தொடர்கள்
கவர் ஸ்டோரி
அற்புதம் – அம்மா !- “பாகி”

20220420194451821.jpg
1991ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி….இரவு சுமார் 10 மணி,பெரியார் திடலில் விடுதலை பத்திரிகை அலுவலகத்தில் கணிணி பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த 19 வயது இளைஞரை அங்கே வந்த மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) போலீசார் ஒரு விசாரணைக்காக அழைத்து செல்கின்றனர்...

அந்த இளைஞனை விசாரணைக்காக அழைத்துச் சென்ற தகவல் அவனது தாய்க்குக் கிடைக்கிறது. ஏதோ சாதாரண விசாரணை தான். சரி விசாரிச்சுட்டு விட்டுடுவாங்க’ என்று அந்தத் தாய் அதை அடுத்த கணம் மறந்துவிட்டார்.

மறுநாள் செய்தித் தாளில் “ராஜீவ் படுகொலை சம்பவம் தொடர்பாக பேரறிவாளன் என்ற இளைஞன் கைது” என்ற செய்தியைப் படித்த அந்தப் பெண்மணியின் தலையில் இடி விழுந்ததைப் போல் இருந்தது.
உண்மையில் நடந்த சம்பவம் என்ன? எது நடக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை.

1991ம் ஆண்டு மே 21 இரவு ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்துக்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் உடல் சிதறி உயிரிழந்தார்.

உலகையே உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து புலன் விசாரணை தொடங்கியது. பல்வேறு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்ட பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் கவலை அதிகரிக்கத் தொடங்கியது. தன் மகனை பிடித்துச் சென்று விட்டுவிடுவார்களா என்ற கேள்வி அந்தத் தாயின் மனத்தில் அலை மோதின. விடை தான் சிறிதும் கிடைக்கவில்லை.

ஆனால், அந்தப் பெண்மணி மனம் தளராமல் 31 ஆண்டுகள் சட்டத்தை மட்டுமே நம்பி போராடி போராடி கடைசியில் வெற்றி பெற்றார்.

20220421021234297.jpg
நீதி கேட்ட நெடிய பயணம்

இது பேரறிவாளனுக்குப் பெரும் பின்னடைவாக இருந்தது. ஆனால், பலரும் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. மேல் முறையீடு செய்தது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களும் மேல் முறையீடு செய்தனர். ஆனால், இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ போலீசாரும் தண்டனை பெற்றவர்களும் தனித்தனியே மேல்முறையீடு செய்தனர். அவை தள்ளுபடி செய்யப்பட்டன. அதையடுத்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் தமிழக ஆளுநர் ஃபாத்திமா பீவிக்குக் கருணை மனு அனுப்பினர். அது நிராகரிக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்தார் என அந்த நால்வரும் உயர் நீதிமன்றத்தை அணுகினர். ஆளுநரின் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம் அமைச்சரவையின் தீர்மானத்தின்படி தான் ஆளுநர் முடிவெடுக்க இயலும் என்று தெளிவுபடுத்தியது.


மாநில அமைச்சரவையின் தீர்மானத்தின்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதன் முதல் தொடக்கப் புள்ளி இதுதான். 2000ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அமைச்சரவை கூடி நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் எனத் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், மற்ற மூவரது நிலை குறித்து எதையும் கூறவில்லை.
இந்நிலையில் தங்கள் மீதான மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். அப்போதைய குடியரசுத் தலைவர்கள் யாரும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.


அடுத்து வந்த பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவரான பின் அந்த கருணை மனுக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. அவற்றை மத்திய அரசு 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. காஞ்சியைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம் பெண் தீக்குளித்து இறந்தார். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றக் கதவைத் தட்டினர்.


“11 ஆண்டுகளாக எங்களது தலைவிதி என்ன என்றே தெரியாமல் மன உளைச்சலுடன் சிறைகளில் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டனர். மரண தண்டனைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.


2014ம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான அமர்வு எந்த வித காரணமும் இல்லாமல் கருணைமனுக்கள் நிலுவையில் இருந்ததைச் சுட்டிக் காட்டி மூவரின் மரண தண்டனையையும் ரத்து செய்தது.


அப்போதுதான் பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு மூச்சே வந்தது. இத்தீர்ப்பு வெளியான மறுநாள் பிப்ரவரி 19ம் தேதி தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார்.

20220421021304195.jpg
ஆனால், இதை எதிர்த்த மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை விசாரித்ததால், இந்த விடுதலைக்குத் தடை பெற்றது.

மத்திய அரசு புலனாய்வு செய்ததால் மத்திய அரசின் ஒப்புதல் இன்றி விடுதலை செய்ய இயலாது என்று கூறிய உச்ச நீதிமன்ற அமர்வு, அரசியல் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் சிறப்பு அதிகாரத்தின்படி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்யலாம் எனச் சுட்டிக் காட்டியது.
பின்னர் தமிழகத்தில் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை எழு பேரையும் விடுதலை செய்வதாக 2018ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், இந்தத் தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார்.
இதன் விளைவாக, 2021ம் ஆண்டு பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் அரசு காலதாமதத்தைச் சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்தில் அழுத்தம் கொடுத்தது.


தற்போது உச்ச நீதிமன்றத்தின் மூவர் கொண்ட அமர்வு பேரறிவாளனை 161வது பிரிவின் கீழ் ஏற்கெனவே இருந்த முன்னுதாரணங்களின் அடிப்படையில் விடுதலை செய்தது.


பேரறிவாளன் இலங்கை சென்றது குறித்து தகவல் ஏதும் இல்லை. ஆனால், நளினி சென்றதாகச் செய்திகள் வெளியாயின. விடுதலைப் புலிகள் எந்தச் செயலில் ஈடுபட்டாலும், இயக்கத்தைச் சேர்ந்த சிலரிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வர். இயக்கத்தினரிடம் கூட வெளிப்படையாகத் தெரிவிக்க மாட்டார்கள்.
ராஜீவ் கொலைக்கும் பேரறிவாளனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சிவராசனோ பிறரோ அவரிடம் 9 வோல்ட் பேட்டரி இரண்டு வாங்கித் தரும்படி பணித்துள்ளனர். அவ்வளவே, அந்த பேட்டரி வெடிகுண்டுக்குப் பயன்படுத்தப்படும் என்ற அளவில் மட்டுமே பேரறிவாளனுக்குத் தெரியும். புலிகள் கொலைகளில் ஈடுபடுவோர் என்பதால், யாரையாவது கொல்வதற்காக இதைப் பயன்படுத்துவர் என்று மட்டுமே பேரறிவாளன் நினைத்தாரே அல்லாமல் ராஜீவ் காந்தியைக் கொல்லப் போகிறார்கள் என்று அவருக்குத் தெரியாது.
ராஜீவ் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்ததை அறிந்தனர். அதனால், அவருக்கும் கொலைச் சதிக்கும் சம்பந்தம் இருந்திருக்கும் என்ற வழக்கமான போலீஸ் சந்தேகத்தில் திராவிடர் கழகத்தின் விடுதலை இதழ் அலுவலகத்தில் பணியில் இருந்த பேரறிவாளனைக் கைது செய்து, அடையாறில் மல்லிகை இல்லத்தில் இயங்கி வந்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (Special Investigation Team) அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை தொடங்கினர். அங்கே சில வெற்றுத் தாள்களில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் பேரறிவாளன் கூறியிருக்கிறார்.
ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு செயல்படுவதற்கான சக்திவாய்ந்த பேட்டரிகளை வாங்கித் தந்து சதியில் ஈடுபட்டார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை முடிந்த தீர்ப்பு வழங்கிய முதல் கட்டத்தில் புகைப்படம் எடுத்த சுபா சுந்தரம் உள்பட 29 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர்களில் 18 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதி பேரில் 7 பேர் இறுதிக் குற்றவாளிகளாகத் தண்டனை பெற்றனர். அவர்களில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பல்வேறு சட்டப் போராட்டங்களை அடுத்து நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
அப்போதை முதலமைச்சர் கருணாநிதி மற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளை மாற்றும்படி கோரிக்கை விடவில்லை. எனவே அவை நீடித்தன.பின்னர் கருணை மனு உள்பட பல்வேறு சட்டப் போராட்டங்களை அடுத்து அந்த மூவருக்கும் மரண தண்டனை குறைக்கப்பட்டது.


“இந்தக் கொலைக்கும் பேரறிவாளனுக்கும் எவ்வித நேரடித் தொடர்பும் இல்லை. பேரறிவாளன் பேட்டரி வாங்கித் தந்தார் அவ்வளவுதான்” என்று 2011ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகனை நேரில் சந்தித்து வலியுறுத்திய முதல் நபர் மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலாளர் வைகோ. அது கொஞ்சம் பாறையை அசைக்கத் தொடங்கியது.


பின்னர் அவரது முயற்சியால் ராம் ஜேத்மலானி உதவியுடன் சட்டப் போராட்டம் தொடர்ந்தது. இதில் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் பிரதமரிடம் மன்றாடிக் கேட்பதாகக் கடிதமே எழுதினார்.
இவையெல்லாம் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளின் மன வலிமைக்கு மேலும் உறுதி அளித்தன. எந்த அரசியல் கட்சியையும் நம்பாமல் சில தன்னார்வ வழக்குரைஞர்களின் துணையோடு அவர் அசராமல் போராடினார்.இந்த வழக்கு தொடர்பாக தில்லிக்கே அவர் பல முறை சென்றார்.
இதனிடையில் மும்பையில் 1993ம் ஆண்டு நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் 2006ம் ஆண்டு கைதான சஞ்சய் தத் 2013 மே மாதம் சிறைத் தண்டனை பெற்றார். பின்னர், 2016, பிப்ரவரி 12ம் தேதி விடுதலை பெற்றார்.
இந்த வழக்கில் சஞ்சய் தத் விடுதலை பெற்றதன் பின்னணி குறித்து அறிய விரும்புவதாக பேரறிவாளன் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினார். இதன் அடிப்படையில் தனக்கு விடுதலை கோரி நீதிமன்றத்தில் முறையிட வழி கிடைக்கும் என்ற அடிப்படையில் மனு செய்திருந்ததார். மும்பை உயர் நீதிமன்றம் அது குறித்த தகவல்களைப் பேரறிவாளனுக்குத் தெரிவுக்கும்படி தகவல் உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டது.


அந்த வழக்கு விவரங்களும் பேரறிவாளனின் விடுதலைக்குச் சாதகமாக அமைந்தன. சஞ்சய் தத் நன்னடத்தை காரணமாக சிறையில் தண்டனைக் காலத் தள்ளுபடி பெற்றது பேரறிவாளனின் கோரிக்கையில் இடம்பெற்றது.


சிபிஐ அதிகாரியின் வாக்குமூலம்


உண்மைகள் ஒரு நாள் வெளி வரும் என்ற அடிப்படையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தபோது நேர்ந்த சில கோளாறுகளைப் பின்னர் சில ஊடகங்களில் பதிவிட்டிருந்தார். அவர் ஓய்வு பெற்றிருந்தாலும், விசாரணையின்போது அவர் பதிவு செய்ததில் இருந்த குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினார்.
“சிவராசன் என்பவருக்கு பேட்டரிகள் வாங்கிக் கொடுத்த போதும் எதற்காக வாங்கித் தந்தேன் எனத் தனக்குத் தெரியாது என பேரறிவாளன் வாக்குமூலம் அளித்திருந்தார். அதைப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன். கொலைக்காக வாங்கப்பட்டது எனப் பேரறிவாளன் கூறியது ஒப்புதல் வாக்குமூலமாக அல்லாமல், விடுதலை வாக்குமூலமாக அமைந்துவிடும் என்ற காரணத்தால், அதைப் பதிவு செய்வதில் தொழில் ரீதியிலான தர்ம சங்கடம் நேர்ந்தது” சிபிஐ போலீஸ் அதிகாரி தியாகராஜன் 2013ம் ஆண்டு நேர்காணலில் தெரிவித்தார்.


அவரது இந்தக் கூற்றும் பேரறிவாளனின் வழக்கில் இடம்பெற்றது.


எல்லாவற்றையும் விட தன்னம்பிக்கை தளராமல் அந்தத் தாய் அற்புதம்மாள் விடாமல் போராடியதன் விளைவாக நம்பிக்கை துளிர்த்தது உச்ச நீதிமன்றத்தின் கடந்த வார கருத்தின் மூலமாக.
“முடிவு எடுக்காத நிலையில் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நாங்களே விடுவிக்க இயலும்” என்று உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்கள் நாகேஸ்வரராவ், போபண்ணா, கவாய் ஆகியோர் கடந்த வாரம் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.


ஒளிக்கீற்று கடைசியில் வெளிச்சமாகப் பாய்ந்தது பேரறிவாளன் வழக்கில்.
இது அற்புதம்தான்!


தன் மகன் எப்போது வருவானோ, மாட்டானோ, அப்படியே வந்தாலும் எப்போது வருவானோ என்று அவனைப் பெற்ற மடியில் நெருப்பை மட்டுமே சுமந்துகொண்டிருந்தார். இத்தனைக்கும் ஊடகத்தினரையு்ம் அரசு அதிகாரிகளையும் ஆட்சியாளர்களையும், வழக்குரைஞர்களையும் எண்ணற்ற முறையில் சந்தித்துப் பேசியிருக்கிறார். எந்தக் கட்டத்திலும் தன் மகன் கதியை நினைத்துப் புலம்பல் இல்லை யாரையும் சாடவும் இல்லை. சபிக்கவும் இல்லை என்பது பேரறிவாளன் தாயாரின் மனதைரியத்தை எடுத்து காட்டியது.
பேரறிவாளன் 32 ஆண்டுகள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டிருந்தாலும், சிறைத் துறையின் மூலம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பதிப்பித்தல் (Desktop Publishing) பட்டயப் படிப்பையும் கணினிப் பயன்பாட்டு பட்டமேற்படிப்பையும் (MCA) சிறப்பிடம் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். சிறையில் இருந்த காலத்தில் அவரது நன்னடத்தைப் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது.
இவற்றுக்கெல்லாம் பெரிய ஊக்கம் சிறையில் இருந்த காலங்களில் அவரைச் சந்தித்தபோதெல்லாம் அவருக்கு உத்வேகம் தந்த அவரது தாய் அற்புதம் -அம்மாள் தான்!


சில ஆண்டுகளுக்கு முன் சமூக ஊடகத்தில் அற்புதம்மாள் பதிவிட்டிருந்தார்: “நான் ஓர் அப்பாவிப் பையனின் தாய். 28 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடமிருந்து அவன் பறிக்கப்பட்டான். அப்போது அவனுக்கு 19 வயது. அன்று முதல் நான் அவனைப் பின் தொடர்ந்து ஓட ஆரம்பித்தேன்.. இன்னும் ஓடுகிறேன்”
அவரது இந்த வரிகளில் எழுத்துகளை விட உறுதியே அதிகம் இடம்பெற்றிருந்தது. அதில் இருந்த வலியும் பெரிது.


பேரறிவாளனை விடுவிப்பதில் ஆரம்ப கட்டத்திலேயே பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.


“ராஜீவ் கொலையை நிகழ்த்தியவர்கள் இதற்காகத்தான் என்று யாரிடமும் கூறியிருக்க மாட்டார்கள். ஏன், எந்தக் கொலையையும் பொதுவெளியில் சொல்லிவிட்டு செய்ய மாட்டார்கள். அதிலும் ஏதோ ஒரு நபரை அழைத்து இன்னாரைக் கொலை செய்யப் போகிறோம். போய் பேட்டரி வாங்கி வா” என்றெல்லாம் சொல்லப் போவதில்லை. இந்நிலையில், ஏதோ பேட்டரி வாங்கி வந்த காரணத்திற்காக கொலைக் குற்றத்திற்குத் தண்டனை விதிப்பது பொருந்தாது” என்று சட்ட வல்லுநர்கள் வாதிட்டனர்.
சிபிஐ காவல் துறை அதிகாரி தியாகராஜன் பேரறிவாளன் நிரபராதி, அவருக்கும் கொலைக்கும் சம்பந்தமில்லை என்ற தனது வாக்கமூலம் பதிவு செய்யப்படவில்லை என்று வெளிப்படையாகக் கூறியது உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வர பெரிதும் துணை புரிந்தது.
இதனிடையில் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்யும்” என்று முதல் முறையாக சட்டப் பேரவையிலேயே அறிவித்தார்.அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார் இந்த அம்மா.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 2017ம் ஆண்டு பேரறிவாளனை பரோலில் விடுவித்தது. இத்தகைய முயற்சிகளை முன்னே நகர்த்தியது மு.க. ஸ்டாலின் அரசு.

20220421021341753.jpeg
“வயிற்றில் இருக்கும் சிசு பத்து மாதம் கழித்துப் பிறந்ததும் தாய்க்கு அளவில்லா பரவசம் ஏற்படும். என் மகன் விடுதலை குறித்த குறிப்பு ஆளுநருக்குப் போய் பத்து மாதம் ஆகிறது” என்று தன் வேதனையை வெளிப்படுத்தினார்.

அது உச்ச நீதிமன்றம் என்ற மருத்துவமனையில் விடை கிடைத்துவிட்டது!
வலிகளைச் சுமந்த தாயின் வயிற்றில் பால் வார்க்கப்பட்டுவிட்டது! இவ்வளவு சட்ட போராட்டத்தை தொடர்ந்து தன் மகனை மீட்டவர் அற்புதம்-அம்மாள் மனதைரியம் மட்டுமே என்பது ஹைலைட்.