தொடர்கள்
கதை
நவரச கதைகள் - எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

யௌவன வரி

20220413220059141.jpg

அறுபது வயதான பாட்டி குந்தவையின் முன் அமர்ந்தாள் பத்து வயது பேத்தி நற்பவி.

“பாட்டி!”

“என்னம்மா செல்லம்?”

“உன்கிட்ட ஒரு சந்தேகம் கேட்கனும்!”

“கேளு!”

“அழகுன்னா என்ன பாட்டி?”

“அழகு நிறத்தை வச்சு உயரத்தை வச்சு உடல் பருமனைவச்சு குரலைவச்சு உடல் உறுப்புகளின் அளவுகளை வச்சு நிர்ணயிக்கிறது தப்பு. அழகு உள்ளத்திலிருந்து வெளிப்படனும். கருணை சாந்தம் ஈகை மனிதநேயம் போன்றவை அழகான உள்ளத்தின் வெளிப்பாடுகள். புறஅழகு வானவில் மாதிரி தோன்றி மறைந்துவிடும். அகஅழகு என்றென்றைக்கும் நின்று துலங்கும்!”

“நான் அழகானவளா, அவலட்சணமானவளா?”

பேத்தியை ஆழமாக பார்த்தாள் குந்தவை. “பாட்டியின் மீது பேரன்பை அள்ளிக் கொட்டுகிறாய். நீ மனதால் பேரழகி!”

பாட்டியின் கன்னங்களில் மாறிமாறி முத்தமிட்டாள் நற்பவி.

“அறிவும் அதனை தொடர்ந்து வரும் ஞானமும் அழகுதானே பாட்டி?”

“ஆமாம். அதில் சந்தேகமென்ன செல்லம். இளமையுடன் சேர்ந்த ஆரோக்கியமும் அழகுதான்!”

“ஞானம் மனிதருக்கு எப்போது வரும் பாட்டி?”

“ஞானம் மனிதருக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் சில மனிதர்கள் பத்தாயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்ந்தாலும் வராது!”

“நான் ஞானத்தை தேடுகிறேன்!”

“வலிந்து தேடாதே. நீ உனக்கும் பிறருக்கும் உண்மையாக இரு. மதம் சாராத ஆன்மீகத்துக்குள் ஆழ்நீச்சல் அடி. எளிமையாக இருந்து பிறருக்கு உதவு. ஞானம் உன்னை தேடிவரும்!”

வாசல் கதவு தட்டப்பட்டது. “யாரென்று போய் பார் நற்பவி!”

வாசல் கதவை எழுந்து போய் திறந்து விட்டாள் நற்பவி. சீருடை அணிந்த நான்கு அதிகாரிகள் நின்றிருந்தனர்.

“வணக்கம் யார் நீங்கள்?”

“நாங்கள் பூமி அரசின் அதிகாரிகள்… பூமி அரசின் சார்பாக சில ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம்! நீ நற்பவிதானே?”

“ஆம்!”

“உன் தந்தையின் பெயர் சாரநாதன் தாயின் பெயர் புனிதா. இருவரும் உயிருடன் இல்லை. நீ இப்போது பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறாய். உன் பாட்டியின் பெயர் குத்தவை!”

“ஆம்!”

நால்வரில் ஒரு அதிகாரி ஒரு கருவியை கையில் எடுத்தார். “இது முகஅழகு அறுவை சிகிட்சை நிபுணர் ஜுலியன் டி சில்வா கண்டுபிடித்தது!”

“இதனை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?”

“நற்பவி! உன் முகத்தை காட்டு!”

நெற்றியிலிருந்து இரு கண்களுக்கு நடுவே இருக்கும் புள்ளிவரை அளந்தார் அதிகாரி “1.618” என்றார்.

கண்களின் நடுபுள்ளியிலிருந்து மூக்கின் அடிவரை அளந்தார் அதிகாரி “1.618” என்றார்.

மூக்கின் அடியிலிருந்து முகவாயின் அடிவரை அளந்தார் அதிகாரி “1.618” என்றார்.

“தங்கவிகிதம் 1.618 கச்சிதமாக இருக்கிறது!”

நற்பவியின் உயரம், நிறம், தலைமுடிஅளவு, பருமன், குரல், கண்ணின் கருவிழிகள் நிறம், காதுகள், மூக்கு எல்லாவற்றையும் ஆராய்ந்து கணினியில் ஏற்றினர்.

நற்பவியை நேரிலும் பக்கவாட்டிலும் பின்னிலும் புகைப்படம் எடுத்தனர்.

“உலகின் மிக அழகான கச்சிதமான பெண் பெல்லா ஹதித். 94.35 சதவீதம் துல்லியம். நீயோ 95.0சதவீதம் துல்லிய அழகாய் இருக்கிறாய்!”

“நான் கேட்டேனா?”

“நீ கேட்டாலும் கேட்காவிட்டாலும் உலகின் அழகான ஆண்பெண்களை அளவெடுத்து குறிப்பது எங்கள் பணி பத்து வயதிலிருந்து ஐம்பது வயதுவரை உள்ள எவராயிருந்தாலும் எங்கள் அளவெடுப்புக்கு தப்ப முடியாது!”

“ஒரு ஆணோ பெண்ணோ அழகாக இருப்பது பூமியரசு தரும் சலுகையா? அழகாக இருந்தால் பூமிஅரசிற்கு ஏன் வரி கட்டவேண்டும்? எங்களுக்கு சத்தான ஆகாரம் ஊட்டி விட்டாயா? அல்லது எங்களை அழகு நிலையங்களுக்கு கூட்டி சென்று எங்கள் அழகை மெருகேற்றினாயா? எங்களுக்குள் ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் விதைத்தாயா? மாமனா மச்சானா? யாரிடம் கேட்கிறாய் வரி? வரி வட்டி கிஸ்தி!” கட்டபொம்மன் போல ஆவேசம் காட்டினாள் நற்பவி.

குந்தவை எழுந்து வந்தாள்.

“வினோதமாய் இருக்கிறது பூமியரசின் வரிவிதிப்பு. இதுபோன்ற இரு வினோதமான வரிவிதிப்புகளை பலநூறு ஆண்டுகளுக்கு முன்னும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னும் இந்தியா கண்டிருக்கிறது!”

“எந்த வரிவிதிப்புகளை சொல்கிறீர்கள் அம்மா?”

“இந்தியாவை ஆண்ட மொகாலாய மன்னர்கள் முஸ்லிம் இல்லாத குடிமக்களுக்கு ‘ஜிஸ்யா’ எனும் வரி விதித்தனர். ‘ஜிஸ்யா’ வரி கட்டுவோர் மொகாலாய மன்னர்கள் செய்யும் போர்களில் கலந்துகொள்ள வேண்டியதில்லை…”

“ஓவ்!”

“திருவிதாங்கூர் இராஜ்ஜியத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களும் தலித்பெண்களும் தங்கள் மார்பகங்களை மறைக்க ‘மார்பகவரி’ கட்ட வேண்டியிருந்தது. இந்த மார்பகவரி 1924ஆம் ஆண்டுவரை அமுலில் இருந்தது!”

“ஆயிரம் கோடி மக்களில் 10-50 வயதுக்கு உட்பட்ட ஆண் பெண்கள் 600 கோடி இருப்பர் அதில் மிக அழகாக இருப்பவர்கள் பத்துகோடி பேர் கூட தேறமாட்டார்கள். எல்லாரும் அசிங்கமாய் அவலட்சணமாய்சராசரியாய் இருக்க பத்துகோடி பேர் மட்டும் அழகாய் இருப்பது சரிதானா?’ ஆகையால் அவர்கள் யெளவனவரியை அபராதம் போல கட்டவேண்டியதுதான்!”

“யௌவனவரி எவ்வளவு?”

“அழகு ஏறஏற யௌவனவரி கூடும்… உங்க பேத்தி 95சதவீதம் மாசுமருவில்லாத அழகுபெண். அவள் வருடத்திற்கு பத்தாயிரம் பிளாஸ்டிக் பணம் கட்ட வேண்டும்! ஐம்பது வயதுக்கு பிறகு உங்க பேத்தி யௌவன வரி கட்ட வேண்டியதில்லை!”

“இந்த வரியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு போடமுடியுமா?”

“முடியாது!”

“பூமியரசிடம் வரியை குறைக்க மனு பண்ண முடியுமா?”

“முடியாது!”

“முறத்தால் அடிப்பேன்… ஓடிவிடுங்கள்!”

நான்கு அதிகாரிகளில் ஒருவரிடம் லேஸர் துப்பாக்கி முளைத்தது. “அரசு பணி செய்யும் எங்களிடம் வன்முறை பிரயோகித்தால் சுட்டுக் கொல்லவும் தயங்க மாட்டோம்!”

“நாங்கள் நால்வரில் நான் அழகு. நான் யௌவனவரி கட்டுகிறேன் எங்களது மகன் மகள்களில் இருவர் அழகு. அவர்களுக்காகவும் யௌவன வரி கட்டுகிறோம்!”

“இந்த யௌவனவரி விதிக்கும் யோசனையை பூமியரசிற்கு யார் சொன்னது?”

“அழகாய் இல்லாத கோடிபேர் கையெழுத்திட்டு பூமிஅரசிடம் கோரிக்கை விடுத்தார்கள். அவர்களின் கோரிக்கையை பூமிஅரசாங்கம் நிறைவேற்றுகிறது!”

“நீங்கள் விதிக்கும் வரி வருடாவருடம் மாறுமா?”

“மாறும் மாறும் வாய்ப்புகள் அதிகம்!”

“வரி செலுத்த அவகாசம் உண்டா?”

“இல்லை. உடனடியாக செலுத்தியாக வேண்டும். வரி செலுத்தாவிட்டால் வரி செலுத்தாதவர் கைது செய்யப்படுவார். வரி செலுத்தாததை ஊக்குவிப்பவருக்கும் சிறை தண்டனை உண்டு!”

“பூமி அரசின் அராஜகவரி விதிப்பு ஒழிக ஒழிக!” குந்தவை கோஷமிட்டாள்.

“மக்களின் இரத்தத்தை வரியாக உறிஞ்சும் அட்டைப்பூச்சி பூமியரசு ஒழிகஒழிக! கூவினாள் நற்பவி.

இருவரும் கோஷமிடுவதை ஒரு அதிகாரி விடியோ எடுத்தார் “பாட்டி பேத்தியின் க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது. தொடர்ந்தால் மரணதண்டனை விதிக்கப்படுவீர்கள்!”

நற்பவி யோசித்தாள்.

“கோஷமிட்டது தவறுதான். வரி கட்டுவதற்கான பிளாஸ்டிக் பணத்தை இதோ இப்போதே எடுத்து வருகிறேன்!”

சமையற்கட்டுக்குள் போய் விட்டு திரும்பினாள் நற்பவி. கைகளில் ஏதோ ஒளித்து வைத்திருந்தாள். இருகைகளையும் முதுகுக்குபின் கட்டிக்கொண்டாள்.

“பூமியரசின் அதிகாரிகளே! என்னை நன்றாக உற்றுக் கவனியுங்கள். எனது அழகு நொடியில் காணாமல் போய்விட்டால் என்ன செய்வீர்கள்?”

“அப்படி ஒரு மந்திரம் உன்னிடம் இருக்கிறதா?”

“இருக்கிறது!” முதுகுக்கு பின் ஒளித்திருந்த கத்தியை எடுத்து உயர்த்தினாள். கத்தி பளபளத்தது. இடதுகை இரு விரல்களால் தன் மூக்கு நுனியை அழுந்த பிடித்துக் கொண்டு கத்தியால் மூக்கு நுனியை வெட்டி தனியெடுத்தாள். இரத்தம் கொட்டியது. மூக்கை பொத்திக் கொண்டாள்.

“மூக்கு நுனியை இழந்து அவலட்சணமாகி விட்டேன். இனி உங்களின் பெயளவன வரி எனக்கு பொருத்தாது. போய் வாருங்கள்!”

குந்தவை ஓடிப்போய் ஐஸ்கட்டிகளும் பஞ்சும் எடுத்து வந்து இரத்தம் பீரிடும் மூக்கை அழுத்தி பொத்தினாள்.

பூமி அதிகாரிகள் விக்கித்தனர். தலையை தொங்க போட்டுக் கொண்டு வெளியேறினர்.

-அடுத்த 24மணிநேரத்தில் யௌவனவரி கட்ட மறுத்து கோடிக்கணக்கான அழகான பூமி மக்கள் தங்கள் மூக்கு நுனியை கத்தரித்துக் கொண்டனர்.

யௌவனவரி விதிப்பு நிறுத்தப்பட்டது. எங்கு பார்த்தாலும் மூக்கு நுனி அறுந்த மக்கள் மிடுக்காய் உலவினர். ‘வரி கொடுக்க மாட்டோம் போடா!” கோஷம் மிகைத்தது.