தொடர்கள்
பொது
புல்டோசர் அரசியலும், சிலிண்டர் விலையும் -தில்லைக்கரசிசம்பத்

20220413120822558.jpg

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ 1015 . இப்ப நீங்க இதை படிக்கிற நேரத்துல இன்னும் கூடி கூட இருக்கலாம். சுமார் 8 வருடங்களுக்கு முன் , ரூ450 சிலிண்டர் விற்றபோது "அதோ பார் அநியாய சிலிண்டர் விலை..! இதோ பார் அக்கிரமமான பெட்ரோல் டீசல் விலை..!" என கூவி கொண்டிருந்தவர்கள் இப்போதும் கூவி கொண்டிருக்கிறார்கள். ஆனால் கூவல் சிலிண்டர் பெட்ரோல் விலை பற்றியல்ல .. "அதோ பார் முஸ்லிம்.. இதோ பார் பட்டினப்பிரவேசம்.. இதோ பார் இந்து .. அங்கே பார் நம் தேசிய மொழி இந்தி..! " என்று கதற, சுற்றி நிற்கும் மக்கள் கூட்டமும் "அவன் பண்றது தப்பு அவனை அடி ..இவன் பண்றது ரைட்டு.. இவனை புடி..!" என கவனத்தை சண்டையில் வைக்க, ஒவ்வொரு விலையேற்ற ஊசியும் கூட்டத்தில் நிற்கும் மக்களுக்கு அவர்கள் அறியாமலேயே ஏற்றப்படுகிறது. நறுக்கென்று குத்தும் வலி கூட தெரியாமலா நிற்கிறார்கள்..? அவ்வளவு சுரணை அற்றவர்களாகவா மக்கள் மாறி விட்டார்கள்..?! என்று கருத வேண்டாம். அவர்களும் வலியை உணருகிறார்கள் . ஆனால் நிலைமை என்ன ..??! தள்ளுமுள்ளுவில் இருக்கிற பெருங்கூட்டத்தில், எவனோ காரியவாதி ஒருவன் முன்னே செல்லும் நோக்கத்தில் அனைவரது தலைமீது ஏறி நடந்தானாம் . தலை மேல் ஏறி நடக்கிறானே என்று கூட உணராமல் "யப்பா டேய் .. செருப்பை கழட்டிட்டு நடப்பா.. மண்ணோட நடக்காத . மண்டையெல்லாம் நரநரன்னு புண்ணாகுது பாரு .!" என்று கூறினார்களாம் . அந்த கதை போலவே ஒரு புறம் மக்களுக்கு கிஞ்சித்தும் தேவையில்லாத , சிறிதும் பிரயோஜனப்படாத விவகாரங்களை கிளப்பி சூட்டை கிளப்பி விட்டு, மறு புறம் அன்றாடங்காய்ச்சி குடும்பத்திலிருந்து நடுத்தர மக்கள் வரை வச்சு செய்கிறார்கள்.. டில்லி, உபி ,மபி போன்ற மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக, புல்டோசர்கள் ஜரூராக நம் நாட்டுகுடிமகன்களின் உடமைகளை இடித்து தள்ளிக்கொண்டு இருக்கின்றன.

அடுத்து ,தாஜ்மஹாலில் இந்து கடவுள் சிலைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய பூட்டியுள்ள 22 அறைகளை திறக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி பா.ஜ.க நிர்வாகி மருத்துவர் ரஜ்னீஷ் சிங் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, கடுப்பான நீதிபதிகள் “இன்னைக்கு இத திறக்க சொல்வீங்க .. நாளைக்கு நீதிபதி ரூமுக்குள்ள என்ன இருக்கு? திறங்க பார்ப்போம்..! னு கேட்பீங்க..” என்று பாஜக நிர்வாகியை விளாசி "தாஜ்மஹாலின் வயதை சந்தேகிக்கிறீங்க என்றால், ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டவில்லை னு சொல்றீங்களா? தாஜ்மஹால் யார் கட்டினது னு தீர்ப்பு சொல்றதுக்கா இன்னைக்கு நீதிமன்றம் கூடியிருக்கு? முற்றிலும் நியாயமற்ற பிரச்சினையில் தீர்ப்பு வழங்க முடியாது.. !" எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் பாகிஸ்தானிலிருந்து இந்திய குடியுரிமை கேட்டு , நம்பி வந்த 800 இந்து மக்கள் மீண்டும் பாகிஸ்தானுக்கே திரும்பிச் சென்ற கொடுமையும் நடந்திருக்கிறது .இதுகுறித்து பாகிஸ்தானிய சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக இந்தியாவிலிருந்து குரல் கொடுத்து வரும் "சீமந்த் லோக் சங்கதன்" (SLS) என்ற அமைப்பு " பல ஆண்டுகளாக காத்திருந்தும் இந்திய குடியுரிமை கிடைக்காததால் ஏமாற்றத்துடன் 2021 ஆம் ஆண்டு அவர்கள் பாகிஸ்தானுக்கே திரும்பிச் சென்றனர். இந்திய அரசுத்தரப்பில் இதற்காக எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை " என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இந்துக்கள் ....இந்துக்கள்.... என மூச்சுக்கு 300 முறை கூறினாலும் அதெல்லாம் வெறும் வாய் வார்த்தையாக இருப்பதை உணர முடிகிறது.

இது பத்தாது என்று சிபிஎஸ்இ பாட புத்தகங்களிலிருந்து ஜனநாயகம் , நாட்டின் பன்முகத்தன்மை, மக்கள் இயக்கங்கள், தலித் பிரச்சினைகள், உலக நாடுகளில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் வெற்றிப்பெற்றது போன்ற பாட பகுதிகள் நீக்கப்படுகின்றன. இதிலெல்லாம் மிக சுறுசுறுப்பாக வேலை நடக்கிறது. இன்னொரு பக்கம் அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு உட்சபட்சமாக ரூ77.40 ஐ தாண்டி கொண்டிருக்கிறது.

மதவெறியை ,இனவெறியை தூண்டுவது,மொழிகளை அடிப்படையாகக் கொண்டே மாநிலங்கள் பிரிந்திருந்தாலும் அதை புரிந்து கொள்ளாமல் அடாவடியாக பெரும்பான்மை மொழி என்று கூறி ஒற்றை மொழியை கொண்டு வந்து அனைத்து மக்கள் மீது திணிப்பது என அனைத்து பக்கங்களிலும் சிக்ஸர் அடித்து ஆடுகிறார்கள்.

பணவீக்கம், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு போன்ற பிரச்சனைகளால் சாமானியன் "ஐயோ! நிலைமை இப்படி இருக்கே..!" என்று திகைத்தால் பளாரென்று ஒரு அறைவிட்டு "கொய்யாலே.. அங்க தாஜ்மகால்ல 22 ரூம்ல மர்மம் இருக்கு.. தொறங்கடானு சொல்லி படாத பாடு பட்டுக்கிட்டு இருக்கோம்.. பத்தாததுக்கு குதுப்மினார் 18 கோயில இடிச்சு கட்டி இருக்கான் அது எல்லாம் சரி பண்ண 70 வருசமா வக்கில்ல .. வன்ட்டானுங்க சிலிண்டர், பெட்ரோல் , டீசல், கோதுமை வெலை ஏறிப்போச்சுன்னு .. பிச்சிப்புடுவோம் பிச்சு " என்கிறார்கள். "இந்த வாரம் பக்தி வாரம்" என்று முன்பொரு காலத்தில் சன்டிவி வாரம் வாரம் வெவ்வேறு ஜர்னரில் திரைப்படம் ஒளிபரப்பியது போல ஒவ்வொரு வாரமும் தேவையில்லாத புது புது பிரச்சினைகளை கிளப்பிவிட்டு, உண்மையிலேயே நாட்டுக்கு கேடு விளைவிக்கும் தீவிர பிரச்சினைகளை மக்கள் எதிர்க்குரல் எழுப்பமுடியாத வண்ணம் அழகாக காய் நகர்த்துகிறார்கள் .இந்த சச்சரவுகளில் சிக்கி சின்னாபின்னமாவது மக்கள் தான் .

ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி விட்டு மக்களை டென்ஷனில் வைத்துகொள்ளும் கலையை நமது அரசியல்வாதிகள் நன்றாக கற்று தேர்ந்துவிட்டனர் என்பதே நிஜம்!.