தொடர்கள்
தொடர்கள்
தொலைக்காட்சி  கொத்தடிமைகள்- எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

20220816184805918.jpg

நிலா டிவி தனிக்காட்டு ராஜாவாக தமிழ்நாட்டில் கோலோச்சிக்

கொண்டிருந்த போது அஜய்டிவி 1999ல் தனது ஒளிபரப்பை ஆரம்பித்தது.

அஜய்டிவியின் ஆண்டு விளம்பர வருமானம் 746கோடி ரூபாய். நிலா டிவி, அஜய் டிவியை தொடர்ந்து க்ளைடாஸ்கோப் டிவி, இஸட் டிவி தமிழகத்தில் கடை விரித்தன,

நுங்கம்பாக்கத்தில் நான்கு மாடி கட்டடமாய் நிமிர்ந்திருந்தது அஜய்டிவி.

தரைத்தளத்தில் அலுவலகம். மீதி நான்கு தளங்களில் இருபதுக்கும் மேற்பட்ட

செட்டிங்குகள் போடப்பட்ட ஷுட்டிங் ஸ்பாட்கள்.அனைத்து செட்டுகளுக்கும் பொதுவாக வெளியே ஏழெட்டு கயிற்றுக்கட்டில்கள் போடப்பட்டிருந்தன. கயிற்றுக்கட்டில்களுக்கு இடையே கம்பியில் கோர்க்கப்பட்ட டார்டாய்ஸ் சுருள்கள் புகைந்து கொண்டிருந்தன. ஒரு மர ஸ்டூலின் மேல் குடிநீர் குழாய் இணைக்கப்பட்ட வாட்டர்கேன்,

முதல் கயிற்றுக்கட்டிலில் இளைப்பாறிக் கொண்டிருந்தான் சிபாகா

ஆராவமுதன் வயது 44. உயரம் 170செமீ தலைகேசத்தை வகிடு எடுக்காமல் தூக்கி பின்னுக்கு படிய வாரியிருந்தான். இளித்த முகம். ஆடைகளை அகற்றிவிட்டு அவனை எடை போட்டால் முப்பது கிலோ தான் இருப்பான். அவனை ‘அப்சரா பென்சில் குச்சி’ என்றும் ‘சின்னநாக்குபூச்சி’ என்றும் மீடியா மக்கள் கேலி செய்வர்.

கொடி இடையான்.. மனைவியும் மகன்மகளும் கிழக்கு கடற்கரைசாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசதியாக வாழ்கின்றனர். தாம்பத்யம் முழுக்க கைபேசி வழிதான்.

மாதத்தில் ஓரிரு தடவை மனைவி குழந்தைகளை கண்டு வருவான்.

சிபாகாவுக்கு சொந்தஊர் வேலூர். வடஆற்காடு தமிழில்தான் பலிங்சடுகுடு

ஆடுவான். அஜய்டிவிக்கு வருவதற்கு முன் நாற்பதுக்கும் மேற்பட்ட சில்லுண்டி

வேலைகள் செய்தான். பதினேழு வருடங்களுக்கு முன் அஜய்டிவிக்குள் புகுந்தான்.

நான்கு வருடங்கள் அப்ரசண்டியாக இருந்த பிறகு ஒரு பிரபல நிகழ்ச்சி

தொகுப்பாளனாக கால் ஊன்றினான். அஜய்டிவியின் ரியாலிட்டி ஷோ, கேம் ஷோ,

காமெடி ஷோ எனும் இருபது நிகழ்ச்சிகளில் 18 நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி

தொகுப்பாளனாக சிபாகா ஆராவமுதனே இருப்பான்.

ஒரு நாளின் 24 மணி நேரமும் சிபாகா ஆராவமுதன் அஜய்டிவி

வளாகத்திற்குள் தான் இருப்பான்,அவனுக்கு பக்கத்து கட்டிலில் கனரகவாகனம் சந்திரிகா நாயர் படுத்திருந்தாள்.

வயது 36. உயரம் 160செமீ எடை 105கிலோ பழைய நடிகை சாவித்திரி போல

சந்திரிகா நாயருக்கு உடல்வாகு. அஜய்டிவிக்கு இவள் வந்து பத்து வருடங்கள்

ஆகின்றன. குதிரை செருமுவது போல முழுவாய் திறந்து சிரிப்பாள். யாரை

பாத்தாலும் ‘மாமா… முத்தாய்’ என செல்லம் கொஞ்சுவாள், டிவி சம்பந்தபட்ட எந்த பிரமுகரை பார்த்தாலும் உடனடியாக கட்டிப்பிடி வைத்தியம் தான். இந்த கட்டிப்பிடி வைத்தியத்தை கண்டு வெந்து நொந்து போன சந்திரிகாநாயரின் கணவன் விவாகரத்து கோரி நிற்பதாக கேள்வி.

சந்திரிகா நாயர் ஒரு பத்துலிட்டர் வெட்கிரைண்டருக்கு சமம் தினம் மூன்று

வேலை பிரியாணி வெட்டுவாள். தினம் ஆறுவேளை நொறுக்குத்தீனி தின்பாள்.

சின்னக்குழந்தைகள் கையில் வாலிபாப்போ ஐஸ்கிரீமோ இருந்தால் கூட பிடுங்கித்தின்று விடுவாள்.

அவளது பட்டப்பெயர் ‘மெஹா டிக்கிபேர்டு’ முதலில் சந்திரிகாநாயரின்

பின்புறத்தை பார்த்து பார்த்து அருவெறுத்த டிவி நிர்வாகம் நாளடைவில் அதனை பெரிய அளவில் ரசிக்க ஆரம்பித்தது. கடந்த ஐந்து வருடத்தில் அஜய்டிவி தேர்ந்தெடுத்த அனைத்து பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கும் ராட்சச டிக்கிகள் இருந்தன.

சந்திரிகா நாயரின் கட்டிலை சுற்றி நெய்முறுக்கு, காராச்சேவு, மோதிரஅப்பளம்,நேந்திரங்காய் சிப்ஸ், கல்கோனா, இலந்தைப்பழம், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா,பெப்ஸி இரண்டரை லிட்டர் பாட்டில், ஒயின் பாட்டில்கள் குவிந்து கிடந்தன.

கோயில்பட்டி காராசேவை மென்றபடி ‘பர்’ என காற்று பிரித்தாள் சந்திரிகா

நாயர். “ஸாரிடா சிபாகா!”

மூன்றாவது கட்டிலில் பீமர் படுத்திருந்தான். பீமருக்கு வயது 55. விஏஓவாக

இருந்து போன வருடம் விருப்பஓய்வு பெற்று விட்டான். அவனது கோங்கரா சட்னி முகம் நகைச்சுவைக்கென்றே பிறந்தது. அவனது வாத்து நடனம் பிரசித்தி பெற்றது.

நான்காவது கட்டிலில் இகழ் படுத்திருந்தான். இகழ் 120செமீ உயரம். சாய்பாபா தலைகேசம். நகைச்சுவை இகழை அந்த தெருமுனையில் கண்டால் ,இந்த தெருமுனையில் ஓடிவிடும். எந்தப்பெண்ணை கண்டாலும் கட்டிப் பிடிக்க முத்தம் கொடுக்க முயல்வான். இகழுக்கு ‘மூட்டைப்பூச்சி’ என்கிற பட்டப்பெயர் உண்டு.

ஆய் சொல்றியா படவா இல்ல ஊய் சொல்றியா’ நிகழ்ச்சி தயாரிப்பாளர்

வெளிப்பட்டான்.

“என்னப்பா எல்லாரும் படுத்து மட்டை ஆய்ட்டீங்களா?”

“நைட் ஒன்றரைமணிக்கு என்ன கேள்வி இது?”

“சிபாகா… உனக்கு மாசம் ஒன்றரைலட்சம் சம்பளம். வருடம் பத்து சதவீதம்

சம்பள உயர்வு. எத்னி ஷோவுக்கு காம்பயரிங் பண்ண கூப்ட்டாலும் நீ வந்தாகனும்னு பத்து வருஷத்துக்கு அக்ரிமென்ட் போட்டுருக்கோமே மறந்திட்டியா?”

“செங்கல்சூளை கொத்தடிமைகள் மாதிரி நாங்க தொலைக்காட்சி

கொத்தடிமைகள் இல்லையா?”

“ரொம்ப சலிச்சிக்ற? அஜய்டிவில சேந்த பிறகுதான் பிளாட், கார், ஐபோனுன்னு

பணக்கார வாழ்க்கை வாழ்ற நீ தொகுக்ற நிகழ்ச்சிக்கு இடையே உன் பெற்றோரை உன் மனைவி பெற்றோரை, உன் நண்பர்களை, உன் குழந்தைகளை கூப்ட்டு பெருமை படுத்துறோம். சாலாவோட இஞ்சிமுரப்பா மூஞ்சியெல்லாம் நொடிக்கு முந்நூறு தடவை காட்டி குளோரிபை பண்றோம். எந்த சானல்காரன் பண்ணுவான்? காஜ்டிவி

சம்பளத்துக்கு பதில் சுண்டலும் அரைமூடி தேங்காயும்தான் தரான்ங்க…”

“ரொம்ப தாளிக்காதிங்க டூப்ளிகேட் மாங்காய் சீனிவாசன். சினிமால நிலையான வாய்ப்பு பெற்று ஒப்பந்தத்தை ரத்து பண்ணனும்னா வாங்கின சம்பளம்

முழுவதையும் திருப்பிக் குடுத்திடனும்னு நிபந்தனை போட்ருக்கீங்களே… நியாயமாரே தர்மமாரே…”

“ஒன்ஸ் இன் எ ப்ளூமூன்தான் டிவிலயிருந்து சினிமாவுக்கு பவகீர்த்திவாசன்,

கிந்தானம் போன்ற தலைகள் போகும். நீங்கல்லாம் டிவிக்காக மட்டுமே நேந்து விடப் பட்ட ஆடுகள். சந்திரிகா நாயருக்கு சினிமால பெரியம்மா வேஷம் கூட குடுக்க மாட்டான்க..,”

“ஓவரா பேசாதே. மீறி பேசின டிக்கிலோனா பண்ணி டங்ஸ்டன் ஆக்கி

விடுவேன்.. ஹெஹ்ஹெஹ்ஹே…” தோள்பட்டையை ஒருமாதிரி சாய்த்துக் கொண்டு நடிகர் கிசிகுமார் மாதிரி சிரித்தாள் சந்திரிகா நாயர்.

“கொள்ளிவாய் பிசாசு மாதிரி சிரிக்காதே!”

“நம்ம அஜய்டிவி ஒரு மிடில்கிளாஸ் மாதவி. காலைல இட்லி போடும் அஜய்

டிவி மதியாணம் மீந்துபோன இட்லிகளை கிள்ளி போட்டு இட்லி உப்புமா செய்யும்.

இரவு மீந்துபோன அதே இட்லிகளை வச்சு இட்லி கிச்சடி செய்யும். மறுநா காலை அதே இட்டிலிகளை வச்சு மசாலா இட்லி செய்யும் ஒரே இட்லி நூறு வகை ரெஸிபிகள்…”

“பழைய இட்லிகளாயிருந்தாலும் டேஸ்ட்டா கொடுக்கிறோமா இல்லையா?”

“எல்லாம் சரி..நிகழ்ச்சியை தொகுத்தளிக்க எனக்கு ஒரு ஹைதர் அலி காலத்து கோட்டு தரீங்களே… அதில கூவம் மாதிரி கப்பு அடிக்குதுய்யா. போனவாரம் கோட்டுக்குள்ள ஒளிஞ்சிருந்த சுண்டெலி அன்டர்வேருக்குள்ள புகுந்து எனக்கு வாஸெக்டமி செஞ்சு விட்ருச்சு..”

“பத்து வருஷத்துக்கு முன்னாடி எப்டி இருந்தியோ அப்டியே இருக்க. அதான்

கோட்டை மாற்ற வேண்டிய அவசியம் எழல.. கோட்டை பத்துதரம் உதறி

டியோடரன்ட் பீய்ச்சி அணிந்து கொள். பிரச்சனை வராது!”

“சரி, ஸ்கிரிப்ட் பேப்பர் எங்க?”

“கைல இருக்ற அட்டைய வச்சு ஸ்பான்ஸர்கள் பெயரை ஒப்பிங்க… அதன் பின் காம்பயரிங் முழுக்க ஓன் டயலாக வச்சு ஒப்பேத்துங்க!”

“நானும் சந்திரிகா நாயரும் மேக்கப் பண்ணி ரெடியாக அரைமணி நேரமாகும்..

அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க…”

“மேக்கப்புக்கு எதுக்கு அரைமணி நேரம்? மூஞ்சியை கழுவி துடைச்சிக்கிட்டு

பான்ஸ் பவுடர் அப்பிக்கிட்டு வந்து நில்லுங்க!”

“சரி… வந்திடுரோம்.. உயிரை வாங்காம போங்க…”

வர்ணஜால வெளிச்சத்துக்கு முன் சிபாகா ஆராவமுதனும் சந்திரிகா நாயரும் கோணங்கிதனம் செய்து எடக்குமுடக்கு வார்த்தைகள் பேசி நிகழ்ச்சியை தொகுத்தனர்.

படபிடிப்பு காலை நான்குமணி வரை நீண்டது.

நிலா டிவி. நிர்வாக இயக்குநர் பொதுஜன தொடர்பாளரிடம் திரும்பினார்.

“யோவ்… அஜய் டிவி ஒரு அஞ்சு பேரை தோசை மாதிரி திருப்பி திருப்பி போட்டு நிகழ்ச்சி தயாரிக்கிறாங்க… எரிச்சதாங்கல.. நீ என்ன பண்ற? அஞ்சு பேத்ல முதல்ல ரெண்டு பேரை நம்ம பக்கம் இழுக்ற!”

“யார் யாரை?”

“சிபாகா ஆராவமுதனையும் சந்திரிகா நாயரையும் மாசம் இரண்டுலட்சம்

சம்பளம்னு ஆசைவார்த்தை கூறி நம்ம பக்கம் இழு..”

“அங்க ஒப்பந்தம் போட்ருப்பாங்களே…”

“ஒப்பந்தத்தை லீகல் அட்டாக் பண்ணி குப்பைக்கூடைக்கு அனுப்ச்சிரலாம்…”

“சரி!”

“இங்க வர்ற அவங்களுக்கு ரெண்டு மாசம் சம்பளம் தருவோம். மூணாவது

மாசம் அடிச்சு துரத்திருவம். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகட்டும் அவங்க கதை!”

வெகுஜன செய்தி தொடர்பாளர் சொல்லி முடித்ததும் சிபாகா ஆராவமுதனும்

சந்திரிகா நாயரும் பகபகவென சிரித்தனர்.

“நாங்க அஜய்டிவி கொத்தடிமைகள் தான். இதை நாங்க விரும்பி ஏத்துக்கிட்டம்.

இன்னும் ஒரு பத்து வருடம் இங்க பல்லைக் கடிச்சிட்டு இருந்திட்டா எங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கு. எதாவது ஒரு அமெரிக்கன் டிவி தமிழ்நாட்டில புது டிவி சானல் ஆரம்பிச்சா எங்களை சிஈஓவாக போடுவாங்க. இடைல உங்க நரித்தனத்துக்கு இரையாகி நடுத்தெருவுல நிக்க மாட்டோம்!”

“இதுதான் உங்க இறுதி பதிலா?”

சிபாகாவும் சந்திரிகாவும் தங்களின் டிக்கிகளை சாண்டி மாஸ்டர் போல ஆட்டி சுயமி எடுத்தனர். எடுத்தததை வந்த தூதுவர் கைபேசிக்கு அனுப்பினர்.

‘இதை போய் உங்க முதலாளிகிட்ட காட்டு!”

-சூப்பர் அசிங்கர் சீஸன் பத்தின் இயக்குநர் எட்டினார்.. “கண்ணுகளா.. ஷுட்டிங் ஆரம்பம் வருகிறீர்களா?”

லெக்பீஸை கடித்து இழுத்துக் கொண்டிருந்த சந்திரிகா நாயர் வாய் கொள்ளா

பிரியாணியுடன் “வழோம் பெலுசு!” மிழற்றினாள்.