சமீபத்திய வாட்சப் ஃபார்வேடு ஒன்று எம்.பி.ஏ படித்த பட்டதாரி மத்திய பிரதேச மாநிலத்தில் தெரியாத கல்யாண வீட்டில் சென்று சாப்பிட்டு மாட்டிக் கொண்டதால் பாத்திரம் தேய்க்க விட்டார்கள் என்று அதை வீடியோவாக வேறு எடுத்து போட்டிருக்கிறார்கள்.
அந்த மாணவர் செய்தது தவறா இல்லையா என்பது விவாதத்திற்குரிய கேள்வியாகவே இருக்கட்டும். தெரியாத கல்யாண வீட்டில் சென்று சாப்பிடுவது அவ்வளவு குற்றமா ???
விகடன் மாணவ பத்திரிகையாளனாக இருந்த போது இப்படி ஒரு யோசனையை செய்து அதை கட்டுரையாகவும் ஆக்கியிருக்கிறேன்.
மயிலாப்பூரில் என் நண்பன் சதீஷ் மற்றும் புகைப்படத்திற்கு சிவபெருமாளை அழைத்துக் கொண்டு சென்ற அனுபவம் நினைவிருக்கிறது. அந்த கட்டுரை நகல் இல்லை. ஆனால் நன்றாகவே வந்திருந்தது அந்தக் கட்டுரை. படங்கள் கூட எல்லாம் ஓகே. ஆனால் சதீஷ் கல்யாண பையனை சந்திக்கும் போது அந்த பையன் சிரித்து கைகொடுத்து விட்டான். யார் என்று தெரியா விட்டாலும் எல்லோருக்கும் சிரித்து கைகொடுப்பது தானே மாப்பிள்ளையின் ரோல். அந்த ஒரு படத்திற்காகவே அதில் நேடிவிடியோ அல்லது இயல்பு தன்மையோ இல்லை என்று விகடனில் அதை வெளியிடவில்லை.
ஆனால் இதே ஐடியா இரண்டு வாரம் கழித்து குமுதத்தில் வேறொருவர் எழுதி வந்தது.
அது போலவே என்னுடைய அத்தை கல்யாணத்தில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரை கவனித்து விட்ட பரிமாறும் ஆள் ஒருவர் நீங்க பெண் வீடா பையன் வீடா என்று கேட்க அவர் கூலாக நல்லாருக்கே கல்யாண வீடுன்னா நாலு பேர் வந்து சாப்பிட்டு தான் போவாங்க. யார் வீடும் இல்லை என்றார் அலட்டிக் கொள்ளாமல். அவரை சாப்பிட விட்டதாகத் தான் நினைவு.
இதெல்லாம் மத்திய தர குடும்பத்தின் கல்யாண வீடுகளில் தான். மேல் தட்டு கல்யாண வீடுகளில் கொஞ்சம் டீசண்டாக இருந்தால் போதும். யார் என்னவென்று கேட்பதில்லை. என்னுடைய நண்பர்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் தெரியாதவர்களின் கல்யாணத்தில் பெரிய பெரிய மண்டபங்களில் ஜம்மென்று போய் சாப்பிட்டு விட்டு வருகிறார்கள்.
எனக்கு தெரிந்தவர்கள் கல்யாணத்தில் போய் சாப்பிடுவதற்கே கூச்சமாக இருக்கும். அது வேறு விஷயம்.
மீண்டும் மத்தியபிரதேசத்திற்கு வருவோம்.
அந்த எம்.பி.ஏ. மாணவர் செய்தது தவறு என்றே வைத்துக் கொள்வோம். அதை வாட்சப்பில் வீடியோ எடுத்து அவரை அவமானப்படுத்துவது என்ன நியாயம் ?? ஒரு வேளை சோறு தின்றதற்கு வாழ்நாள் முழுவதும் அவர் அந்த அவமானத்தை சுமந்து திரிய வேண்டுமா ??
இப்படி ஒரு தனிப்பட்ட மனிதரின் சுயமரியாதையை சேதப்படுத்தி விட்டு என்ன மாதிரி கல்யாணத்தை நடத்துகிறார்கள். கல்யாண வீடுகளில் கெட்டி மேளம் அடிப்பதுவே எந்தவித அமங்கல சொற்களும் கேட்டு விடக் கூடாது என்பதினால் தான். இப்படி ஒருவரை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி ஊருக்கெல்லாம் சாப்பிட்டது ஏதோ கேவலமான செயல் என்று அவர் வாழ்க்கையை கெடுத்து அவரது மனதில் என்ன விதமான எதிர்மறை எண்ணங்கள் தோன்றியிருக்கும். இது தேவையா ??
கையில் செல்பேசி இருப்பதால் எல்லாவற்றையும் வைரலாக்கி விட வேண்டும் என்ற இந்த வெறியை எப்படி தணிப்பது ??
Leave a comment
Upload