ஞாயிற்றுக்கிழமை
விடுறை நாளானதால் காலை எட்டுமணிக்குதான் எழுந்தான் விஷ்ணுவரதன். வயது 35. உயரம் 170 செமீ. அழகிய மாறுகண்களை கொண்டவன். எஸ்வி சேகர் போல நகைச்சுவையாய் பேசக் கூடியவன்.
பல்துலக்கியதும் இஞ்சிசாறு எலுமிச்சைசாறு கலந்த தேன் பருகினான்.
எட்டுவயது மகளும் ஐந்து வயது மகனும் இன்னும் தூங்கி கொண்டிருந்தனர்.
மனைவி சூரியகலா வளர்ப்புநாயை குளிக்க வைத்துக் கொண்டிருந்தாள். குளித்து முடித்ததும் நாய்க்கென பிரத்தியேகமாய் வைத்திருக்கும் பூத்துவாலையால் நாயின் ஈரத்தை துவட்டினாள்.
வளர்ப்பு நாய் மிட்டி ஈரத்தை சிலுப்பியபடி விஷ்ணுவரதனின் கால்களுக்குள் புகுந்து கொண்டது.
“ச்சூ… போ… ஈரத்தை என் காலில் துடைக்காதே!”
“ஈரத்தை எல்லாம் துடைசசிட்டேன். அன்பா கால்ல வந்து அண்டுறத தடுக்காதிங்க!”
“சரிசரி… இன்னைக்கி காலைல என்ன டிபன்?”
“எப்ப பார்த்தாலும் ருசியா தின்கிறதிலயே இருங்க… காலைல கைமா சேமியா…”
“தொட்டுக்க?”
“தேங்காய் சட்னி!”
“மதியாணத்துக்கு?”
“தேங்காய்சோறு மீன்குழம்பு… ஈவினிங் டிபன் என்ன? நைட் டிபன் என்ன? தூங்கப் போகும் போது பாதாம்பால் உண்டா? இன்னும் நூறு கேள்விகள் கேளுங்க. சரியான தின்னிப் பண்டார புருஷன்!”
“சண்டே ஸ்பெஷல் பத்தி கேட்டு தெரிஞ்சுக்கிறது தப்பா கலா?”
“சமைச்சு பரிமாறும் போது தெரிஞ்சுக்கங்க. ஓவர் கேள்விகளை தவிருங்க புருஷா!”
மகனும் மகளும் எழுந்து வந்தனர்.
“பல் துலக்கிட்டு வந்து காப்பி குடிங்க!” என்றாள் சூரியகலா.
இரண்டு வாண்டுகள் உடம்பை நெளித்தன.
“சண்டே கூட பல் விளக்கனுமா?”
“அட அசிங்கம் பிடிச்ச கழுதைகளா… சுயசுத்தம் இல்லாத குழந்தைகளை ஒருநாளும் வீட்டுக்குள்ள அனுமதிக்க மாட்டேன்!”
குழந்தைகள் பல்துலக்கி வந்து காப்பி குடித்தனர்.
கைமா சேமியாவும் தேங்காய் சட்னியும் தயாரித்தாள் சூரியகலா.
டைனிங்டேபிளிலில் அமர்ந்து அனைவரும் சாப்பிட்டனர்.
“கைமா சேமியா எப்டி இருக்கு புருஷா?”
“இன்னைக்கி டேஸ்ட் கம்மிதான்…”
“நன்றி கெட்டவாய் உங்க வாய். நாக்குல சூடுதான் போடனும்!”
“கேள்வி கேக்றது பதில் சொன்னா எக்குதப்பா திட்றது?”
“டேஸ்ட் கம்மின்னுட்டு வான்கோழி மாதிரி கபக்கபக்குன்னு முழுங்குறீங்க,,,”
“சமைச்சது வீணாகிடக் கூடாதுல்ல..”
சாப்பிட்டு முடித்ததும் முதல் படுக்கையறைக்கு ஒதுங்கினான் விஷ்ணுவரதன். மடிகணினியை திறந்தான். முந்தினநாள் பதிவிறக்கம் செய்த ஈரானியன் படத்தை பார்க்க ஆரம்பித்தான்.
மகள் கார்ட்டூன் சானல் பார்க்க அமர்ந்தாள்.
மகன் விடியோகேம் ஆட தொடங்கினான்.
ஒருமணிநேரம் படம் பார்த்தவன் காபி கேட்டு வாங்கி குடிக்கும் எண்ணத்துடன் படுக்கையறையை விட்டு வெளியே வந்தான் விஷ்ணுவரதன்.
“முதலாளியம்மா!”
“……..”
“செல்லக்குட்டி! எங்க இருக்க?”
பதில் இல்லை.
“நெய்பொம்மை!”
பதில் ,இல்லை.
“என்னருமை வெள்ளை பன்னிக்குட்டி… எங்கேடி போய் தொலைஞ்ச?”
வீடெல்லாம் தேடி ஓய்ந்தவன் கடைசியில் கொல்லைப்புறத்துக்கு வந்தான். துளசி செடியருகே ஒரு மடக்குசேரை போட்டு அமர்ந்திருந்தாள் சூரியகலா அவளது இடது காதில் திறன்பேசி ஒட்டியிருந்தது.
உற்சாகமாக யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள்.
என்ன பேசுகிறாள்? யாரிடம் பேசுகிறாள்?
மனைவியின் பின் போய் நின்றான்.
மனைவியின் உற்சாககுரல் துள்ளிக்குதித்தது. “மியாஸோ பவிஸா.. குனாகுனா..”
எதிர்முனை என்ன சொன்னதோ?
“அபிஸோ அபிஸோ… மஜாமஜா..”
விஷ்ணுவர்தனுக்கு தூக்க வாரிப்போட்டது. மனைவி என்ன பாஷை பேசுகிறாள்? நரிக்குறவர் பாஷையோ?
சுமார் அரைமணி நேரம் நிதானமாய் நின்று மனைவி பேசுவதை புதிர்தனமாய் ரசித்தான். கணவனின் வியர்வை வாசனையை நுகர்ந்தவள் சடுதியில் திரும்பி விக்கித்தாள்.
“இதென்ன திருட்டுத்தனம்? பொண்டாட்டி பேசுறதை ஒட்டு கேட்டுக்கிட்டு!”
“ஒட்டும் கேக்கல கிட்டும் கேக்கல… காபி கேட்டு உன்னை தேடி வந்தேன். நீ பேசுறதை கேட்டு ஸ்தம்பிச்சு நின்னுட்டேன்!”
“கேட்டதை மறந்திட்டு உங்க வேலைய பாக்க போங்க. காபி கொண்டு வருகிறேன்!
“எல்லாம் சரி நீ பேசினது என்ன மொழி?”
“மொழியா? சும்மா என் தோழியை கலாய்ச்சிக்கிட்டு இருந்தேன்!”
“தமிழ்ல ஏழு லட்சம் வார்த்தைகளும் ஆங்கிலத்ல பத்துஇலட்சம் வார்த்தைகளும் உள்ளன. நீ பேசின மொழியில் 15லட்சம் வார்த்தைகள் போல. சும்மா வார்த்தைகளோடு பலிங்சடுகுடு ஆடுன. பொய் சொல்லாதே. நீ என்ன மொழி பேசின?”
“உளறா‘தீங்க… சும்மா வார்த்தைகளை மாத்தி போட்டு கும்மியடிச்சேன்!”
“உலகத்தில் விசித்திரமான மொழிகள் பல உள்ளன. பிரஹா, எஸ்பிரன்டோ, ஜோசா, சில்பா கோமரோ, ஆர்ச்சி, சென்னடன்லிஸே, தா, குட்டோனெய், ஒரோமோ, ஸோக்டா, பாவ்னி, நெநெட்ஸ், கோரோ, கிளின்கான், ஒன்கோட்டா மொழிகளை விட விசித்திரமாய் ஆனால் இசைமயமாய் இருந்தது நீ பேசிய மொழி. மிகமிக முக்கியமான விஷயம் உன் மொழியில் லட்சம் சதவீதம் பெண்மை வழிந்தது…”
கண்களை உருட்டினாள் சூரியகலா.
“விடமாட்டீங்க போல..”
“ஆமா.. சொல்லு… நீ பேசியது என்ன மொழி?”
“நான் பேசிய மொழியின் பெயர் ‘ஊஷி பூஷி’ இது பெண்கள் மட்டும் பேசும் மொழி. இந்த மொழியை ஒரு ஜப்பானியப் பெண் உருவாக்கினாள். உருவாக்கிய ஆண்டு 2000. உலகின் பெண்கள் ஜனத்தொகை 400கோடி. கடந்த 25 ஆண்டுகளில் எங்களின் ஊஷீ பூஷி மொழி உலகின் இண்டுஇடுக்கெல்லாம் புகுந்துவிட்டது. கிபி2025ன் படி எங்கள் மொழியை பேச தெரிந்த உலகப்பெண்கள் 300கோடி. எங்களது ஊஷிபூஷி மொழி ஆணாதிக்கத்துக்கு எதிரானது. ஊஷி பூஷி பேசுபவருக்கு தற்கொலை எண்ணம் வரவே வராது. ஊஷி பூஷி தன்னம்பிக்கையை ஊட்டும் மொழித்தாய்…”
“ஏ அப்பா… உங்கள் மொழிக்கு எழுத்து வடிவம் உண்டா?”
“இதுவரை இல்லை. அதற்கான முயற்சிகள் நடநது வருகின்றன!”
“உங்கள் மொழியில் எத்தனை வார்த்தைகள் உள்ளன?”
“இருபது லட்சம் வார்த்தைகள்!”
“உங்கள் மொழியை ஆண்கள் கற்றுக் கொள்ள முடியுமா?”
”முடியாது. நாங்களும் அனுமதிக்கமாட்டோம்.. தபபித் தவறி யாராவது ஒரு ஆண் எங்க ஊஷிபூஷி மொழியை கற்றுக கொண்டால் அவனை கொலை செய்யவும் தயங்க மாட்டோம்…”
“ஏறக்குறைய ஒரு மணி நேரமா யாருடன் பேசிக் கொண்டிருந்தாய்?”
“எஸ்கிமோ பெண் அமருக் உடன் பேசிக்கொண்டிருந்தேன்!”
“என்ன சொல்கிறாள்?”
“வீட்டு வேலையில் பாதியை கணவனுக்கு கொடு என்கிறாள் . தாம்பத்யத்தில் பெண்கள் விருப்பமும் அனுமதியுமே பிரதானம் என்கிறாள். தலைகேசத்தை குட்டையாக கத்தரிக்கச் செசால்கிறாள். ப்ரா போன்ற உள்ளாடைகளை அணியக்கூடாது என்கிறாள்!”
“உன்னை புரட்சிப்பெண் ஆக்குகிறாள் போலும்!”
“ஆண்களிடமிருந்து சமஉரிமையை விருப்பமாக எடுத்துக்கொள்ள சொல்கிறாள்..”
“நல்லாயிரும்மா செல்லம். நீயும் உன் ஊஷிபூஷி மொழியும் நீடுழி வாழ்க!” இரு கைகளையும் தலைக்கு மேல் குவித்து வணங்கினான் விஷ்ணுவரதன்.
கிபி2050 ஜுலைமாதம் ஒன்றாம் தேதி இரவு 1மணி.
படுக்கையில் கணவனை காணாது வீடு முழுக்கத் தேடினாள் சூரியகலா
கொல்லைப்புறத்தில் கணவன் யாருடனோ கைபேசியில் பேசுகிறான்.
அவனுக்கு பின் நின்று அவன் பேசுவதை ஒருமணிநேரம் கேட்டாள்.
“ஜலமு உஸப்பா உய்யா… ஜல்ஜலேக்கு!”
கணவனின் முதுகை சொரண்டினாள் சூரியகலா. “என்ன மொழி பேசுறீங்க?”
பல்வேறு விதமான மழுப்பல்களுக்கு பின் வாய் திறந்தான். “இது ஆண்கள் பேசும் மொழி. இம்மொழியை இலங்கை தமிழர் சிவம்வேலாயுதம் கண்டுபிடித்தார். இம்மொழியை கண்டுபிடித்து 25 வருடமாகிறது. இப்போது இந்த ஆண்கள் மொழியை 400கோடி பேர் பேசுகின்றனர். எங்கள் மொழிக்கு எழுத்து வடிவம் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் மொழியை பெண்கள் யாராவது கற்றுக்கொள்ள முயன்றால் கொலை செய்யவும் தயங்கமாட்டோம்”
“உங்கள் மொழியின் பெயர் என்ன?”
“சன்னா லியோனா!”
விஷமமாக வாய் பொத்தி சிரித்தாள் சூரியகலா.
Leave a comment
Upload