நன்றி: தினமணி
உலக சுகாதார அமைப்பு கடைசியாக 2020 ஜனவரி மாதத்தில் கொரோனா தொற்றை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக பிரகடனம் செய்தார்கள். அதன் பிறகு தற்போது குரங்கு அம்மையை அதேபோல் உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்திருக்கிறார்கள்.
கடந்த மாதம் பல நாடுகளில் குரங்கு அம்மை பரவிய நிலையில் இந்த நோய் தொற்றை சுகாதார அவசரநிலையாக அறிவிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பிற்கு நெருக்கடி கொடுக்கப்பட்ட போது அதை ஏற்க மறுத்த உலக சுகாதார அமைப்பு தற்போது பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது . குரங்கு அம்மையால்
ஆப்ரிக்க நாட்டில் 5 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உலகளவில் தற்போது வரை ஆப்ரிக்கா தவிர வேறு எங்கேயும் மரணங்கள் பதிவாகவில்லை.
ஆனால் உலகில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிது அச்சம் ஊட்டும் வகையில் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் இந்த நோய் தொற்றால் 4500 பேர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஐரோப்பாவிலோ பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,000 க்கு மேலாக உள்ள நிலையில் மேலும் தொற்று பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை முத்தமிடுவது , தோலோடு தோல் தொடர்பு, கட்டி அணைப்பது அல்லது பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு கொள்வது போன்ற செயல்களால் குரங்கு அம்மை தொற்று பரவுகிறது. முக்கியமாக ஓரினச்சேர்க்கையில் (குறிப்பாக ஆண்கள்) ஈடுபடுபவர்களால் குரங்கு அம்மை தொற்று பரவுகிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை விட்டிருக்கிறார்கள். மற்றபடி பாதிக்கப்பட்டவர்களின் உடமைகளை தொட்டு கையாள்வது மற்றும் அவர்களின் தும்மல் இருமல் மூலமாகவும் பரவுகிறது. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல், உடல்வலி, தலைவலி என தொடங்கி உடலெங்கும் கொப்புளங்கள் ஏற்படுகின்றன.
பொதுவாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் 2 லிருந்து 4 வாரத்திற்குள் குணமாகி விடுகிறார்கள் அமெரிக்காவின் கைவசம் குரங்கு அம்மைக்கு தடுப்பூசி மருந்து உள்ளது . ஆனால் கொரோனா தடுப்பூசி போன்று எல்லா மக்களுக்கும் போட வேண்டிய அவசியம் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு கருதுகிறது . அத்தோடு குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டு 4 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவருக்கு இந்த தடுப்பூசி போட்டால் குரங்கு அம்மை மேலும் பரவாமல் குணமாகி விடுகிறது. குரங்கு அம்மை வைரஸ், பெரியம்மை வைரஸ் குடும்பத்தை சேர்ந்ததாக இருப்பதால் பெரியம்மைக்கான தடுப்பூசியும் குரங்கு அம்மைக்கு பலனளிக்கும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
1958 இல் டென்மார்க்கில் இந்த வைரஸ் ஒருஆராய்ச்சி கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த குரங்குகளிலிருந்து கண்டுப்பிடிக்கப்பட்டது . 1970ல் தான் இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட மனிதனிடம் முதன்முதலாக கண்டறியப்பட்டது. தற்போது
உலகில் ஆயிரக்கணக்கானோர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை 5 பேர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் . அதுவும் இந்தியாவில் தற்போது வரை 4 பேர்கள் தான் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே பயம் கொள்ள தேவையில்லை என்பதே இப்போதைய நிலை.
Leave a comment
Upload