தொடர்கள்
தொடர்கள்
சென்னை மாதம் --  பாகம் 51- ஆர் . ரங்கராஜ்,


பேய் உருவம் வேண்டி நின்றார்' காரைக்கால் அம்மையார்:

2022081618303056.jpg


கயிலையிலும், திருவாலங்காட்டிலும், காலால் நடக்காமல், தலையால் நடந்தார்.

(கனி மறைந்ததுமே அம்மையார் சாதாரணப் பெண் அல்ல என்பதைப் பரமதத்தன் புரிந்துகொண்டார். அம்மையாளரடவிட்டு பிரிந்து வாழ்வதே நல்லது என்று நினைத்தார். சுற்றத்தாரிடம் வனிகன் நோக்குடன் செல்வதாகப் பொய்யுரைத்துச் சென்றார். வணிகத்தில் ஈட்டிய பொருளுடன் காரைக்கால் திரும்பாமல் பரமதத்தன், பாண்டிய நாட்டுக்குச் சென்று அங்கே வாழ்ந்துவந்தார். அவரைப்பார்த்த சிலர் அம்மையாரிடம் அந்தச் செய்தியைக் கூறினார்கள். உண்மை அறிந்த அம்மையாரின் சுற்றத்தார், அவரை அழகிய பல்லக்கில் அமரச் செய்து பாண்டிய நாட்டுக்கு அழைத்துச் சென்றனர். அம்மையார் வருகிற செய்தி அறிந்ததுமே, பரமதத்தன் தன் மனைவி, மக்களுடன் வெளியே வந்தார். அம்மையாரின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கிணார்).

கணவர் தன் காலில் விழுந்ததுமே, அம்மையார் அதிர்ச்சி அடைந்தார். பரமதத்தனோ, "இவர் மானிடப் பிறவி அல்ல. நற்பெரும் தெய்வம்" என்று கூறினார்.

கணவனால் கைவிடப்படட்ட நிலையில் அப்பெண் தன மீதி வாழ்நாட்களைக் கழிக்க பேயுரு பெற்று சிவனருளால் அவன் தாள் அடைய முடிவு செய்கிறார்.

பேய் உருவம் வேண்டுதல்

"அம்மையாரும் இறைவனிடம் இல்லற வாழ்வுக்காகத் தாங்கிய வனப்பு நீங்கி, 'பேய் உருவம் வேண்டி நின்றார்'. அவர் வேண்டியது மக்களை அச்சுறுத்தும் பேய் வடிவம் அல்ல. உடம்பில் தலை விடுத்து, எலும்புக்கூடு மட்டுமே தாங்கிய உருவம். காற்று போல விரைந்து செல்வது ஒளிபெற்றதுமான மாயா உருவம். உடனே அம்மையார் தன் உடம்பின் தசையும் அழகும் நீங்கி, எலும்புக்கூட்டையே உடலாகப் பெற்றார்,' என்கிறார் திரு மா. சந்திரமூர்த்தி, மேனாள் துணை இயக்குநர், தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு.

கயிலை காணும் ஆவல்

"சிவபெருமான் மீது 'அற்புதத் திருவந்தாதி'யையும் இரட்டை மணிமாலை'யையும் பாடினார். திரிபுரம் எரித்த சிவபெருமான் எழுந்தருளிய கயிலாய மலையைக் காண விரும்பினார். அம்மையார் பேய் வடிவம் பெற்ற பேற்றினால் மனத்தினும் விரைந்து சென்று கயிலையை அடைந்தார்.

இறைவன் விற்றிருக்கும் தலை என்பதால் கயிலையில் காலால் நடக்காமல் தலையால் நடந்தார். இப்படியேதான் திருவாலங்காட்டிலும் தலையால் நடந்தார்."

"அம்மையார் சிவனை நெருங்கி வந்ததும், 'அம்மையே' என்று அழைத்தார். அம்மையாரும் 'அப்பா' என்று அழைத்து அவர் திருவடித் தாமரைகளில் விழுந்து வணங்கிணார். எப்போதம் நீர் ஆடும் போது நின் திருவடிகளின் கீழ் மகிழ்வுடன் பாடிக்கொண்டிருக்க வேண்டும் என்று வரம் வேண்டிப்பெற்றார்."

காரைக்காலம்மையார் இத்தலத்து ஆடல்வல்லானிடம்,

"இறவாத அன்புவேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி
அறவா நீ ஆடும்போது உன் அடியின்கீழ் இருக்கவென்றார்"

என்று வேண்டிக்கொண்டபோது அதற்கு இறைவன் அருள்பாலித்ததால் இறைவனின் திருவடியின் கீழ் இத்தலத்தில் காரைக்காலம்மையார் அமர்ந்திருக்கும் திருச்கோலத்தில், திருவாலங்காட்டு தாண்டவமூர்த்தி காட்சி தருகிறார்.

"திருக்கயிலையில் சிவபெருமான் அருளிய நிலையில் காரைக்காலம்மையார் திருவாலங்காட்டுத்தலத்தினைக் கணப்பொழுதில் அடைந்து அத்தலத்தினைக் காலால் மிதித்தற்கும் அஞ்சித் தம் தலையினால் நடந்து அங்கு அண்டமுற நிமிர்ந்தாடும் இறைவனது கோலங்கண்டு," கொங்கை திரங்கி - எனத் தொடங்கும் பதிகத்தையும், எட்டி இலவம் என்னும் பதிகத்தையும் முறையே நட்டபாடை, இந்தளம் என்னும் பண் அமைப்பில் பாடியருளியுள்ளார். பிற்காலத் தேவார ஆசிரியர்களுக்கு இவர் பாடிய பதிகங்கள் காலத்தால் முதன்மையாகத் திகழ்தலால் இப்பதிகங்கள் முத்த திருப்பதிகங்கள் என அழைக்கப்படுகின்றன. இப்பாக்களைப் பண்ணோசையுடன் பாடிய முறையிலும் இவரே முதலாவதாகத் திகழ்கிறார். திருவாலங்காட்டுத் தலத்தினைப் பற்றி இரண்டு பதிகங்களில் திருக்கடைக்காப்புப் பாடல்களுடன் 22 பாடல்கள் பாடியுள்ளார்.

"காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டிற்கு வருதலுக்கு முன்பாகவே இத்திருத்தலம் சொல்லுதற்குரிய பெருமை உடைய தலமாக இருந்துள்ளது என்பதனைச் சேக்கிழார் கூறும் காரைக்கால் அம்மையார் புராணப் பாடல்கள் வாயிலாக அறியலாம்," என்கிறார் திரு சந்திரமூர்த்தி.

(தொடரும்)

-- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com)