தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் -  வேண்டாம் இலவசம்

20220705181139924.jpg

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச பொருட்கள் வாக்குறுதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தேர்தல் நேரத்தில் அரசு நிதியிலிருந்து இலவச திட்டங்கள் வழங்குகிறோம் என வாக்குறுதி அளிப்பது லஞ்சம் கொடுப்பதற்கு இணையானது என்பது வழக்கு தொடுத்தவர் வாதம். மத்திய அரசு சார்பாக வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் இஷ்டத்துக்கு அறிவிப்புகளை வெளியிடுவது பொருளாதாரத்தை சீரழிக்க வழிவகுக்கும் என்றார். இதே கருத்தை சமீபத்தில் பிரதமர் அவரது மொழியில் இலவசங்களை வன்மையாக சாடினார் சொலிசிட்டர் ஜெனரல் பிரதமரின் குரல் பாரதிய ஜனதாவின் குரல் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

இது பற்றிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இலவச திட்டங்களை கண்காணிக்க நிபுணர் குழு தேவை இந்தக் குழுவில் நிதி ஆயோக் நிதி ஆணையம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் இதர தரப்பினர் இடம் பெறவேண்டும். அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சியின் இலவச அறிவிப்புகளை பற்றிய ஆலோசனைகளை மத்திய அரசு தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்துக்கு வழங்க வேண்டும். இலவச அறிவிப்புகள் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் அதன் சாதக பாதகங்களை தீர்மானிக்க இந்தக் குழு தேவை என்று உத்தரவு பிறப்பித்தனர். கூடவே தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கை எடுக்காததால் இந்த நிலை ஏற்பட்டது என்றும் குறிப்பிட்டார்கள்.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடும் போது இலவச அறிவிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி இலவச அறிவிப்புகள் குறித்து நாடாளுமன்றம் விவாதிக்கும் என நீங்கள் நினைக்கிறீர்களா இது குறித்து எந்தக் கட்சிவிவாதம் நடத்தும்? இலவச அறிவிப்புகள் வெளியிடுவதை எந்த அரசியல் கட்சியும் எதிர்க்காது. வரி செலுத்துவோர் மற்றும் நாட்டின் பொருளாதாரம் பற்றி நாம்தான் சிந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இலவசங்கள் பற்றி தேர்தல் அறிக்கையில் வாரி வழங்கி விட்டு இப்போது திமுக எப்படியெல்லாம் திணறுகிறது என்று நாம் நேரில் பார்க்கிறோம். சுத்த சுயம் பிரகாசம் என்று தன்னை சொல்லிக் கொள்ளும் கேஜ்ரிவால் கூட பஞ்சாபில் இலவசங்களை வாக்குறுதிகளாக வாரி வழங்கினார் . ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசிடம் நிதி கேட்டு கையேந்தி நிற்கிறார். அதேசமயம் குஜராத்திலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று சொல்லி இலவசங்களை வாரி வழங்குகிறார் கேஜ்ரி. சமீபத்தில் குஜராத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாதவர்களுக்கு மாதம் தோறும் 3000 என்று அறிவித்திருக்கிறார் கேஜ்ரிவால்.

இலவசங்கள் மக்கள் வரி சுமையை அதிகரிக்கும் என்பதுதான் உண்மை இலவசங்கள் பொருளாதார சீரழிவு என்ற பேச்சு வர தொடங்கிவிட்டது.

இது ஒரு நல்ல ஆரம்பம் நல்ல ஆட்சி என்பது இலவசங்களை கொடுப்பது அல்ல ஊழல் இல்லாமல் மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் கவனிப்பது என்பதுதான், நல்ல ஆட்சி எனவே வேண்டாம் இலவசம்.