்கிறது பஞ்சேஷ்டி (பஞ்செட்டி) வரலாறு.
20230027172103362.jpg
தன்னுடைய நாட்டில் உள்ள மக்கள் பசியால் வாடக் கூடாது என்று மட்டும் எண்ணாமல் காட்டில் வாழும் புலியின் பசியைக்கூடத் தீர்க்க வேண்டும் என்ற புண்ணியபுருஷன் பூஜித்த இடம் பஞ்சேஷ்டி எனவே இது ஒரு அன்னதான க்ஷேத்திரமாகக் கருதப்படுகிறது. ஒருபிடி அன்னத்தைத் தானமாகக் கொடுத்தாலும் இத்தலத்தில் நாம் பிறவிப் பெரும் பயனை அடைய முடியும். இது போல் ஆலயத்தைக் குறித்து மேலும் பல வரலாறுகள் உள்ளன.

கோயிலின் வரலாறு 1000 ஆண்டுகளுக்கும் மேலானது. கோயிலின் பின்னணியில் உள்ள புராணம் என்ன சொல்கிறது என்றால் -- ஒருமுறை வசிஷ்டர், கௌதமர், கள்வர் ஆகிய மூன்று முனிவர்களும் தவம் செய்ய இடம் தேடினர். அவர்கள் பிரம்மாவிடம் சென்று, அப்படியொரு இடத்தைத் தங்களுக்குக் காட்டும்படி வேண்டினார்கள். பிறகு பிரம்மா தர்ப்பைப் புல்லால் ஒரு சக்கரத்தைச் செய்து அதைச் சுருட்டினார். அது சுருண்டு ஒரு இடத்தில் ஓய்வெடுத்தது, பிரம்மா குறிப்பிட்ட இடம் அவர்கள் தவம் செய்ய ஏற்றது என்று சுட்டிக்காட்டினார். பிரம்மா சுட்டிக்காட்டிய இடம் இந்த பஞ்சேஷ்டி என்று நம்பப்படுகிறது

பஞ்ச் என்றால் ஐந்து மற்றும் இஷ்டி என்றால் யக்ஞம். புராணங்களின்படி, சுகேது என்ற ஒரு 'யட்சன்' (அரக்க அரசன்) இருந்தான், அவர் சிவன் மற்றும் பார்வதியிடம் தனது ஆணவத்தைக் காட்டியதற்காக அசுரனாகப் பிறக்குமாறு சுப்ரமணியரால் சபிக்கப்பட்டார். பின்னர் சுகேது ஒரு அசுரப் பெண்ணை மணந்து மூன்று ஆண் குழந்தைகளைப் பெற்றான். தந்தையின் சாபத்தை அறிந்த இந்த சிறுவர்கள் பார்வதி தேவியை நோக்கி தவம் செய்து சக்தி பெற்றனர். பின்னர் அவர்கள் தங்கள் பலத்தால் தேவர்களை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். தேவர்கள் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் அகஸ்தியரை சுகேதுவிற்கு பாடம் புகட்டுமாறு பணித்தார். இதற்கிடையில் சுகேது மூன்று அசுரர்களுடன் நடந்த போரில் தோல்வியடைந்து கடலுக்கு அடியில் மறைந்தான். சுகேதுவின் மகன்கள் கடலுக்குள் அவனது தந்தையைத் தேடிச் சென்றதால் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுகேதுவின் குறும்பு மகன்களை அடக்க அகஸ்திய முனிவர், கடல் முழுவதையும் குடித்தார், இதனால் மூன்று மகன்களையும் சுகேதுவையும் தனது வயிற்றில் சிக்க வைத்தார். பூமி வறண்டு போனதால், கடலை மீட்டெடுக்கும்படி தேவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அகஸ்திய முனிவர் கடலை அதன் இடத்தில் மீண்டும் துப்பியதன் மூலம் கடலை மீட்டார். அவர் பஞ்சேஷ்டியில் தனது வாயில் எஞ்சியிருந்த தண்ணீரையும் துப்பினார். கோயிலில் உள்ள குளம் 'அகஸ்திய தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.

சுகேதுவும் அவரது மகன்களும் அகஸ்திய முனிவரிடம் தங்களை மன்னித்து தங்கள் சாபத்தில் இருந்து விடுபடும்படி மன்றாடினர். அவர்கள் சாப விமோசனம் பெற, அகஸ்தியர் முனிவர் இங்கு தேவ யாகம், பிரம்ம யாகம், பூத யாகம், பிதுர் யாகம், மனுஷ யாகம் என 5 யாகங்களை நடத்தினார். எனவே இந்த இடம் பஞ்ச இஷ்டி என்று பெயர் பெற்றது, இது பின்னர் பஞ்செஷ்டி என்று மாறியது, இப்போது பேச்சுவழக்கில் பஞ்செட்டி என்று அழைக்கப்படுகிறது.

சென்னை பாரிமுனையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். சென்னை பாடி ஜங்ஷனிலிருந்து கொல்கத்தா நெடுஞ்சாலையில் பயணித்துக் காரனோடை மேம்பாலத்தைத் தாண்டினால், தச்சூர் கூட்டு ரோடு வரும். அங்கிருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ள பஞ்சேஷ்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வலப்பக்கம் உள்ள பாதையில் நடந்து ஆலயத்தை அடையலாம். சென்னை பாரிமுனையிலிருந்தும், ரெட்ஹில்சிலிருந்தும் மாநகரப் பேருந்துகள் மற்றும் உள்ளூர் பேருந்துகள் பஞ்சேஷ்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.

(தொடரும்)

-- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com)